‘ரிஷி’((லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

0 minutes, 2 seconds Read
This entry is part 2 of 7 in the series 26 ஆகஸ்ட் 2018

 

 

  1. அவள் அழுதுகொண்டிருக்கிறாள்

அந்த நள்ளிரவில்
அவள் அழும் விசும்பலொலி கேட்டு
கூட்டம் கூடிவிட்டது.

ஆச்சரியத்துடன் சிலர்;
அனுதாபத்துடன் சிலர்;
அக்கறையுடன் சிலர்;
சுடச்சுடச் செய்தி சேகரிக்கும்
ஆர்வத்தில் சிலர்;
தேர் சரிந்த பீதியில் சிலர்;
பாதி புரிந்தும் புரியாமலுமாய் சிலர்;
பெருங்குரலெடுத்து அட்டகாசமாய்
இளக்காரத்தோடு சிரித்தபடி சிலர்;
‘இதென்ன புதுக்கதை’ என்று
வரிந்துகட்டிக்கொண்டு
களத்திலிறங்கியவர்கள் சிலர்….

;அங்கிங்கெனாதபடியானவள்
ஆற்றொணாத் துயரத்தில்
பொங்கியழக் காரணமென்ன?

ஆளாளுக்குக் கேட்க ஆரம்பித்தனர்;

”இவர் அவரின் அன்னையை
தாசியென்று பேச
பதிலுக்கு
அவர் இவரின் அன்னையை
வேசியென்று ஏச’
ஆராரோ பாடி ஊட்டிவளர்த்த
அன்னையரெல்லாம்
யாராராலோ இப்படித் தம்
அந்திமக் காலத்தில்
தீராப் பழிசுமக்கும்
கோராமையை என்ணியெண்ணி
ஆறவில்லையே எம் மனது”
என்று கூறியவள்
அழுகை
நின்றபாடில்லை.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

  1. ஆமையின் பெயர்மாற்றம்

ஆமை என்ற ஒன்று
இல்லவேயில்லை யெனச்
சொல்லியவாறே
ஆமை என்றாவது பேசுமா என்றும்
சீமைப்புறங்களிலிருந்தும் சுற்றுவட்டாரங்களிருந்தும்
கேட்டுக்கொண்டிருப்பவர்களை
ஊமைவலியோடு பார்த்துக்கொண்டிருந்த
ஆமை மிகவும் மனம் சோர்ந்துபோனது.

முன்பெல்லாம்
ஆமை – முயல் கதையை
அடிக்கடி கேட்க முடிந்தது…..

முயலை ஆமை ஜெயித்ததைச்
சொன்ன விதம்
முயலின் கர்வத்தையன்றி
முயலை வெறுக்கச் செய்யவில்லை
யொருபோதும்.

[முசுமுசு முயலை
யாரால் வெறுக்க இயலும்!]

ஆமை தன்னம்பிக்கைக்கு
முன்மாதிரியாயிற்று.

ஆனால் தீமையல்ல முயல்
தோற்ற ஆங்காரத்தில் தன்
வாலில் மறைத்துவைத்திருந்த
வாளால்
ஆமையை வெட்டிவிடவில்லை.
தன் தவறை உணரும் ஆற்றலிருந்தது
அதற்கு.

ஆமையோட்டைத்
தங்கள் கனவுகளின் கருவூலமாகக்
கொண்டாடிய சிறுவர்சிறுமியரும்
தற்காப்புப் பதுங்குகுழியாக விவரித்த
பெரியவர்களுமாய்
ஆமையைத் தங்களில் ஒருவராக
அங்கீகரித்திருந்தனர்.

ஆமையும் அழகுதான் என்று புரிந்தது.

இன்று நிலைமை வேறு
ஆமையைச் சீந்துவார் யாருமில்லை
அதன் குந்துமணிக்கண்களை
உற்று நோக்கிப்
புன்னகைக்க
முற்றிலும் மறந்துவிட்டனர் மிகப் பலர்.

அநாதரவாய்க் கிடந்த ஆமையைப்
பார்க்கவந்தது புறா.

அதன் காலில் கட்டியிருந்த
முயலின் மடலில்
பரிவுமிக்க பரிந்துரையொன்று
இடம்பெற்றிருந்தது:

பெயரிலுள்ள ’ஆ’வை ’தூ’வாக
மாற்றிக்கொள்வது
மிகவும் நல்லது.”

 

 

 

 

  1. அலுவல்

எதிரே தெரிந்த சுவரொட்டியில்
பதவிசாய் சிரித்துக்கொண்டிருந்த
பெண்ணைச் சுட்டிக்காட்டி
பாவம் பிரசவத்தின்போது வீங்கியிருந்த
இவள் வயிறு
எத்தனை பாரமாயிருந்திருக்கும்
என்றார் அடுத்திருந்தவர்.

எதற்கு வம்பென்று ஆமாமாம் என்று
சொல்லியபடியே
அடுத்துவரும் பேருந்து
என்ன வழித்தடம் என்று
கண்களை உருப்பெருக்கிக்
கண்ணாடியாக்கப்
பிரயத்தனப்பட்டார் இவர்.

வாழ்வுப் பிரயத்தனத்தில்
ஒருவேளை இவள்
சோரம்போயிருந்திருப்பாளோ,
என்று மேலும் கேட்டார்
முதலாமவர்.

போயிருக்காவிட்டாலென்ன,
போனதாகச் சொல்வது
வெல்லமல்லவா உமக்கு
என்று தன்னையும் மீறிச்
சொல்லியவண்ணம்
வண்டியில் முண்டியடித்துக்கொண்டு
ஏறினார் இவர்.

  1. ஆன்லைன் வர்த்தகம்

அவரவர் வீட்டிலெல்லாம் அவள் உண்டு
பல உருவில்…..
ஆனாலும்
அப்பிராணியென்ற தெரிவிலோ என்னவோ
அப்போதைக்கப்போது அவளைத்
தப்புத்தப்பாகப் பேசிச் சிரிப்பதில்
அவர்களுக்குள் குதூகலம் கொப்பளிப்பதை
சரியென்று சொல்லாதார்
கரிபூசத்தக்கவர்கள் என்றுரைக்க
நிறைய பேர்…….

அவள் என்று எதுவும் இல்லையென்று
அடித்துச்சொல்பவர்கள்
அவளுக்குக் காதுகேட்காது என்றும்
சிரித்தபடி சொல்லிக்
கொண்டிருப்பதிலுள்ள
முரணை எண்ணிப்பார்க்கும்
சுரணையுள்ளவர்களும் இருக்கத்தான்
செய்கிறார்கள்.
என்றாலும் காலைமுதல் மாலைவரை
நாளொன்றுக்கு எட்டு மணிநேரத்திற்குமேல்
வேலைசெய்தால்தான்
மாதம் ஒருமாரியாவது பொழியும் வீட்டில்
என்ற நிலை.

உலை பொங்க
கலை உதவிசெய்வதில்லை சிலருக்கு
என்றாலும் அவர்கள்
கலையின் விலை சில தலைகள் என்று
மனிதநேயத்தைத் துணைக்கழைத்து
மலைப்பிரசங்கம் செய்வதில்லை.

வேறு சிலரோ
கையில் சில காரியார்த்த இலக்குகளோடு
காய்நகர்த்தலாக அவளைக் கவிதையில்
கடைவிரித்தபடி…

 

Series Navigation’ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்இந்தியாவில் சூரிய ஒளிக்கதிர் மின்சக்தி உற்பத்தி பொறியியல் சாதனப் பராமரிப்பில் சவாலான இழப்பு இடர்ப்பாடுகள்
author

ரிஷி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *