பாவண்ணனைப் பாராட்டுவோம்

author
1
0 minutes, 0 seconds Read
This entry is part 2 of 15 in the series 3 ஜூன் 2018

திருஞானசம்பந்தம்

இந்திய அமெரிக்க வாசக நண்பர்கள் இணைந்து நடத்திய பாவண்ணனைப் பாராட்டுவோம் என்ற இலக்கிய நிகழ்வு, அரங்கு நிறைந்து வெற்றிகரமாகச் சென்னை கவிக்கோ மன்றத்தில் மே மாதம் இருபத்தி ஆறாம் நாள் நடைப்பெற்றது. தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும், பெங்களூர், புதுச்சேரியிலிருந்தும் நூற்றுக்கும் அதிகமான வாசகர்கள், எழுத்தாளர்கள், பார்வையாளர்கள் கலந்து கொண்டார்கள். முழுநாள் நிகழ்வை, சிறுகதை, நாவல், கட்டுரை, மொழிப்பெயர்ப்பு என நான்கு அமர்வுகளாகவும், மாலையில் பாராட்டு விழாவாகவும் ஒருங்கு செய்யப் பட்டிருந்தது.

துவக்க விழாவை வரவேற்புரையுடன் வெற்றிவேல் ஆரம்பித்து வைத்தார். தூத்துக்குடியில் வாழும் மக்களையும், மண்ணையும் தீவிர நச்சுத்தன்மையால் பாழ் படுத்தி அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கும் ஸ்டெர்லைட் தாமிர ஆலையினை மூட வலியுறுத்தி பல ஆண்டுகளாக மக்கள் போராட்டம் நடந்து கொண்டிருந்தது. இந்நிலையில், தொடர்ந்து 100 நாட்களாகப் போராடியப் பிறகு மக்கள், ஆட்சியர் அலுவலகம் நோக்கிச் சென்ற அமைதி பேரணியின் போது கொடூரமாக 12 பேர் சுட்டுக் கொல்லப் பட்டார்கள். இந்தக் கொடுமையைக் குறிப்பிட்டு , கவிஞர் ரவிசுப்ரமணியன் ஒரு கண்டன அறிக்கையை வாசித்தார். அரங்கில் உள்ள அனைவரும் ஒரு நிமிடம் எழுந்திருந்து மௌன அஞ்சலி செலுத்தினார்கள்.

பாரதி மணி தலைமையேற்று துவக்க விழாவில் சிறப்புரை ஆற்றினார். பாவண்ணனின் படைப்புலகம் பற்றியும், அவரின் பன்முக ஆளுமைப் பற்றியும் குறிப்பிட்டு பேசினார். ஓயாத வேலைக்கிடையில் எப்படி அவர் இன்று எழுத வரும் இளம் எழுத்தாளர்களின் படைப்பையும் வாசித்துத் தன் கருத்துகளைப் பதிவு செய்கிறார் என்றும், அஃது எவ்வளவு உற்சாகமூட்டக் கூடியது என்றும் விளக்கிப் பேசினார்.

துவக்க விழாவை அடுத்து உடனடியாகப் படைப்பு அமர்வு நிகழ்வுகள் ஆர்மபமாகின. சிறுகதைகள், நாவல் மற்றும் குறுநாவல்கள், கட்டுரைகள், மொழிப்பெயர்ப்புகள் ஆகிய தலைப்புகளில் அமர்வுகள் இடம் பெற்றன.

முதல் அமர்வினை ரவிசுப்பிரமணியன் ஒருங்கிணைத்தார். கோபாலகிருஷ்ணன், ஒட்டுமொத்த சிறுகதைகளையும் மீண்டுமொரு முறை வாசித்து ஒரு நீண்ட ஆய்வுக்கட்டுரையைத் தயாரித்து, அதையொட்டி தன் உரையை நிகழ்த்தினார். கடற்கரை, தான் வாசிக்க நேர்ந்த சிறுகதைகளை முன்வைத்து பேசினார்.

தி.சிவக்குமார் ஒருங்கிணைப்பில், சித்ரா, திருஞானசம்பந்தம் நாவல்கள் குறித்தும், சாம்ராஜ் குறுநாவல்கள் குறித்தும் பேசினார்கள். அன்பு, பாசம், சக மனிதர்களின் வாழ்வின் மீது இருக்கும் அக்கறை, சமூக நடப்பின் மாற்ற முடியாத அங்கத்தின் வலி, இயற்கையின் மீதிருக்கும் ஈர்ப்பு, இவைகள்தாம் அவரின் எல்லா நாவல்களிலும் இருக்கும் பொதுத் தன்மையாகக் குறிப்பிட்டார்கள். இவைகள் தான் பல நிலைகளில், வெவ்வேறு வடிவங்களில் தொடர்ந்து பதிவு செய்யப் பட்டிருக்கிறது அவரின் படைப்புகளில் என்றார்கள்.

மதிய உணவிற்குப் பிறகு திருஞானசம்பந்தம், கட்டுரைகள் குறித்த அமர்வை ஒருங்கிணைத்தார். படைப்பிலக்கியத்தோடு கட்டுரைகளிலும் பாவண்ணன் முக்கியப் பங்காற்றியுள்ளார். கதை, கவிதை, பிற மொழியாக்கம் என்று தான் வாசிக்க நேர்ந்த, சந்தித்த எல்லாவற்றைப் பற்றியும் கட்டுரையெழுதி இருக்கிறார். நரேந்திரக்குமார், மதுமதி இருவரும் தம் அனுபவம் சார்ந்து, பாவண்ணனின் கட்டுரைகளை முன் வைத்து விரிவாக உரையாற்றினார்கள். நேரில் வர இயலாத கடலூர் ஜெயசிரி அவர்களின் கட்டுரையை ரவிசுப்பிரமணியன் வாசித்தார்.

வேறொரு நிகழ்ச்சியின் காரணமாக, மாலை பாராட்டு விழாவில் பங்கேற்க இயலாத நிலையில் எழுத்தாளர் திலகவதி அவர்கள் மதியமே வந்திருந்து தம் சிறப்புரையை நிகழ்த்தினார்கள். சவால்கள் நிறைந்த ஓர் அரசுப் பணியில் இருப்போரின் எழுத்து எவ்வளவு இக்கட்டான சூழலின் எழுதப் படுகிறது என்றும், அஃது எவ்வாறு மற்றவர்களால் புரிந்து கொள்ளப் படுகிறது என்றும் அவருக்கே உரிய கலகலப்போடு உரையாற்றினார். அப்படிப்பட்ட எந்த நெருக்கடிகளுமற்று, இப்போது முழுநேரமும் எழுத்துப் பணியில் ஈடுப்பட்டுப் பல பெரும்படைப்புகளைத் தர வேண்டும் என்று வாழ்த்தி விடைப் பெற்றார்.

கடைசி அமர்வாக, க நாகராசன் ஒருங்கிணைப்பில், மொழியாக்கம் குறித்து, மா.அண்ணாமலை, வெளி ரங்கராஜன், தி.சிவக்குமார் மூவரும் சிறப்பாக உரையாற்றினார்கள். நாகராசன், தன் ஒருங்கிணைப்பின் ஊடாக, பல்வேறு மொழிப்பெயர்ப்புகள் பற்றித் தம் வாசிப்பனுபவத்தினைப் பதிவு செய்தார். சிறு தேநீர் இடைவேளைக்குப் பிறகு மாலை பாராட்டு விழா தொடங்கியது.

மாலை பாராட்டு விழாவை சந்தியா நடராசன் சிறப்பாக நெறிப்படுத்தினார். ஒட்டுமொத்த நிகழ்வையும் தொய்வில்லாமல் தன் சொந்த அனுபவங்களோடு இணைத்து ஒவ்வொரு பேச்சாளரையும் அறிமுகப் படுத்திய விதத்திற்காக நடராசனுக்கும் ஒரு பாராட்டு. ரவிசுப்பிரமணியனின் இசையோடு நிகழ்வு ஆரம்பித்தது. கடலூர் வளவதுரையன் பாவண்ணனின் பள்ளிப் பருவத்தை நினைவுக்கூர்ந்து பாராட்டிப் பேசினார். பெங்களூரில் பேராசிரியராகப் பணியாற்றி, சென்னைக்குக் குடிப்பெயர்ந்த காவ்யா சண்முகசுந்தரம் அவர்கள் பாவண்ணனோடு தம் அனுபவத்தினைப் பகிர்ந்து கொண்டார். சா.கந்தசாமி அவர்கள், பாவண்ணனின் படைப்பாக்கத்தையும், மொழியாக்கத்தையும் ஒப்பிட்டுப் பேசினார். அவருக்குக் கிடைக்க வேண்டிய உண்மையான வெளிச்சமும் இடமும், அவரின் மொழிப்பெயர்ப்பின் நிழல் மறைத்து விட்டதோ என்ற ஐயத்தைப் பதிவு செய்தார். இத்தகைய நிழல் க.நா.சு வின் படைப்புக்கும் நிகழ்ந்ததெனக் குறிப்பிட்டார். பாவண்ணன் தன் படைப்பு இலக்கியத்திற்காகச் சாகித்திய அகாடமி விருது உள்ளிட்ட பல சிறப்புகளைப் பெற வேண்டும் என் வாழ்த்தி அமைந்தார். பாவண்ணன் ஒரு தளும்பாத நிறைக்குடம் என்று விட்டல் ராவ் வாழ்த்தினார். அவரின் இதிகாச, வரலாற்றுப் பாத்திரங்களை உள் வைத்து எழுதப்பட்ட கதைகள் சிறப்பான பரிமாணங்களைக் கொண்டது என்றார். பல்வேறு நண்பர்கள் பல ஊர்களில் இருந்து வந்திருந்து, நாள் முழுதும் பங்கேற்று பல பரிசுகளைப் பகிர்ந்து மகிழ்ந்தார்கள். பாவண்ணன் தம் ஏற்புரையை மிகுந்த நெகிழ்ச்சியோடு ஆரம்பித்தார். இந்த நிகழ்விற்காக ஏற்பாடு செய்த நண்பர்களுக்கும், பங்கேற்ற நண்பர்களுக்கும் தன் அன்பான நன்றிகளைப் பகிர்ந்து கொண்டார். எனக்கு வாசகர்கள் என்று யாரையும் நான் நினைப்பதில்லை என்றும், என்னை வாசிப்போர் எல்லோருமே என் நண்பர்களாகவே நான் கருதுவதாகக் கூறினார். எனக்கான மகிழ்வையும், ஊக்கத்தையும் என் நண்பர்களின் தோட்டத்தில் இருந்தே தான் பெற்றுக் கொள்வதாகவும், அவர்கள் ஒவ்வொருவரின் பெயரையும் இங்குக் குறிப்பிட்டுச் சொல்ல ஆசைப் படுவதாகவும் கூறினார். பாவண்ணனின் ஏற்புரையை ஒரு தனிக் கட்டுரையாக எழுதலாம். நிறைவாக முகமது அலி நன்றியுரையுடன் விழா இனிதே முடிந்தது. பாவண்ணன் அவர்களின் மனைவி அமுதா மற்றும் மகன் மயன் அவர்களோடு, நண்பர்கள் தத்தம் அலைப்பேசியில் படமெடுத்துப் பதிவு செய்து கொண்டார்கள்.

பாவண்ணனைப் பாராட்டுவோம் என்று தலைப்பிட்டிருந்தாலும், முழு நாள் இலக்கியக் கருத்தரங்க நிகழ்வாகச் சிரத்தையோடு எழுதப்பட்ட கட்டுரைகளுடன் குறிப்பிட்ட நேரத்திற்குள் பேச்சாளர்கள் பேசி முடித்தார்கள். எல்லா அமர்வுகளையும் ஒருங்கிணைப்பாளர்கள் அமர்வு பற்றிய முன்னுரைகளோடும், பேச்சின் கருத்தையும் சுட்டிக்காட்டி முடித்து வைத்தது சிறப்பாக அமைந்திருந்தது. வெற்றிவேல், மகாலிங்கம், முகமது அலி, சிவக்குமார், மற்றும் பல சிறுவர்கள் நாள் முழுதும் ஓடியாடி ஏற்பாடுகளைக் கவனித்துக் கொண்டார்கள். அமெரிக்காவிலிருந்து நண்பர் P.K.சிவக்குமார் நிகழ்வுகளை நேரடியாகப் பார்த்தும், நண்பர்களைத் தொடர்பு கொண்டு விசாரித்தும் நிகழ்வோடு உடன் இருந்தார். இந்நிகழ்வு, ஊர்க் கூடி இழுத்த தேர். வந்திருந்தவர்கள் உடன் சேர்ந்து வடம் பிடித்தார்கள். வர இயலாதவர்கள் அங்கிருந்தே வாழ்த்தினார்கள். யாவருக்கும் அன்பும் நன்றியும்.

—————-

Series Navigationதங்கப்பா: தனிமைப்பயணிகருங்குயிலே !
author

Similar Posts

Comments

  1. Avatar
    valavaduraiyan says:

    பாவண்ணனைப் பாராட்டுவோம் நிகழ்விற்கு நேரே சென்றது போல இருந்தது. மிகச்சுருக்கமாக அதேநேரத்தில் எதையும் விட்டுவிடாமல்பதிவு செய்துள்ள சம்பந்தத்திற்குப் பாராட்டுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *