நானொரு முட்டாளுங்க…..

0 minutes, 2 seconds Read
This entry is part 10 of 15 in the series 3 ஜூன் 2018
?????????????????????????????????????????????????????????

(லதா ராமகிருஷ்ணன்)

 

யாரிருந்தாலுமில்லாவிட்டாலும் ரத்தம் வீதிகளில்
சில சமயம் உறைந்தும் சில சமயம் வழிந்தும்
வறுமையால் உறிஞ்சப்பட்டு வெளியே தெரியாமல்
பலநேரமும்…….

 

மக்கள் என்று முழங்கி அரியணை ஏறுபவர்களில்
தம் மக்கள் முன்னேற்றத்தை முதலாகக் கொள்பவரே
அதிகம் என்றால்
புள்ளிவிவரங்களைக் கொண்டுவா என்பவர்கள்
தமிழ்நாடே எதிர்ப்பதாகவும் ஆதரிப்பதாகவும்தான்
திரும்பத்திரும்பச் சொல்கிறார்கள்.

.
விரும்பும்வகையில் வாக்கியங்களை
வெட்டித்தட்டி
இட்டுகட்டிச் செய்யப்படும் ’எடிட்டிங்’ வேலைகளில்
எகிறும் ’டிஆர்பி’ ரேட்டிங்குகள்.

 

அது பொய்யில்லையா என்றால்
வாய்மை எனப்படுவது யாதெனில்
என்று வள்ளுவரை அந்தரத்தில்
தொங்கவிடுவார்கள்…..

 

பேருக்கு இரண்டு மூன்று தலைகள்
உருண்டால்தான் என்ன?
தன் காரணமாக என்றால் தியாகம் எனவும்
தன்னிகரற்ற வீரம் என்றும்
இன்னொருவர் காரணமெனில்
இரக்கங்கெட்ட கொலையென்றும்
வானத் தாரகைகளையும் சாட்சிக்கு அழைத்து
சத்தியம் செய்ய முடியாதா என்ன?

 

விண்மீன்கள் வரவில்லையெனில்
ஏலியன்கள் விழுங்கிவிட்டதாகச்
சொல்லிவிட்டால் போயிற்று.

 

பரபரப்பாக இங்கே எதையாவது
சொல்லிவிடத் தெரியவேண்டும்.
பொய்யா மெய்யா என்று
நாக்கு மேலே பல்லப் போட்டு கேட்கத்
துணிபவர்கள் குறைவாகவே இருப்பார்கள்.
பட்டென்று பொட்டிலொரு தட்டுதட்டினால்
போதும்.

 

ஏகவேலையிருப்பதாய்,
எக்குத்தப்பான கேள்விகளுக்கு பதிலளித்து
நேரத்தை விரயம் செய்யப் பிடிக்கவில்லை
யென்பதாய் , எத்தனைக்கெத்தனை
கிராக்கி காட்டிக்கொள்கிறோமோ
அத்தனைக்கத்தனை அறிவுசாலியாகப்
பகுக்கப்படும் சாத்தியப்பாடு அதிகம்.

 

அப்படியும் எவரேனும் தர்க்கித்தால்
அவர் சாதியைச் சொல்லி வசைபாடினால்
முடிந்தது விவகாரம்.

 

முடிந்துவிடுவதில்லை அதிகாரத்தின் உறவு _
அரியணையோடு மட்டும்.

 

எட்டும் வரை பட்டறிவு பார்த்ததில்
ஒரே சாதியென்றாலும் முதலாளியும் சேவகரும்
சமமாய் அமர்ந்துகொள்ள முடிவது
சினிமாத் தியேட்டர் மட்டுமே.
அதாவது வேறு வேறு வரிசையிலுள்ள
இருக்கைகளில்.

 

வர்க்கம் என்ற சொல் வெறும் இன்னொரு கெட்டவார்த்தையாக்கப்பட்டுவிட்டது.

 

வெளியே சொன்னால்
”மரியாதை கெட்டவன்
மனிதர்களை மதிக்கத் தெரியாதவன்
நீயென்ன பெரிய இவனா
நாயாண்டி பேயாண்டி
‘க்ரா’ப்பாண்டி ’டூப்’பாண்டி
நக்கிப்பிழைப்பவன், பொய்யைக்
கக்கிக்கொண்டிருப்பவன்…”
_ நயத்தக்க வார்த்தைகள் இவை
நான் பேசும் விதத்தில் பேசினால்
நாண்டுகிட்டு சாவாய் நீ
யிருந்துதான் ஆகப்போவதென்ன?” _

யென ஆரம்பித்துப் 

 


பண்பாளர்களாய்த் தம்மைத்தாம்
முரசறைந்து பிரகடனப்படுத்திக்
கொள்கிறவர்களிடமிருந்து
கிளம்பும் நரகல் நச்சு நாராசச் சொற்கள்
காறித்துப்பிக்கொண்டேயிருக்கும்.

 

 

விளம்பி மாளாது;
வித்தகமும் போதாது……
குரல்வளைக்கு வெளியே
தெறித்துவிட்டது கையளவு…..

 


அதுவும்கூடக் குத்தம்;
வாய்மூடிக்கொண்டிருப்பதே உத்தமம்
என்பீர்களெனில்
அப்படியே ஆகட்டும் –
தங்கள் சித்தம்.

 ——————–

 

Series Navigationதிக்குத் தெரியாத காட்டில்…..தொடுவானம் 224. மாநில கைப்பந்து போட்டி
author

ரிஷி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *