மணிவாசகர் பதிப்பகம் – மெய்யப்பன் தமிழாய்வகம் வழங்கிய “சிறந்த நூலாசிரியர் விருது”, கவிதை உறவு மாத இதழ் வழங்கிய ” சிறந்த நூலுக்கான பரிசு ” ஆகியவற்றை அண்மையில் பெற்றுள்ளார் புதுக்கோட்டை மாட்சீமை தங்கிய மன்னர் கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் சு.மாதவன்.
மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியில் தமிழ் உதவிப் பேராசிரியராகக் கடந்த 10 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வருபவர் முனைவர் சு.மாதவன். தொடர்ந்து தமிழியல் ஆய்விலும் இலக்கிய அமைப்புகளிலும் ஈடுபட்டுவரும் இவர் இதுவரை 12 நூல்களையும் 100 க் கணக்கான ஆய்வுக் கட்டுரைகளையும் வெளியிட்டு வருகிறார். இத்தகைய இவரது ஆய்வு நூல்களில் ஒன்று ” தமிழ் அற இலக்கியங்களும் பெளத்த,சமண அறங்களும் ” என்ற 310 பக்க நூலாகும். நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் 2017 இல் வெளியிட்டுள்ள இந்நூல் அண்மையில் ஒரு விருதையும் ஒரு பரிசையும் பெற்றுள்ளது. மணிவாசகர் பதிப்பகம் – மெய்யப்பன் அறக்கட்டளை 12 ஆண்டுகளாக வழங்கிவரும் ” சிறந்த நூலாசிரியர் விருது”க்கான விழா அண்மையில் சென்னையில் நடைபெற்றது. அவ் விழாவில் தமிழ்ப்பல்கலைக் கழகத்தின் முன்னைத் துணைவேந்தர் முனைவர் ம.இராசேந்திரன் இவ் விருதை முனைவர் சு.மாதவனுக்கு வழங்கினார். இவ் விழாவில் தமிழ்ப் பல்கலைக்கழக முன்னைத் துணைவேந்தர் முனைவர் இ.சுந்தரமூர்த்தி, பேரா.தாயம்மாள் அறவாணன், அறிவியல் தமிழ் அறிஞர் நெல்லை சு.முத்து உள்ளிட்ட தமிழறிஞர் பலரும் கலந்துகொண்டனர்.
இதே போல் சென்னையில் நடந்த கவிதை உறவு மாத இதழும் பேரா.முனைவர் இரா.மோகனும் இணைந்து வழங்கிய ” செவ்விலக்கிய ஆய்வு வகைமையில் சிறந்த நூல் பரிசையும் இதே நூல் பெற்றுள்ளது. இப் பரிசை சென்னையில் நடந்த விழாவில் முதுபெரும் நல்லரசியலாளர் இரா.நல்லகண்ணு வழங்கினார். பரிசு பெற்ற முனைவர் சு.மாதவன் இது குறித்துக் கூறியதாவது : ” தமிழாய்வு வரலாற்றில் பெளத்த, சமணப் பின்னணியில் தமிழ் அற இலக்கியங்களான 11 நூல்களையும் ஒருசேர ஒப்பாய்வு செய்துள்ள ஒரே முதல் நூல் என்னும் சிறப்பை உடையது இந்நூல். செவ்விலக்கிய ஆய்வுக்கு முன்வரும் இளைஞர்களுக்கு இந்நூல் சிறந்த எடுகோள் நூலாகத் திகழ்ந்து வருகிறது. இந்த நூலை எல்லாத் தளங்களுக்கும் கொண்டுசேர்க்கும் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்திற்கு என் நெஞ்சார்ந்த நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிறேன் ” என்கிறார் அவர்.
– செய்தி முதுவை ஹிதாயத்
- வீடு எரிகிறது
- தொடுவானம் 231.மதுரை மறை மாவடடம்.
- புதுக்கோட்டை பேராசிரியரின் நூலுக்கு ’சிறந்த நூலுக்கான விருது’
- சிலபல நேரங்களில் சிலபல மனிதர்கள்
- மருத்துவக் கட்டுரை உறக்கமின்மை
- 120 பீட்ஸ் பெர் மினிட் – திரைப்பட விமர்சனம்
- தாய்லாந்தின் தாம் லுவாங் குகையில்
- பூதக்கோள் வியாழனைச் சுற்றிவரும் புதிய 12 வெளிப்புறத் துணைக் கோள்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன
- பீட்டில்ஸ் இசைப் பாடல்கள் பளபளப்பு உடைப் பாவை