அழகர்சாமி சக்திவேல்
திரைப்பட விமர்சனம் –
டேவிட் எபர்ஷப் என்ற அமெரிக்கரால், 2000 ஆம் வருடத்தில் எழுதப்பட்ட “டேனிஷ் கேர்ள்” என்ற நாவல்தான், 2015 ஆம் வருடத்தில் “டேனிஷ் கேர்ள்” என்ற அதே நாவலின் பெயரோடு திரைப்படமாக வெளிவந்தது. டாம் ஹூப்பர் என்பவரால் இயக்கப்பட்ட இந்தப் படம், உலகின் பல்வேறு பிரபல திரைப்பட விருதுகளை அள்ளிக் குவித்த படம் ஆகும். ‘டேனிஷ் கேர்ள்’ என்ற அந்த நாவலுக்கும், அந்தப் படத்துக்கும் கதைக்கருவாய் இருப்பவர், 1900-ஆம் ஆண்டில் வாழ்ந்த திருநங்கை லில்லி எல்பே ஆவார். திருநங்கை லில்லி எல்பே தான், உலகில், முதன் முதலில் அறுவைச்சிகிச்சை செய்துகொண்டு ஆணில் இருந்து பெண்ணாய் மாறியவர் ஆவார்.(இவர் இரண்டாவது திருநங்கை என்ற கருத்து வேறுபாடும் உண்டு). லில்லியின் உண்மைக்கதை, கதை எழுதியவரின் கற்பனைக்குள் ஒரு பிரமாண்டமான வடிவம் பெற்று இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. அதைவிட, அதைக் காட்சி வடிவப் படுத்திய திரைப்பட இயக்குனரோ இன்னும் ஒரு படி மேலே போய், ஒவ்வொரு காட்சியிலும் தனது முத்திரையைப் பதித்து, நம் அனைவரது கண்களிலும் கண்ணீரை வரவழைத்து விடுகிறார். படத்தில், லில்லியாக வாழ்ந்து காட்டிய நடிகர் எட்டி ரேமனை நாம் மனதாரப் பாராட்டியாக வேண்டும். படத்தின் முதல் காட்சியில் ஆண்மை மிக்க ஒருவராய்த் தோன்றும் நடிகர் எட்டி ரேமன், படம் நகர நகர, கொஞ்சம் கொஞ்சமாய், ஒரு பெண்ணாய் மாறி நடிக்கும் பிரமாதமான நடிப்பு, இந்திய நடிகர்களில் இன்னும் எவரும் நடித்துக் காட்டவில்லை என்பது உண்மையிலும் உண்மை ஆகும்.
‘டேனிஷ் கேர்ள்’ என்ற படத்தின் கதை இரண்டு உண்மை விசயங்களை ஆணித் தரமாகச் சொல்கிறது. முதல் உண்மை, “பெண்மை உடைய ஒருவரால், உடலுறவில் ஒரு பெண்ணை நிச்சயம் திருப்தி படுத்த முடியும்.” என்பதாகும். இரண்டாம் உண்மை ‘அப்படி அந்தப் பெண்மை உடையவர் என்னதான் தன் மனைவியை உடலுறவில் திருப்திப் படுத்தினாலும், அவரது பெண்மைச்சிந்தனை அதிகமாகும் போது, அவரது சந்தோசம் இன்னொரு ஆணின் உடல் உறவில்தான் நிறைவாகும்’ என்பதாகும். படத்தின் இந்த இரண்டு உண்மை விசயங்களை தெளிவாய்க் காட்ட, இயக்குனரும் நடிகரும் ஒன்று சேர்ந்து போராடி இருக்கிறார்கள். அதில் வெற்றியும் பெற்று இருக்கிறார்கள். படத்தில், நடிகரின் கூடவே, நடிப்பில் சக்கைப் போடு போடும் அந்த நடிகை அலிசியா விகாண்டரையும் மனமாரப் பாராட்டித்தான் ஆக வேண்டும். ஆரம்பத்தில் தன கணவரின் பெண்மையை ஒரு விளையாட்டாக எடுத்துக் கொள்ளும் கதாநாயகி, நிலைமை ஒரு இக்கட்டான சூழ்நிலைக்குப் போகும்போது தனக்குள் ஏற்படும் மன உளைச்சலை பிரமாதமாய் வெளிப்படுத்தி இருக்கிறார். அதன் பிறகும், ‘தனது கணவரின் பெண்மையை இனி கட்டுப்படுத்த முடியாது’ என்று தெரிந்துகொள்ளும் போது, தன் கணவருக்கு ஆதரவாக மாறி, ‘நீங்கள் அறுவை சிகிச்சை செய்துகொண்டு உண்மையான லில்லியாக மாறுங்கள்’ என்று சொல்லும் அந்தக் காட்சிகளில் கதாநாயகி நமது விழிகளில் நீரை வரவைத்து அழவைத்து விடுகிறார்.
படத்தின் கதைப்படி, நாயகனும் நாயகியும் சிறந்த ஓவியர்கள். நாயகன் இயற்கைக் காட்சிகள் வரைவதில் வல்லவன். நாயகியோ மனிதர்களை அச்சு அசலாக வரைவதில் வல்லவள். தம்பதியர் இருவரும் இல்லற வாழ்க்கையிலும் உடலுறவு சுகத்திலும் திளைத்து சந்தோசமாய் வாழ்கிறார்கள். ஒருநாள், நாயகி ஓவியம் வரைவதற்கு மாடலாய் நிற்க வேண்டிய மாது, வராது போய்விடுகிறாள். நாயகிக்கோ பாதியில் நிற்கும் ஓவியத்தின் கால்பகுதியை வரைந்து ஓவியத்தை முடித்தாக வேண்டிய ஒரு இக்கட்டான சூழ்நிலை. எனவே, தன் கணவனிடம் கெஞ்சிக்கூத்தாடி அதே ஓவியத்திற்கு, அந்தப் பெண்ணுக்கு பதிலாய் மாடலாய் நிற்கும்படி பணிக்கிறாள். கணவனும் சம்மதிக்க, கணவனின் கால்களில், பெண் அணியும் கால் உறைகளை மாட்டி விடுகிறாள். கணவனின் கால்களில், பெண் அணியும், குதிகால் செருப்புக்களையும் மாட்டி விடுகிறாள். இப்போது, இதுவரை தெரியாமல் அடக்கிவைக்கப்பட்டிருந்த அந்தக் கணவனின் பெண்மை விழித்துக் கொள்கிறது. தனது பெண் கால் உறைகளை, ஒரு வித வாஞ்சையோடு தடவி விட்டுக் கொள்கிறான் கதாநாயகன். ஓவியம் வரைந்து முடிக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட, அது பல பாராட்டுக்களைப் பெறுகிறது. அந்த நாளில் இருந்து, கதாநாயகி தனது கணவனையே, முழு பெண் மாடலாக்கி ஓவியம் வரைய ஆரம்பித்து விடுகிறாள். அத்தனை ஓவியங்களும் உடனுக்குடன் விற்றுத் தீர்கிறது. கதாநாயகன் கொஞ்சம் கொஞ்சமாய் தனது பெண் உணர்ச்சிகளை காட்ட ஆரம்பிக்கிறான். ஒரு நாள், ஒரு ஓவிய விழாவுக்கு, தனது கணவனை, தான் வரைந்த ஓவிய பெண் மாடல் வடிவிலேயே அலங்கரித்துக் கூட்டிக்கொண்டு போகிறாள். ஓவிய விழாவில், “தனது கணவரின் தங்கை லில்லி” என, பெண் வடிவில் இருக்கும் கதாநாயகனை அறிமுகப்படுத்தி வைக்கிறாள். அந்த ஓவியவிழாவில் கலந்து கொள்ளும் ஹென்றிக் என்பவனுக்கு, லில்லியின் மீது ஆசை வந்து விட, கதாநாயகன் லில்லியை தனிமையில் சந்தித்து இதழோடு இதழ் முத்தமழை பொழிகிறான். லில்லியும் அதை, ஒரு வித குற்ற உணர்ச்சியோடும், ஆசையோடும் அனுமதிக்கிறான்.
பார்த்துவிட்ட கதாநாயகி, அதிர்ச்சியாகி, பின் தன கணவனை கடிந்து கொள்கிறாள். இருப்பினும் லில்லியால் தன பெண்மையை அதன்பிறகு முற்றிலுமாய் கட்டுப்படுத்த முடியாமல் போக, தம்பதியர் இருவருக்கும் மனஸ்தாபம் வலுக்கிறது. பல்வேறு மனப் போராட்டங்களுக்குப் பிறகு, தனது கணவனின் பெண்மையை நன்கு புரிந்து கொள்கிறாள் கதாநாயகி. கணவன் ஒரு பெண்ணாய் மாற அனுமதி கொடுக்கிறாள். இருவரும் மருத்துவர்களை நாடுகிறார்கள். ஆணைப் பெண்ணாய் மாற்றும் மருத்துவ அறிவியல், நன்கு வளராத அந்தக் காலக்கட்டத்தில், முதன் முதலில் அறுவை சிகிச்சை செய்துகொண்டு திருநங்கையாக மாற சம்மதம் தருகிறாள் லில்லி. அறுவைச்சிகிச்சை பல கட்டங்களாக ஜெர்மனியில் நடத்தப் படுகிறது. ஆனால் கடைசிக் கட்ட அறுவைச்சிகிச்சையின் ஆறாத காயங்கள் காரணமாக லில்லி பரிதாபமாக இறந்து போகிறாள்.
திரைப்படத்தின், இறுதிக் காட்சி சோகம் நிறைந்தவை. கதாநாயகி தனது புதுக் காதலனோடு, சோகமாய் பயணம் செய்து கொண்டிருக்கிறாள். போகும் வழியில், இயற்கை ஓவியம் வரைவதில் வல்லவனான தனது கணவன் முன்னர் வரைந்த. ‘ஐந்து மரங்கள்’ ஓவியம் போலவே ஐந்து மரங்களைக் காண்கிறாள். வண்டியை நிறுத்தச் சொல்லி, அந்த ஐந்து மரங்களை நோக்கி விரைகிறாள். தூரத்தில் ஒரு பெண் அணியும் துப்பட்டா காற்றில் பறந்து செல்கிறது. அந்த துப்பட்டா, முன்னர், கதாநாயகிக்கு கதாநாயகன் பரிசாய்த் தந்தது. தன் கணவனின் பெண்மை தெரிந்தவுடன், கதாநாயகி அந்தத் துப்பட்டாவை கணவனுக்கே திருப்பிக் கொடுக்கிறாள். எப்போதெல்லாம், தம்பதியர் இருவருக்கும் மனப் போராட்டங்கள் வருகிறதோ அப்போதெல்லாம் அந்தத் துப்பட்டா கணவனிடமும் மனைவியிடமும் மாறி மாறி நிற்கிறது. இன்றோ லில்லி இல்லை, அவள் நினைவாய் அந்த துப்பட்டா மட்டுமே காற்றில் பறக்க, கதாநாயகியின் கண்ணீருடன் படம் முடிகிறது.
படத்தின் உணர்ச்சி மிக்க காட்சிகளாய் பல காட்சிகளைச் சொல்லலாம். முதன் முதலில் பெண்மையை உணரும் கதாநாயகனின் அந்த பெண்மை முகம்; இன்னொருவன் முன்னால், குற்ற உணர்ச்சியோடு ஆசையாய் இதழோடு இதழ் பதிக்கும் அந்த முத்தக்காட்சி; பெண்மையோடு நிற்கும் தனது கணவனிடம் போய், “நான் என் கணவரை இனிப் பார்க்க முடியாதா” என்று அழுது புலம்பும் கதாநாயகியின் அந்த அவலக்குரல்; “உங்க ஆபரேசன் நல்லா நடக்கணும்” என்று ஆறுதல் படுத்தும் மனைவியின் முன்னால், கலங்கி நிற்கும் கணவன், “நான் பெண்ணாகப் போகிறேன்” என்று ஆபரேஷன் தியேட்டர் நர்சுகளிடம் சொல்லும் கதாநாயகனின் வெட்கம் கலந்த ஆனந்தம்; கதாநாயகனின் கடைசிக்கட்ட ஆபரேசன் தோல்வி ஆனது தெரியும் போது, கதாநாயகி கதறிக் கதறி அழும் காட்சி இப்படி திரைப்படம் நெடுக, பல உணர்ச்சி மிக்க காட்சிகள். படத்தின் கேமரா மேனை பாராட்டியே ஆகவேண்டும். அப்படி ஒரு துல்லியமான ஒலிப்பதிவு.
படத்தை பார்த்த எனக்குள் தோன்றிய சில கேள்விகள்.. கதையின் நாயகி அலிசியா மற்றும் நாயகன் லில்லி போன்று இந்த உலகத்தில் தம்பதியாய் வாழ்வோர் எத்தனையோ பேர். அப்படிப்பட்டவரின் வாழ்க்கையில் நடக்கும் மனப் போராட்டங்கள் எத்தனையோ. திருநங்கை மற்றும் ஓரினச்சேர்க்கை அங்கீகரிக்கப்பட்டு இருந்தால், இது போன்ற பரிதாப நிலை இருவருக்கும் வராமல் போய் இருக்கலாம். மேற்கத்திய உலகம் விழித்துக் கொண்டது. மேற்கத்தியர்கள் மதங்களுக்கு எதிராய்ப் போராடி ஓரினச்சேர்க்கைக்கு அங்கீகாரம் பெற்று மகிழ்ச்சியாய் வாழ்கிறார்கள். ஆனால் இந்தியா போன்ற நாடுகள் இன்னும் விழித்துக் கொள்ளவில்லை. விழித்துக்கொள்ளும் அந்த நாள் என்று வருமோ என்ற என் கேள்விகளோடு நான் தூங்கிப் போனேன்.
அழகர்சாமி சக்திவேல்
- அப்பால்…
- வார்த்தைப்பொட்டலங்கள்
- தொடுவானம் 234. பேராயர் தேர்தல்
- 2017 ஆண்டில்தான் பூகோளச் சூடேற்றக் கரி வாயுக்கள் எழுச்சி சூழ்வெளியில் பேரளவு ஏறியுள்ளது !
- ஞாபக மறதி
- நீண்டு நெளிந்த பாதை ! மூலம் : பீட்டில்ஸ் பாடகர்
- உலகின் தலை சிறந்த சில ஓரின ஈர்ப்புப் படங்கள் 18 – டேனிஷ் கேர்ள்