52 டூஸ்டேஸ் (52 செவ்வாய்க் கிழமைகள்)

author
0 minutes, 3 seconds Read
This entry is part 1 of 8 in the series 15 ஜூலை 2018

அழகர்சாமி சக்திவேல்

திரைப்பட விமர்சனம் –

குழந்தைப் பருவத்தில் இருந்து, விடலைப் பருவத்துக்கு வரும் இந்தியச் சிறுவர்கள் மற்றும் சிறுமிகள், பாலியல் உறவு குறித்த தங்களது அறிவை, எப்படி வளர்த்துக் கொள்கிறார்கள் என்று ஆராய்ந்தோமானால், நமக்குள் ஒரு வித அச்சம் தலை தூக்கும். பல இந்தியச் சிறுவர் சிறுமிகள் பாலியல் உறவு குறித்த தங்கள் அறிவை, கல்யாணம் நடந்த பிறகே தெரிந்து கொள்கிறார்கள் என்பது ஒரு மனம் கசக்கும் உண்மை. மற்ற சிறுவர் சிறுமியரில் பலரோ செக்ஸ் புத்தகங்கள், பலான படங்கள், முகநூலின் கெட்ட நட்பு போன்ற துர்ப்பிரயோக மீடியாக்கள் மூலமே பாலியல் அறிவை வளர்த்துக்கொண்டு, முறையான பாலியல் அறிவு இல்லாமல், தங்களையும் வருத்தி தாம் சார்ந்த சமூகத்தையும் வருத்துகிறார்கள் என்பது கண்கூடு. கற்பழிப்பு, பாலியல் சார்ந்த கொலைகள் போன்றவை, இந்த முறையற்ற பாலியல் அறிவின் விளைவே என்பதை யாரும் இங்கே மறுக்கமாட்டார்கள். நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால், ‘கல்யாணம் பண்ணிய பிறகே, உடல் உறவு’ என்ற இந்தியப் பண்பாட்டை, இந்தியச் சமூகம் பேணிக்காக்கட்டும். தவறில்லை. (இந்தக் கூற்றைக் கூட, இப்போது ஒரு இந்திய நீதிபதி மறுத்து, ‘கல்யாணத்திற்கு முன்னர் ஆண்-பெண் உறவில் தப்பில்லை’ என்று நீதி வழங்கி இருக்கிறார், என்பது நிதர்சனத்தின் இன்னொரு புறம்). ஆனால், கல்யாணத்திற்குப் பிந்திய உடல் உறவுக்குத் தேவையான அறிவே இல்லாமல் கல்யாணம் செய்துகொள்ளும் ஆண்-பெண் வாலிப சமூகத்தின் நிலைமை, விவாகரத்துக்களிலும், பாலியல் வன்முறைகளிலும், கள்ளக்காதல் உறவுகளிலும், பலநேரங்களில் முடிந்துபோகிறது என்பதினை, இந்திய சமூகம், கவனத்தில் கொள்வதில்லை என்பது ஒரு துயரமான விசயமே. இந்தியக் கல்வியல் துறை, ‘சாத்தியா’ போன்ற பாலியல் கல்வித் திட்டத்தின் மூலம், இந்தக் குறையை நீக்க, தற்போது முயல்வதை நாம் பாராட்டுகிறோம். எனினும், இந்தத்திட்டம் இன்னும் சரியான வளர்ச்சிப் பாதையில் போய்க் கொண்டிருக்கிறது என்பதில் எனக்கு ஐயப்பாடு உண்டு. மேற்கத்திய நாடுகளின் கலாச்சாரம், இதை ஓரளவிற்கு நன்கு புரிந்து வைத்து இருந்தாலும் அங்கேயும் பாலியல் அறிவு வளர, விடலைப்பருவ சிறுவர் சிறுமியர்கள் சற்றுப் போராடவே செய்கிறார்கள். பாலியல் அறிவுக்காய் அப்படிப் போராடும் விடலைப்பருவ சிறுமியின் கதையே 52 செவ்வாய்க் கிழமைகள் (52 Tuesdays) என்ற இந்த ஆஸ்திரேலியப் படத்தின் கதைக்கரு ஆகும்.

ஒரு வருடத்தில், தோராயமாக 52 செவ்வாய்க் கிழமைகள் இருக்கிறது என்பது நாம் அனைவருக்கும் தெரியும். இந்த ஆஸ்திரேலியப் படத்தின் படப்பிடிப்பு, ஆகஸ்ட் மாதத்தில், ஒரு செவ்வாய்க்கிழமையில் தொடங்கப்பட்டது. அத்தோடு, ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை மட்டுமே, இந்தப்படத்தின் படப்பிடிப்பு நடத்தபட்டது. அந்த வாரத்தின் செவ்வாய்க்கிழமை படப்பிடிப்பில் கலந்துகொள்ளும் நடிக நடிகையர்களுக்கு, அந்த செவ்வாய்க்கிழமை நாளில்தான், அந்த வாரக் காட்சி விளக்கப்பட்டு, வசனம் கொடுக்கப்படும். இப்படி ஒரு வருடம், அதாவது 52 செவ்வாய்க்கிழமைகளில் எடுக்கப்பட்ட படமே 52 Tuesdays என்ற படம் ஆகும். பொதுவாய், .ஒரு திரைப்படம் எடுக்கும்போது, அதன் காட்சிகள், மாற்றி மாற்றி எடுக்கப்படும். அதாவது, படத்தின் பத்தாவது சீன், முதலில் கூட எடுக்கப்படலாம், முதல் சீன், கடைசியில் கூட எடுக்கப்படலாம். ஆனால் இந்தப்படத்தின் காட்சிகள், கதையின் அத்தியாய வரிசைப்படியே எடுக்கப்பட்டு இருப்பது, இந்தப்படத்தின் இன்னொரு சிறப்பு. ஏன், இப்படிப்பட்ட படமாக்கல் நிபந்தனைகள்? காரணம் கதைதான். கதையில், பதினாறு வயது நிரம்பிய பில்லி என்ற ஒரு மகள் மற்றும் அவளது தாய் ஜேன்தான் முக்கியக் கதாபாத்திரங்கள். ஆண் தன்மை நிரம்பிய அந்தத் தாய்க்கு, ஆண் உறவின் மீது இஷ்டம் இல்லை. பெண்-பெண் உறவான லெஸ்பியன் உறவே அவளுக்குப் பிடித்து இருக்கிறது. இருப்பினும், டாம் என்ற ஆணை மணந்து, பில்லி என்ற மகளுக்குத் தாயாகிறாள் ஜேன். தனது லெஸ்பியன் நிலையை அறிந்துகொண்டு, மகள் பில்லி பிறந்த கொஞ்ச வருடங்கள் கழித்து, கணவன் டாம்மிடம் இருந்து விவாகரத்துப் பெறுகிறாள் தாய் ஜேன். மகள் பில்லியுடன் வசிக்கும் தாய் ஜேனுக்கு, மருத்துவ சிகிச்சை செய்து ஆணாகவேண்டும் என்று ஆசை வருகிறது. பெண்ணில் இருந்து ஆணாகும் சிகிச்சைக்கான காலம் ஒரு வருடம் ஆகும். மகளிடமும், விவாகரத்து ஆன தனது கணவனிடமும், தனது ஆணாகும் ஆசையைப் பகிர்ந்துகொள்ளும் தாய் ஜேன், மகள் பில்லியை ஒரு வருட காலம், தந்தை டாமிடம் இருக்கும்படி பணிக்கிறாள். வருந்தும் மகள் பில்லியைச் சமாதானப்படுத்தும் தாய் ஜேன், “ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும், மதிய நேரத்தில் நாம் இருவரும் சந்தித்துக் கொள்ளுவோம். மற்ற நேரங்களில் நீ அப்பாவுடன் இரு” என்று மகளிடம் கூற, சம்மதிக்கிறாள் மகள் பில்லி. குழந்தைப்பருவத்தில் இருந்து, பதினாறு வயதான விடலைப் பருவத்திற்கு வரும் கதாநாயகி பில்லி, அம்மா சொன்ன அந்த ஒரு வருடத்தில், அம்மாவின் ஆண் பாலுணர்வு மற்றும் தனது பருவப் பாலுணர்வு போன்றவற்றை அறிந்து கொள்ளப் போராடும் கதையே ‘52 செவ்வாய்க் கிழமைகள்’ என்ற இந்த ஆஸ்திரேலியத் திரைப்படம் சொல்ல வரும் கதையாகும். கதையின் போக்குக்கேற்ப, 52 வாரங்கள் காத்திருந்து, ஒவ்வொரு மாற்றங்களையும் படமாக மாற்றிக் காட்டிய, அந்தப் பெண் இயக்குனர் திருமதி ஹைடியை, எவ்வளவு பாராட்டினாலும் தகும். படத்தில் காட்டப்படும் பல உடல் உறவுக் காட்சிகள், லெஸ்பியன் உறவைப் பிரதிபலித்தாலும், இந்தப்படம் ஆண்=பெண் உறவு, ஓர் பால் உறவு என்ற எல்லா வகை உறவுகளையும் ஆராய முற்படுவது படத்தின் சிறப்பு ஆகும். கூடவே, திருநம்பிகள் குறித்த அறிவையும், இந்தப்படம் நமக்கு சொல்ல வருவதால், உலகின் பலவேறு இடங்களிலும், இந்தியாவிலும் திருநம்பிகளின் நிலைமை எப்படி இருக்கிறது என்பதனையும் இனி பார்ப்போம்.

ஆணில் இருந்து பெண்ணாய் மாறும் திருநங்கைகளுக்கு, உலகம் தற்போது முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்துவிட்டது என்பது, எனக்கு மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது. ஆனால், அதே நேரத்தில், பெண்ணில் இருந்து ஆணாய் மாறும் திருநம்பிகளை, சமூகம் அவ்வளவாய்க் கண்டு கொள்வதில்லை என்பது வருத்தத்திற்குரியதே. பெண்மையை விரும்பும் ஆண்களே, இன்றளவும் அதிகார பீடத்தில் அதிகமாய் அமர்ந்து இருப்பதுதான் இதற்குக் காரணமோ என்ற ஐயம் என்னில் உண்டு. அத்தோடு, உலக சரித்திரங்கள், திருநங்கைகள் குறித்தே இதுவரை பேசியிருப்பதும், திருநம்பிகள் குறித்து அது எப்போதும் பேசாமல் இருந்து இருப்பதும் இதற்கு இன்னொரு காரணம் ஆக இருக்கலாம். சமீபத்தில், மும்பை காவல்துறையில் வேலை பார்த்து வந்த ஒரு பெண், அறுவை சிகிச்சை செய்துகொண்டு ஆணாக மாறி, தனது ஆண் அங்கீகாரத்திற்காக போராடி, வெற்றியும் பெற்று இருப்பது, ‘திருநம்பிகளும் திருநங்கைகள் போல அங்கீகரிக்கப்படுகிறார்கள்’ என்ற நம்பிக்கையை நம்மில் துளிர்க்க வைக்கிறது. ஒரு பெண், ஆணாய் மாறுவது என்பது உடனடியாய் நடந்துபோகும் ஒரு விஷயம் அல்ல. ஹார்மோன் சிகிச்சை முதலில் எடுத்துக் கொள்ளவேண்டும். மார்பக அறுவை சிகிச்சை செய்து கொள்ளவேண்டும். உடல் உள்ளே இருக்கும், கருப்பை போன்றவை மாற்றிக் கொள்ள அறுவை சிகிச்சை செய்யவேண்டும். ஆண்கள் போல, ரோமங்கள் வளர சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். இத்தனை பரீட்சார்த்தங்களையும் கடந்து போய், ஆணாக வாழ ஆசைப்படும் பெண்கள், உலகில் பலர் இருக்கிறார்கள். 52 செவ்வாய்க்கிழமைகள் என்ற இந்தத் திரைப்படத்தில் வரும் ஜேன் என்ற கதாபாத்திரமும் அப்படிப்பட்ட ஒரு பெண் கதாபாத்திரமே. தனது மார்பகங்கள் அகற்றப்படுகிற போது, ஜேன் அடையும் சந்தோசமும், முகத்தில் மீசை மற்றும் தாடி வைத்துக்கொண்டு அவர் ஆடும் ஆட்டமும், ‘ஜேன் என்று என்னைக் கூப்பிட வேண்டாம்..இனி என்னை ஜேம்ஸ் என்று என்னைக் கூப்பிடு’ என்று மகளிடம் அந்தத் தாய் சொல்லும்போதும், பேக்கர் என்ற ஆணுறுப்பை மாட்டிக்கொண்டு, ஜேன் என்ற அந்தத்தாய், இன்னொரு பெண்ணுடன் உடலுறவு கொள்ளும்போதும், ஒரு திருநம்பியின் சந்தோசம் என்னவாய் இருக்கும் என்பதை நம்மால் உணரமுடிகிறது.

இந்தப்படத்தில் நடித்து இருக்கும் அனைத்து நடிகர் மற்றும் நடிகையரும் புதுமுகங்கள் என்பது ஒரு வியக்கத்தக்க விசயமே. மகள் பில்லியாக வரும் அந்த பதினாறு வயது அழகிய பருவ மங்கை செல்வி டில்டா, படத்தில் நடிப்பதற்கு முன்னர் ஒரு சர்க்கஸ் கம்பெனியில் வேலை பார்த்துக்கொண்டு இருந்த ஒரு கழைக்கூத்தாடி மங்கை ஆவார். தாய் ஆக வரும் ஜேன், இன நீர்ப்பு உடையவர்களுக்கு(gender fluidity) ஆலோசகர் ஆக இருந்தவர். இந்தப்படத்திற்கும் ஆலோசகராய் முதலில் வேலை பார்த்து வந்த ஜேன், பின்னர், படத்தின் பெண் இயக்குனர் திருமதி ஹைடியின் வேண்டுகோளுக்கு இணங்கி நடிகையானவர். இந்தப்படத்தில், படத்திற்குள் படம் போல நிறைய வீடியோ காட்சிகள் இடம் பெற்று இருக்கின்றன. அதாவது, கதைப்படி, மகள் பில்லி, அனுதினமும், தனது அன்றைய நாளின் அனுபவத்தை, தனது வீடியோ காமெராவில் பேசி, பதிவிட்டு, வீடியோ கையேடு(video diary) உருவாக்கும் பொழுதுபோக்குக் கொண்டவர் என்பதால், அந்த 52 நாட்களில், அவர் பாலுணர்வு குறித்து பேசுகிற வீடியோ காட்சிகள் படம் முழுக்க வருகின்றன. கூடவே, தாயாய் வரும் ஜேன், அமெரிக்காவில் மூன்றாம் இனம் குறித்து எடுக்கும் வீடியோக்களும் காட்சிகளாய் படத்தில் வருகின்றன. இது போன்ற புதுமையான யுக்திகளால், பார்ப்பதற்கு ஒரு டாகுமென்டரி படம் போலவே இருக்கும் இந்தப்படத்தின் காட்சிகளை, வெட்டியும் ஒட்டியும், ஒரு உலகத்தரம் வாய்ந்த திரைப்படம் ஆக்கிய பெருமை, இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் மற்றும் எடிட்டிங் பொறுப்பை ஏற்றுக்கொண்ட திரு பிரையன் மேசன் அவர்களையே சாரும். எடிட்டிங் என்ற கலை, ஒரு நல்ல திரைப்படம் உருவாக எந்த அளவிற்குத் தேவை என்ற விஷயத்தை, இந்தப்படத்தைப் பார்ப்பவர்கள் புரிந்து கொள்வார்கள். இந்த எடிட்டிங் திறமைக்காகவே, ஆஸ்திரேலியாவின் பெருமை மிகு திரைப்பட விருதையும், மற்றும் பல உலக விருதுகளையும் வென்று இருக்கிறார், படத்தின் எடிட்டர் ஆன திரு பிரையன் மேசன். 52 செவ்வாய்க்கிழமைகள் என்ற இந்தத் திரைப்படம், உலகின் பல்வேறு விருதுகளைக் குவித்து இருக்கிறது. முக்கியமாய், உலகப்பெருமை வாய்ந்த சண்டேன் திரைப்பட விருது விழாவில், சிறந்த இயக்குனருக்கான விருது, திருமதி ஹைடிக்கு கிடைத்து இருப்பது, படத்தின் ஒரு முக்கியச் சிறப்பு ஆகும். படம் சற்றே, இந்தியப் பாரம்பரியத்திற்கு ஒத்து வராத கதையைக் கொண்டு இருந்தாலும், இந்தியாவின் சமூக வளர்ச்சியும் பிரமாண்டமாய் வளர்ந்து வருவதால், இது போன்ற பட்டவர்த்தமான, நிஜங்களைப் பேசும் பாலுணர்வுக் கதைகள், நாளை இந்தியாவிலும் எழுதப்படலாம் என்பது எனது ஊகம். இனி படத்தின் கதைக்குள் போவோம்.

தாய் ஜேன், ‘தான் ஒரு ஆணாகப் போகிறேன்’ என்று சொன்னதில் இருந்தே, மகள் பில்லியின் பாலுணர்வு குறித்த ஆராய்ச்சி தொடங்கிவிடுகிறது. எதிலும் சுதந்திரத்தை விரும்பும் மகள் பில்லி, அம்மாவின் ஆண்மாற்றம் குறித்து தெரிந்து கொண்ட பின்னர், ‘தனது பாலீர்ப்பு ஒரு ஆணிடமா? அல்லது ஒரு பெண்ணிடமா?’ என்று பரீட்சார்த்த முறையில் அறிந்து கொள்ள ஆசைப்படுகிறாள். ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும், தனது தாயை சந்திக்க வரும்போதும், தனது பள்ளியில் பயிலும் மாணவன் ஜோஷ், மற்றும் மாணவி ஜாஸ்மின் என்பவர்களை சந்திக்கிறாள். பாலுணர்வு குறித்து அறிந்து கொள்ள ஆசைப்படும் மாணவ மாணவிகள் மூன்று பெரும், நாயகி பில்லியின் இயக்கத்தில், பாலுணர்வைத் தூண்டிக் கொள்கிறார்கள். பில்லி ஒரு நாள் மாணவன் ஜோஸ் உடன், தனது பாலுணர்வைத் தூண்டிக்கொள்கிறாள்.. இன்னொரு நாள், மாணவி ஜாஸ்மின் உடன் தனது பாலுணர்வைத் தூண்டிக்கொள்கிறாள். நடக்கும் எல்லாவற்றையும், தனது வீடியோ கொண்டு பதிவிடுகிறாள் பில்லி. இது எதுவும் தெரியாத பில்லியின் தாய் ஜேன், தனது ஆண் மாற்றம் குறித்த சந்தோசத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறாள். தனது மகளுக்குத் தெரியாமல், தனது லெஸ்பியன் உடலுறவுத் துணையாக லிசா என்ற பெண்ணை வைத்துக் கொள்கிறாள். ஒருநாள், மகள் பில்லி, தன்னுடைய நண்பியான ஜாஸ்மினுக்கு ஒரு நிர்வாண புகைப்படம் மின்னஞ்சலில் அனுப்ப, விசயம் பள்ளி முதல்வரின் கவனத்துக்குப் போகிறது. இன்னும் குழந்தை என்ற பருவத்திலேயே மகள் பில்லியின் வயது கணக்கிடப்படுவதால், அவள் அனுப்பிய நிர்வாண புகைப்படம், ஆஸ்திரேலிய சட்டப்படி குற்றம் ஆகிவிடுகிறது. பள்ளி முதல்வர், பில்லியின் தாய் ஜேன் மற்றும் தந்தை டாம் இருவரையும் கூப்பிட்டு விசயத்தைச் சொல்ல, தாய் ஜேன் கோபம் கொள்கிறாள். கூடவே, மகள் பில்லி, அவளது நண்பன் ஜோஸ், நண்பி ஜாஸ்மினுடன் எடுத்த வீடியோவையும் தாய் ஜேன் பார்த்துவிடுகிறாள். அதட்டி மிரட்டும் தாய் ஜேனிடம், எதிர்த்து வாதிடும் மகள் பில்லியை, “இனி என்னை சந்திக்காதே’  என்ற கட்டளையுடன் பிரிகிறாள் தாய் ஜேன். பில்லி எடுத்த வீடியோவால் கோபம் கொள்ளும் நண்பர்கள் ஜோஷ் மற்றும் ஜாஸ்மினும், பில்லியை விட்டுப் பிரிகிறார்கள். கதறி அழும் பில்லி, தனது தவறை உணர்கிறாள். தாய் ஜேனின் ஆண் அறுவைச்சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைகிறது. தனது தாயிடம் மன்னிப்புக் கோரும் மகள் பில்லி, 51 செவ்வாய்கள் கழித்து, 52வது செவ்வாயில், ஜேன் என்ற பெண்ணில் இருந்து, ஜேம்ஸ் என்ற ஆணாய் மாறும் தனது தாயோடு இணைவதோடு, படம் முடிவடைகிறது.

சமூகம் மாறுகிறது. ஆணில் இருந்து பெண்ணாய் மாறும் தாயுமானவன்கள் அதிகரித்து இருக்கிறார்கள். பெண்ணில் இருந்து ஆணாய் மாறும் தந்தையானவள்கள் அதிகரித்து இருக்கிறார்கள். தாய் என்ற சொல், இனி பெண் பால் சார்ந்தது இல்லை. தந்தை என்ற சொல், இனி ஆண் பால் சார்ந்தது இல்லை. பெற்றோர் என்ற பொதுவின் பால் சொல் மட்டுமே, இனி குழந்தைக்கான உறவாய்க் குறிக்கப்பட வேண்டும். ஒரு குழந்தையின் தாய் ஆணாகவும் இருக்கலாம் பெண்ணாகவும் இருக்கலாம். ஒரு குழந்தையின் தந்தை ஆணாகவும் இருக்கலாம், பெண்ணாகவும் இருக்கலாம். இந்தக் கருத்துத்தான் இந்தப்படம் பூடகமாய் நமக்குச் சொல்லவரும் கருத்து என்பது எனது கணிப்பு.

அழகர்சாமி சக்திவேல்

 

Series Navigationசிலபல நேரங்களில் சிலபல மனிதர்கள்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *