மணிமேகலை காவியம் காட்டும் காரிகை ஆதிரை

author
0 minutes, 1 second Read
This entry is part 4 of 15 in the series 3 ஜூன் 2018

சு.ஸ்ரீகாந்த்,
டாடா ரியாலிட்டி,
சாஸ்த்ரா ராமானுஜன்,
கணிதத்துறை தலைமைப்பேராசிரியர்.

முனைவர் து.ரஞ்சனி,
உதவிப்பேராசிரியர், கல்வியியல் துறை,
சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகம்,
திருமலைசமுத்திரம், தஞ்சாவூர்.

முன்னுரை :
சிலப்பதிகாரத்திற்கு அடுத்ததாக இலக்கிய அழகில் பெருமை வாய்ந்தது மணிமேகலை ஆகும். இந்நூல் பௌத்த மதச்சார்புடைய நீதிகளை எடுத்துச் சொல்லும் பேரிலக்கியமாகும். மேலும் உயிரை விட மேலான நன்னெறி அறம் பத்தினி பெண்களின் பண்புநலன்கள் ஆகியவற்றையும் எடுத்துரைக்கின்றது. மணிமேகலை காப்பியம் பல கிளைக் கதைகளை உள்ளடக்கியது. மணிமேகலை கதை ஓட்டத்திற்கு அடிப்படையாக இருக்கக்கூடிய பெண்கள் இருவர் ஒருவர் காயசண்டிகை, மற்றொருவர் ஆதிரை ஆவார்.
ஆதிரை அறிமுகம் :
ஆதிரையின் கணவன் சாதுவன் ஆதிரையை விட்டுவிட்டு ஒரு கணிகையிடம் வாழ்கின்றான். தன் உணவிற்கு அவள் கையை நம்பி வாழ்கிறான். வட்டாடல் சூதாடல் இவைகளில் பொருள் எல்லாவற்;றையும் இழக்கிறான். இவனை பேணிய கணிகை சாதுவனிடம்,
“பிறர் நலங்காட்டி காணம் இலி
என கையுதிரிக் கோடலும்” -1
எனக் கூறி அவனை விரட்டி விடுகிறாள்.
சொத்துக்களை இழந்த சாதுவன் ஆதிரையை பார்க்க வருகின்றான். கிழிந்த புடவை, மஞ்சள் கயிற்றுடன் நின்ற அவள் கோலத்தைப் பார்த்து அழுது புலம்புகின்றான்.
“ஆதிரை நான் எத்துணை தீயவன் மங்கலத் தோற்றத்தில் தெய்வச் சிலையாக நின்ற நீ இன்று சகலமும் அழிந்து சிதைக்கப்பட்ட சிலையாக நிற்கிறாய். அன்று அக்னி சாட்சியாக உன்னை கரம்பிடித்து ஏழு அடி வலம்வந்து உன் கழுத்தில் திருப்பூண் பூட்டியது உன்னை இப்படி நிற்;க வைக்கத்தானா?” – 2
என்று கூறுகின்றான். சாதுவன் இழந்த செல்வங்களை திரும்பப் பெறவும் அவன் வாழ்ந்த புகார் நகரில் வளமான வாழ்க்கை வாழவேண்டும் என்ற வைராக்கியத்தில் திரைகடலோடியும் திரவியம் தேடு என்பதற்கேற்ப மரக்கலத்தில் சில வணிகர்களுடன் பயணம் மேற்கொள்கின்றான்.
கண்ணகி, ஆதிரை மாண்புகள் :
சிலப்பதிகாரத்திலும் மாதவியிடம் ஊடல் கொண்ட கோவலனும் சாதுவன் போல கண்ணகியை நாடி வருகின்றான். தன் அன்பு மனையாளின் அழகிய முகம் வாடி இருப்பதைக் கண்டு வருந்தினான்.
“குலம் தருவான் பொருள் குன்றம் தொலைந்த
இலம் பாடு நாணுத் தரும் எனக்கு என்ன” – 3
என்றான் கோவலன். சொத்துக்கள் இழந்ததை அவமானமாகக் கருதினான் என்பதை இளங்கோவடிகள் அழகாக தெளிவுபடுத்தியுள்ளார். வருந்துகின்ற கணவனிடம் கண்ணகி,
“நலம் கேழ் நகைமுகம் காட்டி
சிலம்பு உள கொண்மின்” – 4
என்று புன்முறுவலுடன் கூறுகின்றான்.
நல்ல பண்புகளும், குணங்களும் கொண்ட கணவன் தப்பு செய்தாலும், அவனை பெண்கள் வெறுப்பதில்லை. திருத்தி நிச்சயம் தன் தவறை உணர்வான் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கின்றார்கள். ஆதிரையும், கண்ணகியும் செய்த புண்ணியமும், கற்பு நெறியும் போற்றத்தக்கவை. பெய்யெனப் பெய்யும் மழையைக் கொண்டு வரும் பத்தினிப் பெண்களும் வணங்கும் புனிதத்தை பெருமையை அடைந்தவர்கள். இவர்கள் இருவரும் என்பதில் ஐயமில்லை.
ஆதிரை தீக்குளித்தல் :
கடல் காற்றின் வீச்சில் சாதுவன் போன மரக்கலம் சிதைகின்றது. ஓடிந்த மரம் ஒன்றை பற்றிக் கொண்டு சாதுவன் அலைகளில் மிதக்கின்றான். நக்க சாரணர்களாகிய நாகர்கள் வாழ்கின்ற மலைப்பக்கம் போய் சேர்கின்ற நாகர்கள் கையில் அகப்படுகின்ற கடலில் கலம் உடைந்து இறந்தவர்களுடன் சாதுவனும் இறந்துவிட்டான் என்று ஆதிரை கேள்விப்படுகின்றாள். கணவன் இறந்ததால் தீக்குளிக்க விரும்பி, சுடுகாட்டில் தீ வளர்த்தாள். ஆதிரையும் மலர்ந்த முகத்துடன் சிதைக்குள் இறங்கினாள். இறைவனின் கருணை பூ மழையாக பொழிகிறது. சிதையில் தீ அணைந்து அது மலர்ப்படுக்கையாக மாறியது. ஆதிரை உடுத்தியிருந்து கூரைப் புடவை, மலர்மாலை கருகவில்லை. பூசியிருந்த மஞ்சள், சந்தனம், குங்குமம் ஆகியவை தன் பொழிவை இழக்கவில்லை. இதை சீத்தலைசாத்தனார்,
“விரை மலர்ந்த தாமரை ஒரு தனி இருந்த
திருவின் செய்யோன் போன்று இனிது இருப்பாள்” – 5
என்று திருமகளுக்கு ஒப்பானவள் ஆதிரை என்று புகழாரம் சூட்டுகிறாள்.
“தீயும் கொல்லாத தீ வினை யாட்டினேன்
யாது செய்கேன்” – 6
என்று புலம்புகின்றாள். அப்பொழுது வானில் அசரீரி ஒலிக்கின்றது.
“ஆதிரை உன் கணவன் இறக்கவில்லை. அவன் தப்பிப் பிழைத்து நாகர்கள் வாழும் மலைப்பகுதியில் ஒதுங்கியுள்ளான். சந்திரதத்தன் என்ற வியாபாரி உதவியுடன் விரைவில் வருவான்” – 7 என்று அசரீரி கூறுகின்றது.

நாகர்கள் வாழும் மலையில் சாதுவன் :
சாதுவன் தன் மனைவி மேல் ஆசையும், அன்பும் கொண்டு இழந்தவற்றை மீண்டும் அடைந்து ஆதிரையை சுகமாக வாழவைக்க வேண்டும் என்று விரும்பினான். தவறை உணர்ந்த சாதுவனுக்கு தெய்வம் துணை நின்றது. நாகர் வாழும் மலையில் அலைகளால் சேர்க்கப்பட்ட சாதுவன் கடலில் பட்ட துன்பத்தால் வருந்தித் துயிலில் ஆழ்ந்து விடுகின்றான். அவனைக் கண்ட நக்க சாரணர்கள்
“ஊன் உடை இவ்வுடம்பு உணவு
என்று எழுப்பலும்” – 8
என்று கூறி அவனை எழுப்புகின்றார்கள். சாதுவன் நாகர் மொழியை ஐயமுறக் கற்றவன்; நாகர் மொழியிலேயே அவர்களுடன் நயமாகப் பேசுகின்றான். ஒருவனின் தாய்மொழியில் பேசினால் அது அவர்களுக்கிடையே ஒரு இணக்கத்தையும், நெருக்கத்தையும் ஏற்படுத்தும் என்பதையும் இந்த இடத்தில் உணர்த்துகின்றார் சீத்தலைசாத்தனார். நாகர்கள் தலைவன் சாதுவனின் பேச்சில் மகிழ்ந்து பொன்னும், பொருளும் கொடுத்து சந்திரதத்தன் என்னும் வணிகனின் கப்பலில் அவனை அனுப்புகின்றனர்.
சாதுவன் ஆதிரையுடன் சேர்தல் :
“அன்பும் அறனும் உடைத்தாயில் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது” – 9
என்ற குறளுக்கு ஏற்ப பொன், பொருளுடன் வந்த சாதுவனுடன் மகிழ்ச்சியாக புது வாழ்வை தொடங்குகின்றான். இத்தகைய சிறப்பு பொருந்திய ஆதிரையே அமுதசுரபியில்; முதல் பிச்சையிட தகுதியானவள் என்பதை காயசண்டிகை,
“பத்தினி பெண்டிர் பண்புடன் இடுவும்
பிச்சையேற்று பெருங்தகவு உடைத்து” – 10
என்று கூறி மணிமேகலையை ஆதிரையிடம் அழைத்துச் செல்கின்றாள். மாசற்ற கற்புடைய மகளான ஆதிரை மணிமேகலையை வலம்வந்து வணங்கி, தன் கையில் இருந்த அமுதசுரபியில் உள்ளிடம் நிறையுமாறு,
“பார் அகம் அடங்கலும் பசிப்பிணி அறுக
ஆதிரை இட்டனள், ஆருயிர் மருந்து” – 11
என்று கூறி ஒரு கவளம் அன்னம் இடுகிறாள் ஆதிரை. பத்தினிப் பெண்களால் வணங்கப்படும் ஆதிரையின் கை அன்னம் பெற்று அமுதசுரபி பெருகுகின்றது.
தொகுப்புரை :
ஒருவன் அறவழியில் ஈட்டிய செல்வம் குறையாமல் மேன்மேலும் வளர்வதைப் போல் கற்பின் பெருந்தகை ஆதிரை அமுதசுரபியில் இட்ட உணவு பலவாகப் பெருகி பசிப்பிணியைப் போக்கியது. மண்ணுயிரில் வாழக்கூடிய அனைவரும் பகுத்து உணவை உண்ணும் மரபை சீத்தலைசாத்தனார் மணிமேகலை கிளைக்கதையின் மூலம் உணர்த்தியுள்ளார். மணிமேகலை காவியத்தில் ஆதிரை கிளை3கதையாக இருந்தாலும் மூலக்கதையோடு தொடர்புற்று கதைக்கு மெருகூட்டும் வண்ணம் அமைந்துள்ளது. கணவன் தன்னை விட்டு வேறு பெண்ணை நாடினாலும் சங்க இலக்கியம் மற்றும் காப்பியங்களில் சித்தரிக்கும் பெண்கள் கணவனை தெய்வமாக கருதினார்கள். கண்ணகி, மாதவி ஆகியோர் வரிசையில் ஆதிரையும் காவியம் காட்டும் காரிகை என்றால் அது மிகையல்ல.
அடிக்குறிப்புகள் :
1) சீத்தலைசாத்தனார், மணிமேகலை (தண்டபாணி உரை) பா.எண்.9, 10, ப.122
2) மேலது பா.எண்.12, ப.124
3) இளங்கோவடிகள், சிலப்பதிகாரம் (ஞா.மாணிக்கவாசகர்) பா.எண்.70, ப.151
4) மேலது பா.எண்.71, 72, ப.153
5) சீத்தலைசாத்தனார், மணிமேகலை (தண்டபாணி உரை) பா.எண்.28, 29, ப.124
6) மேலது பா.எண்.35, 36, ப.125
7) மேலது பா.எண்.36, 37, 38, 39, 40, ப.125
8) மேலது பா.எண்.59, ப.125
9) திருவள்ளுவர், திருக்குறள் (டாக்டர் மு.வரதராசனார் உரை) கு.எண்.45, ப.11
10) சீத்தலைசாத்தனார், மணிமேகலை (தண்டபாணி உரை) பா.எண்.73, 74, ப.121
11) மேலது பா.எண்.134, ப.135

1. ஞா.மாணிக்கவாசகன்,
சிலப்பதிகார தெளிவுரை,
உமா பதிப்பகம்,
பழைய எண்.171, பவளக்காரத்தெரு,
மண்ணடி, சென்னை-600001.

2) துரை. தண்டபாணி,
மணிமேகலை தெளிவுரை,
பழைய எண்.171, பவளக்காரத்தெரு,
மண்ணடி, சென்னை-600001.

3) டாக்டர் மு.வரதராசனார்,
திருக்குறள் தெளிவுரை,
திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்பு கழகம் லிட்.,
522, டி.டி.கே.சாலை, சென்னை-600018.

 

Series Navigationகருங்குயிலே !அந்த நாளை எதிர்நோக்கி
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *