தன்னளவில் அவரொரு நூலகம் (பேராசிரியர் சுந்தர சண்முகனார்)

author
1
0 minutes, 33 seconds Read
This entry is part 2 of 10 in the series 17 மார்ச் 2019

(

கோ. மன்றவாணன்

      கடலூர் நகராட்சியில் புதுவண்டிப்பாளையம் என்ற பகுதி உள்ளது. அதைப் பண்டிதர் பாளையம் என்றும் புலவர் பாளையம் என்றும் அழைக்கக் கேட்டிருக்கிறேன். புலவர்களே நிறைந்த பகுதியாக ஒரு காலத்தில் திகழ்ந்திருக்கிறது. என்னுடைய தமிழாசிரியர்கள் தண்டபாணி, சம்பந்தனார் ஆகியோரும் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களே. அந்தப் பகுதியில்தான் அப்பர் கரையேறிய இடமும் உள்ளது. அத்தகைய தமிழ்மணந்த ஊரில் 13-07-1922 அன்று பிறந்து வளர்ந்தவர் சுந்தர. சண்முகனார். இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப்பேரறிஞர்களில் குறிப்பிடத்தக்கவர். கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள ஞானியார் மடத்தில் ஞானியார் அவர்களிடமே தமிழ்பயின்றவர். திருவையாறு அரசர் கல்லூரியில் படித்து வித்துவான் ஆனார். பிறகு மயிலம் சிவஞான பாலைய அடிகள் தமிழ்க்கல்லூரியில் தன் பதினெட்டாவது அகவையிலேயே விரிவுரையாளராகச் சேர்ந்து தமிழ்கற்பித்தார்.  அதன்பின் புதுவைக்கு வந்து பெத்தி செமினார் பள்ளியில் தலைமைத் தமிழாசிரியராகப் பணியாற்றினார். மேலும் புதுச்சேரி அரசினர் ஆசிரியர் பயிற்சி மையத்தில் தமிழ்விரிவுரையாளராகப் பணியாற்றினார். அவரிடத்தில் தமிழ் பயின்றவர்கள் பலரும் தமிழாசிரியர்களாக உயர்ந்து தமிழுக்குப் பெருமை சேர்த்து வருகிறார்கள்.

      புதுவையிலோ கடலூரிலோ ஏதோ ஒரு நிகழ்வில் அவரை நான் பார்த்திருக்கிறேன். அகன்ற முகம். பருத்த உடல். அவர் அடிக்கடிக் கண்களைச் சிமிட்டிக்கொண்டே இருந்தார். மேலும் முகத்தசையும் மேலேறி இறங்கியபடி இருந்ததையும் பார்த்தேன். மூளைக்கட்டிக்குக் கதிரியக்க சிகிச்சை செய்துகொண்டதால் அவருடைய கண்நரம்புகள் பாதித்தனவாம். அதனால்தான் அந்த உடல் ஒத்துழையாமை. ஒளியைப் பார்த்தால் கண்கூசும் நிலை. அதனால் எப்போதும் கருப்புக்கண்ணாடியை அணிந்தார். ஒலியைக் கேட்பதிலும் அவருக்கு ஒவ்வாமை இருந்தது. கடிகாரத்தின் டிக்டிக்டிக் ஒலியையும் அவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. பிற்காலத்தில் பக்க வாதத்தால் ஒரு கை, ஒரு கால் முடங்கியும் வாய் பேச முடியாமலும் அல்லல்பட்ட காலத்திலும் ஒரு காகிதத்தைத் தன்மார்பில் வைத்துக் குறிப்பெழுதுவாராம். உடல் இயங்க மறுத்த போதும் ஓயாமல் எழுதிக்கொண்டிருந்திருக்கிறார்.

      இவர் எழுதிய முதல்நூல் “வீடும் விளக்கும்” ஆகும். இது 1947ல் வெளியானது. மறைவெய்திய 1997 வரையிலும் தொடர்ந்து ஐம்பது ஆண்டுக் காலமாக நூல்கள் எழுதித் தமிழுக்கும் உலகுக்கும் பயன்சேர்த்துள்ளார். 1946 ஆம் ஆண்டில் அவருடைய மூளையில் கட்டி ஏற்பட்டுப் பெருந்துன்பத்துக்கு ஆளானார். வாழ்நாள் முழுவதும் அந்தப் பெருவலியைச் சுமந்துவந்தார். இந்நிலையிலும் 69 நூல்களை அவர் எழுதிக் குவித்துள்ளார் என்றால் அந்த அருஞ்செயலை யாரும் வியக்காமல் இருக்க முடியாது. அவருடைய நூல்கள் அனைத்தும் ஆராய்ச்சி மிக்கவை. அவ்வளவு எளிதில் எழுதிவிட முடியாது. இன்றைய இணையதள வசதிகள் அன்றைக்கு இல்லை. தரவுகள் கிடைப்பதரிது. தாமாகவே முயன்று தேடிக் கண்டடைய வேண்டும். நாள்பல செலவாகும். கைப்பட எழுத வேண்டும். அவருடைய வீட்டுக்கருகில் வாழ்ந்த அவருடைய தோழர் ஒருவர் குறிப்பிட்டார். இரவில் ஒரு மணியோ இரண்டு மணியோ மூன்று மணியோ வெளியில் வந்து பார்த்தால் சுந்தர சண்முகனார் வீட்டறையில் மின்விளக்கு எரிந்துகொண்டிருக்கும். அவர் விழித்திருந்து எழுதிக்கொண்டிருப்பார். தீராத நோயின் வேதனையைத் தன் எழுத்துகளால் தணித்துக்கொண்டாரோ…..

      அவர் எழுதிய  கெடிலக்கரை நாகரிகம் என்ற நூல் அவருடைய ஆராய்ச்சிக்கும் களஆய்வுக்கும் சான்றாகும். உலகின் மிகப்பெரும் ஆறுகளுக்குக்கூட இப்படியொரு வரலாறு எழுதப்படவில்லை. கெடிலம் என்ற சிற்றாறுக்குச் சிறப்பான வரலாறு எழுதப்பட்டிருக்கிறது. ஆறு தோன்றிய இடத்திலிருந்து கடலில் கலக்கும் இடம்வரை நேரடியாகச் சென்றும் ஆய்வு செய்தும், இலக்கிய ஆதாரங்களைத் திரட்டியும், முன்னோர்களை நேர்காணல் செய்தும் அந்த நூலை யாத்திருப்பார். கடலூரில் உள்ள அப்பர் கரையேறிய இடத்தில் கடலும் இல்லை; நதியும் இல்லை. அப்படியானால் அவர் எப்படி அந்த இடத்தில் கல்தூணில் மிதந்து வந்து கரையேறி இருப்பார்? இந்த ஒரு கேள்விக்கு அவர் எடுத்து வைக்கும் ஆதாரங்களும் விளக்கங்களும் அறிவின் உச்சம். 650 பக்கங்கள் கொண்ட இப்பெரிய ஆய்வு நூலில் 51 படங்கள் இடம்பெற்று மெய்விளக்கச் சான்றுகளாக உள்ளன. இந்த நூலை நம் சமகால எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களும் வியந்து பாராட்டியிருக்கிறார். உடல்நலம் குன்றிய நிலையிலும் இப்படி ஒரு நூலை எப்படி எழுதினார் என்று  பிரமிக்காமல் இருக்க முடியவில்லை.

      தமிழ் அகராதிக் கலை என்ற நூலைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார். தமிழ்நூல் தொகுப்புக் கலை, தமிழ்நூல் தொகுப்புக் கலைக்களஞ்சியம் ஆகிய பெருநூல்களும் அவருடைய திறமைக்குச் சான்றானவை ஆகும். அய்யாவின் ஆய்வுத்திறனையும் அரிய உழைப்பையும் கண்ட தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக் கழகத்தின் முதல் துணைவேந்தர் வி.ஐ.சுப்பிரமணியம் அவர்கள், தொகுப்பியல் துறைக்குத் தலைவராகவும் பேராசிரியராகவும் பணிஅமர்த்தினார்.

      திருக்குறளுக்குப் பலரும் உரைஎழுதிக் குவித்துள்ளனர். இவரோ மிகப்பெரும் ஆராய்ச்சியோடு உரையெழுதிப் பல அறிஞர்களின் பாராட்டுகளைப் பெற்றார். இவருடைய திருக்குறள் உரையைப் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் பெரிதும் போற்றி இருக்கிறார். பொருளிழப்பைப் பொருட்படுத்தாமல் திருக்குறளுக்காகவே 1948 முதல் 1958 வரை திருக்குறள் தெளிவு, தெவிட்டாத திருக்குறள் ஆகிய பெயர்களில் மாதமிருமுறை ஆய்விதழ்களை  நடத்தி வந்திருக்கிறார். 15-01-1991 அன்று அப்போதைய முதல்வர் கலைஞர் அவர்கள் திருவள்ளுவர் விருது வழங்கிச் சுந்தர சண்முகனாரைப் பெருமைப்படுத்தியது பொருத்தமான சிறப்பாகும். திருக்குறள் நெறித்தோன்றல், குறளாயச் செல்வர் போன்ற பட்டங்களும் அவருடைய திருக்குறள் பணியைப்போற்றி வழங்கப்பட்டன.

      புதுவையில் திருவள்ளுவர் பல்கலைக் கழகம் என்ற அமைப்பை நிறுவி, மாணவர்க்கும் ஆசிரியர்க்கும் யாப்பிலக்கணம் உள்ளிட்ட இலக்கணங்களைச் சொல்லித்தந்ததோடு தமிழ்இலக்கியங்களைச் சுவைபட உரைத்திருக்கிறார். அதன்மூலம் யாப்புப் பிசகாமல் கவிஎழுதும் கவிஞர் கூட்டத்தை உருவாக்கினார். திருக்குறள் வகுப்புகளையும் சிறப்பாக நடத்தி இருக்கிறார்.     

      சைவக்குடும்பத்தில் பிறந்த இவர், புத்தர் காப்பியம் படைத்து, அதற்காகப் புதுவை அரசின் பரிசையும் பெற்றுள்ளார். மணிமேகலைக் காப்பியத்தில் வரும் அறவணன் என்ற புத்த துறவியின் பெயரையே தன் மகனுக்குச் சூட்டினார் என்றால் புத்த தத்துவத்தில் அவர் ஆழ்ந்த ஞானம் கொண்டிருக்கிறார் என அறிய முடியும். மேலும் புத்தர் பொன்மொழி நூறு என்ற நூலைக் விருத்தப்பாக்களில் வடித்துள்ளார்.

      புதுச்சேரியில் நடந்த தமிழ்நிகழ்ச்சி ஒன்றில் திருப்பதியில் உள்ள வேங்கடவன் முருகனே என்று பேசினார். அதற்கு என்ன ஆதாரம் என்று கேட்டார் கூட்டத்தில் இருந்த சித்தன் என்றொரு புலவர். அருகிலிருந்த தி.வே. கோபாலய்யர் என்ற தமிழறிஞர், “ஆதாரம் இருந்தால்தான் சொல்லி இருப்பாரே” என்று பகடி செய்தார். அதே மேடையில் ஆதாரங்களோடு ஒரு நூலையே எழுதுகிறேன் என்று சூளுரைத்தார். அதன்படியே “இலக்கியத்தில் வேங்கட வேலவன்” என்ற ஆய்வு நூலை எழுதினார். திருப்பதிக்குச் சென்று தீர ஆய்வு செய்தும் அந்நூலைப் படைத்துள்ளார்.

      தமிழை விரும்பிப் படித்த சுந்தர சண்முகனார் அவர்கள் ஆங்கிலம், பிரஞ்சு, இலத்தீன் ஆகிய மொழிகளையும் கற்றுத் தேர்ந்திருக்கிறார். மலர்மணம் என்ற தானெழுதிய தமிழ்ப்புதினத்தைத் தானே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, ஆங்கில இலக்கியத்துக்குச் சிறப்புச் சேர்த்துள்ளார்.           தமிழ் – இலத்தீ்ன் பாலம், தொல்திராவிட மொழி கண்டுபிடிப்பு ஆகிய மொழியியல் நூல்களை ஆராய்ச்சி அறிவோடு எழுதி இருக்கிறார்.

      தமிழறிஞர் சுந்தர சண்முகனார் தன்நூல்களில் எடுத்துரைக்கும் வாதங்களைப் படித்தபோது, அவருக்குள் ஒரு தேர்ந்த வழக்கறிஞர் இருப்பதை உணர்ந்தேன். இரு தரப்பு வாதங்களையும் எடுத்து வைத்து, அதற்கு தானே நடுநிலை தவறாத நீதிபதியாக இருந்து, எது மெய்யெனக் கண்டறிந்து சொல்லும் ஆற்றலையும் அறிவையும் ஆராய்ச்சி நேர்மையையும் அவருடைய நூல்களில் காணலாம்..

      மக்கள் நன்முறையில் வாழ வேண்டும் என்பதற்காகவும், வாழும் வழி, பணக்காரர் ஆகும் வழி, இன்ப வாழ்வு போன்ற வாழ்வியல் நூல்களையும் எழுதிப் பலரின் வாழ்வுக்கு வழிகாட்டி உள்ளார். மேலும் வரலாறு, மொழியியல், அறிவியல், தத்துவம், மதம், உளவியல், புவியியல் சார்ந்த நூல்களை எழுதி அவருடைய பல்துறை ஆற்றல்களை வெளிப்படுத்தி உள்ளார். குழந்தைகளுக்காகவும் நூல்சில படைத்துள்ளார். தன்னளவில் அவரே ஒரு நூலகமாகத் திகழ்ந்தார்.

      தமிழைத் தவறின்றி எழுதுவோர் யாருமில்லை என்ற அளவுக்கு இன்றைய தமிழின் நிலை உள்ளது. ஆனால் அந்தக் காலத்திலேயே தமிழைப் பிழைமலிந்து எழுதியவர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்களும் தமிழைத் தவறின்றி எழுத வேண்டும் என விரும்பினார். அதற்காக இலக்கண நூலொன்றை எழுதினார். அந்த நூலுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று பாவேந்தரிடம் அறிவுரை கேட்டார். எழுத்தாளர் துணைவன் என்ற பெயரைச் சூட்டலாம் என்றார் பாவேந்தர். அன்றைய எழுத்தாளர்களே தமிழைத் தவறாக எழுதியதைப் பொறுக்க மாட்டாமல்தான் அந்தப் பெயரை வைத்திருப்பார் பாவேந்தர்.    

      எங்கே தமிழ்பயிலத் தொடங்கினாரோ அதே ஞானியார் மடம் பிற்காலத்தில் அவருக்கு விழாநடத்தி ஆராய்ச்சி அறிஞர் எனும் விருதை வழங்கியது. தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய், அந்த மகனை உச்சி முகர்ந்து மகிழ்வதுபோல் அந்த விழா அமைந்தது.

      பாவேந்தர் அடக்கம் செய்யப்பட்ட பாப்பம்மாள் வனச்சோலையில் தன்னுடலை அடக்கம் செய்ய வேண்டுமென்று தன் இறுதிக் காலத்தில் விருப்பம் தெரிவித்திருந்தார். அதன்படியே 30-10-1997 அன்று பாவேந்தரின் அருகிலேயே சென்றடைந்தார்.

      “எனக்கு எட்டு வயது இருக்கும்போதே சுந்தர சண்முகனாரைத் தெரியும். அந்தக் காலத்தில் அவர் ஒரு புரட்சியாளர்.”  என்று புகழ்ந்தார், அவருடைய இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட எழுத்தாளர் பிரபஞ்சன்.

Series Navigation2011 புகுஷிமா அணு உலை விபத்துக்குப் பிறகு, 2018 இல் பிரான்ஸ் நாட்டு அணு மின்சக்தி உற்பத்தி மாற்றங்கள்கேள்வி
author

Similar Posts

Comments

  1. Avatar
    வளவ. துரையன் says:

    இதுவரை யாரும் அதிகமாக அறிந்திராத பெருமகனார் சுந்தர சண்முகனாரைப் பற்றிய அரிய செய்திகளை அறிய வைத்த மன்றவாணனுக்குப் பாராட்டுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *