அந்த நாளை எதிர்நோக்கி

author
0 minutes, 9 seconds Read
This entry is part 5 of 15 in the series 3 ஜூன் 2018

 

வான்மதி செந்தில்வாணன்

ஏஞ்சலின் முழுப்பெயர் “கிரேஸி ஹில்டா ஏஞ்சல்”. எல்லோரும் அவளைக் கிரேஸி என்றுதான் அழைப்பார்கள். நான் மட்டுமே அவளை ஏஞ்சல் என்றழைக்கும் வழக்கமுடையவள். அவளது முழுப்பெயரையும் சொல்லி அழைக்கவேண்டுமென்பதுதான் எனது ஆசை. ஆனால் அவ்வளவு நீளமான பெயரைச் சொல்லி அழைப்பதற்குள் ஏஞ்சல் அந்தத் தெருவை ஜெட் வேகத்தில் ஓடிக் கடந்திருப்பாள். அவள் ஓடுவதைப் பார்க்கப் பார்க்க அந்தத் தெருவை மழை நனைப்பது போலொரு உணர்வு என்னுள் பரவும். பக்கத்துத்தெரு “மியூலி”யுடன் விளையாடுவதென்பது அவளுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. ஏனெனில் அவள் மட்டும்தான் எப்போதும் , எந்த விளையாட்டிலும் ஏஞ்சலிடம் தோற்றுக்கொண்டே இருப்பாள். அவ்வாறு தான் தோற்பதை மியூலி ஒருபோதும்  பொருட்படுத்துவதில்லை. எப்போதேனும் அதிசயத்தின்பேரில் மியூலி ஜெயிக்க நேர்கையில் விளையாட்டை மீண்டும் முதலிலிருந்து துவங்கலாமென ஏஞ்சல் பிடிவாதம் பிடிப்பாள். ஒருமுறை மிட்டாயை ஒளித்துவைத்துக்கொண்டு, “அம்மா, எந்தக் கையில் மிட்டாய் இருக்கிறது?” என தனது மூடிய இரு உள்ளங்கைகளையும் என் முன்பாக நீட்டினாள். நான் சரியாகக் கண்டுபிடித்துவிட்ட ஒரே காரணத்திற்காக முகத்தைப் பொசுக்கென்று வைத்துக்கொண்டு “போம்மா நா மியூலிகூடவே விளையாண்டுக்கறேன்” என்று உதட்டைப் பிதுக்கிக்கொண்டு வெளியே ஓடிவிட்டாள். ஏஞ்சல் மியூலியைக் காட்டிலும் மூன்று மாதம் மூத்தவள்.

 

அப்போது நாங்கள் மாநகராட்சியின் சனநெரிசல் மிக்க பெருநகர்க் குடியிருப்புப் பகுதியொன்றில் வசித்துவந்தோம். வாசற்படி விட்டிறங்கினால் தொடர்ச்சியாக இருசக்கர வாகனப் புழக்கமிருக்கும் இரைச்சல்மிக்க தெருச்சாலை அது. சுற்றிலும் எழும்பிநின்ற உயரமான கட்டிடங்கள் பகல்பொழுதிலும் வீட்டின் உட்புறம் விளக்கெரிவதற்கான கட்டாயத்தை உண்டுபண்ணியிருந்தன. அந்தத் தெருவிலிருந்து 20 நிமிட நடைதூரத்தில் பிரதான சாலையையொட்டி அமைந்திருந்த ஒரு விளையாட்டரங்கம் கவனிப்பாரற்று புதர் மண்டிக் கிடந்தது. ஆகவேதான் அந்தச் சுற்றுப்பிரதேசத்தில் வசிக்கும் குழந்தைகளுக்கு வீட்டின் உட்புறம்தான் விளையாட்டுக்களமாக இருந்தது. அப்படியானதொரு தெருவில் குறுகலான மாடிப்படியுடன் கூடிய டஞ்சனான வீட்டில்தான் நாங்கள் வசித்துவந்தோம். அச்சிறு பொந்துபோன்ற குடியிருப்பில்தான் ஏஞ்சல் ஒவ்வொரு விளையாட்டிலும் தனது வெற்றியின் எண்ணிக்கையைக் கூட்டிக்கொண்டிருந்தாள்.

 

ஏஞ்சல் மூன்றரை வயதுக்காரியாக இருந்தபோதுதான் அவளைப் பள்ளியில் சேர்ப்பது குறித்து நாங்கள் தீவிரமாக ஆலோசித்தோம். முடிவாக, வீட்டிற்கு அருகிருந்த சிறுமலர் பள்ளியில் கீழ் மழலையர் வகுப்பில் (LKG) அவளைச் சேர்த்தோம். அங்கு குழந்தைகள் விளையாடுவதற்கென ஊஞ்சல், ஏற்றம், சர்க்கல் போன்ற விளையாட்டு சாதனங்கள் இருந்தன. பள்ளி முடிந்ததும் நான் சென்று அவளை அழைத்து வருவதையே அவள் பெரிதும் விரும்பினாள். ஏனெனில் ஒவ்வொரு நாளும் அவளது விருப்பத்தின் பேரில் அனைத்து விளையாட்டுகளையும் விளையாடிக் களைத்து ஓயும்வரை காத்துக்கொண்டிருந்து பிறகுதான் வீட்டிற்கு கூட்டிக்கொண்டு வருவேன்.

 

அன்றைக்கென சற்று முன்னதாகவே சென்று  அவளது வருகைக்காகக் காத்திருந்தேன். அவளது வகுப்பாசிரியர் என்னைக் கூப்பிட்டனுப்பினார். நான் அவரைச் சந்தித்தபோது “பாருங்கள், இன்றைக்கு கிரேஸி அவளது சக மாணவனான ‘மெயனை’ அடித்திருக்கிறாள். அவனும் இவளிடமிருந்து தப்பிக்கவென வகுப்பறை பெஞ்சுகளைச் சுற்றி சுற்றி ஓடியிருக்கிறான். இவளும் விடாப்பிடியாய் சிலேட் பலகையை ஓங்கிக்கொண்டு துரத்தியிருக்கிறாள். காரணம் கேட்டால் வாய்திறக்க மறுக்கிறாள்” என்று அவள் பற்றிய முதல் புகாரை என்முன் வைத்தார். நான் அவளைக் கண்டிப்பதாக வகுப்பாசிரியரிடம் உறுதி கூறியபோது ஏஞ்சல் எனக்குப் பின்புறம் நின்றபடி அவளது ஒரு கையை என் கையோடு இறுகப் பிணைத்துக்கொண்டும் மற்றொரு கையால் என்னைப் பிராண்டிக்கொண்டுமிருந்தாள்.

 

வீட்டுப்பாடம் முடித்து விளையாடச் சென்றவள், நான் இரவு உணவு தயாரித்துக் கொண்டிருக்கையில் பசிக்கிறதென ஓடி வந்தாள். அவளை இடுப்பில் அமர்த்திக்கொண்டே

“ஏன்டா குட்டிமா மெயனை அடிச்ச? அப்டி செய்ய மாட்டியே. நீ நல்ல பாப்பாவாச்சே. எதுக்கு அப்படி செய்த?” எனச் செல்லமாய்க் கேட்டேன்.

 

“அம்மா, நீ யார்ட்டயும் சொல்லக்கூடாது. சொன்னா உன்கிட்ட இனி பேசவேமாட்டேன்”

 

“சரி. உன் அப்பாகிட்டகூட சொல்லமாட்டேன். ப்ராமிஸ்”

 

“அம்மா, அவன் 1 முதல் 100 வரை  சொல்றான். எழுதறான். ஆனா எனக்குத் தெரியவே இல்ல. அதனாலதான் அவன அடிச்சேன்.”

 

அதோடு நிற்கவில்லை.

 

“அந்த ‘ரெஸி’ இருக்கால்ல மா, அவளுக்கு ஸ்மால் ஏ,பி,சி,டி…. தெரிஞ்சிருக்கு. எனக்கு அதுவும் தெரிலமா” என்று சிறு முகச்சுளிப்போடு அவள் சொன்னபோது எனக்கு முதலில் சிரிப்புதான் வந்தது. அந்த சின்ன மனம் வருந்துவதற்கான மூலகாரணம் பிடிபட்டபோது அச்சூழலை சமாளிப்பதென்பது எனக்கு மிகவும் சிக்கலாக இருந்தது. ஒரு எளிய எந்திரத்தின் இயக்கக் கோளாறினை  பழுதுபார்த்து , பராமரிப்பு செய்வதுபோல அவளது எண்ணங்களை பழுதுபார்த்து சீரமைக்கவேண்டிய பொறுப்பில் நான் இருப்பதை சற்றும் காலதாமதமின்றி உணர்ந்தேன். உண்மையிலேயே அவளை எப்படிக் கையாள்வதென்று தெரியாமல் அப்போது நான் வெகுவாய் குழம்பிப்போனேன். ஏனெனில், அப்பட்டமான ஒரு உண்மையை என் மீதான நம்பிக்கையில் என்னிடம் மட்டுமே போட்டுடைத்திருக்கிறாள். அத்தகைய உளச்சிக்கலிலிருந்து அவளை எப்படியேனும் விடுவித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன். ஏஞ்சல், அந்த உண்மையை ஆசிரியரிடமோ, அவளது அப்பாவிடமோ அல்லது விரும்பிக் கேட்கும் திண்பண்டங்களை வாங்கித்தரும் அவளது அன்புமிக்க பாட்டியிடமோ அவர்கள் அவ்வளவு வற்புறுத்தியும் நிறைய சலுகைகள் அளிப்பதாகக் கூறியும்கூட அந்த இரகசியத்தை அம்பலம்படுத்தவில்லை.

 

அந்தவாரத்தில் ஒருநாள் பள்ளி முடிந்து வீடு திரும்புகையில் ஸ்டேஷனரியிலிருந்து சில கலர் சார்ட்டுகள், ஸ்கேல், மார்க்கர் மற்றும் ஸ்கெட்ச்  போன்றவற்றைச் சேகரித்துக்கொண்டேன். “இதெல்லாம் எதுக்குமா? எனக்கா? என்ன செய்யப் போறீங்க? ” என்று வீடுவரை தொணதொணத்துக்கொண்டே வந்தவள் அவற்றை வைத்து என்ன செய்யப்போகிறேன் என்ற ஆர்வமிகுதியால் அன்று அவள் வெளியே விளையாடப் போகவேயில்லை. அன்றைய தினம் நான் மிகவும் சோர்வாக உணர்ந்தேன். ஆனாலும் அவளை ஏமாற்ற விருப்பமில்லாமல்  சில சார்ட்டுகளின் பக்கங்களை மார்க்கர் கொண்டு பார்டர் கட்டினேன். எந்த சார்ட்டிற்கு என்ன நிறத்தில் பார்டர் கட்டவேண்டுமென அவளே முடிவு செய்தாள்.

 

மறுநாள் பள்ளி முடிந்து வந்ததும் அவளது சிறு விளையாட்டறை பூட்டப்பட்டிருந்தது கண்டு அந்த அறையைத் திறக்குமாறு என்னை வற்புறுத்தினாள். நான் அவளது கண்களை மூடிக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டதற்கிணங்க அவளும் அதை பின்பற்றினாள். நான் இரு கரங்களாலும் அவளை  நெஞ்சோடு அணைத்தபடி அவ்வறைக்குள் நுழைந்து கண்களைத் திறக்கலாமென்றேன். அதற்குமுன்பே கண்களைத் திறந்திருந்தவள்  என் அணைப்பிலிருந்து நொடிப்பொழுதில் தன்னை  விடுவித்துக்கொண்டு “ஜங்”கென  தரையில் குதித்தாள். வண்ண வண்ண சார்ட்டுகளில் இயற்கைக் காட்சிகளும், கணித எண்களும் , சிறிய மற்றும் பெரிய  ஆங்கில எழுத்துகளும் கூடவே ஆங்காங்கே அழகிய ஸ்டிக்கர்களும் அந்த அறைச் சுவர்களில் அவளுக்கு எட்டக்கூடிய உயரத்தில் ஒட்டப்பட்டிருந்தது அவளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருந்தது. தவிர அவளுக்கு அது மிகவும் பிடித்திருந்தது. ஒவ்வொரு சார்ட்டிலிருந்த எழுத்துகளாய்த் தொட்டுத் தடவிப் பார்த்து “அம்மா, இதெல்லாம் நீ எழுதினதா_ அழகா எழுதிருக்கமா_ ரொம்ப நல்ல அம்மா_ தேங்க்ஸ்மா” என்று எனது கன்னங்களில் அவளது மொத்த அன்பையும்  பொழிந்து தள்ளினாள். அவளுக்கென இப்படி ஏதாவது செய்யும்போதெல்லாம் அவளுக்கு என்மீதான மதிப்பு இயல்பாகவே கூடிவிடும்.

 

ஏஞ்சலின் விளையாட்டுச் சாமான்கள் அனைத்தையும் ஹாலுக்கு மாற்றியிருந்தேன். முன்பைக் காட்டிலும் இப்போது அவளுக்கு அது சௌகர்யமாய் இருந்தது. அந்தக் குட்டியறை அப்போதிருந்து அவளது படிப்பறையானது. அங்குதான் அவளது ராஜ்ஜியம் ஆரம்பமானது.

 

சற்றுநேரம் வியப்பில் ஆழ்ந்திருந்தவள் திடீரென குடுகுடுவென ஓடிப்போய் எங்கிருந்தோ ஒரு சன்னமான  கோலினை எடுத்துவந்தாள். பின்பு அவளது வகுப்பாசிரியரைப் போன்றதொரு அதிகாரத் தோரணையுடன் அவ்வெழுத்துகள் ஒவ்வொன்றாய் சுட்டி உச்சரிக்கத் துவங்கினாள். அந்நாள்  மிகவும் திருப்திகரமாய்க் கழிந்தது. அன்று, அந்த அறைமுழுக்க அவள் நிறைந்திருந்ததாக என் மனதிற்குப் பட்டது.

 

அவ்வப்போது , நான் வேறு அறையில் இருப்பதை உறுதிசெய்த பிறகு தன்னை ஒரு ஆசிரியராகவே பாவித்துக்கொண்டு அவள் தண்டிக்கத் தோன்றும் நபர்களெல்லாம் தரையில் வரிசையாக அமர்ந்திருப்பதுபோல் கற்பனை செய்துகொண்டாள். நான் எந்த அறையில் இருந்தாலும் தொடர்ந்து அவளது குரலை எனது செவியில் பதிவு செய்தபடி இருந்தேன். ஒருநாள் , சார்ட்டின் ஒரு எழுத்தைச் சுட்டி ‘மெயன் இதென்ன?” என்றாள். உனக்கு இதுகூட தெரியாதா? என்று கையில் வைத்திருந்த கோலால் தரையில் ஓங்கி ஓங்கி விளாசினாள். அடுத்து “ஏய் ரெஸி நீ சொல்” என்றபோது அவளது மனதின் உக்கிரம் அதிவேகமாக என்னுள் ஊடுருவியது. அந்தப் படிப்பறைச் சார்ட்டிலிருந்த ஒவ்வொரு எழுத்தும் எக்கச்சக்கமாய்ப் பிய்த்துக்கொண்டு பாதாளத்தின் அடிப்பகுதியில் விழுவதாக உணர்ந்தேன்.

 

அதன்பின் ஏஞ்சலை சிரத்தையோடு பின்தொடரத் துவங்கினேன். அவளது செயல்பாடுகளைக் கூர்ந்து கவனித்தேன். மாலை வேளையில் அமரவைத்து படிப்புடன் நல்லொழுக்கத்தையும் போதிக்க ஆரம்பித்தேன். இச்சமயம் நிச்சயம் அவளைப் பாராட்டியே தீர வேண்டும். காரணம், நான் கற்பித்தவற்றை எவ்வித சலிப்புமின்றி அவள் என்னிடம் கற்றுக்கொண்டாள். ஆங்கிலச் சிறிய எழுத்துகளை இரண்டு நாட்களில் சரியாக எழுதிக்காட்டிவிட்டாள். கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குள்ளாக 1 முதல் 200 வரையிலான எண்களை உச்சரிக்கவும் , எழுதவும் கற்றிருந்தாள் . எனது நம்பிக்கை மிக வேகமாக வளர்ந்துகொண்டிருந்தது. என்னைக் காட்டிலும் அவளது நம்பிக்கையின் உயரம் இன்னும் வெகுவாய் உயர்ந்திருந்தது. அப்போது அவளது வகுப்பாசிரியர் அவளது துடிப்பைக் கண்டு பாராட்டத் துவங்கியிருந்தார். தவிர, அவளது சக தோழர்களிடையே அவளைப் பற்றிய எவ்வித புகார்களும் இல்லாமலிருந்தன.

 

அன்று காலை , இன்னும் இரண்டு நாள்களில் எங்கள் தெருவில் விளையாட்டுப்போட்டிகள் நடைபெறவிருப்பதாக அறிவிப்பு வெளியானது . மேலும், அடுத்தவருடம் விளையாட்டுப் போட்டியானது நகரின் மையத்திலிருக்கும்  மைதானத்தில் நடைபெறப்போவதாகவும் அந்தப் புதர் மண்டிக் கிடக்கும் மைதானம் இப்போது அதற்கென தயாராகிக் கொண்டிருப்பதாகவும் தகவல் தெரிவித்தனர். ஏஞ்சல் , ஓட்டப்பந்தயத்தில் சேர விருப்பம் தெரிவித்ததையொட்டி அவள் வயதொத்த பிரிவில் அவளது பெயரைச் சேர்த்திருந்தேன். அவள் இயல்பாக நடப்பதே ஓடுவது போல்தானிருக்கும்.

 

அகலம் மிகவும் குறைவான எங்கள் தெருச்சாலை கிழக்கும் மேற்குமாய் நீண்டிருந்தது. குறுகலான எங்கள் தெருச்சாலைதான் போட்டிக்களமாக தேர்வு செய்யப்பட்டது. ஏஞ்சல் வயதுக் குழந்தைகளுக்கு ஓடுகளமானது 30அடி தூரமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. போட்டிக்கான ஆயத்தக்கோடும், வெற்றிக்கோடும் சாலையின் குறுக்கே சாக்கட்டியால் வரையப்பட்டிருந்தது. குழந்தைகள் எங்கள் வீட்டின் வாசற்படியைக் கடந்துதான் வெற்றிக்கோட்டைத் தொட வேண்டும். வெற்றிக்கோடானது எங்கள் வாசலிலிருந்து ஐந்தடி தூரமிருந்தது.

 

அது மிகவும் முக்கியமான நாள். எப்போதும் என்னால் மறக்க இயலாத துயரார்ந்த நாள். அன்று  அத்தகையதொரு துயர சம்பவத்தை நான் துளியும்  எதிர்பார்த்திருக்கவில்லை. போட்டி ஆரம்பமானது. ஏஞ்சல் ஆயத்தக்கோட்டில் தயாராக நின்றிருந்தாள். அவள் வயதுக் குழந்தைகள் மொத்தம் 12 பேர் இருந்தனர். முதல்கட்டப் போட்டியில் ஏஞ்சல் வெற்றி பெற்றிருந்தாள். இறுதிக்கட்டப் போட்டிக்கு ஏஞ்சல் உட்பட மூன்று குழந்தைகள் தகுதிவாய்ந்தவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். விசில் சத்தத்திற்குப் பிறகு மூவரும் ஓடத் துவங்கினர். ஏஞ்சல் முதலாவதாக வந்துகொண்டிருந்தாள். ஒரு 20அடி தூரத்தில் ரோஹித் அவளை முந்திக்கொண்டு ஓடினான். இரண்டாவதாக வந்தவள் நேரே ஓடி வெற்றிக்கோட்டைத் தொடுவதற்குப் பதிலாக எங்கள் வீட்டினுள் நுழைந்துவிட்டாள். நுழைந்ததும் நாங்கள் எதிர்பாராவண்ணம் “அம்மா, ரோஹித் பர்ஸ்ட் போய்ட்டான். நா தோத்துட்டேன்” என்று தேம்பித்தேம்பி அழத்துவங்கினாள். அவளது செய்கையைக் கண்டு எல்லோரும் கொஞ்சம் சிரிக்கத்தான் செய்தார்கள். உள்ளே அழைத்துச்சென்று ஆறுதல் கூறி அவளைத் தேற்ற முயன்றேன். எவ்வளவு சமாதானம் சொல்லியும் அவளை என்னால் தேற்ற இயலவில்லை. மீண்டுமொருமுறை நான் மனதளவில் நொறுங்கிப்போனேன்.

 

குழந்தையின் பார்வையில் அல்லது அவர்களது புரிதலில் தோற்றல் என்பது என்ன? ஏன் அவ்வாறான ஒரு நிலையை குழந்தை மனம் ஏற்க மறுக்கிறது? அனைத்திலும் முதலாவதாக மிளிர விருப்பம்கொண்ட அந்தப் பூம்பிஞ்சு இன்னும் எவ்வளவு தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது!!  எல்லாவற்றுக்கும் மேலாக, இந்தத் தாங்கிக்கொள்ள இயலாத சூழலை அவளுக்கு எவ்வாறு தெளியவைப்பது? ஒரு தாயாக என் குழந்தைக்கு வெற்றிப்பாதைகளையும் , அதன் உயரங்களை அடைவதற்கான முயற்சியையும் மட்டுமே போதனை செய்த நான், தோல்வியைப் பற்றி அந்த நேரத்தில் அதுவும் எடுத்த எடுப்பில் எப்படிப் பேசிவிட முடியும்? இரண்டாவதாக வருவதும் வெற்றிதான் என்பதை எப்படிப் புரியவைப்பேன்? அந்தச் சூழலில் எனது இயலாமை என்னிடம் அழுகையைத் தூண்டியது. வெற்றி, தோல்விகளைச் சந்திக்கையில் மன உணர்வுகளில் தடுமாற்றம் ஏற்படுவதென்பது அச்சிறு வயதிலேயே ஆரம்பிக்கிறது என்பதை அப்போதுதான் அனுபவப்பூர்வமாக உணர்ந்தேன். நான் யோசித்துப் பார்த்தேன். இவ்வுலகில் யார்தான் தோற்க விரும்புகிறார்கள்? பெரும்பாலும் பெற்றோர்கள் மட்டுமே குழந்தைகளிடம் தோல்வியைத் தழுவி் மகிழ்கின்றனர். அதுவும் அவர்கள் குழந்தையாக இருக்கும்வரை மட்டும்தான்.

 

அப்போது நான், எனது நடுங்கும் கையில் ஒரு முட்டையை வைத்திருப்பதாக உணர்ந்தேன். இங்கு முட்டை என்பது ஏஞ்சல்தான். நான் அவளைப் பத்திரமாகக் கைகொள்ளாவிட்டால் நிச்சயம் முட்டை நழுவி கீழே விழுந்து பாழாவதுபோல் அவளும் வீணாகிவிடுவாள். சிறு தோல்விகளைத் தாங்கிக்கொள்ள இயலாதபோது மீண்டும் எதையும் கற்றுக்கொள்ள இயலாமல் போகும் சூழல் உருவாகலாம் அல்லது காலவிரயம் அவளுக்கு மேலும் மனத்தொய்வை ஏற்படுத்தலாமென்ற எண்ணச் சுழல்கள் மனதில் பாரமாய் உழன்றுகொண்டிருக்கையில் பரிசு பற்றிய  அறிவிப்புச் செய்தி எங்கள் செவியை எட்டியது. அழுவாச்சியான ஒரு முகக்களையுடன் மேடையேறியவள் தனக்குரிய இரண்டாம் பரிசை அவள் கைகளால் பெற்றுக்கொண்டாள்.

 

அவளது மன உணர்வுகளின் தீவிரப்போக்கினை அறிந்த நான் மியூலியின் அம்மாவை சந்தித்து அவளை எங்கள் வீட்டிற்கு விளையாட அனுப்புமாறு கேட்டுக்கொண்டேன். கொஞ்சம் கொஞ்சமாக நான் மியூலியிடம் விளையாட ஆரம்பித்தேன். அநேக விளையாட்டுகளில் மியூலியை ஜெயிக்கவைத்தேன். அம்மாவாகிய நான் மியூலியிடம் தோற்பது ஏஞ்சலுக்குப் பிடிக்கவில்லைதான். ஆனாலும் அவளது எல்லாமுமாக இருப்பது நான்தான் என்ற நம்பிக்கை அவளிடம் வேரூன்றியிருந்தது. நான் ஒவ்வொரு முறை தோல்வியுறும்போதும் மியூலியிடம் கைகுலுக்கினேன். “சியர்ஸ்” சொல்லி எங்கள் உள்ளங்கைகளை ஒருவித ஆரவாரத்துடன் மோதிக்கொண்டோம். நான் ஜெயித்தபோதெல்லாம் என்னுடைய கட்டைவிரலை மியூலியை நோக்கி உயர்த்திக்காட்டினேன். ஒவ்வொரு வெற்றி, தோல்வியின்போதும் மியூலி என்னைப் போன்றே  செய்ய ஆரம்பித்தாள். ஆகையால் ஏஞ்சலிடம் மாற்றம் வருமென நான் உறுதியாய் நம்பினேன்.

 

நான் மியூலியுடன் விளையாடுவதைப் பார்த்த ஏஞ்சல் என்னுடன் விளையாட விருப்பம் கொண்டாள். வெற்றி தோல்வியை இருவரும் மாறி மாறி சந்திக்கும்படி ஆட்டத்தை நகர்த்தினேன். ஆனால் அவற்றை அனுபவிக்கும் மனநிலைக்கான கால இடைவெளியை அவளுக்கு ஒருநொடிகூட நான் அனுமதிக்கவில்லை. விளையாடி முடித்து சோர்வுற்றபோது முதலில் அவள் ஒருமாதிரியாகத்தான் இருந்தாள். பிறகு ஏதோவொன்று அவளுக்குப் புரிந்திருக்க வேண்டும். வெற்றிக்குப் பிறகு தோல்வியும் உண்டு என்பதாகவோ அல்லது தோல்விக்குப் பிறகு வெற்றியும் உண்டு என்பதாகவோ அது இருக்கலாம்.

 

மாதங்கள் கடந்தன. ஏஞ்சலும் மியூலியும்,  சரிசமமாக இருபுறமும் மடக்கப்பட்ட அட்டைகளை வைத்து வீடுகட்டி விளையாடிக் கொண்டிருந்தனர். ஒருநாள், “யார் மொதல்ல வீடு கட்டுவாங்கனு பாக்கலாமா? என்று ஏஞ்சல்தான் போட்டியை ஆரம்பித்தாள். அட்டைகளை துரிதமாக அடுக்கியதில் கட்டி முடிப்பதற்கு முன்பே ஏஞ்சலின் வீடு பாதியளவு சரிந்து விழுந்தது. மியூலி, அட்டைகளை நிதானமாக அடுக்கிக்கொண்டிருந்தாள். மியூலி கட்டிய வீடு மிகவும் அற்புதமாக இருந்தது. ஏஞ்சல் செய்வதறியாது அப்படியே உட்கார்ந்துவிட்டாள். உடனே சுதாரித்து எழுந்தவள் “நீ மட்டும் அழகான வீடு கட்டிட்ட. என் பொம்மைய உன் வீட்ல வச்சிக்கறயா?” என்றவள் ஒரு குட்டி பொம்மையை மியூலியிடம் தந்தாள். அவளது படிப்பறையில் மறைந்தவாறு இச்செய்கையை நோட்டமிட்ட எனக்கு ஏஞ்சலின் மனமாற்றம் மிகவும் மகிழ்வைத் தந்தது.

 

ஏஞ்சலுக்கு அப்போது கோடை விடுமுறை. அந்த மாநகராட்சியின் விளையாட்டரங்கம் அப்போது தயாராக இருந்தது. பெரும்பாலானோர் அதிகாலையில் தனது நடைப்பயிற்சிக்கென அம் மைதானத்தை உபயோகிக்கத் துவங்கியிருந்தனர். நானும்கூட . சற்றேறக்குறைய ஓர் அதிகாலையில், தானும் நடைப்பயிற்சிக்கு என்னுடன் வருவதாக ஏஞ்சல் அடம்பிடித்தாள். அன்றுதான் அவளை முதன்முதலாக மைதானத்திற்கு கூட்டிச்சென்றேன். மைதானத்தின் விஸ்தாரமான பரப்பைக் கண்டதும் அவள் மனதில் இராட்சத உந்தம் ஒன்று சடுதியில் ஏற்பட்டிருக்க வேண்டும். மைதானத்தின் விளிம்பை அடைந்ததும் “அம்மா, எனக்கு ஓடனும் போலிருக்கு. நீ இங்கேயே நில்” என்று 50அடி தூரம் முன்னோக்கி நகர்ந்தாள். பின்பு திரும்பி நின்று குறுக்கிடையாக ஒரு கோடு கிழித்தாள். இடதுகையின் கட்டைவிரலை என்னை நோக்கி உயர்த்திக் காட்டினாள். என் மனம் , அடங்காத சிலிர்ப்பொன்றை அப்போது பூத்திருந்தது.

 

விழிகளில் நீர் ததும்ப ,என்னைச் சுற்றியிருந்த எண்ணற்ற நடைப் பயிற்சியாளர்களை  கிஞ்சித்தும் பொருட்படுத்தாது நின்ற இடத்திலேயே மண்டியிட்டு அமர்ந்தேன். என்னை நோக்கி “அம்மா” என்று ஒருமுறை ஓங்கி அழைத்தாள். நான் எனது வலக்கையை மேலாகத் தூக்கி அவளை நோக்கி வேகமாக அசைத்தேன். வானம் பளிச்சென்றிருந்த அவ்விடியலில் நான் மட்டுமே  அப்போது மழையில் நனைந்துகொண்டிருந்தேன். ஏஞ்சல் என்னை நோக்கி  வேகமாய் ஓடிவந்துகொண்டிருந்தாள். எங்களுக்கிடையேயான இடைவெளி படிப்படியாகக்  குறைந்துகொண்டே வந்தது. அவளும் மழையில் நனையவேண்டும் என்பதற்காக எனது இரு கைகளையும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு அகலம் அவளுக்காக விரித்துவைத்திருந்தேன்.

_ வான்மதி செந்தில்வாணன்.

Series Navigationமணிமேகலை காவியம் காட்டும் காரிகை ஆதிரைசொல்லத்தவறிய கதைகள் தமிழ்நாடு ஶ்ரீவைகுண்டம் கோட்டைப்பிள்ளைமார் சரித்திரம்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *