தொண்டைச் சதை வீக்கம்

This entry is part 2 of 10 in the series 29 ஜூலை 2018

டாக்டர் ஜி. ஜான்சன்

( TONSILLITIS )

நம்முடைய தொண்டையின் பின்புறத்தில் இரு பக்கங்களிலும் சதை போன்ற இரு உறுப்புகள் உள்ளன. இவை நோய்க் கிருமிகள் சுவாசக் குழாய்களினுள் புகாமல் சல்லைடைகள் போன்று தடுத்து நிறுத்துகின்றன. இவை எதிர்ப்புச் சக்தியையும் உண்டுபண்ணுகின்றன. இவற்றைதான் ” டான்சில் ” அல்லது தொண்டைச் சதை என்கிறோம். சில வேளைகளில் நோய்க்கிருமிகள் இவற்றையே தாக்குகின்றபோது இவை வீக்கமுற்று வலிக்கும். இதைத்தான் “: டான்சிலைட்டிஸ் ” அல்லது தொண்டைச் சதை வீக்கம் என்கிறோம்.
இந்த வீக்கம் சிறு பிள்ளைகளிடம் அதிகம் ஏற்படும்.. இது எப்போதாவது வரலாம். அல்லது அடிக்கடி உண்டாகலாம்.

நோய் இயல்

பேக்டீரியா அல்லது வைரஸ் கிருமிகளின் தொற்றால் இது அதிகமாக உண்டாகிறது. இவற்றில் ஸ்ட்ரெப்ட்டோகாக்கஸ் என்ற கிருமிகள் வகைதான் பரவலாக தாக்குகிறது.

அறிகுறிகள்

தொண்டையில் இந்த சதை உறுப்புகள் வீங்கியும், வலிப்பதும், சுவாசிப்பதில் சிரமத்தை உண்டாக்குவதும் முக்கிய அறிகுறிகள். இவை தவிர வேறு சில அறிகுறிகளும் தோன்றலாம். அவை வருமாறு:
* தலைவலி
* காய்ச்சல்
* இருமல்
* காதுவலி
* பசியின்மை
* வாய் துர்நாற்றம்
* உணவு விழுங்குவதில் சிரமம்.
* குமட்டல் அல்லது வாந்தி

பரிசோதனைகள்

மருத்துவர் தொண்டையைப் பார்த்தாலே போதுமானது. தொண்டைக்குள் சதை வீங்கி, சிவந்து காணப்படுவதை நேரில் பார்க்கலாம். சில வேளைகளில் அவற்றில் சீழ் பிடித்து புண் உள்ளதையும் காணலாம்.
சில வேளைகளில் வீக்கமுற்றுள்ள பகுதியிலிருந்து நீர் எடுத்து பரிசோதித்து கிருமிகளை நிர்ணயம் செய்யலாம். பின்பு அவற்றுக்கு ஏற்ற வகையான எண்டிபையாட்டிக் மருந்துகள் தரலாம்.

சிகிச்சை முறைகள்

பரிசோதனையில் தொண்டையில் கிருமிகள் தொற்று உள்ளது தெரியவந்தால், அதற்குரிய எண்டிபையாட்டிக் மருந்துகள் எடுக்கலாம்.
அத்துடன் பின்வரும் முறைகளையும் பின்பற்றுவது நல்லது.
* நிறைய நீர் பருகுவது.
* வலி குறைக்கும் மாத்திரைகள்
* தொண்டை வரை கொப்பளிக்கும் மருந்துகள் ( Gargle )
* சப்பும் மருந்துகள்.( Lozenges )

அறுவை சிகிச்சை

டான்சில்ஸ் என்னும் தொண்டைச் சதைகள் வாழ்நாள் முதுதும் நமக்கு எதிர்ப்புச் சக்தியைத் தரும் உறுப்புகள் ஆகும். கூடுமானவரை அவற்றை அகற்றாமல் இருப்பதே நல்லது. அனால் அதன் வீக்கத்தால் சுவாசிப்பதில் சிரமமும், உணவை விழுங்குவதில் சிரமமும் ஏற்பட்டால் அவற்றை அகற்றவேண்டியுள்ளது.இதற்கு ” டான்சிலக்டமி “என்று பெயர்.முன்பெல்லாம் அவற்றை அறுத்து எடுத்தார்கள். தற்போது இதை அகற்ற ” லேசர் “, ” அல்ட்ராசானிக் “, எலெக்ட்ரோகாட்டரி ” போன்ற நவீன முறைகளும் பெரிய மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படுகின்றன.

( முடிந்தது ).

Series Navigationபெருங்கவிஞன் காத்திருக்கிறான்.மனதைத் திறந்து ஒரு புத்தகம் அழகியசிங்கரின் கட்டுரைத் தொகுப்பை முன் வைத்து
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *