-எஸ்ஸார்சி
ஒரு எக்செல் சூபர் என் வசம். அதனை வைத்துக்கொண்டு முடிந்த வரைக்கும் இந்தப் பெருங்களத்தூர் ஊரைச்சுற்றிச் சுற்றி வருகிறேன். ஒரு பழைய வண்டி. செகண்ட் ஹேண்டும் இல்லை தேடு ஹேண்டுதான்.
அப்படித்தான் என்னால் வாங்கவும் முடிந்தது. நாற்பதாயிரம் கிலோமீட்டர் ஓடிமுடித்தவண்டியை நாலாயிரம் கிலோமீட்டரே ஒடியிருப்பதாக ச்சொன்னார்கள். பேசத்தெரிந்தவர்களின் உலகம்தானே இது.சாமர்த்தியமாகத்தான் என் தலையில் அதனை க்கட்டிவிட்டார்கள்.
என் ஆபிசுக்கு முன்னால் நிற்கும் இரும்பு கேட்டில் ஒரு பக்கமாக் சாய்ந்து நின்றுகொண்டு வேண்டா வெறுப்பாக எனக்கு ஒவ்வொருமுறை வ்வணக்கம் சொல்லும் செக்யூரிடி நாயர்தான் நான் அந்த வண்டிவாங்கி ஒரு மாதம் கழித்து ‘சார் மைலேஜ் நாலாயிரம் னு சொன்னீங்களே அது நாற்பதாயிரம் கிலோமீட்டர்ல ஓடியிருக்கு. நான் வண்டி ஸ்பீடாமீட்டரைக் கவனிச்சிப் பாத்தேனே. இப்புறமா வண்டியில என்ன இருக்கு வண்டி சீவன் முச்ச்சூடும் பூட்டுதுசார்’என்றார்.
அந்த நாயர் இது விஷயம் என்னிடம் சொல்லாமல் இருந்திருக்கலாம். அப்படி எல்லாம் மனிதமனம்தான் சும்மா இருந்துவிடுமா, பிறகு எதற்கு அந்த ராகு கேது சனி செவ்வாய் என்று சூரிய கிரகத்தைச் சுற்றி சுற்றி வருகிறார்கள்.சூரியன் ஒரு கிரகம் இல்லைதான்.அந்தசமாச்சாரம் ஒரு தனிக்கதை.
ஹெல்மெட் அது ஒடுக்காகவும் ஓட்டையாகவும் ஐஎஸ்ஐ முத்திரை அழிந்தமாதிரிக்கு ஒன்று என்னிடம் உண்டு.அதனைத்தலையில் மாட்டிக்கொள்வதா வேண்டாமா என்பதற்கு விடை தெரியவில்லை.ஹெல்மெட் போட்டுக்கொண்டால் பாதி கண்பார்வையும் பாதி காதும் போய்விடுவதாக ஒரு அபிப்ராயம். சிலராவது இதனை ஒத்துக்கொள்ளலாம்.
ஹைகோர்ட்டுக்காரர்கள் உத்தரவு போட்டு விட,ஹெல்மெட்டின் அவசியம் குறித்து மைக் வைத்துக்கொண்டு போலிசுகாரர்கள் அண்ணாசாலை தொடங்கி எவ்வளவோ சொல்லிசொல்லிப்பார்த்துவிட்டார்கள்.டூவீலர் ஓட்டிகளில் நூற்றுக்கு ஐம்பது சதமானம் எங்கே ஹெல்மெட் அணிகிறார்கள்.
குடிப்பழக்கம் வீட்டைக்கெடுக்கும் அது நாட்டைக்கெடுக்கும் என்று கொட்டை கொட்டையாய் எழுதிவைத்துவிட்டு சப்பை சப்பை பாட்டில்களாாய் வாங்கி வைத்துக்கொண்டு குடிக்கவில்லையா,புகைப்பழக்கம் உயிர்கொல்லி புகையிலைப்பழக்கம் புற்று நோயுக்கு ஆதாரம் என்றெல்லாம் உரக்க சொல்லிக்கொண்டு அது அதுகளைப்பழகுகிறமாதிரி தலைக்கவசம் உயிர்க்கவசம் என்று டூவீலரில் ஒரு இடத்தில் மஞ்சள் நிறத்தில் எழுதிவைத்துவிட்டு ஹெல்மெட் போடாமலேயே வண்டியை ஓட்டிக்கொண்டுபோகலாம். இப்படி யோசனை உண்டு. இது வேலைக்கு ஆகுமா என்றுதான் தெரியவில்லை.
டூ வீலரில் போகும் போதெல்லாம் சாலை ஓரத்தில் நின்றுகொண்டிருப்பவர்களில் யாரேனும் ‘சார்’ என்று கையை நீட்டிக்கொண்டு லிஃப்ட் கேட்டு வருவதுண்டு.இப்போதுதானே தலைக்கவசப் பிரச்சனைக்கட்டாயம் என்று வந்து இருக்கிறது.பின்னால் அமர்ந்து இருப்பவருக்கும் அது கட்டாயம்.அந்த விஷயம் மறந்துபோய் லிஃப்ட் கேட்டு வந்த ஒருவரை ஏற்றிக்கொண்டு தாம்பரம் கடைத்தெருவுக்குப்போய் வழியில் குளம் நிறுத்தம் அருகே டிராபிக் போலிசிடம் நான் மாட்டிக்கொண்டேன்.பெரிய அவஸ்தை..நூறு ரூபாய் அபராதம் கொடுத்துவிட்டு விடுதலை ஆனேன்.இனி யாரையும் வண்டியில் ஏற்றவே கூடாதென முடிவுக்கு வந்தேன்.’தாட்சண்யம் தன நாசம்’ என்கிற பழமொழி என்னளவில் சரித்தான்.
அபராத பணத்தை நான் தானே கட்டினேன்.பின்னால் உட்கார்ந்து கொண்டு வந்தவர் அவர் பாட்டுக்கு இறங்கிப்போய்விட்டார்.அவர்தான் அந்த அபராதம் கட்டுவாரா என்ன?’வண்டி யாருது அவர எதுக்கு ப்பாக்குறீீங்க? என்று நியாயம் சொன்னார் போலிசுகாரர்.
இனி யாரையும் பின்னால் உட்காரவைத்துக்கொண்டு வண்டி ஓட்டுவதில்லை என முடிவு செய்தேன்.இது ஒரு சரியான முடிவுதான் என்று எனக்கும்யோசனை.சாலையில் நின்றுகொண்டு யாரேனும் லிஃப்டுக்காக கையை அசைத்தால் கண்டுகொள்ளாமல்தான் ஒரு தெனாவட்டாக சென்றுவந்தேன்.இது முறைதானா என்றும் என்னையே கேட்டுக்கொள்வேன்
.நாம் யாரையேனும் பின்னால் உட்காரவைத்துக்கொண்டுபோக எதிரே வருபவன் இல்லை பின்னால் வருபவன் நம் வண்டி மீது மோதி தருமத்துக்கு உட்கார்ந்துவந்தவனுக்கு ஏதேனும் ஒன்றுக்கொன்று ஆகிவிட்டால் என்ன செய்வது அதற்கு யார் அய்யா பொறுப்பு.இந்த வம்பே வேண்டாம் என யாரையும் நான் பின்னால் பில்லியனில் உட்காரவைத்துக்கொண்டு போவது இல்லைதான்.
இப்படி குதிரைக்கு குர்ரம் என்றால் ஆனைக்கு அர்ரம் என்று இருக்கமுடியுமா.எல்லாம் கொஞ்சம் பார்த்து பார்த்து யோசித்துப்பின்தான் முடிவு செய்யவும் வேணும் என்று நண்பர்கள் அறிவுரை சொன்னார்கள்.அதெல்லாம் எங்கே எனக்கு உரைத்தது.நான் பாட்டுக்கு என் முடிவிலே இருந்தேன்.காலம் அப்படியே போய்க்கொண்டிருந்தது.
ஒரு நாள் என் மனைவி கடைத்தெருவுக்குப்போகவேண்டும் என்றாள்.கடைத்தெருவில் வாங்கியாக வேண்டும் என்று சாமான்கள் லிஸ்ட் ஒன்றை எழுதித்தயாராக வைத்திருந்தாள். மாதம் இரண்டு முறை இப்படிப்போவதுண்டு. ‘சரி போகலாம்’ என்றேன்.அவள் என் டூவீலரின் பின் இருக்கையில் வழக்கம் போல் உட்கார்ந்து கொண்டாள்.தார்ச்சலையில் இரண்டு கிலோமீட்டர் போயிருப்போம்.அவ்வளவேதான்.பெங்களூர் பைபாசுக்குக்கீழாக ஜேசிபி ஒன்று சாலையில் இப்படியும் அப்படியும் அலம்பல் செய்துகொண்டிருந்தது. எனக்கு முன்பாகசென்ற வண்டிகள் சற்று மெதுவாகச்செல்லத்தொடங்கின.
நானும் வண்டியை உருட்ட ஆரம்பித்தேன்.திடீரென்று பின்னால் வந்தஒரு பெரிய டூவீலர் என்வண்டியின் பின்பக்கமாக இடித்தது.என் மனைவி வண்டியில் அமர்ந்திருந்தவள் என் வண்டிக்கு முன்பாக தார்ச்சாலையில் தூக்கி வீசப்பட்டுக் குப்புறக்கிடந்தாள்.என் வண்டி அசைய மறுத்தது.பின் சக்கரம் சுழல முடியாமல் மட்கார்டு நசுங்கி சக்கரத்தை ப்பிடித்துக்கொண்டுவிட்டது.
நான் அப்படியே வண்டியை கெடாசி விட்டு மனைவியைப்போய்ப்பார்த்தேன்.மனைவியின் தலை தப்பிவிட்டது.அதுதானே யாருக்கும் முதல் அச்சம்.ஹெல்மெட் ஜனன சூத்திரதொடக்கமும் அதுதானே.அவளுக்குக்குஇடது காலில் அடி. சிராய்ப்பு. தூக்கி விட்டேன்.இன்னும் இருவர் ஒத்தாசைக்கு வந்தனர். ஒருவர் தண்ணீர் கொடுத்து ‘குடிங்கம்மா ஒண்ணுமில்ல’ என்றார்.ஒரு ஆட்டோ பித்துக்கொண்டு அருகிலே இருக்கும் ஒரு டாக்டரைப்பார்க்கக்கிளம்பினேன்.என் மீது இடித்துவிட்ட அந்த பெரிய டூவீலர்காரன் எங்கே போனான் தேடினேன்.அந்த ஆசாமியைக்காணவில்லை.அந்த ப்பெரியவண்டியையும் காணோம்.
‘அவன் இந்நேரம் சிட்டா பறந்து இருப்பான்’ என்றனர் அருகிருந்தோர்.’அவன உட்டிருக்கக்கூடாது ஆளுக்கு என்னா ஆச்சின்னு அவன் பாத்தானா இல்ல வண்டி க்கு என்ன ஆச்சின்னு பாத்தானா அவன் பாட்டுக்கு போயிட்டான்’ என்றார் எனக்கு உதவிய ஒருவர்.இந்த விவகாரமாய்
என் மனைவிக்கு மருத்துவச்செலவு ரெண்டாயிரமும், டூவீலர் வண்டியை சரிசெய்ய ஆயிரமும் ஆனது.
என் வண்டியைப்பார்ப்பவர்களெப்போது கேட்டாலும் ஒரு ரெண்டாயிரம் கொடுப்பாங்க அதுக்கு மேலே போவாது என்றுதான் சொல்கிறார்கள்.ஆயிரம் ரெண்டாயிரம் என்று எத்தனையோ செலவாகிவிட்டது.
‘இனி கண்டிஷனா பின்னால யாரையும் ஏத்தாதிங்க,ஏதாவது ஒண்ணு ஆயிடுச்சின்னா யாரு பதில் சொல்லுறது’ மனைவி எனக்கு உத்தரவு போட்டிருந்தாள்.இப்போதெல்லாம் யார் கையை நீட்டி லிஃப்ட் கிஃப்ட் என்றால் நான் பாட்டுக்கு சட்டைசெய்யாமல் போய்விடுவேன்.இது எனது சுபாவம் இல்லை.வீம்புக்குத்தான் அப்படிப்போகிறேன் என்பது என்மட்டில் தெரியும்.லிஃப்ட் கேட்ட ஆசாமிகளென்னை சாபம் விடவும்கூடும்.வேறு என்ன செய்வது.கையில் ஒருஹெல்மட்டை வாங்கி வைத்துக்கொண்டா நம்மை ‘லிஃப்ட்’ கேட்பார்கள்.அந்தப்படிக்கு பவுசு இருந்தால் ஏன் இப்படி எல்லாம் லிஃப்ட் கேட்டுக்கொண்டு சாலையில் நிற்கப்போகிறார்கள்.
வயதானவர்கள் நடக்க முடியாமல் சாலையில் ஓரமாக நிற்கிறார்கள்.அவர்களைப்பார்த்தமாத்திரத்தில் அவர்களின் முகபாவனை ‘கொஞ்ச்ம் ஏத்திகிட்டுபோய்விடுங்க சார்’ என்பதாகப்படுகிறது.மனம் குழைந்து போகிறது.மனத்தைக்கல்லாக்கிக்கொண்டு நாம் விர்ரென்று விரைத்துக்கொண்டு போகவேண்டும்.அவர்களைக்கண்களால் பார்த்துவிட்டு நமக்கென்ன என்று போய்விடுவது அவ்வளவு லேசான விஷயமும் இல்லை.
பள்ளிக்கூடம் போகும் பிள்ளைகள் சார் சார் என்று பின்னால் ஓடிவருவதும் உண்டு.அவர்களை ஏற்றிக்கொண்டு செல்வதா இல்லையா அது ஒரு விவாத ப்பொருள்தான். குழந்தைகளை ஏற்றிக்கொண்டு போய் அவர்களுக்கு ஒன்றும் ஆகாமல் அவர்கள் சொல்லும் இடத்திற்கு கொண்டுபோய்விட்டு விட்டல் பிரச்சனை இல்லை.ஒரு சின்ன கீறலே ஏற்பட்டுவிட்டாலும் கஷ்டம்தான்.நம் வேலையை பார்த்துக்கொண்டு நாம் போய் இருந்தால் இந்த சங்கடம் எல்லாம் ஏன் என்று சில சமயம் தோன்றிவிடுகிறது.
‘அவசரம் அக்கறைக்கு உதவலாம் தப்பு இல்ல’ என் மனைவி ஒரு நாள்ஆலோசனை தந்தாள்.’நம்பள ஒத்தன் இடிச்சுட்டு போனான். அவன் பாட்டுக்கு போயிட்டான். ஆனா ரோட்டுல போற சனம் நமக்கு ஒதவுனாங்கதானே’
நான் ஒன்றும் பதில் சொல்லவில்லை.அவள் சொல்வது சரிதான்.ஆனாலும் என் மனசுக்கு இன்னும் சரியாக வரவில்லை. ஒரு நாள் ரேஷன் கடைக்குப்போய் பச்சரிசி அரிசி வாங்கிக்கொண்டு என் வீட்டுக்கு மூணாவது வீட்டுக்காரர் ஓய்வு பெற்ற ஆசிரியர் தள்ளாடி தள்ளாடிசாலையில் போய்க்கொண்டிருந்தார்.அவரை வண்டியின் பின்னால் அமரச்சொல்லி அழைத்துச்செல்லலாம். பாவம் வயதானவர்.
லேசாக வண்டியை அவர் அருகில் என் வண்டியை நிறுத்தி ‘சார் உட்காருங்க போவுலாம்’ என்றேன்.
‘நான் யார் வண்டியிலயும் ஏறி சவாரி போறது இல்லே’ சட்டென்று பதில் சொன்னார்.
‘இல்ல சார் கையில செம வச்சிருக்கீங்க. அதான் நான் சொல்றேன். சும்மா உட்காருங்க போவுலாம்’
‘இது ஒரு செமயா இன்னும் ஒரு பத்து கிலோகூடம் தூக்குவேன். ரேஷன் கடைகாரன் குடுக்கல’
இவரை எல்லாம் ஏன் ஏற்றிக்கொண்டு செல்லவேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன்.
‘அப்ப நீங்க வண்டியில வல்ல’
‘ஆமாம் சாரு .நீங்க போவுலாம்’
குடியிருக்கும் நகருக்கு மையமாக ஒரு பிள்ளையார் கோவில்.அந்தகோவிலுக்கு ஒரு ஐயரை ஏற்பாடு செய்திருக்கிரார்கள்.அவர்தான் அந்த சக்தி கணபதிக்கு பூஜை செய்கிறவர்.இதுவரைக்கும் நான்கு ஐயருக்கு மேல் அந்த வேலைக்குவந்துவந்து பார்த்து இருக்கிறேன்.எல்லோருக்கும் வயது எழுபதுக்கு மேலாகத்தான்.எங்கோ நல்ல வேலை பார்த்துவிட்டு கடைசிகாலத்துக்குப்பிள்ளையாரிடம் புண்ணியம் தேட வருகிறார்கள்.அதுசரியும்தான். இந்தப்படிக்கு விழித்துக்கொண்டு உஷாராய்பென்ஷன் வாங்கும்ஆசாமிகளுக்கு இந்தப் பிள்ளையார் வழிகாட்டுகிறார்..
.சாமி பிள்ளையார்கோவிலுக்குத்தானே போவுறீங்க,பின்னால உக்காந்துகுங்க,நானு கொண்டுபோய் விட்டுடுறேன்’
என் வண்டியை அந்த ஐயர் அருகே கொண்டுபோய் நிறுத்தினேன்.
அவர் சன்னமாக சிரித்தார்.எதுவும் பேசவில்லை.
‘என்ன சாமி யோசனை’
‘நான் ஸ்நானம் பண்ணிட்டுமடியா போயிண்டு இருக்கேன். வண்டியில உக்காந்தா விழுப்பு ஆயிடும்’
மெதுவாகத்தான் சொன்னார்.
‘உங்களால முடியாதாச்சே.கொஞ்சம் ஒத்தாசை பண்ணுவோம்னுதான்’
‘நான் கோவிலுக்கு போறவன் நீங்க பாட்டுக்கு உங்க வேலயப்பாத்துகிட்டு போங்க .’
அவர் பாட்டுக்கு த்தன் வழியில் போய்க்கொண்டிருந்தார்.இது ஒன்றும் சரிப்பட்டு வராது என முடிவுக்கு வந்தேன்.அவர் சொல்வதிலும் ஒரு நியாயம் இருக்கலாம் என்று தோன்றியது.
இனி யாரையும் கேட்கக்கூடாது.மனதை கல்லாக்கிக்கொண்டேன்.யாருக்கும் உதவவும்முடியாது என்று முடிவுக்கு வந்துவிட்டேன்.நாமுண்டு நம் வேலை உண்டு என்று இருப்பதே சரி, சொல்லிக்கொண்டேன்.
இந்த முடிவும் சில தினங்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடிந்தது.ஒரு நாள் வண்டியை எடுத்துக்கொண்டு அருகிருக்கும் முடிச்சூர் செல்ல பயணப்பட்டேன்.முடிச்சூரில் வாழைக்காய்கள் நன்றாக கிடைப்பதாக என்தீர்மானம். மறு நாள் அமாவாசை என்பதை என் பெரியஅண்ணன் போன் செய்து சொல்லியிருந்தார். வழைக்காய் சமைத்தால்தான் நீத்தார்கள் நிறைவடைவார்கள் பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். உண்மையோ அது பொய்யோ, அதுகள் என்னோடு இருக்கட்டும்.நீங்கள் யாராவது முடிச்சூர் போய் வாழைக்காய்கள் எப்படி என்றெல்லாம் தீவிரமாகஆராயவேண்டாம்.’அங்க மட்டும் என்ன கிழிக்கிறது.எல்லாம் ஒண்ணுதான்’ அந்த வாழைக்காய்பற்றி என்மனைவி சொல்லியிருக்கிறாள்.
‘சார் அந்த செல வரைக்கும் வ்ரேன்’
ஒரு பெரியவர் என்னை அழைத்தார்,நான் இதுவரைக்கும் நான் மட்டுமே அழைத்து வண்டியில் ஏறச்சொல்லி இருக்கிறேன் இதோ நிற்கும் பெரியவர் கொஞ்சம் முடியாதவர்தான். வண்டியில் ஏற்றிக்கொண்டு போகலாம்.முடிவு செய்தேன். எது செய்தாலும் அதனில் ஒரு அர்த்தம் இருக்கவேண்டுமென்று எந்தை எப்போதோ சொன்னது நினைவுக்கு வந்துபோனது.
‘பெரியவரு எங்க போவுணும்’
‘மனோக டாக்டருண்ட போவுணும்’
‘என்ன உடம்புக்கு’
‘ஒரே மஷக்கம் அதான்’
அது போதாதா வேறு என்ன வேண்டும் நினைத்துக்கொண்டேன்.இந்தக் கலியுகத்தில் முப்பது ரூபாயுக்கு கன்சல்டேஷன் பணி முடித்து சாம்பிள் மருந்துகள் சில இலவசமாகத்தரும் ஒரு டாகடர்தான் இந்த மனோகரன்..அவர் எம் எஸ் படித்த பெரிய டாக்டர்.ஒரு கோடி ரூபாய் டோனேஷனாகக்கொடுத்தால்தான் இந்தப் பி ஜி மெடிகல் படிப்பிலெல்லாம் சேரமுடியும் என்று விபரம் தெரிந்தவர்கள் சொல்லக்கேட்டிருக்கிறேன்.பொய்யில்லை உண்மையேதானாம்.
முப்பதே ரூபாயுக்கு கன்சல்டிங்க் பீஸ் வாங்கும். அந்த டாக்டர் மனோ பல்லாண்டு வாழவேண்டும். அது இருக்கட்டும்.
‘வண்டியில உக்காந்துகுங்க’
‘கொஞ்சம் மோட்டாங்காலா பாத்து நிறுத்துனா நல்லது’
பெரியவர் யோசனை சொன்னார். பெரியவர் குள்ளம்தான். ஒரு மேடான இடம் பார்த்து வண்டியை நிறுத்தினேன். பெரியவர் அழகாக வண்டியில் ஏறி அமர்ந்துகொண்டார்.
‘ஒரு பத்து ரூவா இருக்குமா சாரு என்னண்ட இருவதுதான் இருக்குது’
வேகமாக வேண்டுகோள் வைத்தார்.
‘சரி தருகிறேன்’
‘அப்ப சரி சாரு. அந்த பத்து ரூவா இல்லாகாட்டி அங்க போய் என்னா நா பண்றது’
அம்பேதகர் சிலைக்கு சற்று முன்பாக அந்த மனோவின் மருத்துவமனை இருந்தது. அந்த சிலை வருவதற்கு முன்பாகவே,
‘வண்டிய நிப்பாட்டுங்க சாரு நானு இறங்கிகறன்’என்றார்.
‘அந்த அம்பேதகர் செல வரட்டுமே’
‘இல்ல சாரு.ஒரு அவசரம்’
ஏதும் சிறுநீர் கழிப்பரற்காக அவர் கேட்டும் இருக்கலாம் என்று நினைத்து வண்டியை நிறுத்தினேன்.
‘இந்தாங்க நீங்க கேட்ட ஒரு பத்து ரூவா’ அவரிடம் ஒப்படைத்தேன்.
‘உங்களுக்கு அவசரம்னீங்க அத மொதல்ல முடிங்க’
‘நீங்க போங்க , நானு போயிக்கிறேன். தேஅந்த ஆசுபத்திரி நாலு தாப்ப்டி இருக்குமா. இது ஒரு மலை இல்ல சாரு’
அவர் இயற்கை அழைப்புக்கு ஒன்றும் போகவேயில்லை.எதிரே இருந்த கட்டைச்சுவரைத்தாண்டி நடக்க ஆரம்பித்தார்.
‘பெரியவரே எங்க போறீங்க’ நான் குரல் கொடுத்தேன்.
அவர் பதில் ஏதும் சொல்லவில்லை.
அவரைவிடக்கூடாது என்று வண்டியை வளைத்துக்கொண்டுபோய் எதிரே இருந்த கட்டைச்சுவருக்கு அந்தப்புறம் போய் நிறுத்தினேன்.அங்கே
கூரைக்கொட்டகை ஒன்றில் டாஸ்மாக் சிறியகடை திறந்து ஜகஜோதியாக வியாபாரம் நடந்துகொண்டிருந்தது.மொச்சை சுண்டல் மறுவள்ளி வருகல் ஆந்திரா ஊறுகாய் பாக்கெட்,மினரல் வாட்டர் பவுச்சுகள் வியாபாரம் செய்தபடி ஒரு பாட்டி இருகாலையும் நீட்டிப்போட்டுக்கொண்டு அமர்ந்திருந்தாள்
பெரியவர் என்னைப்பார்த்தார். நானும் அவரைப்பார்த்தேன்.
‘ இதுல ஒண்ணும் தப்பு இல்லயே இங்கயும் மருந்துதான் வாங்கப்போறன்.. நீங்க போயிட்டுவருலாம்’ எனக்கு சமாதானம் சொல்லிவிட்டு அவர் தன்வேலைக்கு ர் சென்றுவிட்டார்.
நான் என் டூவீலரைத் தள்ளிக்கொண்டு புறப்பட்டேன்.இன்னும் கொஞ்ச நாட்களுக்கு என் வண்டியில் நெஞ்சைப் புடைத்துக்கொண்டு மட்டுமே சவாரி செய்வேன்.யாரையும் சட்டை செய்வதாக இப்போதைக்கு உத்தேசம் இல்லை.
———————–
- 2019 பிப்ரவரி 22 தேதி ஜப்பான் கழுகு என அழைக்கப்படும் ஹயபூஸா -2 “ரியூகு” முரண்கோளில் இறங்கியுள்ளது
- 10. மறு தரவுப் பத்து
- ஒண்ணும் தப்பில்ல
- கவிதையும் வாசிப்பும் ‘ரமேஷ் பிரேதனி’ன்‘காந்தியைக்கொன்றதுதவறுதான்என்ற கவிதையை முன்வைத்து
- கவிதையும் வாசிப்பும் கவிஞர் சொர்ணபாரதி (கல்வெட்டு பேருகிறது ஆசிரியர் முனியாண்டி)யின் ஒரு கவிதையை முன்வைத்து
- ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
- துணைவியின் இறுதிப் பயணம் – 14
- இந்தியாவில் படிப்பறிவின்மையின் வேர்கள் -மறு திட்டம்
- செயற்கை நுண்ணறிவுச் சர்ச்சைகள் – விடியோ பயன்பாடு – பகுதி 7