_ லதா ராமகிருஷ்ணன்
(*WELFARE FOUNDATION OF THE BLIND என்ற பார்வையற்றோர் நன்நல அமைப்பு பார்வையற்றோரின் பிரச்சினைகளையும், ஆற்றல்க ளையும் எடுத்துக்காட்டும் எழுத்தாக்கங்களையும் பார்வையற்றோரின் எழுத்தாக்கங்களையும் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது. இவ்வாண்டு இந்த ஜூன் மாதம் 16 ஆம் நாள் அன்று நடைபெற்ற ஆண்டுவிழாவில் தமிழாசிரியை சு.ரம்யாவின் கட்டுரைத்தொகுப்பு(50 பக்கங்கள்) வெளியிடப்பட்டது. நூலை உரிய நேரத்தில் நேர்த்தியாக வெளியிட்டுத் தந்தவர்கள் எங்கள் அமைப்பின் நூல்வெளியீட்டு முயற்சிகளுக்கு என்றும் உறுதுணையாக இருந்துவரும் புதுப்புனல் பதிப்பக நிறுவனரான நண்பர்கள் ரவிச்சந்திரன் – சாந்தி தம்பதியர். அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நூல் குறித்து நான் எழுதியுள்ள முன்னுரையை இங்கே பகிர்ந்துகொள் கிறேன்.
_லதா ராமகிருஷ்ணன்
புத்தகங்களின் வழியே…. என்ற இந்தக் கட்டுரைத் தொகுப்பில் பத்திற்கும் மேற்பட்ட நூல்கள் குறித்த தனது பார்வையை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார் நூலாசிரியர் ரம்யா. வெவ்வேறு தருணங்களில் கேட்டுக்கொள்ளப்பட்டதற் கிணங்க அவர் எழுதிய கட்டுரைகள் இவை. இந்தக் கட்டுரைகளை ரம்யா திறனாய்வு செய்திருக்கும் விதம் அவருடைய எண்ணவோட்டங்களையும் சமூகம் சார்ந்த சீர்திருத்தக் கண்ணோட்டங்களையும் நமக்கு எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளன.
பார்வையின்மையை மீறி விடாமுயற்சியோடு கல்வி கற்று இன்று தமிழாசிரியையாக தலைநிமிர்ந்து வாழ்ந்துவரும் ரம்யா அவர்கள் காரைக்காலில் பிறந்து வளர்ந்தவர். காரைக்காலில் உள்ள அறிஞர் அண்ணா அரசுக் கலைக் கல்லூரியில் தமிழை சிறப்புப்பாடமாகப் பயின்று சிறந்த முறையில் முதுகலைப் பட்டம் பெற்றவர். மாநில அரசிடமிருந்து தங்கப் பதக்கம் பெற்ற பெருமைக் குரியவர். இன்று காரைக்காலின் அருகே உள்ள டி.ஆர். பட்டிணத்திலுள்ள அரசு மேனிலைப் பள்ளியில் மேனிலை வகுப்பு மாணாக்கர்களுக்கு ஆசிரியையாக திறம்படச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்.
அம்மா, அப்பா, இரண்டு தம்பிகள் ஆகியோரை உள்ளடக்கிய குடும்பம் இவரு டையது. அவர்களுடைய அன்பும் ஆதரவுமே தனக்கு என்றும் உறுதுணையாக இருப்பதாக நெகிழ்வோடு கூறுகிறார் ரம்யா.
கணினி, ஆண்ட்ராய்ட் அலைபேசி ஆகியவற்றின் மூலம் பார்வையற்றவர்கள் தனித்தியங்க முடிவதைச் சுட்டிக்காட்டும் ரம்யா, அமேசான் கிண்டில் புத்தகங்கள், ’புக் ஷேர்’ ஆகியவற்றின் உதவியோடு நிறைய நூல்களைப் படிக்கமுடிவதாகத் தெரிவிக்கிறார்.
நவீன இலக்கிய வாசிப்பில் ஆர்வமுள்ள ரம்யா, ‘பார்வையற்றவர்கள் என்றாலே ஆசிரியர் தொழில் தான் என்ற எண்ணம் தவறு என்றும் மியூசிக் கம்போஸர், வெப் டிசைனர், ஆட்சியர் போன்ற பல்வேறு துறைகளில் பார்வையற்றவர்கள் சிறந்துவிளங்குகின்றனர் என்றும் இந்த விவரங்களை வெளியுலகிற்கு எடுத்துச்சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டியது அவசியம் என்றும் இது குறித்து நூல்கள் எழுத தனக்கு விருப்பம் என்றும் தெரிவிக்கிறார்.
புதிதாக வேலைக்குச் செல்லும் யாரும் சற்று தடுமாறுவது இயல்பு. அதுவே, பார்வையற்ற வர்கள், மாற்றுத்திறனாளிகள் என்றால், அவர்களுடைய உடற்குறைபாடு அதற்குக் காரணமாகக் காட்டப்பட்டுவிடுகிறது. இந்த மனப்போக்கு மாறவேண்டும் என்றும், பார்வையற்றவர்கள் தங்கள் தகுதி, திறமைகளை, பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையே இரட்டிப்பாக எப்போதுமே நிரூபித்துக்கொண்டேயிருக்கவேண்டியிருக்கிறது எனவும் வருத்தத்தோடு குறிப்பிடும் ரம்யா, சமூகத்தின், சகமனிதர்கள் தம்மொத்தவர்களை சம்மாக பாவித்தால் மாற்றுத்திறனாளிகளான தங்களாலும் இந்த சமூகத்திற்கு சீரிய பங்காற்றமுடியும் என்று உறுதிபடத் தெரிவிக்கிறார்.
இருபாலரும் படிக்கும் தமது பள்ளியில் தன் மாணாக்கர்ங்கள் தன்னிடம் அன்போடும் மரியாதையோடும் நடந்துகொள்வதாகவும், தானும் அவர்களை அதேபோல், அதட்டாமல், மதிப்பழிக்காமல் நடத்துவதாகவும் மனநிறைவோடு கூறுகிறார் நூலாசிரியர் ரம்யா.
இந்த நூல் வெளியாகக் காரணமாக அமைந்த வெல்ஃபேர் ஃபவுண்டேஷன் ஆஃப் தி ப்ளைண்ட் அமைப்புக்கும் ,நேர்த்தியாக நூலை அச்சாக்கம் செய்துதந்திருக்கும் புதுப்புனல் பதிப்பகத்திற்கும் தன்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறார்.
பார்வையற்றோரின் தகுதிகள், திறமைகள், சமூகத்தில், அன்றாட வாழ்வில் அவர்கள் எதிர்கொள்ளும் இடையூறுகள் ஆகியவை குறித்த விழிப்புணர்வை சமூகத்தில் ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு அதற்கான பணிகளில் ஒன்றாக பார்வையற்றவர்களைப் பற்றிய எழுத்தாக்கங்கள், பார்வையற்ற வர்களால் எழுதப்படும் படைப்புகள் ஆகியவற்றை வெளியிட்டுவரும் வெல்ஃபேர் ஃபவுண்டேஷன் ஆஃப் தி ப்ளைண்ட் என்ற எங்கள் அமைப்பு ஆசிரியை ரம்யாவின் இந்த நூலை வெளியிடுவதில் மனநிறைவடைகிறது. எங்கள் நூலாக்க முயற்சிகளில் தொடர்ந்து ஒத்துழைப்பு நல்கிவரும் புதுப்புனல் பதிப்பகத்திற்கு எங்கள் நன்றி உரித்தாகிறது.
நூலாசிரியர் ரம்யாவுக்கு எங்கள் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.
- பெருங்கவிஞன் காத்திருக்கிறான்.
- தொண்டைச் சதை வீக்கம்
- மனதைத் திறந்து ஒரு புத்தகம் அழகியசிங்கரின் கட்டுரைத் தொகுப்பை முன் வைத்து
- பாவமும் பாவமன்னிப்பும்
- நூல் அறிமுகம் புத்தகங்களின் வழியே…. சு.ரம்யா எழுதிய நூல் குறித்து
- நிஜத்தைச் சொல்லிவிட்டு
- பாலைவனங்களும் தேவை
- தொடுவானம் 232. ஏழையின் சிரிப்பில் இறைவன்
- செவ்வாய்க் கோளின் தென்துருவத்தில் முதன் முதல் அடித்தள திரவநீர் ஏரியை ஈசா எக்ஸ்பிரஸ் விண்ணுளவி கண்டுபிடித்தது
- பீட்டில்ஸ் இசைப் பாடல்கள் உலகத்தின் ஊடே செல்வோர் !