தொடுவானம் 224. கமிஷன்

This entry is part 8 of 10 in the series 14 அக்டோபர் 2018

டாக்டர் ஜி. ஜான்சன்

224. கமிஷன்

தொலைபேசி மூலம் செயலர் அதிஷ்டம் பிச்சைப்பிள்ளையுடன் தொடர்பு கொண்டேன். அவரைச் சந்திக்க நேரம் கேட்டேன். அவர் சனிக்கிழமை மாலை மயிலாடுதுறை வரச் சொன்னார்.
சனிக்கிழமை காலை பத்து மணிக்கு மேகநாதன் வாடகை ஊர்தி கொண்டுவந்தார். நாங்கள் புறப்பட்டோம். புதுக்கோடடை வழியாக தஞ்சாவூர் சென்றோம். தஞ்சை பெரிய கோவிலின் எதிர்புறத்து கடைத்தெருவில் ஒரு உணவகத்தில் மதிய உணவை முடித்துக்கொண்டோம். அது சுடச்சுட சுவையான கோழி பிரியாணி. அவர்தான் பணம் கட்டினார்.
கும்பகோணம் நோக்கி புறப்பட்டோம். வழி நெடுக மேகநாதன் மிகவும் உற்சாகமாக பேசினார். எனக்கோ மனதில் நான் செய்வது தவறோ என்ற குற்ற உணர்வே மேலிட்டது. என்னதான் அந்த பத்து சதவிகிதம் அவருடைய பணம் என்றாலும் அது திருச்சபை தரும் பணம்தானே. எனக்குத் தரவேண்டிய பத்துக்கு ஏற்பதானே அவர் செலவு காட்டி பணம் வாங்குவார். அது திருச்சபையை ஏமாற்றும் வேலைதானே. அவருக்கு வரும் லாபத்திலிருந்தா எனக்குத் தரப்போகிறார். அப்படி இருக்காது. எனக்குத் தரவேண்டியதையும் சேர்த்துதான் அவர் கணக்கு காட்டுவார்.எப்படியோ அன்று இரவு சம்மதம் தெரிவித்து விட்டேன். அது அந்த விஸ்கி செய்த வேலை! இனி பின்வாங்க முடியாது. எதற்கும் மயிலாடுதுறையில் என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்போம் என்ற முடிவுடன் அவருடன் பேசிக்கொண்டிருந்தேன்.
கும்பகோணம் தாண்டி ஆக்கூர் வழியாக மயிலாடுதுறை செல்லும் வீதியில் சென்றுகொண்டிருந்தோம். கண்ணுக்கு எட்டிய தூரமெல்லாம் வயல்வெளிகள் செழிப்புடன் காணப்பட்டன. அது கண் கொள்ளாக் காட்சி! வீதியின் வலப்புறத்தில் காவிரி கிளை நதியில் நீர் கரைபுரண்டு ஓடியது. ஆற்றுப் படுகையில் பலர் குளித்துக்கொண்டிருந்தனர். மாலை வேளையாதலால் தென்றல் குளுகுளுவென்று வீசியது.
வழி நெடுக வயல்களும்,வாய்க்கால்களும்,சிறு சிறு கிராமங்களையும் கடந்து சென்றோம். சில இடங்களில் தொடர்வண்டி செல்வதற்கு நின்று வழிவிட்டோம். கடைசியாக மல்லியம் என்னும் ஊர் தாண்டியதும் சற்று நேரத்தில் மேம்பாலத்தில் ஏறி மயிலாடுதுறையை வந்தடைந்தோம்.
டி.இ.எல்.சி. நடுநிலைப்பள்ளி இரண்டு மாடிகல் கொண்ட பழைய கட்டிடம். வளாகத்தைச் சுற்றிலும் உயரமான சுவர் இருந்தது.அதன் வடக்கே உயரமான தேவாலயம் காணப்பட்டது. திறந்த வாயிலினுள் நுழைந்து ஒரு ஓரத்தில் வண்டியை நிறுத்தினோம்.
மாடியின் வலதுபுற மூலையில்தான் செயலரின் அலுவலகம் இருந்தது. அங்கு பலர் காணப்பட்டனர். அவர்கள அனைவருமே கிராமவாசிகளைப் போலவே தோன்றினார்கள்.
” நான் காரில் இருக்கிறேன். நீங்கள் சென்று பேசிவிட்டு வாங்க டாக்டர். ” என்றார் மேகநாதன்.அவர் வந்துள்ளதை மற்றவரிடம் கா ட்டிக்கொள்ள விரும்பவில்லை..
நான் மாடிப்படிகளில் ஏறி செயலரின் அறையை நோக்கிச் சென்றேன். அறைக்கு வெளியில் நின்ற சிலர் என்னை அடையாளம் கண்டுகொண்டனர். உள்ளே நுழைந்து செயலரிடம் நான் வந்துள்ளதைத் தெரிவித்தனர். மீண்டும் வெளியே வந்தவர்கள் என்னை உள்ளே போகச் சொன்னார்கள்.
ஒரு பெரிய மேசையின் பின்னால் அதிஷ்டம் அமர்ந்திருந்தார். அவர் வேட்டியும்வெள்ளை முழுக்கைச் சட்டை அணிந்திருந்தார். மேசையின் ஒரு புறத்தில் ஐ.பி.சத்தியசீலன் இருந்தார். மறுபுறம் மோசஸ் தம்பிப்பிள்ளை அமர்ந்திருந்தார். அவர்கள் எது பற்றியோ தீவிர ஆலோசனையில் இருந்தது தெரிந்தது.சுவர் அருகே போடப்பட்டிருந்த நாற்காலிகளில் வேறு சில லுத்தரன் முன்னேற்ற இயக்கத்தின் தலைவர்கள் அமர்ந்திருந்தனர்.
” வாங்க டாக்டர். ” என்று என்னை அனைவரும் வரவேற்றனர். எனக்கும் ஒரு நாற்காலி தரப்பட்ட்து. நான் அமர்ந்துகொண்டேன்.அவர்கள் கிராம ஆலயங்களின் முன்னேற்றம் பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தனர்.அது பொதுவான காரியம் என்பதால் நானும் அதில் கலந்துகொண்டேன்.சுமார் அரை மணி நேரம் கழித்தபின்பு அதிஷ்டம் எழுந்து வந்தார். என்னை அழைத்துக்கொண்டு அறைக்கு வெளியே வந்தார். கொஞ்ச தூரம் நடந்தோம்.
” எதோ முக்கிய காரியம் என்றாயே? மருத்துவமனையில் ஏதும் பிரச்னையா? ” அவர் கேட்டார்.
” இல்லை. மேகநாதன் என்னும் ஒரு நண்பரை அழைத்துவந்துள்ளேன். அவர் ஒரு ஸ்டாப் நர்சின் கணவர். கட்டிடக் காண்டிராக்டர். அரசாங்க வேலைகள் செய்துவருகிறார். ” என்றேன்.
” அவரை என் அழைத்து வந்துள்ளாய்? அவர் கேட்டார்.
” நம்முடைய திருச்சபையில் கட்டிடக் காண்டிராக்ட் வேலை வேண்டுமாம்.அதனால் அவரை உங்களிடம் அறிமுகம் செய்துவைக்க அழைத்து வந்துள்ளேன். ” நான் நேராக வந்த காரணத்தைக் கூறினேன்.
” அதற்கு அவர் முதலில் நம்முடைய தலைமை அலுவலகத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும். ” என்றார் அதிஷ்டம்.
” அதனால்தான் அது பற்றி கேட்க அவர் வந்துள்ளார். ” இது என்னுடைய பதில்.
” சரி. சரி. அதை இப்போது பேசமுடியாது.இங்கு அவர்களெல்லாம் இருக்கிறார்கள். அவரிடம் தனியாகப் பேசுகிறேன். நீ அவருடன் இரு. இன்னும் அரை மணி நேரத்தில் நான் கீழே வருகிறேன். ” என்று சொன்னவர் வேகமாக் மீண்டும் அறைக்குள் சென்றுவிட்டார்.
ஒரு வகையில் வந்த காரியம் வெற்றிதான். அவரே வருவதாகச் சொல்லிவிட்டார். அதோடு இந்த காரியம் ரகசியமாக இருக்கவேண்டும் என்று அவர் நினைப்பதுபோல் தோன்றியது.
நான் கீழே இறங்கி காருக்குள் நுழைத்தேன்.அப்போது லேசாக இருட்டியிருந்தது.
” என்ன ஆச்சு டாக்டர்? பார்க்கலாம் என்றாரா? ” பரபரப்புடன் கேட்டார் மேகநாதன்.
” நான் வந்த நோக்கத்தைச் சொல்லிவிட்டேன். அவர் இன்னும் அரை மணி நேரத்தில் கீழே வந்து சந்திப்பதாகச் சொல்லியுள்ளார். ” என்றேன்.
” அப்படியென்றால் சக்ஸஸ் டாக்டர்! ” மேகநாதன் என் கையைப் பற்றி மகிழ்ச்சியுடன் குலுக்கி நன்றி தெரிவித்தார்.
நாங்கள் காருக்குள்ளேயே காத்திருந்தோம்.
சொன்னபடியே அரை மணி நேரத்தில் அதிஷ்டம் அறையிலிருந்து வெளியேறி படிகளில் இறங்கினார். மேகநாதனும் நானும் காரிலிருந்து வெளியேறி காத்திருந்தோம். மேகநாதனை நான் அறிமுகம் செய்து வைத்தேன்.
” சரி. நீ இங்கேயே இரு. நாங்கள் கொஞ்ச நேரம் வெளியில் சென்று வருகிறோம். ” என்று என்னைப் பார்த்துச் சொன்னவர் அவசரமாக காருக்குள் ஏறி அமர்ந்துகொண்டார். மேகநாதனும் ஏறிக்கொண்டார். கார் கடை வீதி பக்கம் சென்றது.
நான் செய்வதறியாது திகைத்து நின்றேன். அப்போது மாடியிலிருந்து தம்பிப்பிள்ளை என்னைக் கூப்பிட்டார்.நான் மீண்டும் படியேறி மேலே சென்றேன்.
அவர் என்னை நோக்கி வந்துகொண்டிருந்தார்.
” கீழே வா. ” என்றார். நான் பின்தோடர்ந்தேன்.
ஒரு மரத்தடியின் கீழே நின்றார்.
” அதிஷ்டம் எங்கே? ” என்று கேட்டார்.
” வெளியே சென்றுள்ளார். ” என்றேன்.
” ஒரு காரில் ஏறினான்? அவனுடன் சென்றது யார்? ” என்று கேட்டார்.
” மேகநாதன் என்பவர். திருப்பத்தூரிலிருந்து என்னுடன் வந்தார்.” என்றேன்.
” என்ன விஷயமாக? ” என்று கேட்டார்.
” அவர் ஒரு காண்டிராக்டர். நம் திருச்சபையில் காண்டிராக்ட் வேண்டுமாம். அதனால் அழைத்து வந்தேன். ” என்றேன்.
” சரிதான். நல்லா இருப்பவனை கெடுக்க வந்துவிட்டாயா? ” என்று அவர் சொன்னது கேட்டு நான் திக்குமுக்காடினேன்!
நான் பதில் சொல்லவில்லை.
” நீ காண்டிராக்ட் கேட்டு மேகநாதனை அழைத்து வந்தாய். இப்போ உன்னை கழற்றிவிட்டு விட்டு அவர்கள் இருவரும் தனியாகப் போய்விட்டனர். கமிஷன் பேசிவிட்டுதான் இருவரும் திரும்புவார்கள். ”
அவர் சொன்னது கேட்டு நான் திகைத்து நின்றேன்!

( தொடுவானம் தொடரும் )

Series Navigationஅறுவடைசூரியன் பின் தொடர்வேன் ! மூலம் : பீட்டில்ஸ் பாடகர்
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *