8. மகட்போக்கிய வழித் தாய் இரங்கு பத்து

This entry is part 2 of 8 in the series 10 பெப்ருவரி 2019


தன் மகள் ஒருவனைக் கண்டு காதலித்துக் களவிலே பழகி வருகின்றாள் என்பதை நற்றாயும் ,செவிலித்தாயும் அறிந்திருக்கவில்லை. ஆனால் அவள் அவனுடன் ஒருநாள் இரவுப் பொழுதில் வீட்டைவிட்டு வெளியேறிச் சென்றுவிட்டாள் என்பதறிந்து பெரிதும் வருத்தம் அடைகின்றனர். செல்வமாகத் தாங்கள் பேணி வளர்த்த தம் மகள் புதியவன் ஒருவனுடன் கொண்ட காதலால் சென்றுவிட்டாளே என இரங்கும் அவர்கள் நிலையை விளக்கும் பத்துப் பாடல்கள் இப்பகுதியில் உள்ளதால் இப்பெயர் பெற்றது.
=====================================================================================
1. மகட்போக்கிய வழித் தாய் இரங்கு பத்து
மள்ளர் கொட்டின் மஞ்ஞை ஆலும்
உய்ரநெடும் குன்றம் படுமழை தலைஇச்
சுரம்நனி இனிய ஆகுக தில்ல;
அறநெறி இதுவெனத் தெளிந்தவென்
பிறைநுதல் குறுமகள் போகிய சுரனே!
[மள்ளர்=பாலைநில மறவர்; கொட்டு=பறை, மஞ்ஞை=மயில்; ஆலும்=ஆடும்; தலைஇ=தலைப்பட்டு; சுரம்=காடு; தில்ல=இடைச்சொல்]
அவ அவனோட தன் ஊட்டை விட்டுப் போயிட்டா; ”சரி, அவ அவளுக்குச் சரின்னு தெரிஞ்சதை செஞ்சிருக்கா. நல்லா இருக்கட்டும்னு அவளோட அம்மா வாழ்த்தற மாதிரி சொல்ற பாட்டு இது.
”பிறைபோல நெத்தி இருக்கற என் பொண்ணு அவனோட போயிடறதுதான் சரின்னு தெளிவா முடிவு செஞ்சுக்கிட்டுப் போயிருக்கா. அவ போற வழியில இருக்கற மள்ளருங்க பறைய நல்லா மொழக்கினால் அந்தச் சத்தத்தைக் கேட்டு மலையில இருக்கற மயிலெல்லாம் அது இடியோட சத்தமுன்னு ஆடும்; அந்த மலையில ரொம்ப மழையும் கொட்டி அவ போற வழி இனிமையா இருக்கட்டும்”
அவ போற காட்டு வழியில சூடு எல்லாம் கொறைஞ்சு குளிர்ச்சியா இருக்கட்டும்னு அம்மா நெனக்கறா.
====================================================================================
2. மகட்போக்கிய வழித் தாய் இரங்கு பத்து
என்னும் உள்ளினள் கொல்லோ? தன்னை
நெஞ்சுணத் தேற்றிய வஞ்சினக் காளையொடு,
அழுங்கல் மூதூர் அலர்எழ.
செழும்பல் குன்றம் இறந்தஎன் மகளே?
[உள்ளினள்=நினைத்தனள்; நெஞ்சு உண=உள்ளம் ஏற்குமாறு; அழுங்கல் மூதூர்=ஆரவாரமுடைய பழைய ஊர்; தேற்றிய=தெளிவித்த; வஞ்சினம்=சூளூரை; அலர்=பழிச்சொல்; செழும்பல் குன்றம்=செழுமையான பல மலைகள்]
அவ அவனோட போன பின்னாடி ரொம்ப வேதனைப்பட்டு “அவ இப்படிப் பெரிசா துன்பம் செஞ்சுட்டாளேன்னு அவளோட அம்மா வருத்தமா சொல்ற பாட்டு இது.
“அவன் என் பொண்ணுக்கிட்ட நெறய இனிமையா பேசி உறுதியெல்லாம் சொல்லியிருப்பான். அவனோட இந்த ஊரில பழிப் பேச்செல்லாம் பேசற மாதிரி வச்சுட்டு அவ பல மலையெல்லாம் தாண்டிப் போயிட்டா. அப்படிப் போகும்போது அவளோட அம்மாவான என்னை அவ நெனச்சுப் பாத்திருப்பாளா? இல்ல நெனைக்காம தான் போனாளோ?”
அவளுக்கு ஒண்ணும் தெரியாது. அவ அவன் பேச்சை நம்பித்தான் போயிட்டான்னு அம்மா தன்னைத்தானே தேத்திக்கிறா.
========================================================================
3. மகட்போக்கிய வழித் தாய் இரங்கு பத்து
நினைத்தொறும் கலிழும் இடும்பை எய்துக!
புலிக்கோள் பிழைத்த கலைக்கோட்டு முதுகலை
மான்பிணை அணைதர, ஆண்குரல் விளிக்கும்
வெஞ்சுரம் என்மகள் உய்த்த
அம்புஅமை வல்வில் விடலை தாயே!
[கலிழும்=அழும்; இடும்பை=துன்பம்; கோள்=கொள்ளப்பெறுதல்;
கவைக்கோட்டு=பிளவு பட்ட கொம்பு; அணைதர=வந்தடையுமாறு; வம்பு=புதுமை; விளிக்கும்=அழைக்கும்; விடலை=பாலைநிலத்தாய்]
என்பொண்ணை என்கிட்டே இருந்து பிரிச்சிக்கிட்டுப் போனானே அவனைப் பெத்த தாயும் இதேமாதிரி அவளோட பொண்ணைப் பிரிஞ்சு வருத்தம் அடையணும்னு அம்மா நெனச்சுச் சொல்ற பாட்டு இது.
”புலியோடத் தாக்குதல்லேந்து ஒரு வயசான ஆண்மான் தப்பிப் பிழைச்சுட்டுது. அது தன்னோட பிணையான பெண்மானை ஒரக்கக் கொரலெடுத்துக் கூப்பிடுது. அப்படிப்பட்ட காட்டு வழியில பலமான வில் வச்சிருக்கற அவன் கூப்பிட்டுக்கிட்டுப் போயிருக்கான். அவனோட அம்மாவும் தன் மகளைப் பிரிஞ்சு இதே மாதிரி வருத்தம் அடையணும்.”
=====================================================================================4. மகட்போக்கிய வழித் தாய் இரங்கு பத்து
பல்ஊழ் நினைப்பினும் நல்லென்று ஊழ;
மீளிமுன்பின் காளை காப்ப
முடிஅகம் புகாஅக் கூந்தலள்
கடுவனும் அறியாக் காடுஇறந் தோளே.
[பல் ஊழ்=பல முறை; மீளி=யமன்; காளை=தலைவன்; முன்பின்=ஏறக்குறைய; கடுவன்=ஆண் குரங்கு; இறந்தோர்=கடந்தோர்]
அவ அவனோட போயிட்டா. அதை நெனச்சு அவ அம்மா வருத்தப்படறா. பொண்ணு எளமையா இருந்ததை நெனச்சு வருத்தமாச் சொல்ற பாட்டு இது.
”என் பொண்ணுத் தலையில முடிச்சு போடற அளவுக்குக் கூட இன்னும் முடி வளரல. குட்டையா இருக்கு. ஆண்கொரங்கே போக முடியாதக் காட்டு வழியில அவ அந்த யமன் போன்றவன் கூடப் போயிட்டா. அவ இங்க செஞ்சதெல்லாம் பலதடவை நெனச்சுப் பாக்கறேன். எப்படியோ நல்லபடியா எல்லாம் நடந்து போகட்டும்.”
=====================================================================================
5. மகட்போக்கிய வழித் தாய் இரங்கு பத்து
இதுவென் பாலை பாவை இதுவென
இதுஎன் பூவைக்கு இனியசொல் பூவை’என்று
அலமரு நோக்கின் நலம்வரு சுடர்நுதல்
காண்தொறும் காண்தொறும் கலங்க,
நீங்கின ளோஎன் பூங்க ணோளே?
[பாவை=பொம்மை; பூவை=பொம்மை; நாகணவாய்ப்புள்; அலமரு நோக்கில்-சுழல்கின்ற பார்வை]
அவள ஊட்ல காணோம்ன ஒடனே எல்லாரும் அவளத் தேடறாங்க. எல்லா எடத்துலேயும் தேடிக் காணோம்னு வந்து சொல்றாங்க. அப்ப அவளோட அம்மா சொல்ற பாட்டு இது.
”இதோ இது அவ வச்சுக்கிட்டு வெளயாடிய பொம்மை. இதோ இது அழகான நெத்தி இருக்கற அவ வளர்த்த கிளி. இதையெல்லாம் பாக்கும்போது அவநெனப்பு வந்து எனக்கு வருத்தம் வர்ற மாதிரி செஞ்சுட்டு பூப்போல கண்ணு இருக்கற அவ போயிட்டாளே!
===============================================================================
6 மகட்போக்கிய வழித் தாய் இரங்கு பத்து
நாடொறும் கலிழும் என்னினும் இடைநின்று
காடுபடு தீயில் கனலியர் மாதோ!
நல்வினை நெடுநகர் கல்லெனக் கலங்கப்
பூப்புரை உண்கண் மடவரற்
போக்கிய புணர்த்த அறன்இல் பாலே!
[கலிழும்=கலங்கும்; கனலியர்=வெந்து அழியுமாக; நெடுநகர்=மாளிகை பால்=வினை; கல்லென=ஆரவாரத்தோடே;அறனில் பாலே=அறனுணர்வே இல்லாத விதி
அவ அவனோட போயிட்டா. அவளோட அம்மா இதெல்லாம் விதியோடக் கொடுமைன்னு நெனச்சு மனம் வெதும்பிச் சொல்ற பாட்டு இது.
”நல்ல அழகா பெரிசா மாளிகை போல இருக்கற எங்க ஊட்ல இருக்கறவங்கள்ளாம் கலங்கறாங்க. பூப்போல மை பூசப்பட்ட கண்ணை உடைய எளமையான என் பொண்ணு என்னை உட்டுட்டுப் பிரிஞ்சு போற மாதிரி செஞ்ச தருமமே இல்லாத விதி காட்ல எரியற நெருப்பில மாட்டிக்கிட்டு அழிஞ்சு போகட்டும்.”
=====================================================================================
7. மகட்போக்கிய வழித் தாய் இரங்கு பத்து
நீர்நசைக்கு ஊக்கிய உயவல் யானை
இயம்புணர் தூம்பின் உயிர்க்கும் அத்தம்
சென்றனள் மன்ற,என் மகளே!
பந்தும் பாவையும் கழங்கும் எமக்கு ஒழித்தே.
[உயவல்=வலிமையற்ற; நீர்நசை=தண்ணீர் விரும்பி; ஊக்கிய=முயன்ற; அத்தம்=பாலைநில வழி; தூம்பு=நீண்ட துளையுடைய; இசைக்கருவி=வங்கியம்; உயிர்க்கும்=பெருமூச்சு விடும்; பாவை=பொம்மை; கழங்கு=அம்மானைக்காய்]
தன் பொண்ணு ஊட்டை உட்டுப் போயிட்டதுக்கு அப்பறம் அம்மா அங்க இருக்கற பந்து, பொம்மை, கழங்குக் காய் எல்லாம் பாத்துப் பாத்துப் பொலம்பற பாட்டு இது.
”அந்தக் காட்டு வழியில தண்ணித் தாகம் அதிகமானதால, யானை ஒண்ணு வங்கியம்னு சொல்ற இசைக்கருவி போல அதோடத் துதிக்கையை ஒசரத் தூக்கி சுடு மூச்சை உடும். என்பொண்ணு அவ வெளயாடின பந்தையும்,பொம்மையையும், கழங்கையும் பாக்கும்போதெல்லாம் அவ நெனவு வந்து வருந்தறமாதிரி என்ன இங்க உட்டுட்டு அந்த வழியில மனசுக்குப் புடிச்சமாதிரி போட்யிட்டாளே”
===================================================================================== 8. மகட்போக்கிய வழித் தாய் இரங்கு பத்து
செல்லிய முயலிப் பாஅய சிறகர்
வாவல் உகக்கும் மாலை,யாம் புலம்பப்
போகிய அவட்கோ நோவேன்; தேமொழித்
துணைஇலள் கலிழும் நெஞ்சின்
இணைஏர் உண்கண் இவரட்குநோ வதுவே
[செல்லிய=செல்ல; முயலி=முயன்று; பாஅய=பரவிய; சிறகர்=சிறகு; வாவல்=வவ்வால்; உகக்கும்=உயரப் பறந்து திரியும்; புலம்ப=தனிமையில் வருந்த, கலிழும்=கலங்கும்; நோவேன்=வருந்தேன்]
அவ தன் ஊட்டை உட்டு அவனோடப் போயிட்டா. அவளோடயே வெளையாடிட்டு இருந்த அவ தோழிக்குத்தான் தாங்கல. தோழி தேம்பிக்கிட்டு ஒக்காந்திருக்கா. அப்ப அம்மா சொல்ற பாட்டு இது.
”வவ்வாலெல்லாம் ஒசரப் பறந்து திரியற இந்த மாலைக் காலத்துல, என்னைத் தனியா இப்படிப் பொலமப் உட்டுட்டுப் போன அவ்ளுக்காக நான் வருந்த மாட்டேன். ஆனா இனிமையா பேசற தொணையே இல்லாம அழற கண்ணோடயே ஒக்காந்திருக்கற இவளுக்காகத்தான் நான் வருந்தறேன்.
=====================================================================================
9. மகட்போக்கிய வழித் தாய் இரங்கு பத்து
தன்அமர் ஆயமொடு நன்மண நுகர்ச்சியில்
இனிதுஆம் கொல்லோ தனக்கே பனிவரை
இனக்களிறு வழங்கும் சோலை
வயக்குறு வெள்வேல் அவள் புணர்ந்து செலவே.
[அமர்=விரும்புகிற; ஆயம்=தோழியர் கூட்டம்; நன்மணம்=திருமணம்; நுகர்ச்சி=இனப மகிழ்ச்சி; வழங்கும்=திரிந்தபடி இருக்கும்; வயக்குரு=விளங்குகின்ற]
அவ அவனோட போயிட்டா. அப்ப தோழி அம்மாகிட்ட, “அவனுக்கே அவளைக் கல்யாணம் செஞ்சு குடுத்திருக்கலாம்”னு சொல்றா. அப்ப அம்மா சொல்ற பாட்டு இது.
”அவ போற வழியில ஆண்யானையெல்லாம் திரிஞ்சுக்கிட்டு இருக்கும், மலைகளும் சோலைகளும் இருக்கும். அந்த வழியில அவ நல்ல வேல் வச்சிருக்கற அவனோட போறா. அப்படிப் போறது இங்க எல்லாத் தோழிகளும் கூடி ஒண்ணாயிருந்து செஞ்சு வைக்கிற கல்யாணத்தைவிட இனிப்பா இருக்கும்னு அவ நெனச்சிருக்கா”
யானையெல்லாம் இருந்தாலும் அவன் வேல் வச்சிருக்கறதால ஆபத்தில்லன்னு ஆறுதல் பட்டுத் தன்னைத் தேத்திக்கறா.
=====================================================================================10. மகட்போக்கிய வழித் தாய் இரங்கு பத்து
அத்த நீள்இடை அவனொடு போகிய
முத்துஏர் வெண்பல் முகிழ்நகை மடவரல்
தாயர் என்னும் பெயரே வல்லாறு
எடுத்தேன் மன்ற, யானே;
கொடுத்தோர் மன்ற,அவள் ஆயத்தோரே.
[அத்தம்=பாலைவழி; நீள்இடை=நெடிய இடைவழியைக் கொண்டது; முகில் நகை=மலர்ந்த சிரிப்பு; வல்லாறு=இயன்றவரை; மடவரல்=தலைவி]
அவ அவனோட போயிட்டா. அவள வளத்த செவிலித் தாய்க்குத்தான் தாங்க முடியல. சாப்பிடாம பொலம்பிக்கிட்டுக் கெடக்கா. அப்ப சில பேரு வந்து அவளுக்குத் தேறுதல் சொல்றாங்க. அப்ப அவ சொல்ற பாட்டு இது.
”என் பொண்ணு முத்துப் போல பல்லும் மொட்டுப் போல சிரிப்பும் இருக்கறவ. அவ காட்டு வழியில அவனோட போயிட்டா. நான் அவள எடுத்து வளத்துத் தாயின்னு பேருதான்வச்சிக்கிட்டு இருக்கேன். ஆனா அவனோட போயி கல்யாணம் செஞ்சுக்கிட்டு நல்லா இருன்னு சொல்லி அனுப்பியது அவளோடத் தோழிங்கதான்.”
நான் அவளுக்குக் கல்யாணம் செஞ்சு பாக்கலயேன்னு அவ வருந்தறது பாட்டுல தெரியுது.
==========================================நிறைவு===================================
===

Series Navigationகவிஞர் பிறைசூடன்அண்மைக்கால நீதிமன்ற தீர்ப்புக்களும் அவை சொல்லும் கனமான செய்திகளும்.
author

வளவ.துரையன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *