தொடுவானம் 224. மாநில கைப்பந்து போட்டி

author
0 minutes, 0 seconds Read
This entry is part 11 of 15 in the series 3 ஜூன் 2018

 

          சிங்கப்பூருக்கு வந்தபோது இருந்த உற்சாகம் திரும்பும்போது இல்லை. அந்த ஏழு நாட்கள் கடல் பிரயாணம் ரசிக்கும்படி இல்லை. ஆர்வம் ஏதுமின்றி நாட்களைக் கழித்தேன். தினமும் ஒரு முறை ” ஹவ்சி ஹவ்சி விளையாடுவேன்.அதில் கொஞ்சம் பணம் கிடைக்கும். அதில் அங்கர் பீர் வாங்கிக்கொள்வேன். இரவில் கப்பலின் மேல் தளம் சென்று இருக்கையில் அமர்ந்துகொள்வேன். அந்தக் குளிர்ந்த கடல் காற்று வீசும். இருளில் தெரியும் கருங்கடலும் வானில் தொடர்ந்து ஓடிவரும் வெண் நிலவையும் வெறித்து பார்த்துக்கொண்டு உறக்கம் வரும் வரை அப்படியே அமர்ந்திருப்பேன்.
          இனிமேல் சிங்கப்பூர் வாழ்க்கையை முற்றாக மறந்துவிட வேண்டியதுதான்.ஊர் சென்றதும் திருப்பத்தூர் வேலையை காப்பாற்றிக்கொள்ள வேண்டும். தலைமை மருத்துவர் ஃப்ரடரிக் ஜானுக்கும்  எனக்கும் நல்லுறவு இல்லை. அவரால் தொந்தரவுகள் வரலாம். ஆனால் அவரிடம் நிர்வாகம் இருந்தாலும், அது திருச்சபையின்  மருத்துவக் கழகம், சபைச் சங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. அவரால் பரிந்துரை மட்டுமே செய்ய இயலும். இப்போது எனக்கு மருத்துவமனையின் ஊழியர்களின் ஆதரவு நிறையவே இருந்தது. அதை பலப்படுத்திக்கொண்டு அங்கேயே தொடர்ந்து பணியில் இருக்க வேண்டும்.
            கலைமகள் பற்றிய கவலைக்கும் பரிகாரம் காணவேண்டும். விரைவில் திருமணம் செய்து வைக்க வேண்டும். அவளின் திருமணம் ஏன் தடைபட்டது என்பதை அப்பாவிடமும் அம்மாவிடமும் அண்ணன் அண்ணியிடமும் சொல்லியாகவேண்டும். அதை எப்படிச் சொல்லிச்  சமாளிப்பது என்றும் தெரியவில்லை. மிகுந்த நம்பிக்கையுடன்தான் அவளை கூட்டிச் சென்றேன். கோவிந்தசாமியின் கோளாறினால் அது நின்றுபோனது.
          சென்னை துறைமுகம் வந்தடைந்ததும் நேராக எழும்பூர் சென்றோம். அங்கிருந்து இரவில்  காரைக்குடிக்கு தொடர்வண்டி மூலம் பயணப்பட்டோம். மறுநாள் விடியற்காலையில் காரைக்குடி வந்தடைந்தோம். அங்கிருந்து வாடகை ஊர்தி மூலம் திருப்பத்தூர் அடைந்தோம்.
          நண்பர் பால்றாஜ் மிகுந்த மகிழ்ச்சியுடன் எங்களை வரவேற்றார். இனி நான் சிங்கப்பூர் செல்லமாட்டேன் என்பது அவருக்கு மனதில் தோன்றியிருக்கலாம். அன்று மாலையில் நாங்கள் மீண்டும் பழையபடி ஒன்று கூடினோம். நான் இல்லாதபோது மருத்துவமனையின்  நிலவரம் பற்றிக் கூறினார்.அதில் எவ்விதமான மாற்றமும் இல்லை.
          நான் மனமகிழ் மன்றத்தின் செயலர்.வாளகத்தில் கைப்பந்து ( வாலிபால் ) விளையாடும் திடல் இருந்தது. அதில் புல் வளராமல் செதுக்கி வைத்து பராமரிக்கப்பட்டது. மாலையில் மருத்துவமனை ஊழியர்களும், வளாகத்து இளைஞர்கள் சிலரும் கைப்பந்து விளையாடுவார்கள்.ஃப்ராங்க்ளின், மைக்கல், டேனியல், குமரேசன், விக்லீஸ், ஞானப்பிரகாசம், பாஸ்கரன், காந்தன் ஆகியோர் அதில் குறிப்பிடத்தக்கவர்கள். கைப்பந்து  விளையாட்டை ஊக்குவிக்கும் பொருட்டு மனமகிழ் மன்றத்தின் சார்பில் மாநில அளவிலான கைப்பந்துப்  போட்டி நடத்த திட்டமிட்டோம். இதை அந்த விளையாட்டாளர்களுடன் தலைமை மருத்துவ அதிகாரியைச் சந்தித்து எங்களின் திடடத்தைக் கூறினோம். அவரும் அதில் ஆர்வம் காட்டினார். விளையாட்டாளர்களுக்கு பெருத்த மகிழ்ச்சி! உடனடியாக அதில் தீவிரமாக இறங்கினோம்.
          மருத்துவமனை விளையாட்டாளர்களை வைத்தே ஒரு ஏற்பாட்டுக் குழு அமைத்தோம். நாள் குறித்த பின்பு விளம்பரம் செய்யவேண்டும். அதற்கு அழைப்பிதழ் அச்சடிக்க வேண்டும். சுவரொட்டிகள் தயார் செய்யவேண்டும். மாநில அளவிலான கைப்பந்து  குழுக்க்ளின் முகவரிகளைச் சேகரித்து அவர்களுக்கு அழைப்பிதழை அனுப்பவேண்டும். போட்டியை நடத்தும் நடுவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பரிசுகள் தர ஒரு பிரமுகரை அழைக்க வேண்டும். பரிசுகள் என்ன என்பதையும் முடிவு செய்தாக வேண்டும். ஒரு விலையுயந்த சூழல் கோப்பை வாங்கியாகவேண்டும். பங்கெடுக்கும் குழுக்களிடமிருந்து எவ்வளவு நுழைவுக் கட்டண ம் வசூலிக்கவேண்டும் என்பதை முடிவு செய்தாக வேண்டும். . வரும் விளையாட்டு வீரர்களுக்கு தங்கும் வசதி செய்து தரவேண்டும். இவற்றுக்கெல்லாம் நிறைய செலவாகும். மனமகிழ் மண்டத்தில் அவ்வள்வு பொருளாதாரம் இல்லை. அதனால் திருப்பத்தூர் பொது மக்களிடம் நன்கொடை வாங்கவும் முடிவு செய்தொம்.நான் மனமகிழ் மண்டத்தின் செயலர் என்பதால் என் தலைமையில் இந்த ஏற்பாட்டுக்கு குழு செயலில் இறங்கியது.
          நிபுணத்துவ உதவிக்கு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் உடற் பயிற்சிக் கல்விக் கல்லூரியின் உதவியை நாடினோம். அவர்கள் நடுவர்களை அனுப்புவதோடு போட்டியில் பங்கு பெற இரண்டு அணிகளையும் அனுப்புவதாகத் தெரிவித்தனர். அதோடு மாவட்ட ரீதியில் உள்ள மற்ற குழுக்களின் முகவரியும் தந்தனர். ராமநாதபுரம் காவலர் துறையினர் ஒரு அணியை அனுப்பவதாகச் சொல்லி இதர காவலர் அணைகளின் முகவரியும் தந்தனர். அவ்வாறு தஞ்சை, மதுரை காவல் துறையினரின் அணிகளும் பங்கெடுப்பதாகத் தெரிவித்தனர். சிவகங்கை மாவட்டத்தில் செயல்பட்ட பல குழுக்கள் பங்கெடுக்க தயாராயின. நல்ல வரவேற்பு கிடைத்தது தெரிந்தது.
          திருப்பத்தூர் வரலாற்றில் இத்தகைய மாபெரும் வாலிபால் போட்டி நடைபெறுவது இதுவே முதல் தடவை! ஊர் பிரமுகர்கள் தாராளமாக நன்கொடை வழங்கினார்கள்,. அவர்களில் வள்ளல் ஆறுமுகம் புதல்வரான நாகராஜன் கணிசமான தொகையைத் தந்தார். தென்மாப்பட்டு பகுதியிலும் நல்ல வசூல் செய்தோம்.
          நாட்கள் செல்ல செல்ல ஏற்பாடுகள் தீவிரமடைந்தன. திருப்பத்தூர் வீதிகளில் சுவரொட்டிகள் காட்சி தந்தன. பொது மக்கள் பெருமளவில் வந்து விளையாட்டுகளைக் கண்டு களிப்பார்கள்.
          போதுமான நன்கொடை வந்ததும் வெள்ளியில் ஒரு பெரிய சூழல் கிண்ணம் வாங்கினோம். அதில் டாக்டர் கூகல்பர்க் வாலிபால் சூழல் கிண்ணம் என்று பொறித்தோம். டாக்டர் கூகல்பர்க் மருத்துவமனையை உருவாக்கியவர்.
          விளையாட்டாளர்கள் தங்குவதற்கு சில வார்டுகளைக் காலி செய்தோம். மருத்துவமனை உணவகத்தில் உணவு விற்பனைக்கு ஏற்பாடுகள் செய்தோம்.
          இது முதல் போட்டி என்பதால் சூழல் கிண்ணத்தை எங்களுடைய குழு வெல்ல முழு மூச்சுடன் இறங்கினோம். இரண்டு மூன்று வெளி விளையாட்டாளர்களை எங்கள் குழுவில் சேர்த்துக்கொண்டு அன்றாடம் தீவிரப் பயிற்சி தந்தோம்.
          ஏராளமான குழுக்கள் ஆர்வம் காட்டியதால் மூன்று  நாட்கள் போட்டிகள்  நடந்தன. காலை எட்டு மணி முதல் மாலை ஆறு வரை தொடர்ந்து நடைபெற்றன. விளையாட்டுத் திடலைச் சுற்றி பொதுமக்கள் பெருமளவில் நின்று ஆரவாரம் செய்து கண்டு களித்தனர் .
          காவலர் குழுவினர் மிகவும் சிறப்பாக விளையாடினர். ஆனால் எங்கள் குழு இன்னும் சிறப்பாக விளையாடி இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது!
          எங்களை எதிர்த்து ராமநாதபுரம் காவலர் அணி இறுதிப் போட்டியில் விளையாடியது. அது விறுவிறுப்பான விளையாட்டு.அதிலும் நாங்கள் வென்று சூழல் கிண்ணத்தைக் கைப்பற்றினோம்! அது மிகவும் ஆச்சரியம்!
          உடன் பரிசளிப்பு விழா நடை பெற்றது. விளையாடிய குழுக்களுக்கு நான் நன்றி சொன்னேன். சிறப்பாக போட்டியை ஏற்பாடு செய்த என்னை தலைமை மருத்துவ அதிகாரி பாராட்டினார். நாங்கள் அழைத்திருந்த பிரமுகர் சூழல் கிண்ணத்தை எங்கள் அணிக்கு வங்கினார்.
          ( தொடுவானம் தொடரும் )
Series Navigationநானொரு முட்டாளுங்க…..மருத்துவக் கட்டுரை நீரிழிவு நோயும் பார்வை பாதுகாப்பும்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *