கழிப்பறைக்காக ஒரு பெண்குழந்தை நடத்திய போராட்டம்

author
1
0 minutes, 0 seconds Read
This entry is part 2 of 6 in the series 30 டிசம்பர் 2018

கோ. மன்றவாணன்

 

ஆம்பூர் மகளிர் காவல் நிலையத்துக்கு ஏழு வயது பெண்குழந்தை வந்து, ஒரு புகார்மனுவை உதவி ஆய்வாளரிடம் தந்தது. துணைக்குத் தன்தாயையும் அழைத்துக்கொண்டு வந்திருந்தது. அந்தக் குழந்தையின் பெயர் ஹனீஃபா ஜாரா. ஆம்பூரில் உள்ள தனியார் பள்ளியில் 2-ஆம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளியில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று வருகிறார். அக்குழந்தையின் வீட்டில் கழிப்பறை வசதி இல்லை. கழிப்பறை கட்டித் தருமாறு பலமுறை தன்னுடைய தந்தையிடம் ஹனீஃபா ஜாரா கேட்டு வந்துள்ளார். பள்ளியில் முதலிடம் பிடித்தால் வீட்டில் கழிப்பறை கட்டித் தருவதாகத் தந்தை வாக்குறுதி அளித்துள்ளார். எல்கேஜி முதல் தற்போது பயிலும் 2-ஆம் வகுப்பு வரையிலும் பள்ளியில் அவர் முதலிடம்தான் பிடித்து வந்துள்ளார்.  எனினும், தந்தை கூறியபடி கழிப்பறை கட்டித் தரவில்லை. திறந்தவெளியைக் கழிப்பறையாகப் பயன்படுத்துவது தனக்கு அவமானமாக இருப்பதாகவும், தன்னை ஏமாற்றி வருவதாகவும் தந்தையிடம் ஹனீஃபா ஜாரா கூறி வந்துள்ளார். அந்தக் குழந்தையின் தந்தை இஷானுல்லா என்ன செய்வார்? அவரோ கூலித் தொழிலாளி.

எனவே குழந்தை, தனக்கு வாக்குறுதி கொடுத்தபடி கழிப்பறை கட்டித் தராத தந்தை மீதே நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையப் படிக்கட்டில் ஏறிவந்துள்ளது. அச்சிறுமி தன் புகாரில் “எல்கேஜி முதல் இரண்டாம் வகுப்புவரை முதல்ரேங்க்தான் எடுத்து வருகிறேன். ஆனால், இன்னும் கழிப்பறை கட்டித்தரவில்லை. என்னை ஏமாற்றிவரும் தந்தையைக் கைது செய்யுங்கள். அல்லது கழிப்பறை கட்டுவேன் என்பதை அவரிடமிருந்து எழுத்துபூர்வமாக வாங்கித் தாருங்கள்” என்று முறையிட்டிருந்தார்.

இந்தச் செய்தியை நாளிதழில் படித்ததும் அந்தக் குழந்தையின் நல்லெண்ணத்தையும் வாக்குறுதி கொடுத்தவர் தந்தையாகவே இருந்தாலும் சத்தியம் தவறக் கூடாது என்ற நோக்கத்தையும் அறிய முடிந்தது. மேலும் கழிப்பறை இல்லாமல் பொதுவெளியில் அக்குழந்தைபடும் அவதி, அவமானத்தை நினைத்து வருந்தாமல் இருக்க முடியவில்லை.

கழிப்பறைகள் இல்லாமையால் இருளில் வாழ்ந்த அன்றைய இந்தியா, என் நினைவுக்குள் ப்ளாஷ்பேக்காக சுழல்வதைத் தவிர்க்க முடியவில்லை. இடைஇடையே இன்றைய இந்தியாவின் இடர்களையாத பக்கங்களும் கண்ணில்படத்தான் செய்கின்றன.

திறந்தவெளியில் மலம்கழிப்பது என்பது இந்தியர்களின் வாழ்வியலில் ஒன்றாகிவிட்டது. கிராமங்களில் இது வெகுசாதாரணம். இரவு நேரங்களில் ஓடையோரத்தில் குளத்தோரத்தில் மலம்கழிப்பார்கள். தண்ணீர் வசதி இல்லாத பகுதிகளில் கைகளில் சொம்புகளில் தண்ணீர் கொண்டு செல்வார்கள். இதில் என்ன வேடிக்கை என்றால்… மலம் கழிப்பது என்பது மறைமுகமாகச் செய்ய வேண்டிய முறை. ஆனால் நம் கிராமத்து மக்கள் தம் நட்புவட்டத்தினருடன் சென்று அருகருகே அமர்ந்தபடி அக்கம் பக்கத்தார் கதைகளையும் அன்றாட அரசியல் நிலவரங்களையும் பேசுவார்கள். நண்பர்களோடு மலம்கழிக்கச் செல்வது மனதுக்கும் உடலுக்கும் கிடைக்கும் சுகமாகக் கருதுகிறார்கள். கிராமப் பெண்களும் ஒதுக்குப் புறமாகச் சென்று தம் தோழிகளோடு பேசியபடி மலம்கழிக்கிறார்கள். ஆண் நடமாட்டம் வந்துவிடக் கூடாதே என்ற எச்சரிக்கை உணர்வோடும் சங்கடத்தோடும்தான் அவர்கள் அவ்வாறு செய்ய வேண்டியதாகிறது.

நகரப் புறங்களிலும் இந்த நரக(ல்) வேதனை உண்டு. ஒவ்வொரு நகரத்திலும் சில குறுகலான தெருக்கள் மூத்திரச் சந்துகளாகவும் பீச்சந்துகளாகவும் மாறி, அவ்வழியாகப் பகலில் போவோரை மூக்கை மூட வைக்கின்றன. இரவில் போவோரை மலத்தில் கால்பதிக்க வைத்துக் நிலைகுலையச் செய்கின்றன..

வெள்ளைக்காரர்கள் மறைவாகத் தனியாக மலம்கழிக்கச் செல்வார்கள். பலரோடு சேர்ந்து உணவுண்ணச் செல்வார்கள் என்பார்கள். ஆனால் இந்தியர்கள் இதற்கு நேர்மாறாகக் பலரோடு சேர்ந்து மலம்கழிக்கச் செல்வார்கள். தனியாக உணவுண்ணச் செல்வார்கள் என்று நம்மைப் பகடி செய்த காலம் ஒன்றிருந்தது.

மலம்கழிக்க இருட்டுத் தேவை என்பதால், தெருவிளக்குகளைக் கல்லெறிந்து உடைத்த சம்பவங்கள் சர்வ சாதாரணம்.

இந்தியர்களுக்கு எத்தனையோ பெருமைகள் இருந்தாலும் திறந்தவெளியில் மலம்கழிக்கும் செயல் தலைகுனிவை ஏற்படுத்துகிறது. இந்நிலையில் தூய்மை இந்தியா திட்டத்தின் நோக்கம் பாராட்டுக்குரியதே.

இத்திட்டம் தொடங்குவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே நம் ஆட்சியாளர்கள் திறந்தவெளியில் மலம்கழிக்கும் அவலத்தைப் போக்கப் பொதுக்கழிப்பறைகள் கட்டித்தந்தார்கள். அவற்றை யாரும் சுத்தமாக வைத்திருக்கவில்லை. யாரும் பராமரிக்கவும் இல்லை. அதனால் யாரும் பயன்படுத்தவும் இல்லை. சொந்தக் கழிப்பறையாக இருந்தால் அப்படிச் செய்வார்களா? பொதுநலம் என்பதில் இங்கு யாருக்கும் அக்கறை கிடையாது. சுயநலம் ஒன்றே சுடர்விட்டுப் பிரகாசிக்கிறது. அதனால்தான் பொதுஇடங்களை நாற்றமடிக்க வைத்துவிடுகிறார்கள்.

சில ஊர்களில் பள்ளி வளாகங்களை மலம்கழிக்கும் பொதுவெளியாக நம்மக்கள் மாற்றிக் கல்வி சிறந்த தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மாவட்டத் தலைநகரில் உள்ள நகராட்சி மேல்நிலைப்பள்ளியிலேயே இந்த அநியாயம் நிகழ்ந்தது. அது மட்டுமல்லாமல் அங்குத் திறந்திருந்த வகுப்பறைக் கட்டடங்களிலும் மலம்கழிப்பதை வழக்கமாக் கொண்டிருந்தார்கள். அதனால்தான் தற்காலத்தில் பள்ளி வளாகங்களுக்கு மதில்சுவர்கள் எழுப்பப்படுகின்றன. அப்படி இருந்தாலும் மதில் சுவருக்குள் ஓட்டைவாயிலை எப்படியோ உருவாக்கிவிடுகிறார்கள். அந்த ஓட்டை வாயிலை மனிதர்கள் மட்டும் பயன்படுத்தவில்லை. விலங்குகளும்தாம். விலங்குகளுக்கும் நமக்கும் வித்தியாசம் தெரியவில்லை என்பதைத்தான் இதுகாட்டுகிறது.

விடிகாலையில் மலம்கழிக்கின்ற நிலையில் பெண்கள் படும்துயரங்கள் சொல்லி மாளாது. ரயில் தண்டவாள ஓரத்தில் இருக்கும் பள்ளப் பகுதிகளில் பெண்கள் மலம் கழிப்பார்கள். அந்தப் பகுதியில் ஆண்கள் வந்தால் உடனே எழுந்து நிற்பார்கள். அவர்கள் போனவுடன் பிறகு அமர்வார்கள். மறுநிமிடமே மற்றோர் ஆண்வருவார். அப்போதும் எழுந்து நிற்பார்கள். கிராமத்தில் பெரிய மனிதர் வரும்போது வீட்டு வாசலில் உட்கார்ந்திருக்கும் பெண்கள் எழுந்து நிற்பதுண்டு. அதுபோலத்தான் அப்பெண்கள் எழுந்து நிற்பது ஆண்களுக்கு மரியாதை தருவதாகத் தோன்றும். இப்படியே எழுந்தும் அமர்ந்தும் ஒரு டிரில் பீரியடே நடந்துவிடும். இதைப் பார்ப்பதற்கென்றே பாலியல் வன்மம் கொண்டவர்கள் அவ்வப்போது அங்கு வருவார்கள்.

திறந்தவெளியில் மலம்கழிப்பவர்களுக்குக் கால்கழுவ அருகில் நீர்கிடைப்பதில்லை. பெரும்பாலும் அவர்கள் சாக்கடைக்கழிவுகள் ஊறி மிதந்தோடும் ஓடைகளில் கழுவிச்செல்கிறார்கள் என்பது பேரவலம். வேறுவழியற்ற சிலர் நேரடியாகச் சாக்கடை நீரிலேயே கால்கழுவிப் போகும் நிஜம், நெருப்பெனச் சுடுகிறது.

இதற்கான காரணங்களில் முதன்மையானது வறுமை. ஓட்டைக் குடிசையில் வாழ்வோருக்குக் கழிப்பறை கட்ட ஏது பணம்? ஏது சொந்த இடம்?

ஒரு காலத்தில் மிகப்பெரும் செல்வந்தர்கள் வீடுகளில்தாம் நவீனக் கழிப்பறைகள் இருந்தன. நடுத்தரப் பணக்காரர்களின் வீடுகளில் எடுப்புக் கழிப்பறைகள் இருந்தன. துப்புரவுத் தொழிலாளர்கள் தினந்தோறும் காலையில் இரும்பு முறமும் மலத்தை வழிப்பதற்குத் தோதான சுரண்டு கரண்டியும் கொண்டுவந்து சாம்பல் தெளித்து மலம் அள்ளுவார்கள் அவர்களை வீட்டின் முன்பகுதி வழியாக விடமாட்டார்கள். பின்புறம் ஒரு திட்டிவாசல் வைத்து, அதில் கூன்வளைத்து உள்நுழைந்து வந்து மலம் அள்ளச்செய்வார்கள். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. 45 ஆண்டுகளுக்கு முன் நாங்கள் ஒரு வாடகை வீட்டில் குடியிருந்தோம். அப்போது மலம் அள்ளும் தோழரைப் பார்த்திருக்கிறேன். காக்கி நிறத்தில் தொளதொளக்கும் அரைக்கால் சட்டை போட்டிருந்தார் என்பது இன்றும் கண்ணில் தெரிகிறது. எந்த நேரமும் வெற்றிலைப் பாக்கு மென்றபடி இருப்பார். அவருடைய பெயர் மன்னன். அந்த மன்னன், மலத்தை அள்ளி, தள்ளுவண்டியில் உள்ள ட்ரம்மில் நிரப்பி எடுத்துச் செல்வார். தேரில் மன்னன் சென்றார் என்று படித்திருக்கிறேன். இந்த மன்னன், மலவண்டியைத் தள்ளிக்கொண்டு போனது விதியா? சதியா?

அந்தக் காலத்தில் கிராமங்களாவது பரவாஇல்லை. தொலைதூரம் சென்று ஒதுக்குப் புறத்தில் மலம்கழிக்க இடங்கள் இருந்தன. நகர மக்களுக்கு நரக வாழ்க்கைதான். ஏழைகள், இரவு நேரங்களில் சாக்கடைகளிலும், சந்துகளில் உள்ள இண்டு இடுக்குப் பகுதிகளிலும் மலம்கழிப்பார்கள்.

நகரத்தில் வளர்ந்த பெண்கள், கிராமத்தில் இருக்கும் மாப்பிள்ளைகளைத் திருமணம் செய்யத் தயங்குகிறார்கள். கிராமத்திலுள்ள வீடுகளில் கழிப்பறை இருக்காது என்பதே அதற்குக் காரணம். மீறித் திருமணம் செய்த பெண்கள், மாப்பிள்ளை வீட்டில் கழிப்பறை இல்லாததால் படும் சிரமங்கள் அவமானங்கள் கொஞ்சநஞ்சமல்ல.

இன்று எவ்வளவோ தூரம் நாம் கடந்துவந்துவிட்டோம். சுகாதாரத்தைப் பேணுவது என்பது, வீட்டுக்கு ஒரு கழிப்பறை அமைப்பதிலிருந்துதான் தொடங்குகிறது. இன்னமும் இந்தியாவில் எல்லாருக்கும் கழிப்பறை வசதிகள் இல்லைதான். இருந்தாலும் முன்னேற்றம் உள்ளது.

நினைவுச்சுழலில் இருந்து நிகழ்நேரத்துக்கு வருகிறேன். குழந்தை கொடுத்த புகாரைப் படித்த ஆம்பூர் காவல் நிலைய அதிகாரி வளர்மதி  தன்வாழ்நாளில் இப்படியொரு புகாரைப் பார்த்ததில்லை கேள்வியும் பட்டதில்லை என்று வியந்தார். உடனே ஆம்பூர் நகராட்சி சுகாதார ஆய்வாளரைத் தொடர்புகொண்டு பேசினார். அவரும் அந்தக் குழந்தையின் வீட்டில் அரசுச் செலவில் கழிப்பறை கட்டித்தர நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதைக் கேள்வியுற்ற மாவட்ட ஆட்சித்தலைவர் இராமன் அவர்கள், உடனடியாகக் கழிப்பறை கட்டித்தர உத்தரவிட்டார்.

ஊடகச் செய்தியாளர்கள் பேட்டி கண்டபோது அந்தக் குழந்தை சொன்னது. ”இதை என் ஆசிரியரிடம் சொல்லவில்லை. அப்படிச் சொல்லக் கூச்சமாக இருந்தது. அதனால் காவல் நிலையத்தில் புகார்கொடுத்தேன். என் அம்மா என்னைப் புகார்கொடுக்கக் கூடாது என்று சொன்னார். நான்தான் என் அம்மாவை வற்புறுத்தி என்னைக் காவல் நிலையத்துக்கு அழைத்துப்போகச் சொன்னேன்.”

பொதுவாகப் பெற்றோர்கள், தங்கள் குழந்தைகள் முதல்மதிப்பெண் பெற வேண்டுமென ஊக்கப்படுத்துவார்கள். முதல்மதிப்பெண் வாங்கினால் “நீ என்ன கேட்கிறாயோ அதை வாங்கித் தருவேன்” என்று ஆசை காட்டுவார்கள். குழந்தைகளும் சாக்லெட், ஐஸ்கிரீம், பொம்மைகள், விளையாட்டுச் சாதனங்கள், கேம்விளையாட டேப்லெட்டுகள் கேட்பார்கள். ஆனால் தன்தந்தையிடம் இந்தக் குழந்தை, தான் முதல்மதிப்பெண் வாங்கினால் கழிப்பறை கட்டித்தரக் கேட்டுள்ளாள். நன்றாகப் படித்துத் தொடர்ந்து முதல்மதிப்பெண்ணும் பெற்று வந்துள்ளாள். கழிப்பறை கட்டித்தராத போது சத்தியத்தை மீறிய தந்தை மீது நடவடிக்கை எடுக்கும் அளவுக்குக் குழந்தையின் சிந்தனை ஓங்கி இருக்கிறது. நம் அரசியல்வாதிகள் நாளுக்கொரு வாக்குறுதி அளித்து மறுநாளே மறந்துவிடுகிறார்கள் என்பதை அந்தக் குழந்தை அறிந்தால் என்ன நினைக்கும்?

அரசின் திட்டங்களுக்குப் பொதுவாக நடிகர் நடிகைகளைத்தாம் நல்லெண்ணத் தூதுவர்களாக நியமிப்பார்கள். விஞ்ஞானிகளையோ… பேரறிஞர்களையோ… தன்னலம் கருதாத நற்சேவையாளர்களையோ நியமிப்பதில்லை. முதன்முறையாக ஆம்பூர் நகராட்சி, தூய்மை இந்தியா திட்டத்துக்கு 7 வயது பெண்குழந்தையான ஹனீஃபா ஜாராவைத் தூதுவராக நியமித்துப் பெருமைப்படுத்தி இருக்கிறது.

முன்பெல்லாம் ஆம்பூர் என்றால் நமக்குப் பிரியாணி நினைவுக்கு வந்தது. இப்போதெல்லாம் ஆம்பூர் என்றால் ஹனீஃபா ஜாராதான் நம் நினைவுக்கு வரவேண்டும். தாத்தா வயதை நெருங்கிய நான், அந்தக் குழந்தையின் பிஞ்சுக் கால்களில் விழுந்து வணங்கவே துடிக்கிறேன்.

Series Navigationதுணைவியின் இறுதிப் பயணம் – 5செலவுப் பத்து
author

Similar Posts

Comments

  1. Avatar
    valavaudraiyan says:

    செய்தித்தாளில் வந்த செய்தியை அனைவருக்கும் தெரியப்படுத்தி அதன்மூலம் அந்தச்ச் இருவயுஅதுப்பெண்ணின் துணிச்சலையும் அதிகாரிகளின் நேர்மையையும் காட்டுகிறது கட்டுரை. அத்துடன் கழிப்பறையை இருக்கவேண்டியதன் அவசியத்தைப் பிரச்சாரமாக இல்லாமல் நயத்துடன் கூறுகிறது கட்டுரை. பாராட்டுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *