இந்திய அடுக்கு – ஒரு நிதிப் புரட்சி – அறிமுகம்

This entry is part 1 of 5 in the series 27 ஜனவரி 2019

இந்தியர்கள், பொதுவாகத் தொழில்நுட்பத் துறையில் முன்னேறியுள்ளதைப் பற்றிச் சொல்லிக் கொள்வதே சுவாரசியமான விஷயம்.  ஒவ்வொரு முறை இந்தியா வரும் பொழுதும் இப்படிப்பட்ட விஷயங்கள் காதில் விழுவதுண்டு.

 • “இன்ஃபோஸிஸ் – ல வேலைக்குச் சேர்ந்து, அமெரிக்கா போய், கல்யாணமாகி அங்கேயே செட்டில் ஆகிட்டானாம். அதான் உங்க ஊர் பக்கத்தில் இருக்கும் ஃப்ரீமாண்ட் என்கிற ஊர்ல இருக்கறதாகக் கேள்வி”
 • “அமெரிக்காவில கன்ஸாஸ் கிட்ட ஓர் ஊர்ல பெரிய வேலைல இருக்கான். டிசிஎஸ் அவனை அமெரிக்கா அனுப்பினாங்க. கூடிய சீக்கிரம் சுந்தர் பிச்சை போல வந்துறுவான்”
 • “உங்களுக்கு இந்த செல்ஃபோன் விஷயமெல்லாம் அத்துப்படிதானே? இந்தத் திருகு வேலையெல்லாம் இளசுகளுக்குத் தான் புரிகிறது”
 • “இங்க கரண்ட்டும் இல்ல, தண்ணியும் இல்லை. உங்க ஊர்ல அதுக்கெல்லாம் பஞ்சமே இல்லையாமே. இங்கெல்லாம் திரும்பி வந்துறாதே”.
 • “அப்பப்பா, இங்க பொல்யூஷன் தாங்க முடியல. கார் இருக்கிறவன் பாடு தேவலை. இந்த டீசல் புகையில புதுசு புதுசா வியாதிகளெல்லாம் வருதப்பா”
 • “அட OTP தெரியல? இதெல்லாம் உங்க ஊரிலிருந்து வந்துச்சுன்னு நெனச்சிருந்தேன்”
 • “உங்க ஊரப் போல இந்தியாவிலும் ஏடிஎம் வந்துருச்சு. கார்ட தேச்சா எங்க வேணும்னாலும் பணம் எடுத்துக்கலாம்”
 • “புதுசா எதுக்கெடுத்தாலும் கிரெடிட் கார்டு குடுத்துற்றாங்க. செளகரியமாக இருந்தாலும், பணம் கட்டலன்னா ஆள வச்சு பயமுறுத்தறாங்க”
 • ”எல்லாத்தையும் இணைச்சுறுவேன்னு அரசியல்வாதிங்க சொல்லிக்கிட்டு திரியறான். முதல்ல பான் கார்டு, அப்புறம் ஆதார் கார்டு வந்துச்சு. எல்லாத்தையும் இணைகிறேன்னு அரசாங்கம் ஒத்தக் கால்ல நிக்குது. காவிரியையும் கங்கையும் இணைக்கக் காணோம்”
 • “உங்க ஊர் தேவல. இங்க இருக்கற கூட்டத்துக்கு, எல்லாத்தையும் இணைக்கிறதுக்குள்ள கிழிஞ்சுறும். இங்க பாரு, எத்தனை கார்டு”
 • ”முன்ன மாதிரி ஆட்டோக்காரனிடம் பேரம் பேச வேண்டாம். ஊபர், ஓலா வந்தப்புறம், எல்லாம் செல்ஃபோனில் அழைத்துச் சரியான வாடகை கொடுத்தால் போதும். உங்க ஊரைப் போல மெதுவாக இந்தியாவில எல்லாம் வந்துக்கிட்டு இருக்கு. என்ன, இங்க ஊழல் அதிகம். அது சரியானா, இந்தியாவைப் பிடிக்க முடியாது”
 • “ISRO என்னவெல்லாம் செய்யுது! இந்தியா செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட் அனுப்பிட்டோம். அட, இங்க வந்து வேலைப் பாருங்க. இந்தியாவில் என்ன இல்லை?”
 • “ஜியோ என்று ஒரு புயலான ஒரு செல்பேசி சேவை வந்திருக்கு. ஏராளமான விஷயங்கள் இலவசம். மாறாக உங்க ஜாதகத்தை அம்பானியிடம் கொடுத்துறணும். நம்மகிட்ட கருப்புப்பணமா இருக்கு, கவலப்பட…”
 • “இந்த வருஷம் புயலால அதிகம் சேதமில்லை. சரியாக எல்லோரையும் அப்புறப்படுத்திட்டாங்க”

இந்தக் கருத்துக்கள் மிகவும் நியாயமான சாதாரண மனிதர்களின் கருத்துக்கள். முரண்பாடுகள் இருக்கத்தான் செய்யும். இந்தியாவின் முன்னேற்றங்களைக் குழப்பமான ஊழல் அரசியல் செய்திக் கண்ணாடி அணிந்து பார்த்தால், இப்படிப்பட்ட கருத்துக்கள் சொல்லப்படுவது புரிந்து கொள்ள முடியும்.

 • அடிப்படைக் கல்வி, போக்குவரத்து, சட்டம், சுகாதாரம், நகராட்சி  வசதிகளில் பின்தங்கி, தொழில்நுட்பத்தில் வளர்வது, இந்தியா போன்ற ஒரு முரணான தேசத்தில் மட்டுமே சாத்தியம்
 • பல்லாண்டுகள் மக்கள் தீர்வுக்காக ஏங்கும் பிரச்சினைகளை (தண்ணீர், கல்வி, மருத்துவம், வேலை வாய்ப்பு, குடியிருப்பு) ஒதுக்கிவிட்டு, புதிய விஷயங்களுக்குத் தீர்வு காணும் தேசம் இந்தியா
 • தன்னுடைய பிரச்சினைகளுக்கு, சல்லிசாக வளர்ந்த நாடுகள் எப்படியோ தீர்வு கண்டுவிடும் என்ற பழைய நோக்கு
 • தூரத்துப் பச்சை – மேலை நாடுகள் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டுவிட்டதாக நம்பும் பாமரத்தனம்

இந்தியாவின் கடந்த முப்பது ஆண்டுகளில் உலகை நிமிர்ந்து பார்க்க வைத்த விஷயங்கள் பலவற்றை இந்தியா செய்துள்ளது.

 1. 1991 –ல் உலக தாராளமாக்கம் (liberalization). பல புதிய முயற்சிகளுக்கு இது வழி வகுத்ததால், இங்குச் சொல்லியாக வேண்டியுள்ளது. வேறு வழியில்லாமல் செய்யப்பட்ட ஒரு விஷயம் இது என்பது இன்று நாம் அறிவோம்.
 2. 1995 –ல் இந்தியாவில் முதன் முதலாக இணையம் (internet) மற்றும் செல்பேசிகள் அறிமுகப்படுத்தப்பட்டது. உலகிற்கே இணையம் 1991 –ல் அறிமுகமானது
 3. 1998 –ல் தரையடியே அணுகுண்டு சோதனை. இதில் அணுக்கரு சேர்ப்பு மற்றும் அணுக்கரு பிளவு இரண்டும் அடங்கும்.
 4. 1999 –ல் ATM எந்திரங்கள் இந்தியாவில் பெருவாரியாக அறிமுகப்படுத்தப்பட்டது
 5. 2000 –ல் காப்பீடு தனியார் மயமாக்கப்பட்டது
 6. 2001 முதல் இந்திய விண்வெளிக் கழகம் மற்ற நாடுகளின் துணைக்கோள்களை விண்ணில் ஏவத் தொடங்கியது
 7. 2005 –ல் இந்தியா உலகின் முதல் பத்து பொருளாதார நாடுகளில் ஒன்றானது. இந்த ஆண்டில் தொலைத் தொடர்பு கட்டணங்கள் பெரிய அளவில் குறைக்கப்பட்டது
 8. 2009 –ல் சந்திரயான் செயற்கைக் கோள் சந்திரனைச் சுற்றி வந்தது
 9. 2014 –ல் மங்கல்யான் செயற்கைக் கோள் செவ்வாய் கிரகத்தைச் சுற்றி வந்தது. இந்த இரு நிகழ்விற்கு இடையில் இந்திய விண்வெளிக் கழகம் பல செயற்கைக் கோள்களை விண்ணில் மிதக்க விட்டது. உலகின் விண்வெளி தேசங்களில் முக்கிய ஒன்றாக இந்தியா மாறியது. 2016 –ல் 96 செயற்கைக் கோள்களை ஒரு ராக்கெட் மூலம் விண்ணில் மிதக்க விட்டது
 10. 2016 –ல் இந்தியா, பழைய 500 முதல் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தது (demonitisation)
 11. 2017 –ல் பொது விற்பனை வரி அறிமுகப்படுத்தப்பட்டது (GST)

இதைத் தவிர இன்னும் பல விஷயங்கள் இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் நடந்து வந்துள்ளது. முக்கியமாகச் செல்பேசிகள் இந்தியாவில் சைனாவிற்கு அடுத்தபடியாக அதிகமாக விற்கிறது. மூன்று மாதத்திற்கு 25 மில்லியன் புதிய இணைப்புகள் (2000 –ல் கனடாவின் மக்கட்தொகை!) என்ற கணக்கில் இன்னும் வளர்ந்து வந்துள்ளது.

இன்று 15 இணைய நுழைவாயில்களுடன் உலகின் எந்த நாட்டுடனும் போட்டியிடும் அளவிற்கு இணைய இணைப்புகள் வளர்ந்துள்ளன.

இது என்ன இந்திய நியூஸ் ரீல் போல உள்ளது என்று தோன்றலாம். ஆனால் ஏதோ ஒன்று இடிக்கிறது. 1,200 மில்லியன் மக்கள் நிறைந்த தேசத்தின் சாதனைகள் இவ்வளவுதானா?

 1. நாம் பட்டியலிட்ட எதுவுமே இந்தியா உலக நாடுகளில் முதன் முறையாகச் செய்யவில்லை
 2. தனியார் துறையில் பணிபுரியும் இந்திய நிரலர்கள் உலகால், சல்லிசான நிரலர்கள் என்றே மதிக்கப்படுகின்றனர்
 3. இந்திய அரசாங்க முயற்சிகளான விண்வெளி மற்றும் அணு ஆராய்ச்சித் துறைகள் உலகின் முதல் 10 நாடுகளில் இந்தியா இருக்கும் அளவிற்கு உயர்த்தியதே தவிர, உலகின் முதன் முறையாக விஞ்ஞானத்தில் சாதிக்கும் ஒரு நாடாக மாற்ற முடியவில்லை
 4. இந்தியாவின் ஊழல் நிறைந்த அரசாங்கம் ஒன்றுதான் இந்தியாவை அளவிட உலக நாடுகள் ஒரு அளவுகோலாகப் பயன்படுத்துகின்றன
 5. இந்தியாவின் இளைஞர் சக்தி என்ற ஒரே ஒரு விஷயம்தான் இந்தியாவின் நல்முகமாக உலகிற்குத் தெரிந்தது

ஒரு புறம் இப்படியிருக்க, இன்னொரு புறம், சில இந்திய பொருளாதார விஷயங்கள் தானாகவே நிகழ்பவை. சில உதாரணங்கள்:

 1. எந்த ஒரு சேவையும் மிகவும் மலிவான விலைக்கு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்
 2. எந்த ஒரு முயற்சியும் தண்ணீரை விரயப்படுத்தக் கூடாது
 3. எந்த ஒரு எந்திரமும் பெட்ரோலை அதிகம் பயன்படுத்தக்கூடாது (இந்த ஒரு விஷயத்தில் இந்தியா சறுக்கியுள்ளது, இந்திய சாலைகளைப் பார்த்தாலே தெரியும்)
 4. எந்த ஒரு புதிய தொழில்நுட்பமும் அதிக இடத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது
 5. எந்த ஒரு முயற்சியும் காகிதத்தை வீணாக்கக் கூடாது

இந்த ஐந்து கொள்கைகள் இந்தியாவிற்கு மிகவும் முக்கியமானது. உலகின் மிக அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட பெரிய நாடு இந்தியா. 1,200 மில்லியன் இந்தியர்களுக்கு வசிக்க/பணிபுரிய இடம், தண்ணீர் மற்றும் வளங்கள்  மிகவும் அரிதானது.

முதலில் காகித விஷயத்திற்கு வருவோம். வட அமெரிக்கா காகிதத்தை வீணாக்குவதைப் போல, உலகில் எங்கும் இல்லை. காகித விரயம், மரங்களைக் கொல்லுவதற்கு ஈடானது என்பதை எல்லோரும் அறிவோம். இந்த அடிப்படைக் கொள்கையின்படி இந்தியா செய்த முயற்சிகள் இந்தியாவை என்றும் தலை நிமிர வைத்துள்ளது.

1980 -களிலிருந்து ஒரு உதாரணத்தைப் பார்ப்போம். இந்திய தேர்தல்களில் ஏறக்குறைய 600 முதல் 800 மில்லியன் வாக்காளர்கள் வாக்குகளைப் பதிவு செய்கிறார்கள். உலகின் மற்ற ஜனநாயக நாடுகளைப் போல, காகித அடிப்படையில் வாக்குகள் இந்தியாவில் ஆரம்பத்தில் பதிவு செய்யப்பட்டன. 1980 -களின் கடைசியில், இந்தியாவில் மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இவை மின்கலன்களில் செயல்படும் மிகவும் பாதுகாப்பான எந்திரம். பல நீதிமன்றங்கள் இந்திய எந்திரங்களை உலகின் மிக நவீன எந்திரம் என்று தீர்ப்பு அளித்துள்ளன. உலகில் இதைப் போன்று, யானையின் மேல், கொட்டும் மழையில், கொதிக்கும் வெயிலில், பொழியும் பனியில் சோதிக்கப்பட்ட வாக்குப்பதிவு எந்திரம் எங்கும் இல்லை.

இதை ஏனோ இந்தியர்கள் பெருமையாகச் சொல்லிக் கொள்வதே இல்லை. இன்றும், ஜனநாயகத்தின் பாதுகாப்பாளன் என்று மார் தட்டிக் கொள்ளும் அமெரிக்காவில், பல இடங்களில் காகித வாக்களிப்பு தான். கனடா, ஆஸ்த்ரேலியா, யூரோப், எல்லாம் இதே கதிதான். ”அதெப்படி இந்திய வாக்களிப்பு எந்திரங்களை இறக்குமதி செய்து பயன்படுத்துவது? நமது ஜனநாயகத்தை இந்திய நிரலர்களிடம் விட்டு விடுவதைப் போல உள்ளதே!” – இப்படி வறட்டு கெளரவம் தடுத்தாலும், இந்தியாவின் இந்தச் சாதனையை யாரும் செய்யவில்லை.     

2009 -ல் இந்திய அரசாங்கம் ஒரு முக்கியமான முயற்சியில் இறங்கியது.

 1. ஒவ்வொரு இந்தியனுக்கும் ஒரு தனித்தன்மை வாய்ந்த அடையாளம் உருவாக்க வேண்டும். இந்த அடையாளம் கருவிழி வருடல் (iris scan) மூலமாகச் செய்ய வேண்டும் என்றும் முடிவெடுத்தது. அந்நாளில், இவ்வகை வருடிகள் பல்லாயிரம் ரூபாய்களுக்கு விற்ற காலம் அது. இதுவே ஆதார் என்ற ஒரு அடையாள மையம். இந்தியாவின் டிஜிட்டல் எதிர்காலத்திற்கு ஆதார் ஒரு ஆணிவேர்
 2. ஒவ்வொரு இந்தியனின் நிதி விஷயங்கள் மற்றும் அரசாங்கம் சார்ந்த விஷயங்களை ஆதார் கொண்டு மிக எளிமையாக மற்றும் மலிவாகவும் கொண்டு சேர்க்க வேண்டும்
 3. தனியார் துறைதான் இந்திய தகவல் தொழில்நுட்பத்திற்கு ஆதாரம் என்ற பொதுக் கருத்தை அரசாங்கம் உடைத்தது. நாம் பார்த்த உதாரணங்களில் யாராவது “மிகப் பெரிய அரசாங்க தகவல் தொழில்நுட்ப வேலை பார்க்கிறாள்” என்று பெருமைப்பட்ட்தாகச் சொல்லவில்லை
 4. டிசிஎஸ், விப்ரோ, இன்ஃபோஸிஸ் நினைத்துப் பார்க்க முடியாத விஷயத்தை, இந்திய அரசாங்கம் ஆதார் ப்ராஜக்ட் மூலம் நிறைவேற்றிக் காட்டியுள்ளது. இன்று உலகில் வெறும் 5 முதல் 6 நிறுவனங்கள் நாளொன்றிற்கு 1 பில்லியன் பரிமாற்றங்கள் நிகழ்த்துகின்றன. இந்த நிறுவனங்கள் இந்த நிலையை அடைய 10 ஆண்டுகள் பிடித்தன. ஆதார் இந்த நிலையை 5.5 ஆண்டுகளில் இந்தியாவிலேயே சாதித்துக் காட்டியுள்ளது. மற்ற இணைய தளங்கள் யாவும் அமெரிக்காவில் உள்ளன
 5. இந்திய அரசாங்கம் மேற்குலகின் பலவகை குறைகளையும் இந்த முயற்சி மூலம் சரிசெய்து வெற்றியும் பெற்றுள்ளது
 6. அடிப்படை விஷயத்தை அரசாங்கம் தன்னிடம் வைத்துக் கொண்டு, வங்கிகள் மற்றும் பிற சேவைகளுக்குப் பல வகை மலிவான சேவைகளை உருவாக்க வழி செய்துள்ளது

வழக்கம் போல, மேற்குலகம், உடனே நம்பத் தயாரில்லை. ஊழல் மிகுந்த இந்தியாவில் இது ஒரு ஸ்டண்ட் என்று நினைக்கிறார்கள். பொறுத்திருந்து பார்ப்போம். எந்த ஒரு வளர்ந்த நாட்டிலும் இவ்வளவு மலிவான ஆனால் நம்பகமான ஒரு அடையாளம் மற்றும் நிதிப் புரட்சி நிகழவில்லை.  இதைத் தனியார் (இந்திய/பன்னாட்டு) நிறுவனங்களிடம் விட்டிருந்தால், தீட்டியிருப்பார்கள். இந்திய அரசாங்கம் உலகில் முதன் முறையாக, நேர்த்தியாக ஒரு பல்லடுக்கு நிதிப்புரட்சி உருவாகும் சூழலை உருவாக்கியுள்ளது. இதில் வங்கிகள் (banks) , பங்கு சந்தை (stock market) , காப்பீடு (insurance) , வருமான வரி (income tax) , விற்பனை வரி (sales tax) , அன்றாட நிதி பரிவர்த்தனைகள் (daily financial transactions) என்று எல்லாம் அடங்கும்.

இக்கட்டுரைத் தொடரில், இந்த ‘இந்திய அடுக்கைப்’ பற்றி விரிவாக மற்ற பகுதிகளில் பார்ப்போம். அதற்கு முன், ஒவ்வொரு இந்தியக் குடிமகனும், தன்னுடைய அரசாங்கத்தைத் திட்டும் முன்பு, கொஞ்சம் இதைப் பற்றிப் பெருமையும் பட்டுக் கொள்ளலாம்.

தமிழ்ப் பரிந்துரை

எல்லோருக்கும் புரிய வேண்டும் என்று சில ஆங்கிலச் சொற்களை கட்டுரையில் பயன்படுத்தியுள்ளேன். சில புதிய சொற்களுக்கு நிகரான சில தமிழ்ச் சொற்களை இங்கு பரிசீலனைக்கென முன்வைக்கிறேன்

 

ஆங்கிலச் சொல் தமிழ்ப் பரிந்துரை
Liberalization தாராளமாக்கம்
Internet இணையம்
General Sales Tax பொது விற்பனை வரி
Iris scan கருவிழி வருடல்
Banks வங்கிகள்
Stock market பங்கு சந்தை
Insurance காப்பீடு
Income tax வருமான வரி
Sales tax விற்பனை வரி
Daily financial transactions அன்றாட நிதி பரிவர்த்தனைகள்

 

https://thamizhnutpam.wordpress.com/

 

Series Navigationசெயற்கை நுண்ணறிவுச் சர்ச்சைகள் – தானோட்டிக் கார்கள் பயன்பாடு – பகுதி 4
author

ரவி நடராஜன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *