நரேந்திரன் குறிப்புகள் (திருமாலிருஞ்சோலை, எகிப்து, Vitalik Buterin)

This entry is part 1 of 10 in the series 14 அக்டோபர் 2018

ராஜாஜியின் திருமாலிருஞ்சோலை
சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாயிருந்த சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் “திருமாலிருஞ்சோலை” என்கிற பெயரில் ஒரு தலையணை சைஸ் புத்தகம் எழுதியிருக்கிறார். பலரும் அறியாத அற்புதமான வரலாற்றுத் தகவல்களுடன் தலபுராணத்தையும் கூறுகிற புத்தகம்.

அதிலிருந்து எடுக்கப்பட்டது இந்தப் படம்.

எகிப்தின் பேரரசர் ஒருத்தர் நாமம் தரித்துக் கையில் சடாரி வைத்திருந்த வைஷ்ணவர் என்கிறார் ராஜாஜி. அதற்கான ஆதாரமாக பைபிளையும் ஆதாரமாகக் கொடுக்கிறார்.

இன்னொரு படத்திலிருக்கிற வைஷ்ணவர் எகிப்தின் பிரமிடுகளைக் கட்டியவர் எனக்கூறி அதற்கும் புத்தக ஆதாரம் அளிக்கிறார்.

இது எந்த அளவிற்கு நம்பத்தகுந்தது என்பது எனக்குத் தெரியவில்லை. I’m just a messenger.

திருமாலிருஞ்சோலை

எகிப்து
எகிப்திய பிரமிடுகளில் இந்தியர்களின் பங்களிப்பு உண்டா இல்லையா என்பது குறித்து எனக்கு சரியான தெளிவில்லை. இந்தியாவிற்கும் எகிப்திற்குமான வியாபாரத் தொடர்புகள் பழங்காலம் தொட்டே இருந்ததற்கான ஆதாரங்கள் உண்டு. எனவே எகிப்திய பிரமிடு கட்டியதில் இந்தியர்களின் பங்கு இருந்திருக்கக் கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன என்றாலும், முழுமையாக அதனைக் குறித்து ஆராயாமல் ஒரு முடிவுக்கு வருவது தவறானதாகவே இருக்கும்.

சீனர்கள், வெள்ளை ஐரோப்பியர்கள் நீண்டகாலமாக இந்தியாவிற்கு வந்து சென்றதற்கான ஆதாரங்கள் தஞ்சை, ஸ்ரீரங்கம் போன்ற தமிழகக் கோவில்களில் இருக்கின்றன. மதுரைக் கோட்டையை கிரேக்கத்திலிருந்து வந்த யவனர்கள் காவல்காத்த வரலாறும் இருக்கிறது.

அதுபோலவே எகிப்தியர்கள் இந்தியாவிற்கு வந்ததற்கான ஆதாரங்கள் கர்நாடகத்திலுள்ள ஹொய்சாளேஸ்வரர் ஆலயத்தில் இருப்பதாக பிரவீன் மோகன் ஆதாரத்துடன் விளக்குகிறார். அதற்கான சுட்டியைக் கீழே இணைத்துள்ளேன்.

நமது ஆலயங்கள் வெறும் சாமி கும்பிடும் இடங்களல்ல. அவை நமது வரலாற்றை விளக்கும் காட்சிப் பொக்கிஷங்கள். நமது முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கைக்கான ஆவணங்கள். அங்கு தொலையும் ஒவ்வொரு சிலையிலும் நமது வரலாற்றின் ஒரு இழையை இழக்கிறோம் என்பதனை நீங்கள் உணரவேண்டும்.

Vitalik Buterin

Vitalik Buterin என்கிற இருபது வயது இளைஞனை அறியாதவர்கள் அறிந்து கொள்க. ஏனென்றால் விட்டாலிக் அடுத்த பில்கேட்ஸ்சாகவோ அல்லது இன்னொரு ஸ்டீவ் ஜாப்ஸ்சாகவோ வாய்ப்புகள் இருக்கின்றன.

Ethereum என்னும் நிறுவனத்தைத் துவக்கி நடத்துகிற விட்டாலிக் பூட்டரின், இன்றைய தகவல் தொழில்நுட்ப உலகில் மிகவும் பரவலான கவனத்தைப் பெற்ற ப்ளாக்செய்ன் (Blockchain) டெக்னலாஜியைக் கண்டுபிடித்து முன்னெடுத்துச் செல்கிறவர். Blockchain தியரி 1991-ஆம் வருடம் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் அதனைச் சாத்தியமாக்கியவர் விட்டாலிக் பூட்டரின்.

Blockchain டெக்னாலஜியை உங்களுக்குக் கொஞ்சம் எளிமைப்படுத்தி விளக்க முனைகிறேன். புரியாவிட்டால் பரவாயில்லை. வாழ்நாள் முழுவதும் தகவல் தொழில் நுட்பத்துறையில் மாரடித்த எனக்கே சமயத்தில் நான் என்ன பேசுகிறேன் என்று புரியாது என்கிற உண்மையையும் இங்கு உடைத்துக் கூற கடமைப்பட்டிருக்கிறேன்.

அதற்கு முன்னால் இன்றைக்கு மிகவும் பிரபலமாகவிருக்கும் க்ளவுட் கம்ப்யூட்டிங் குறித்து சிறிது விளக்குகிறேன். க்ளவுட் கம்ப்யூட்டிங் என்றால் “மேகத்தில்” செய்கிற கணிப்பொறி வேலையில்லை.

அதனை இப்படி விளக்கலாம்.

இத்தனை நாட்களாக நாம் வேலைசெய்யும் நிறுவனத்திலேயே சொந்தமாக கணிப்பொறிகள் வாங்கி வைத்து அதில் தேவையான வேலைகளைச் செய்து வந்தார்கள். அதனைப் பராமரிப்பதற்கு ஏராளமான பணம் செலவாகும். அதில் பணிபுரிய ஆட்களும் அதிகம் தேவைப்படுவார்கள். தேவைப்பட்டார்கள்.

பட்ஜெட்டைக் குறைக்க சிரமப்பட்டுக் கொண்டிருந்த நிறுவனங்களை அணுகி, உங்களுக்குத் தேவையான கணிப்பொறி இயந்திரங்களை நாங்களே தருகிறோம், பராமரிக்கிறோம். அதன் மூலமாக உங்களுக்கு செலவும் குறையும், ஆட்களின் தேவையும் அதிகமிருக்காது எனக்கூறிய ஆப்பிள், கூகுள், அமேஸான் போன்ற பெரு நிறுவனங்கள், பெரும் டேட்டா செண்டர்களை உலகெங்கும் நிறுவின. அதனைக் க்ளவுட் கம்ப்யூட்டிங் என்று பெயரிட்டும் அழைத்தன.

ஏராளமான அமெரிக்க பெருநிறுவனங்கள் இன்றக்கு அந்த வசதியை உபயோகித்துக் கொண்டிருக்கின என்றாலும், க்ளவுட் கம்ப்யூட்டிங் அதிக நாட்கள்/வருடங்கள் நீடிக்காது என்கிற முடிவுக்கு இப்போது வந்திருக்கிறார்கள். ஏனென்றால் அந்த பெரும் கணிப்பொறி இயந்திரங்களுக்கு ஆகும் மின்சாரத்தேவை மிக அதிகம். அதனை விடவும் இயந்திரங்கள் கட்டுப்படுத்தவே முடியாத அளவிற்குச் சூடடைவதால் அதனைக் குளிர்விக்க ஆகும் செலவும் மிக அதிகம்.

இன்றைய கணிப்பொறிகளில் எல்லாத் தகவல்களையும், க்ளவுட் கம்ப்யூட்டிங் உட்பட, டேட்டாபேஸ்களில் சேமித்து வைத்துக் கொண்டு, அதாகப்பட்டது உங்கள் பெயர், முகவரி, ஆதார் எண், வங்கி எண்கள் இன்னபிற, உபயோகித்துவருகிறோம். அவ்வாறு எல்லாத் தகவல்களையும் ஒரே இடத்தில் வைத்திருப்பதால் ஹாக்கர்ஸ் எனப்படும் தகவல் திருடர்கள் டேட்டாபேஸ்களிலுள்ள தகவல்களை கொத்தாகத் திருட வாய்ப்புகள் அதிகம்.

இது உலகெங்கும் தினப்படி நடக்கிற சமாச்சாரம். அமெரிக்கா போன்ற நாடுகளேகூட கண்கொத்திப் பாம்பாக பாதுகாத்தாலும் தகவல் திருடர்களைத் தடுக்க இயலவில்லை. இதில் இந்தியாவெல்லாம் பரிதாபமானதொரு கேஸ்தான்.

இப்போது ப்ளாக்செய்னுக்கு வருவோம்.

இந்தத் தொழில்நுட்பத்தில் தகவல்கள் எல்லாம் ஒரே இடத்தில் சேர்த்துவைப்பது மாறி, பரவலாக உலகெங்கும் ஒரு சங்கிலித் தொடர்போலச் சேமித்து வைப்பது. உதாரணமாக, உங்களைக் குறித்த தகவல்கள் சிறுசிறு தொகுதிகளாக (Block) பிரிக்கப்பட்டு அவை ஒன்றுக்கொன்று தொடர் சங்கிலிகளாக (chain) இணைக்கப்பட்டு உலகின் பல பாகங்களில் சேமித்துவைக்கப்படும். அந்தச் சங்கிலிகள் ஒரு குறிப்பிட்ட சங்கேத அல்காரிதம் (Hash) வாயிலாக இணைக்கப்பட்டிருக்கும்.

நீங்கள் விரும்பினால் அந்தத் தகவல்களை உங்கள் கணிப்பொறியிலும் சேமிக்க அனுமதி அளிக்கலாம். அதற்கான சிறுவாடகை உங்களுக்குத் தரப்படும். அதேதகவல் பல்வேறு கணிப்பொறிகளிலும் சேமிக்கப்படுவதால் அது தொலைந்து போவதற்கான வாய்ப்புகள் மிக,மிகக் குறைவு.

தகவல் திருடர்கள் எளிதில் அந்த தொகுதி தொடர்சங்கிலிகளை உடைத்து உங்களின் தகவல்களைத் திருட இயலாது. அதையும் விட அந்தத் தகவல்களை மாற்றவே இயலாது. இதனால் ஏற்படும் நன்மைகள் ஏராளம்.

உதாரணமாக, உங்கள் சொத்து விவரங்களை இன்றைக்கு அரசாங்கம் டிஜிடைஸ்ட் செய்து கணிப்பொறிகளில் சேமித்து வைத்திருக்கிறது என்றாலும் யாரேனும் பணம் கொடுத்து அந்தத் தகவல்களை மாற்றியமைக்க வழியிருக்கிறது. பணம் கொடுத்தால் உங்கள் சொத்தையே வேறொருவர் பெயருக்கு எழுதவும் முடியும். அதனை நீங்கள் கண்டுபிடித்து கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்து, அது விசாரணைக்கு வருவதற்குள் உங்கள் தலைமுடி நரைத்துவிடும் என்பது நிதர்சனம்.

எல்லாத் தகவல்களையும் ஒரே இடத்தில் வைப்பதால் வரும் ஆபத்து இது. இதனை ப்ளாக்செய்ன் டெக்னாலஜி முற்றிலும் நீக்குகிறது. உங்கள் தகவல்களை எந்தக் கொம்பனாலும் மாற்றமுடியாது. ஃப்ராடுத்தானம் செய்ய முடியாது. உங்களால் மட்டுமே அந்தத் தகவல்களைப் பார்க்க முடியும். இதன் மூலம் எத்தனையோ அப்பாவிகளின் சொத்துக்கள் காப்பாற்றப்படுவதுடன், பினாமிகள் வாயில் மண் விழுகும். இந்திய அரசாங்கம் அத்தனை சொத்துக்களையும் அடுத்த சில ஆண்டுகளுக்குள் ப்ளாக்செய்ன் டெக்னாலஜியில் பதிய மும்முரமாக வேலை செய்து கொண்டிருக்கிறது என்றறிக.

இன்னொரு உதாரணம், ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குப் பணம் அனுப்புவது மிக எளிதாகும். வங்கிகள், வெஸ்டர்ன் யூனியன் போன்றவற்றிக்குக் கமிஷன் எதுவும் தராமல் அமெரிக்காவிலிருந்து அய்யம்பேட்டைக்கு நேரடியாக, மிக மிகக் குறைந்த செலவில் ஒரே ஒரு க்ளிக்கில் அனுப்பும் வசதி. கமிஷனுக்கு கமிஷனும் மிச்சம். சரியான ஆளுக்கு சரியான நேரத்தில் பணம் சேர்ந்துவிடும். மொத்தத்தில் ஹவாலாவெல்லாம் திவாலாகிவிடும்.

இதனைக் குறித்து இன்னும் எவ்வளவோ சொல்லலாம் என்றாலும் இத்துடன் நிறுத்துவதே எனக்கு மரியாதை. விருப்பமுடையோருக்கு ஏராளமான தகவல்கள் இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன.

இதனைப் படித்துப் புரிந்தவர்கள் புண்ணியவான்கள். புரியாதவர்கள் பாக்கியவான்கள்.

Series Navigationரஷ்ய சோயுஸ் ராக்கெட் ஏவியதும் பழுதாகி, குறிப்பயணம் தோல்வி யுற்று விண்சிமிழ் திரும்பி இயக்குநர் இருவர் பாதுகாப்பாய் பூமிக்கு மீண்டார்சுண்டல்
narendran

பி எஸ் நரேந்திரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *