மயக்கமா இல்லை தயக்கமா

This entry is part 3 of 8 in the series 3 மார்ச் 2019

– எஸ்ஸார்சி

பிரிட்டீஷ்காரர்கள் நமக்கு விடுதலையை 1947ஆகஸ்டு 15 லே தந்தார்கள்.அல்லது நமது நாட்டு விடுதலையை நாமேபோராடிப் பெற்றோம் ஆனால் இந்திய .காவல் துறைமற்றும் சிறை நிர்வாக ச்சட்டங்களில் மாத்திரம்  சொல்லிக்கொள்ளும்படியாக எந்தவித மாற்றமும் இன்னமும் கொண்டுவரப்படவில்லை. அதுஏன்?

.மாறி மாறி நாட்டை  இந்த தேசத்தை ஆள்பவர்களுக்கு இதுபற்றிய அக்கரை வரவேண்டிய நியாயம் எங்கே இருக்கிறது?மாநிலங்களிலே இடது சாரிகள்அல்லது பிறர் அவ்வப்போதுஎங்கேனும் வந்துபோனாலும் இது பற்றி அலட்டிக்கொள்வதால் அவர்களுக்கு ச்சுய லாபம் ஒன்றும் விளைந்துவிடாது.

மாற்றம் கோரி மீறிக்கலகம் செய்பவர்கள் தெறிகிறார்களா இருக்கவே இருக்கிறது ஆயிர்ம் கிடுக்குப்பிடிகள்சட்டங்கள்.ஏதேனும் ஒன்றில் கொக்கி போட்டால் அவர்களின்கதை அவ்வளவுதான்.

இந்த நாட்டு மக்களுக்கு பகவத்கீதை அருளிய கிருஷ்ணன் சிறைக்கூடத்தில் பிறந்தவன்.படைப்புக்கடவுள் நான்முகன் பிரணவ ச்சொல்லுக்கு ப்பொருள் மறந்துபோனதால்  சிறையில் அடைக்கப்பட்டு வெளிவந்தவன்.இந்த மண்ணின் சீதையை இலங்கை ராவணன் சிறைபிடித்து அசோகவனத்தில் வைக்கவில்லையா? பாண்டவர்களின் பாஞ்சாலி துகிலுரியப்பட்டதும் அந்தச்சகுனியின் சகோதரர்கள் துரியோதனனால் சிறைவைக்கப்பட்டதும் இங்கேதான் நிகழ்ந்தது.இவை வெறும் கதைகள் என்போமா?

நான் அண்ணாமலைப்பல்கலைகழகத்தில் படித்துக்கொண்டிருந்த போது(1970-1974 ஒரு நாள் மாலை )கீழ ரதவீதியில் நடந்துகொண்டிருந்தேன். ஒரு மணி பர்ஸ் ஒன்று கீழே வீழ்ந்து கிடப்பதைக்கண்ணுற்றேன்.அது கனமாகத்தான் இருந்தது. அதனைக்காவல் நிலையத்திற்கு எடுத்துச்சென்று ஒப்படைத்தேன்.முதல் கேள்வியே இதனுள் எவ்வளவு இருந்தது நீ எவ்வளவு எடுத்துக்கொண்டாய் என்பதே. ஆடிப்போனேன் நல்லபடியாக .வீட்டுக்குத்திரும்பி வந்தால் போதும் என உண்ர்ந்தேன்.

அதே நகரில் காவல் நிலையத்தில் தகவல் பலகை ஒன்று பளிச்சென்று வைத்திருந்தார்கள். அதனில் அவ்வூரில் அந்தஆண்டு நடந்த குற்றங்களின் வகை. அவைகளில் கண்டுபிடிக்கப்பட்டவை இன்னும் கண்டுபிடிக்கப்படவேண்டியவை என ஒரு பட்டியல் .அதனை சாலையில் நின்று படித்துக்கொண்டிருந்தேன்.அவ்வளவுதான்.ஒரு காவலர் உள்ளே அழைத்தார்.’எலே உள்ள வா நீ நில்லு அப்படியே இங்கிருந்து  பாரு ரோட்டுல போறவன் யாராவது ஒருத்தன் இந்த போர்டை பாக்குறானா இல்லை படிக்குறானா? இல்லையே  நீயேன் படிச்சே அதுக்கு என்ன காரணம்? என்னை விரட்டினார்.  ஏதோ ஆர்வம் ஆக தெரியாமல் படித்துவிட்டேன். பதில் சொன்னேன். துருவித் துருவி என்னை விசாரித்தார். நான் அப்போது வடக்கு வீதி காந்தி அமைதி நிலையத்தோடு தொடர்பு உடையவன் என்பதையும்அவரிடம் சொன்னேன்..’இண்ணையோட இந்த மாதிரி வேலயெல்லாம் வச்சிக்காத ஓடு.’ என்றார் ஓடி வந்துவிட்டேன்.

டாக்டர்.கலீல் சிஸ்டி என்கிற பாகிஸ்தானியர். கராச்சி பல்கலைக்கழகத்து மைக்ரோ பயாலஜி பேராசிரியர் தன் தாயோடு தம்பியையும் சொந்தங்களையும்பார்த்துப்போக ஒருமுறை இந்தியாவில் உள்ள அஜ்மீருக்கு வந்துள்ளார். அவர் வந்த அன்று அவரின் உறவினர் வசித்த தெருவில் அவர் வீட்டுக்குப்பக்கத்துவீட்டில் ஏதோ ஒருகுடும்பச் சண்டை.அதனில் ஒருமனித இறப்பும் நேந்துவிட்டது.. அன்று அஜ்மீருக்கு வந்த பேராசிரியர் சிஸ்டியை  போலிசு விசாரணைக்காக அழைத்துச்சென்றது. விசாரணை க்கைதி என சிறையிலிட்டது.ஆயுள் தண்டனை பெற்றார். பேராசிரியர் ஒரு இருபது ஆண்டுகள் போராடினார்.i p c 302 &307 லே புக் செய்யப்பட பேராசிரியர் ஓயாமல் போராடி உச்ச நீதிமன்றம்வரை சென்றார். அவர் நிரபராதி என்பதை உலகுக்குஉச்ச நீதிமன்றம் அறிவித்தது..அவர் ஒரு பெருங்கவிஞர் என்பது ஒரு சுவாரசியமான விஷயம்.சிறைக்கூடத்தில் இருபது ஆண்டுகள் கவிதைகள் எழுதியுள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் கடலூர் அருகே இரு காவலர்கள் பேசிக்கொண்டு போவதைக்கேட்டேன்.

‘’ நம்ப ஊர்ல கஞ்சா பொழங்குறதா மேல் இடத்துக்கு த்தகவல் போயிருக்கு. ஆக நாம  நாலு கேசு போட்டே போவுணும்னு அவசரமா உத்தரவு.தலமுடியில எண்ண தடவாம காஞ்சிபோயி அழுக்கு சட்டை வேட்டியோட பஸ் ஸ்டாண்டுல சுத்தி சுத்தி வர ஒரு நாலு பசங்கள புடிச்சி அவுனுவ சட்டைபையில கொஞ்சம் பொகையிலய கசக்கி வச்சி.ரெண்டு தட்டி இழுத்துகிட்டு போவேண்டியதுதான்.வேற வழி என்னா இருக்கு’மேலே இருந்து அவுங்களே சொன்ன யோசனை இது.’

அப்போதுதான் பயந்துபோனேன் எத்தனையோ வழிகள் இங்குண்டு .இல்லாதவர்கள் மட்டுமே இங்கு பொல்லாதவர்களாக்கப்படுவார்கள்.

நெல்சன் மண்டேலா 27 ஆண்டுகள் சிறைவாசம் செய்தார்.அதற்கும்ஒரு சட்டம் பெரிய நீதிபதியின் உத்தரவு எல்லாம் உண்டுதானே.எல்லாம் தெரிந்த வெள்ளையர்கள்தான் அந்த உத்தமரை நாம் வாழும்காலத்தே கொடுஞ்சிறைக்கு அனுப்பி க்கடமை முடித்தார்கள்.அதே மனிதர் அந்த நாட்டுக்கே அதிபர் ஆனார் உயரிய.நோபல்பரிசும் பெற்றார் என்பதை நமக்கு சரித்திரம் சொல்லும்.

மளையாள எழுத்தாளர் ஆர்.உன்னி ஒரு கதை எழுதியிருப்பார். பாதுஷா என்னும் ஒரு பாதசாரியின் கதை அது .எழுபது வயதுக்கிழவர் காற்று வாங்கி உலாவிவர கடற்கரை ஓரம் கால் நடையாய்ச்சென்றுவருவார்.அததற்காக போலிசால் கடுமையாக தண்டிக்கப்படுகிறார் .காவலர்கள் அவரைத் தெரு நாயென விரட்டி மிரட்டி இம்சிக்கின்றனர்.காரணம் அவர் ஒரு இசுலாமியர்.  அவர்களுக்குறிய தொப்பி அணிந்து இரவு நேரத்தில் உலா போனாரர். அவ்வளவே.

ஆர்டிகிள் 21  இந்திய அரசியல் நிர்ணயசட்டம் ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கை வாழ்வதற்கும் அவனுடைய பூரண விடுதலைக்கும்  உறுதி தருகிறது..ஆனால் நடைமுறையில்அப்படியா? இது எதுவுமற்ற ஒரு ஏழைக்கும் அப்பாவி.மதச்சிறுபான்மையினருக்கும் எந்தவகையில் நேர்மையான ஒரு அரணாகி நிற்கிறது.இதற்கு விடை சொல்லியாகவேண்டும்.யார் சொல்வார்கள்?

நீதிமன்றங்களில் தேங்கிக்கிடக்கும் வழக்குகள் புதிதாக ஒரு இனி வழக்கும் பதிவாகாவிட்டாலும்கூட (ஒரு பேச்சுக்குத்தான்) முடிவதற்கு இன்னும் முப்பதாண்டுகள் ஆகலாம் என்று கணக்கு சொல்கிறார்கள்  இந்தக்கொடுமைக்குயார் பொறுப்பேற்பது. நீதிமன்றங்களின் அன்றாடத்தேவைகள் கவனிக்கப்படுவதே இல்லை.ஆள்பற்றாக்குறை. எங்கு நோக்கினும் அது மட்டுமே. விஷயம்இப்படியே போனால் நீதியரசர்கள் வீதிக்கு வந்து போராடும் காலம் ஒன்று வரலாம்

காவல் துறை நவீனமயமாக்கப்படுதல்என்பது இன்னும் வெகு தூரம்சென்றாகவேண்டும்.ஆட்களின் பற்றாக்குறைஇங்கு சொல்லிமாளாது மேற்.பயிற்சியும் அறிவியலில் கூடுதலாய் அறிதலும்தொடர்ந்து நடைபெறவேண்டியுள்ளது.அரசியல் வாதிகள் இடைதரகர்கள் காவல் துறையை வலைபின்னி. அதற்குள்ளாக அல்லவா கிளிச்சிறை என வைத்திருக்கிறார்கள்.

கிரிமினல்கள் நம் நாட்டில் ஒய்யாரமாய் உலாவருவதற்கும் உற்சாகம் பெறுவதற்கும் யார் காரணம்.எம் எல் ஏக்கள் எம்பிக்களின் குற்றங்களை விசாரிக்க  மாநிலத்துக்கு மாநிலம் தனி நீதிமன்றம் என்பது பெருமைக்குறிய செய்தியா?

இந்த காந்தி பிறந்த நாட்டில் 54 நிமிடத்துக்கு ஒரு கற்பழிப்பு.26 நிமிடத்துக்கு ஒரு சண்டை.23 நிமிடத்துக்கு ஒரு ஆட்கடத்தல் 42 நிமிடத்துக்கு ஒரு மணமானபெண் கொல்லப்படுதல்எனத்தொடர்ந்து நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

2008 கணக்குப்படி தண்டனை பெற்று சிறையில் இருக்கும் குற்றவாளிகள்எண்ணிக்கை 1,16,675,விசாரணைக்காக மட்டுமே சிறை இருக்கும் நபர்கள் 2,45,244. இரண்டு மடங்குக்கு மேலாகதண்டனை பெற்ற குற்றவாளிகளை விட இங்கே விசாரணைக்கைதிகள்..எத்தனை ஆண்டுகாலம் ஆகும்இப்பிரச்சனைகள் ஒரு முடிவுக்கு வர,முடிவுக்கு வந்துவிடுமா? கேட்கத்தோன்றுகிறது.

கற்பழிப்பு பற்றிய புலன் விசாரிப்புக்கள்  அபலைப்பெண்ணுக்கு இன்னுமொருவன்கொடுமையாய் அனுபவமாவதைத் தடுத்தாக வேண்டும்.கற்பழிப்பு என்பதுவே ஒரு பெண்ணுக்கு civil death. அவள் இழந்து போனது கடவுளாலேகூட ஈடு செய்யமுடியாத பெருவிஷயம்.இப்படி ஒரு புரிதல் சம்பந்தப்பட்டவர்களுக்கு எட்டுமா என்ன?

பெருமுதலாளிகள் அரசியல்வாதிகளைக் கூறுபோட்டுக்கொள்கிறார்கள் அடுத்து யார்பொறுப்புக்கு வரவேண்டும் என்கிற காயை அவர்களே நகர்த்துகிறார்கள்.இந்தியத்தொழிலாளர் இயக்கங்கள்திணறிக்கொண்டு காலட்சேபம் செய்கின்றன.அரசு நிறுவனங்கள் இங்கு நீர்த்துப்போக மட்டுமே நிர்பந்திக்கப்படுகின்றன.

இக்கணம் சிறைச்சாலை காவல்துறை நீதிபரிபாலனம்இவை ஆரோக்கியமாய் வலுப்பெறுதல் பற்றி ஒவ்வொரு இந்தியக்குடிமகனும் அவசியம் கவலைப்பட்டாகவேண்டும். இடித்துச்சொல்ல வல்லவர்கள் யாரேனும் தெரிகிறார்களா?.

Series Navigationமுதன்முதல் இஸ்ரேல் விண்வெளித் தேடல் ஆணையகம் ஏவிய நிலாத் தளவுளவி நிலவு நோக்கிச் செல்கிறதுபால் டார்ட் துப்பாக்கி இயக்குபவரின் இறப்பு
author

எஸ்ஸார்சி

Similar Posts

3 Comments

  1. Avatar
    valava.duraiyan says:

    எஸ்ஸார்சி எண்ணித் துணிந்துதான் எழுதி உள்ளார். இன்றும் காவல் நிலையத்திற்குச் சென்று புகார் கொடுக்க வேண்டும் என்றால் நாம் எத்தவறும் செய்யவில்லை என்றால் கூட அச்சமாகத்தான் இருக்கிறது. அதேநேரத்தில்
    ஒரு விபத்தையோ அல்லது ஒரு வழிப்பறியையோ பார்த்தால் அங்கு நிற்கவோ அல்லது தட்டிக்கேட்கவோ யாரும் முன்வராதது காவல்துறை பின்னால் வந்து என்னென்ன விசாரிப்பார்களோ என்னும் அச்சம்தான். எனவே காவல்துறை பற்றிய அச்சம் சாதாரணமனிதரின் மனத்திலிருந்து நீக்கப்பட வேண்டும்.

  2. Avatar
    S NATARAJAN says:

    காவலர்கள் தற்போது பொதுமக்களைக் (சாமானியர்கள் அல்ல) கண்டு அச்சப்படுவது நடக்கிறது.ஆனால் அப்பாவி ஒருவனை சிக்கவைப்பது என்று முடிவு செய்துவிட்டார்களெனில் அதில் இருந்து யாரும் தப்ப முடியாது.குற்றங்கள் அதிகரித்து வருவதற்கு நமது கல்வித்திட்டமும் ஒரு காரணம் என்று சொல்லமுடியுமா ?

  3. Avatar
    essarci says:

    நோக்கம் தவறாகிவிட்டது.அரசியல் வியாபார அரங்கமாகி இருக்கிறது.கல்வி பணம் பண்ணும் சூத்திரமாகி நிற்கிறது. ஜன நாயகம் ஜன நாடகம் என முடிந்து நிற்கிறது. தேசத்தின் மனசாட்சி தொலைக்கட்டுவிட்டது. நம்பி நாராயணனை நாம் சின்னப்படுத்தியது நமக்கு வேறு என்ன செய்தி சொல்கிறது
    .ஆனால் மனிதன் நம்பிக்கையை இழக்கக்கூடாது என்பதுதான் பேர் அறம்.
    எஸ்ஸார்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *