தொடுவானம் 239. தோல்வியும் தீர்மானமும்

This entry is part 5 of 8 in the series 9 செப்டம்பர் 2018

டாக்டர் ஜி. ஜான்சன்

239. தோல்வியும் தீர்மானமும்

மினி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இரண்டு குருவானவர்களில் மறைதிரு பிச்சானந்தமும் மறைத்திரு ஐ.பி. சத்தியசீலனும் வென்றுவிட்டனர். குருவல்லாதவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. அதிஷ்டம் பிச்சைப்பிள்ளை, அருமைநாயகம், எட்வர்ட் தங்கம், ஆகிய மூவரும் வென்றனர். என்னுடைய பெயர் நான்காவதாக வந்தது!
இந்தத் தோல்வியை நான் ஏற்றுக்கொண்டேன். நான் லுத்தரன் முன்னேற்ற இயக்கத்துக்குப் புதியவன். வென்றவர்கள் மூவரும் இயக்கத்தின் துவக்க காலத்திலிருந்து செயல்படும் தலைவர்கள் எனலாம்.அந்த வகையில் எனக்கு நான்காவது இடம் கிடைத்துள்ளதே பெரிய சாதனை!
அதிஷ்டம் பிச்சைப்பிள்ளை இயக்கத்தின் ஸ்தாபகர்களில் ஒருவர். அவர் மயிலாடுதுறையில் தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் ஆரம்பப் பள்ளியின் தலைமை ஆசிரியர். மேடையில் நன்றாகக் பேசுவார். சிறந்த சமுதாயப் பற்றாளர். அண்ணனின் நண்பர். என்னுடைய திருமணத்தின்போது தெம்மூர் வந்து வாழ்த்துரை வழங்கியவர். எல்லாவற்றுக்கும் மேலாக இப்போது தரங்கைப் பேராயர் மாமறைதிரு ஜெயசீலன் ஜேக்கப் அவர்களின் மைத்துனர். இவருடைய தம்பி மறைதிரு ஜெயராஜ் பேராயரின் தங்கையை மணமுடித்துள்ளார். இத்தகைய தகுதிகளின் அடிப்படையில் இவர் மினி தேர்தலில் முதலிடம் பெற்றதில் வியப்பேதுமில்லை.
அருமைநாயகம் வயதில் மூத்தவர். இவர் வடக்கே திருவள்ளுவர் ஆலயத்தைச் சேர்ந்தவர். லுத்தரன் முன்னேற்ற இயக்கத்தின் வட பகுதி ஆலயங்களின் தலைவராக செயல்படுபவர். அங்குள்ளோரின் வாக்குகள் பெருமளவில் கிடைத்திருக்கும். அவர்கள் எனக்கு பழக்கம் இல்லாதவர்கள். இவரும் இயக்கத்தின் ஆரம்ப காலத்திலிருந்து தீவிரமாகச் செயல்படும் தலைவர். இவர் வென்றதும் நியாயமானதே.
எட்வர்ட் தங்கம் தெற்கே மதுரையைச் சேர்ந்தவர்.பேராயரின் நெருங்கிய நண்பர். முன்பு அவருடன் இரவில் வந்து என் வீட்டில் தங்கியவர். மதுரை வட்டார பிரதிநிதிகள் இவருக்கு அதிகமாக வாக்களித்திட ருப்பார்கள். நான் இன்னும் மதுரை மறை மாவட்ட த்தில் பிரபலமாகவில்லை என்பது உண்மை. இவர் வென்றதும் சரிதான்.
நான் இன்னும் இயக்கத்தில் பிரபலமடையவேண்டியுள்ளது,. தமிழகத்திலுள்ள அனைத்து லுத்தரன் ஆலயங்களையும் நான் சென்று பார்க்க வேண்டியுள்ளது. அங்குள்ள சபை மக்களை சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்க வேண்டியுள்ளது. அவை பற்றியெல்லாம் இயக்கத்தின் கூட்ட்ங்களில் பேசவேண்டும். இவை ஏதும் இல்லாமல் உடன் தேர்தலில் போட்டியிட்டது ஒரு அறிமுகத்துக்குதான் . இப்போது என்னை பலருக்குத் தெரிந்துவிட்டது. இனி அடுத்த தேர்தலுக்கு தயார் செய்துகொள்ளலாம்.அது இன்னும் மூன்று வருடங்களில் நடைபெறும். ஆனால் அப்போதும் என்னைவிட முத்த தலைவர்கள் நிச்சயம் போட்டியிடுவார்கள்,அவர்களில் மொத்தமே மூவர்தான் தேர்ந்தெடுக்கப்படுவதுதான் சிரமம். திருச்சபை மக்களிடையே உள்ள லுத்தரன் முன்னேற்ற இயக்கத்தின் மூன்று பேர்கள் என்பது அவ்வளவு எளிதல்ல. வாக்காளர்களை திரும்பத் திரும்பத் தொடர்பு கொண்டு அவர்களின் குறைகளைப் போக்குவதாக வாக்குகள் தரவேண்டும் நிறைய செலவு வேறு செய்தாக வேண்டும்.தமிழகம் முழுதும் சுற்றுப்பயணம் செய்ய வேண்டும்.
மூன்று வருடங்கள் கழித்து மீண்டும் தேர்தலைச் சந்திக்கலாம் என்ற முடிவுடன் திருப்பத்தூர் திரும்பினேன்.
தற்போது லுத்தரன் முன்னேற்ற இயக்கத்தின் சார்பில் ஆலோசனைச் சங்கத் தேர்தலில் போட்டியிடப்போகும் ஐவர் தேர்வாகிவிட்ட்னர். இவர்களுடன் கூட்டணி அமைப்புகளின் நால்வருடன் சேர்த்து ஒரு குழுவாக இந்த ஒன்பது பேர்களும் போட்டியிடுவார்.அவர்களை எதிர்த்து வேறு ஒன்பது பேர்கள் போட்டியிடுவார். அதில் வெற்றிபெறும் ஒன்பது பேர்களும் வருகிற மூன்று வருடங்கள் திருச்சபையை ஆட்சி செய்வார்கள்.அதுதான் திருச்சபையின் ஆலோசனைச் சங்கம் என்பது. அதற்கு பேராயரே தலைமை தாங்குவார். அந்த ஒன்பது பேர்களும் சேர்ந்து அவர்களுக்குள் ஒரு குருவல்லாதவரை செயலராகத் தேர்ந்தெடுப்பார்கள். அவர்தான் ஆலோசனைச் சங்கத்தின் செயலராகப் பணியாற்றுவார்.
ஆலோசனைச் சங்கத்தின் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதம் இருந்தது.
நான் ம்ருத்துவப் பணியில் கவனம் செலுத்தினேன். பால்ராஜ், கிறிஸ்டோபர், தேவையிரக்கம் ஆகியோருடன் ஆரோக்கியநாதர் ஆலயத்திலிருந்து வாக்களிக்கச் செல்லும் ஐந்து பேர்களை அடையாளம் கண்டு அவர்களிடம் அது பற்றி சொன்னேன்.அவர்களில் நானும் ஒருவன்.
வீட்டில் மகன் அலெக்ஸ் இப்போது பேச ஆரம்பித்தான். அவனின் மழலைச் சொற்கள் கேட்பதற்கு இனிமையானவை. இதைத்தான் வள்ளுவரும்,
” குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர், ” என்றுள்ளார்.
சில நாட்களில் அவன் படம் பார்க்கப் போகலாம் என்பான். நான் நீ நடந்து வரவேண்டும் என்பேன்.அவனும் சரி என்பான். நாங்கள் கிளம்பி மருத்துவமனை நுழைவாயில் வரை செல்லும் வரை நல்ல பிள்ளையாக நடந்து வருவான். அங்கு வந்ததும் குனிந்து உட்கார்ந்துகொண்டு, ” தூக்கு ” என்பான். நடந்துதான் வரணும் என்றால் முடியாது என்று ஆடம் பிடிப்பான். அவனை தோளில் சுமந்துகொண்டு தியேட்டர் வரை நடந்து செல்வேன். உள்ளே சென்று அமர்ந்ததும் உடன் தூங்கிவிடுவான். படம் முடிந்தபோதுதான் விழிப்பான். திரும்பவும் தூக்கிக்கொண்டு வீடு வந்து சேருவேன்.

( தொடுவானம் தொடரும் )

Series Navigationமருத்துவக் கட்டுரை நோய்க் கிருமித் தொற்றுகள்பூமிக்கு அருகில் ஒன்றை ஒன்று ஒருநாளில் சுற்றி வரும் அபூர்வ இரட்டை முரண்கோள் கண்டுபிடிப்பு
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *