உலகின் தலை சிறந்த சில ஓரின ஈர்ப்புப் படங்கள் 12- மில்க் (Milk)

author
0 minutes, 3 seconds Read
This entry is part 7 of 9 in the series 1 ஜூலை 2018

அழகர்சாமி சக்திவேல்

திரைப்பட விமர்சனம்

2008-இல் வெளிவந்த மில்க்(Milk) என்ற அமெரிக்க ஓரினத் திரைப்படம், முழுக்க முழுக்க ஒரு அரசியல் திரைப்படம் என்பதால், எனது விமர்சனத்துக்குள்ளும், நிறைய அரசியல் பேச வேண்டியிருக்கிறது. முதலில், தற்போதைய அயர்லாந்தின் பிரதமரும், இந்திய வம்சாவளியில் வந்தவருமான உயர்திரு. லியோ வரத்கார் அவர்கள் குறித்து இங்கே பேசுவோம். லியோ வரத்கார் “நான் ஒரு ஓரினச்சேர்க்கையாளன்” என்று வெளிப்படையாக சுயப்பிரகடனம் செய்துகொண்ட ஒரு ஓர்பால் ஈர்ப்பாளர். இவரது தந்தை திரு அசோக், இந்தியாவில் பிறந்த ஒரு மருத்துவர். தாய் திருமதி மிரியம் ஒரு அயர்லாந்துப் பெண்மணி. அயர்லாந்தின் ஆக இளையவயதுப் பிரதமரான லியோ வரத்கார், அயர்லாந்தின் மிகப் பெரிய அரசியல் கட்சியான ஃபைன் கேயல் கட்சியின் தலைவர் ஆவார். பிரதமர் ஆவதற்கு முன்னர் அயர்லாந்தின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆகவும், சுகாதாரத்துறை அமைச்சராகவும், போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆகவும் இருந்து படிப்படியாக கட்சியில் முன்னேறியவர். மருத்துவரான திரு லியோ வரத்காரின் வாழ்க்கைத்துணையான திரு மாத்யூவும் ஒரு மருத்துவரே. 38 வயதில் பிரதமாரான லியோ, தனது 36வது வயதில், ஒரு அயர்லாந்து வானொலிக்குப் பேட்டி கொடுக்கும்போது, “ஓர்பால் ஈர்ப்பாளன் என்பது எனது அடையாளம் அல்ல. மாறாய் அது எனது மனிதகுணங்களின் ஒரு பகுதி” என்று தன்னை வெளிப்படையாக அறிவித்துக்கொண்டதோடு நில்லாமல், ஓர்பால் திருமணங்கள், அயர்லாந்தில் சட்டமாக அரும்பாடு பட்டவர்.

லியோ வரத்கார் போன்று, அரசியலில் பிரபலமான ஓர்பால் ஈர்ப்பாளர்கள், உலகில் பலர் இருக்கிறார்கள். அப்படிப் பிரபலமான ஓர்பால் ஈர்ப்பாளர்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று ‘அவர் ஒரு ஓரினச்சேர்க்கை விரும்பி’ என்று உலகம் அறிந்து இருந்தாலும், அதுகுறித்து சுயப்பிரகடனம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து மறைந்துபோனவர்கள். கிரேக்கத்தின் மாவீரன் அலெக்ஸ்சாண்டர், அரசியல் மற்றும் தத்துவ ஞானி சாக்ரடிஸ், ரோமாபுரி மன்னன் ஜூலியஸ் சீசர், பாப்ரி நாமாவில் தனது இளையவயதுக் காதலன் குறித்து கவிதை பாடிய இந்திய முகாலய மன்னர் பாபர், இன்னொரு மன்னர் அலாவுதீன் கில்ஜி, மாலிக்காபூர், அமெரிக்க அதிபர் ஆப்ரகாம் லிங்கன் என சரித்திரத்தில் இடம்பெற்ற பல வீரர்கள் முதலாம் வகையைச் சேர்ந்தவர்கள். இரண்டாம் வகை ஓர்பால் ஈர்ப்பாளர்கள், தங்கள் ஓரினச் சேர்க்கை குறித்து வெளிப்படையாக அறிவித்துக்கொண்டவர்கள். அவர்களில் முதன்மையானவர், 2009வில், ஐஸ்லாந்துவின் பிரதமராய் இருந்த திருமதி ஜோஹன்னா ஆவார். இவரே, முதன்முதலில் “நான் ஒரு லெஸ்பியன்” என்று தனது ஓர்பால் ஈர்ப்பு குறித்து உலகிற்கு சொன்னவர். இவரைத் தொடர்ந்து, 2011வில்,  பெல்ஜியத்தின் பிரதமராய் இருந்த திரு எலியோ டி ரூபோ, தான் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்று அறிவித்துக்கொண்டார். தற்போது லக்ஸம்பெர்க் நாட்டின் பிரதமராய் இருக்கும் திரு சேவியர் பெட்டலும், “தான் ஒரு ஓரினச்சேர்க்கையாளர்” என உலகிற்கு வெளிப்படையாகச் சொன்னவர்   இந்தியாவைப் பொறுத்தவரை, குஜராத்தின் ராஜ் பிப்லா மன்னர் பரம்பரையில் வந்த திரு மன்வேந்திர சிங் கோஹில் என்ற இளவரசரே, முதன் முதலில், தன்னை ஒரு ஓர்பால் ஈர்ப்பாளர் என்று அறிவித்துக்கொண்ட மன்னர் ஆவார். 1998-இல், மத்தியபிரதேச மாநில சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட திருநங்கை சப்னம் மௌசிமியையும் நாம் இங்கே குறிப்பிட்டு ஆகவேண்டும். மேலே குறிப்பட்ட ஓரின அரசியல்வாதிகள் போலவே, அமெரிக்காவின் புகழ்பெற்ற ஒரு அரசியல்வாதியே, நான் விமர்சனம் செய்யும் இந்தத் திரைப்படத்தின் கதாநாயகன் ஹார்வி மில்க் ஆவார். மில்க் என்ற இந்தத் திரைப்படம், மில்க்கின் உண்மை வாழ்க்கை வரலாற்றுப்படம் என்பதால், ஹார்வி மில்க் குறித்து நாம் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.

அமெரிக்காவின் ஒரு மாநிலமான கலிபோர்னியாவில் உள்ளது அழகிய சான்பிரான்சிஸ்கோ நகரம் என்பது நாம் யாவரும் அறிந்ததே. அந்த நகரத்தின் ஒரு மாவட்டம்தான் காஸ்ட்ரோ மாவட்டம். பசிபிக் பெருங்கடலை ஒட்டி இருக்கும் காஸ்ட்ரோ மாவட்டத்தில், ஆரம்பத்தில், பின்லாந்து நாட்டில் இருந்து வந்த குடியேறிகள் வசித்தார்கள். பின்னர் பின்லாந்துவின் அண்டை நாடுகளான நார்வே, ஸ்வீடன், டென்மார்க் போன்ற பகுதிகளில் இருந்து வந்து  மக்கள் குடியேற, காஸ்ட்ரோ மாவட்டம் ஒரு அதிக மக்கள் வசிக்கும் மாவட்டம் ஆக மாறியது. ஆனால் இரண்டாம் உலகப்போருக்கு பிறகு, காஸ்ட்ரோ மாவட்டத்தின் நிலைமை மாறத் தொடங்கியது. காரணம், இரண்டாம் உலகப்போரில் பங்குகொண்டு, ஓரினச்சேர்க்கையின் காரணமாக மாட்டிக்கொண்ட ஆயிரக்கணக்கான அமெரிக்க ஓரினச்சேர்க்கை வீரர்கள், பதவிநீக்கம் செய்யப்பட்டு, காஸ்ட்ரோ மாவட்டத்தில் இறக்கி விடப்பட்டார்கள். வேறுவழியின்றி அங்கேயே குடியேறிய ஓரினச்சேர்க்கை வீரர்களின் எண்ணிக்கை அதிகமானது, அவர்கள் கூடவே, மற்ற நாட்டில் இருந்து வந்த, புதுக்குடியேறிகளின் வருகையும் அதிகரித்தபோது, ஏற்கனவே குடியேறியிருந்த வசதிபடைத்த வெள்ளையர் சமூகம், அருகில் உள்ள பகுதிகளுக்கு தங்கள் குடியேற்றத்தை மாற்றிக்கொண்டது. இதனால், காஸ்ட்ரோ மாவட்டத்தில் வீடுகள், மிகக்குறைந்த விலைக்கு விற்கப்பட்டன. வீடுகள் குறைந்த விலைக்கு விற்பதை கேள்விப்பட்ட அமெரிக்காவின் மற்ற மாநிலத்து ஓரினச்சேர்க்கையாளர்களும், காஸ்ட்ரோ மாவட்டத்தில் குடியேறினார்கள். 1960இல், காஸ்ட்ரோ மாவட்டத்தின் அண்டை மாவட்டமான ஹெயிட் ஆஸ்பரியில்தான், முதன்முதலாய், நவநாகரிகமான ஹிப்பி கலாசாரம் தோன்றியது. இந்த ஹிப்பி கலாச்சாரத்தின் விளைவால், காஸ்ட்ரோ மாவட்டம், ஓர்பால் ஈர்ப்பாளர்களின் சொர்க்கமாக மாறியது. 1970களில், ஓரினச்சேர்க்கையாளர்கள் பலர் சேர்ந்து, காஸ்ட்ரோ மாவட்டத்தில் பல வியாபார நிறுவனங்களைத் தொடங்கி, நகரின் அழகை இன்னும் கூட்டினர். இந்தக் காலகட்டத்தில் காஸ்ட்ரோ மாவட்டத்துக்கு வந்து சேர்ந்தவர்தான் நமது படத்தின் கதாநாயகன் ஆன ஹார்வி மில்க். நியூயார்க்கில் பிறந்த ஹார்வி மில்க், தனது பள்ளிப்படிப்பையும், கல்லூரிப் படிப்பையும் நியூயார்க்கிலேயே முடித்தார். பின்னர் அமெரிக்கக் கப்பற்படையில் பணியாற்றிய ஹார்வி மில்க், தான் ஒரு ஓரினச் சேர்க்கையாளர் என்ற உண்மையைச் வெளியில் சொல்லாமலே வாழ்ந்தார். அமெரிக்க கப்பற்படையில் இருந்து சிறிதுகாலம் கழித்து வெளியேறிய மில்க், பல வேலைகளில், சேர்ந்து பின் விலகி, சேர்ந்து பின் விலகி எனக் காலத்தை ஓட்டிக்கொண்டு இருந்தார். ஆரம்பத்தில் காம்பெல் என்ற ஓரினச் சேர்க்கையாளரோடு பழகிய மில்க், பின்னர் மெக்கில்னி என்பவரை, தனது ஓரினத்துணையாகச் சேர்த்துக்கொண்டார்.  அப்போதுதான், அமெரிக்காவில் ஹிப்பி கலாச்சாரம் தோன்றியது. சுதந்திரவிரும்பியான மில்க்கும், ஹிப்பியாக தன்னை மாற்றிக் கொண்டார்.

மெக்கில்னி உறவும் கொஞ்ச காலம் கழித்து கசந்துபோக, மில்க், ஸ்காட் ஸ்மித் என்பவரோடு நெருங்கிப் பழக ஆரம்பித்தார்.. வாழ்க்கையில் எந்தவித பிடிப்பும் இல்லாமல் ஹிப்பியாய் அலைந்த மில்க், 1970களின் ஆரம்பத்தில், தனது துணையான ஸ்காட் ஸ்மித்துடன், சான்பிரான்சிஸ்கோவின் காஸ்ட்ரோ மாவட்டத்திற்கு வந்து சேர்ந்தார். இருவரும், தங்கள் கையில் மிச்சமிருந்த சேமிப்பைக் கொண்டு ‘காஸ்ட்ரோ கேமரா’ என்ற கேமராக் கடையைத் தொடங்கினர். இப்போது அமெரிக்காவின் ஒரு நினைவுச்சின்னம் ஆக இருக்கும் இந்தக் கேமெராக் கடைதான், கடைதிறந்த கொஞ்ச காலம் கழித்து, மில்க்கின் கட்சி அலுவலகம் ஆக மாறியது. ஓரினச் சேர்க்கையாளர்கள் அதிகம் வசிக்கும் காஸ்ட்ரோ மாவட்டத்தில் இருந்த பலரும், மில்க்கின் கேமெரா கடையின் வாடிக்கையாளர் ஆனார்கள். அந்தக் காலகட்டத்தில், கலிபோர்னியாவில் மட்டும், சுமார் மூவாயிரம் ஓரினச் சேர்க்கையாளர்கள், ஒழுக்கக்கேடு நடவடிக்கை என்ற பெயரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பல்வேறு மனிதஉரிமை இயக்கங்கள் இதை எதிர்த்தன. இதையெல்லாம் செய்திகளாக வாசித்துக் கொண்டு இருந்த மில்க், 1973இல் அரசியலில் குதித்தார்.  அரசியலில் குதித்தவுடனேயே, மில்க்கிற்கு வெற்றி கிடைத்து விடவில்லை. சான்பிரான்சிஸ்கோ நகரத்தின் விதிப்படி, ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் ஒரு அரசியல் கண்காணிப்பாளர், Board Of Supervisor என்ற பெயரில் (நம்ம ஊர் சென்னை நகரமன்ற கவுன்சிலர்) தேர்ந்து எடுக்கப்படுவர். இந்தப்பதவிககாய் 1973-இல் போட்டியிட்ட மில்க் தோல்வியைத் தழுவினார். தோல்விக்கான காரணத்தில் ஒன்றாய், தனது ஹிப்பித்தொற்றத்தை அடையாளம் கண்டுகொண்ட மில்க், ஹிப்பி உடைகளைக் களைந்துவிட்டு கோட் சூட்டிற்கு மாறினார். 1975-இல் மறுபடியும் தேர்தலில் நின்று முயற்சித்தார். மில்க்கின் வாக்குகள் கூடிய போதும், மில்க்கால் வெற்றிபெற முடியவில்லை. பின்னர் 1976-இல் கலிபோர்னியா மாநில சட்டசபை தேர்தலில் நின்றார். அந்தத் தேர்தலில் வெறும் 4000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப் போனார். மனம் தளராத மில்க், ஓர்பால் ஈர்ப்பாளர்களுக்காக அனுதினமும் உழைத்துக் கொண்டே இருந்தார். கூர்(Coor) என்ற பீர் அப்போது அமோகமாக காஸ்ட்ரோவில் விற்பனை ஆகிக்கொண்டு இருந்தது. இதைக் கவனித்த மில்க், கூர் பீர் கம்பெனியில் ‘ஓர்பால் ஈர்ப்பாளர்கள் ஓட்டுனர்களாக சேர்த்துக்கொள்ளவேண்டும்’ என மறைமுக நிபந்தனை விதித்தார். கூர் கம்பெனி இதை ஏற்றுக்கொள்ளவில்லை. பின்னர், மில்க்கின் ஆலோசனையின் பெயரில், கூர் பீர் வாங்க, காஸ்ட்ரோவின் பல மதுக்கூடங்கள் மறுத்தபோது, விற்பனை சரிவால் கூர் கம்பெனி பணிந்தது. ஓர்பால் ஈர்ப்பாளர்கள், கூர் கம்பெனியில் வேலைக்கு சேர்த்துக்கொள்ளப் பட்டனர். இது மில்க்குக்கு கிடைத்த ஒரு அரசியல் வெற்றி ஆகும். 1975, செப்டம்பர் மாதத்தில், அப்போதைய அமெரிக்க ஜனாதிபதியான திரு ஃபோர்ட், சான்பிரான்சிஸ்கோவிற்கு வருகை மேற்கொண்டார். தான் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து வெளியில் வந்த அதிபர் ஃபோர்டினை, மூர் என்பவர் துப்பாக்கியால் சுட்டார். இருப்பினும் மூருக்கு அருகில் இருந்த ஆலிவர் சிப்பில் என்பவர், மூரைத் தடுத்ததால் துப்பாக்கி குண்டு வேறுபக்கம் பாய, அதிபர் போர்ட் காப்பாற்றப்பட்டார். காப்பாற்றிய ஆலிவர் ஒரு ஓரினச் சேர்க்கை விரும்பியாவார். இந்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக்கிய மில்க், பத்திரிகைகளில், ‘ஆலிவர் ஒரு ஓரினவிரும்பி’ என்று பேட்டி தர, ஆலிவரோடு, மில்க்கின் பெயரும் அமேரிக்கா முழுதும் பரவியது. இருப்பினும், மில்க்கின் தனிப்பட்ட வாழ்க்கை ஒரு சோகமே. மில்க்கின் ஓரினத்துணையான ஸ்காட் ஸ்மித், மில்க்கின் அதீத அரசியல் ஈடுபாடு பிடிக்காமல் அவரை விட்டுப் பிரிந்து சென்றார்.

1978வில், மறுபடியும் சான்பிரான்சிஸ்கோ தேர்தலில் மில்க் நின்றார். இந்த முறை அபாரமான ஓட்டுக்களுடன் மில்க் வெற்றியும் பெற்றார். அமெரிக்க அரசியலில், முதன்முதலில் வெளிப்படையாக ‘தான் ஒரு ஓரினவிரும்பி’ என்று சுயப்பிரகடனம் செய்துகொண்ட அரசியல்வாதியாக பெயரும் பெற்றார். அவரோடு டேன் வைட் என்ற தீவிர கிறித்துவரும் சான்பிரான்சிஸ்கோ தேர்தலில் வென்றார். டேன் வைட்தான், மில்க்கின் நிஜவாழ்க்கை எதிரியும், மில்க் திரைப்படத்தின் வில்லனும் ஆவார். ஆரம்பத்தில் மில்க்கும் டேன் வைட்டும் நண்பர்கள் ஆகவே இருந்தனர். ஒரு முறை டேன் வைட்டினுடைய மாவட்டத்தில், வயதானவர்களுக்கான ஒரு மனநலக் காப்பகம் திறக்கப்பட இருந்தது. டேன் வைட் அதனை எதிர்த்தார். தனது எதிர்ப்புக்கு ஆதரவு தரும்படி மில்க்கினை வேண்டினார். முதலில் இதற்கு சம்மதித்த மில்க், பின்னர் பல்வேறு தரப்பினரின் ஆலோசனைகளுக்குப் பிறகு, அதனை எதிர்த்துப் பேச, டேன் வைட் கோபம் கொண்டார். டேன் வைட் கொண்டுவந்த, மனநல காப்பக எதிர்ப்புத் தீர்மானத்திற்கு, மில்க் மற்றவர்களோடு சேர்ந்து கொண்டு எதிர்வாக்களிக்க, அந்தத் எதிர்ப்புத்தீர்மானம் தோல்வி அடைந்தது. மில்க் மீதான டேன் வைட்டின் வன்மம் கூடியது. அதன் பிறகு, மில்க் சான்பிரான்சிஸ்கோவின் ஓரினச்சேர்க்கையாளர்களின் நலனுக்காக ஒரு நல வாழ்வுத் தீர்மானம் கொண்டுவந்தார். சான்பிரான்சிஸ்கோ மேயர் முதற்கொண்டு, மற்ற அனைத்து மாவட்ட பிரதிநிதிகளும் அதனை ஆதரித்தனர். ஆனால், டேன் வைட் மட்டும் அந்தத் திட்டத்தை எதிர்த்து வாக்களித்தார். இருப்பினும், மற்ற அனைவரின் ஏகோபித்த ஆதரவுடன், மில்க் கொண்டு வந்த தீர்மானம் பலத்த வெற்றிபெற, மில்க்கிற்கும், வைட்டிற்கும் இடையில் இருந்த விரிசல் மிக மிகப் பெரிதானது. அதே 1978 வருடத்தில், ப்ளோரிடா மாநிலத்தைச் சார்ந்த அனிதா பிரயன்ட் என்பவர், ‘ஓரினச்சேர்க்கை பழக்கம் உள்ளவர்கள், மற்றும் அவர்களை ஆதரிப்பவர்கள், அரசு பள்ளிகளில் வேலை பார்க்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்’ என்று ஒரு திட்டம் கொண்டு வந்தார். கலிபோர்னியா மாநிலமும் இந்தத் திட்டத்தை வரவேற்க, மில்க் இதனை வன்மையாக எதிர்த்தார். ‘அமெரிக்காவில் இருக்கும் ஓர்பால் ஈர்ப்பாளர்கள், தங்கள் ஓரினச்சேர்க்கை நடவடிக்கைகளை ரகசியமாக வைத்துக்கொள்வதாலேயே, இது போன்ற ஓரின எதிர்ப்புத் திட்டங்கள் வருகின்றன’ என்பதைப் புரிந்துகொண்ட மில்க், “அமெரிக்க ஓரினப் பிரியர்களே… வெளியே வாருங்கள்… உங்கள் ரகசியங்களை உடையுங்கள்… நீங்கள் ஒரு ஓர்பால் ஈர்ப்பாளர் என உரிமையோடு சொல்லுங்கள்” என அமெரிக்கா முழுதும் ஆதரவு திரட்டினார். மில்க்கின் விடாமுயற்சியால், பல ஓரினச்சேர்க்கையாளர்கள் தங்கள் ரகசியக் கூட்டைவிட்டு வெளியே வந்தார்கள். இதன் பலனாய், வாக்குகளின் அடிப்படையில், அனிதா ப்ரியன்ட்டின் ஓரின எதிர்ப்புத் திட்டம் தோல்வியைத் தழுவியது. மில்க்கின் மற்றொரு பெரிய அரசியல் வெற்றி இது.

வருமானம் அதிகமில்லாமல் குடும்பம் நடத்திக்கொண்டு இருந்த டேன் வைட், தனது பதவியை ராஜினாமா செய்தார். அப்போது, சான்பிரான்சிஸ்கோவின் மேயர் ஆக இருந்த மாஸ்கோனே வைட்டின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டார். இருப்பினும், கொஞ்ச நாட்களுக்கு பிறகு, மனம் மாறிய டேன் வைட், மறுபடியும் தன்னை பதவியில் சேர்த்துக் கொள்ளும்படி மேயர் மாஸ்கோனேயிடம் வேண்டினார். மில்க் அதனை எதிர்த்தார். வன்மத்தைத் தீர்க்க நேரம் பார்த்துக்கொண்டு இருந்த டேன் வைட், ஒரு நாள் யாருக்கும் தெரியாமல், சிட்டி ஹால், என்ற மேயர் அலுவலகத்துக்கு, துப்பாக்கியுடன், கட்டிடப் பின்வாசல் வழியாக உள்ளே நுழைந்தார். முதலில் மேயர் மாஸ்கோனேவின் அறைக்குச் சென்று மேயர் மாஸ்கோனேவை சுட்டுக்கொன்றார். அதன் பிறகு, மில்க்கின் அறைக்குச் சென்ற டேன் வைட், மில்க்கையும் சுட்டு வீழ்த்தினார். விசயம் தெரிந்து அனைவரும் ஓடிவர, டேன் வைட் தப்பி ஓடினார். கடைசியில் போலீசிடம் பிடிபட்டு சிறைக்குச் சென்றார். படுகொலை செய்யபட்ட மில்க், தான் இறப்பதற்கு பத்து நாட்களுக்கு முன்னால், ‘எங்கே நாம் பகையாளிகளால் இறந்துவிடுவோமா’ என்ற எண்ணத்தில், ஒரு ஒலி நாடாவில், தனது வாழ்வு குறித்து மில்க் பேசி வைத்த விசயமும், உலகிற்குத் தெரியவர, அமெரிக்கா மில்க்கின் மறைவிற்கு கண்ணீர் சிந்தியது. மில்க்கின் இறுதி ஊர்வலத்தில், அமெரிக்காவின் எண்ணிறந்த மனிதர்கள், மெழுகுவர்த்தி ஏந்தி, ஊர்வலத்தில் கலந்துகொண்டு, மில்க்கிற்கு மரியாதை செலுத்தினர். நான் இங்கே சொன்ன மில்க்கின் கதை கொஞ்சம் விஸ்தாரமாக இருக்கலாம். ஆனால், மில்க்கின் அத்தனை நிகழ்வுகளையும் ஒன்று சேர்த்து, இரண்டு மணி நேரப் படமாகக் கொடுத்து, அதனை எண்ணற்ற விருதுகளுடன் வெற்றிபெற வைத்த இயக்குனர் குஸ்வன் சந்த்துக்கு, நம் மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

மில்க், தான் இறப்பதற்கு பத்து நாள் முன்னால், தனது கதையை ஒலிநாடாவில் பதிந்ததையே ஒரு உத்தியாக எடுத்துக்கொண்டு, திரைப் படத்தின் கதையை, கதாநாயகன் மில்க்கை விட்டே, படம் முழுக்கச் சொல்லி இருப்பது படத்தின் ஒரு சிறப்பு என்று சொல்லலாம். படத்தின் கதை, எழுபதுகளில் நடந்த கதை என்பதால், எழுபதுகளில், அமெரிக்காவில் இருந்த ஹிப்பி கலாச்சாரத்தையும், அப்போதிருந்த காஸ்ட்ரோ தெருவின் பழமை அழகையும் கொண்டுவந்து இருக்கும் கலைஇயக்குனருக்கு நமது வாழ்த்துக்கள். படத்தில் மில்க் ஆக நடித்து இருப்பவர், ஹாலிவுட்டின் பிரபல நடிகர் ஆன ஷன் பென் ஆவார். மில்க் போலவே, ஒரு பெண்மை ததும்பிய புன்னகையுடனும், ஆவேசமான மேடைப் பேச்சுக்களுடனும் நடித்து இருக்கும் நடிகர் ஷன் பென்னிற்கு, சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது கொடுத்து இருப்பது சாலப்பொருத்தமானது. படத்தில் அங்கங்கே ஆண்-ஆண் உடலுறவுக் காட்சிகள் இருந்தபோதும், அவை ஆபாசமாக இல்லாமல் அளவோடு இருப்பது இயக்குனரின் திறமைக்கு இன்னொரு சான்று ஆகும். மில்க்கின் நீண்ட நெடிய உண்மைக்கதையை, அனைவரும் ரசிக்கும் விதத்தில் திரைக்கதையாக அமைப்பது என்பது அவ்வளவு சாதாரணமான விஷயம் அல்லவே. ஆனால், அந்த சவாலை ஏற்று, திரைக்கதையை திறம்பட வடித்து, படம் வெற்றி பெற உதவியிருக்கும் திரைக்கதாசிரியர் டஸ்டின் ப்ளாக் அவர்களுக்கும் ஆஸ்கார் விருது கிடைத்து இருப்பது படத்தின் இன்னொரு பெருமை ஆகும். எட்டு ஆஸ்கார் விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டு, இரண்டு ஆஸ்கார் விருதுகளைக் கைப்பற்றியிருக்கும் இந்தத் திரைப்படம், அத்தோடு நின்று விடாமல், உலகின் பல திரைப்பட விருதுகளை அள்ளிக்குவித்து இருப்பதோடு, வர்த்தக ரீதியாகவும் பெரும்பொருள் ஈட்டிய படம் ஆகும்.

“ஓரினச்சேர்க்கையாளர்கள், தங்கள் ஓர்பால் ஈர்ப்பு வாழக்கையை ரகசியமாக வைத்து சுயநலமாக வாழ்ந்தால், அவர்கள் வாழ்வில் என்றும் விடிவு ஏற்படாது. அவர்களுக்கென எந்தவித உரிமைகளும் கிடைக்காது” என்ற உண்மையை ஆணித்தரமாகச் சொன்ன மில்க்கின் இந்தப்படம், இன்னொரு வரலாற்றுப்படம் என்று நான் சொன்னால அதில் எந்த மிகைப்படுத்துதலும் இல்லை

அழகர்சாமி சக்திவேல்

Series Navigationதொடுவானம் 228. தொழுநோயாளிக்கு மறுவாழ்வுகழுத்தில் வீக்கம்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *