இலக்கியவாதிகள் இரண்டாந்தரப் பிரஜைகளா?

This entry is part 1 of 8 in the series 24 மார்ச் 2019

சமீபத்தில் இலக்கியக் கூட்டங்கள் சார்ந்த சில புகைப்படங்களைப் பார்க்க நேர்ந்தது. அந்தத் தாக்கத்தில் அல்லது பாதிப்பில் மனதில் தவிர்க்க முடியாமல் மனதில் கிளர்ந் தெழுந்த சில கேள்விகள் கீழே.

இவற்றைப் பொதுவெளியில் வைத்தால் கையாலாகாதவர்களின், பொறாமை, பொச்சரிப்பாக வெகு எளிதாகப் பகுக்கப்படும் என்று நன்றாகவே தெரிந்தும் வாளாவிருக்க முடியவில்லை. என்ன செய்ய?

எழுத்தாளருக்கு மரியாதை செய்வதாய் பறையறி விக்கப்படும் விழாக்கள் கூட்டங்களிலெல்லாம் திரைப்படத்துறையினர் வந்தால் எழுத்தாளர்கள் ஓடிப்போய் அவர்களை அத்தனை விநயமாக வரவேற்பது கூட நம் வழிவழியான மரபெனில் அந்த மரபு விரும்பத்தக்கதா? வெறுக்கத்தக்கதா?

தனக்காக நடத்தப்படும் இலக்கியக் கூட்டத்தில் தள்ளாமையை மீறி ஆர்வமாகக் கலந்துகொள்ளும் தரமான மூத்த எழுத்தாளரைப் பார்த்து மெலிதாக புன்முறுவலித்து அவருக்குப் பின்னால் வந்து கொண்டிருக்கும் சராசரி சினிமாக்காரரை வரவேற்க வாயெல்லாம் பல்லாக விரைவதுதான் வழிவழியான மரபெனில் அந்த மரபு விரும்பத்தக்கதா? வெறுக்கத்தக்கதா?

படைப்பாளி பேசப்பேச அதை சிறப்புப் பார்வையாள ராய் முன் வரிசையில் வீற்றிருக்கும் திரையுலகப் பிரமுகர் எப்படி கவனிக்கிறார் என்பதையே , மேடை யில் பேசுபவரும் சரி, அரங்கில் அமர்ந்திருக்கும் அவருடைய ‘விசேஷ வாசகப் பெருமக்களும் சரி’ வெளிப்படையாக வாயைப் பிளந்தவாறும், கடைக் கண்ணால் ஓரப்பார்வை பார்த்தவாறும் உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டே யிருப்பதுதான் வழிவழி யான மரபெனில் அந்த மரபு விரும்பத்தக்கதா? வெறுக்கத்தக்கதா?

இலக்கியக்கூட்டத்திற்கு வரும் தீவிர வாசகருக்கு அளிக்கப்படும் வரவேற்பைக் காட்டிலும் திரைப்படத் துறையில் முக்கியப்புள்ளியாக இருப்பவருக்கு (அல்லது அரசியல் துறையில் முக்கியப் புள்ளியாக இருப்பவருக்கு) அவர் ஒரு மேம்போக்கு வாசகரா கவே இருந்தாலும் – தரபப்டும் வரவேற்பு அதிகமாக இருப்பதுதான் வழிவழி யான மரபெனில் அந்த மரபு விரும்பத்தக்கதா? வெறுக்கத்தக்கதா?

ஒருமுறை இலக்கியக் கூட்டமொன்றுக்கு திரைப் படப் பாடலாசிரியரின் மனைவி வருகை தந்தபோது மேடையிலிருந்தோர் அனைவரும் அவருக்காக அப்படி எழுந்து நின்று உடல் வளைந்து கரங்கூப்பினார்கள்.

ஒரு நூல் வெளியீட்டுவிழாவில் அபத்த தொலைக்காட்சித் தொடர்களை இடையறாது தந்துகொண்டிருக்கும் நடிகை ஒருவர் வந்தபோது அவர் வருகை தந்ததே மேடையிலிருந்த படைப்பாளிகளுக்குக் கிடைத்த பெரிய ஆசிர்வாதம் என்பதாய் நிகழ்ச்சியை ஒழுங்கமைத்துக்கொண்டிருந்தவர் மைக்கில் பரவசத்தின் எல்லைக்கே போய் பக்திப்பெருக்கில் முழங்கினார்!

இப்படி நிறைய பார்த்தாயிற்று. இதில் திரைப்படத் துறையினரைக் குறைசொல்வதற் கில்லை. அரசியல்வாதியையும் குறைசொல்வதற்கில்லை. இலக்கியப் படைப்பாளி கள் பலருக்கும், இலக்கிய வாசகர்கள் பலருக்கும் திரைப்படத் துறையினரின் வரவும், அரசியல்வாதிகளின் பங்கேற்பும் ஒரு புளகாங்கிதத்தை ஏற்படுத்தி அவர்களைத் திக்குமுக்காடச் செய்துவிடுகிறது. இது ஏனென்றே தெரியவில்லை.

வாழ்வாதாரத்திற்கு திரைப்படத்துறையை நாடுவது என்பது வேறு. ஆனால் சிறந்த இலக்கியப் படைப் பாளி(கள்) கலந்துகொள்ளும் விழாக்களில், அல்லது, இலக்கிய வாதிக்கு மரியாதை செய்வதாய் நடத்தப்படும் கூட்டங்களில் அவர் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டு விழாவில் கலந்துகொள்ளும் திரைப்பட – அரசியல் பிரமுகரே / பிரமுகர்களே விழாநாயகர் களாக்கப்படுவது எவ்வகையில் சரி? இதற்கு இலக்கியவாதிகளும், இலக்கிய வாசகர்களும் ‘ஒத்துப் போவது’ எந்தவிதத்தில் சரி?

ஒரு திரைப்படம் வெளியானால் அதைப் பற்றி பல எழுத்தாளர்கள் ஒட்டியும் வெட்டியும் எழுதுகிறார்கள். அப்படி ஏதேனும் ஒரு (உண்மையிலேயே தரமான) கவிதைத் தொகுப்பையோ, சிறுகதைத் தொகுப்பையோ, நாவலையோ பேச எத்தனை திரைப்படத்துறையைச் சார்ந்த பெருந்தலைகள் முன்வருகிறார்கள்?

பெறு(ரு)ம் பணம் காரணமாக இலக்கியவாதிகளை விட தாம் மேலானவர்கள் என்ற நினைப்பு பல திரைப்படப் பிரமுகர்களிடம் (அரசியல் பிரமுகர் களிடமும்) வேரூன்றியிருப் பதாகவே தோன்று கிறது.

சமீபத்தில் மகளிர் தினச் சிறப்புநிகழ்ச்சியாக தினமணி பழம்பெரும் நடிகைகளுக்கு விருது வழங்கி் கௌரவித்தது. திரைப்படத்துறையில் பெண்கள் இரண்டாந்தரப் பிரஜை களாகவே நடத்தப்படுவது கண்கூடு. ஒரு திரைப்படத்தின் வெற்றி என்பதில் நடிகைகளின் பங்களிப்பு அரிதாகவே பேசப்படுகிறது. அதெல்லாம் சரிதான். ஆனாலும், மகளிர் தினத்தன்று சாதனை மகளிராக தினமணி விருதளித்தது நடிகைகளுக்கு மட்டுமே என்ற போக்கு சரியா?

இப்படித்தான், நான்காவது தூணாக நிற்கும் அச்சு-ஒளி-ஒலி ஊடகங்களும் திரைப்படத்துறையையே பலவகையிலும் பிரதானப்படுத்திவருகின்றன. இந்தப் போக்கை இலக்கியவுலகிலும், குறிப்பாக இப்போது அதிகமாகப் பார்க்க முடிகிறது. வருத்த மளிக்கும் அவலம் இது.

எழுத்தாளர் ஜெயகாந்தனுடைய கதைகள் குறித்து, அவருடைய மொழிநடை குறித்து நமக்கு ஏற்பும் மறுப்புமாக சில கருத்துகள் இருக்கலாம். ஆனால், அவர் கலந்து கொள்ளும் கூட்டங்களில் அவர்தான் நாயகர்! எத்தனை பெரிய மனிதர்கள் வந்தாலும் அவர்களும் சரி, விழாவிற்கு வந்திருப்பவர்களும் சரி அந்தப் படைப்பாளிக்காகவே வந்திருப்பார்கள். அவரிடம் பேசுவதற்காகவே காத்திருப்பார்கள். அதைப் பார்த்தாலே அத்தனை மனநிறைவாக இருக்கும்.

அதைப்போலவே, முன்பெல்லாம் சில தன்னார்வத் தொண்டர்களை கௌரவிப் பதற்காக, சில தொழிற் சங்கத் தலைவர்களுக்கு மரியாதை செய்வதற்காக நடத்தப் படும் விழாக்களில் சமூகத்தில் பெயர், புகழ் பண ரீதியாய் பெரும் செல்வாக்குள்ள வர்கள் கலந்து கொண்டாலும் அவர்களும் மற்ற பார்வையாளர்களைப் போல் இருக்கையில் அமர்ந்திருப்பார்களே தவிர அவர்கள் விழாநாயகர்களாக ஆகமாட்டார் கள்; ஆக்கப்பட மாட்டார்கள்.

ஆனால், இன்று அப்படியில்லை.

இன்றைய பொருள்பிரதான வாழ்க்கையில் (என்று தான் பொருள் பிரதானமாக இல்லை?) யார் வேண்டுமானாலும் இலக்கியவாதியை மட்டந்தட்டலாம்; மதிப்பழிக்கலாம் என்ற நிலையே நிலவுகிறது.

ஆனால், படைப்பாளிகளே அத்தகைய போக்கை முன்னெடுக்கலாகாது. அப்படிச் செய்பவர்கள் இருக்கிறார்கள். ’எனக்கு திரைப்படத்துறையினரின் பரிச்சயமுண்டு, அரசியல்வாதிகளின் பரிச்சயமுண்டு’ என்று காண்பித்துக்கொள்வதன் மூலமே தங்களை அதிகாரபீடங்களாக நிறுவிக்கொள்பவர்கள் இருக்கிறார்கள்.

ஒருவகையில் எழுத்தாளர் ஞானியைக் காட்டிலும், தத்துவவாதியைக் காட்டிலும், ஆசான்களைக் காட்டிலும் மேலானவர். ஏனெனில் அவர் மற்றவர்களைப் போல் பீடத்திலிருந்துகொண்டு வாழ்க்கையை உபதேசிக்கவில்லை. சக மனிதராய் தன் வலி வேதனைகளை வாசகர் முன் வைக்கிறார். அவற்றி லிருந்து வாசகர் சுயமாகக் கற்றுக் கொள்கிறார்.

இத்தகைய அளப்பரிய சுதந்திரத்தை நமக்குத் தந்திருக்கும், காட்சிக்கு எளியரான, எழுத்தாளரை அவர் வாழுங்காலத்தில் மரியாதை செய்யாமல் இறந்தபின் அஞ்சலிக்கூட்டங்கள் ஆயிரம் நடத்தி (முடியுமானால் அவற்றிற்கும் தலைமை தாங்க திரைத்துறையைச் சேர்ந்த முக்கியஸ்தரை – mostly mediocre – அழைத்து) என்ன பயன்?

Series Navigationபுகுஷிமா விபத்துக்குப் பிறகு ஏழாண்டுகளில் உலக அணு மின்சக்தி இயக்கப் பேரவை வடித்த மேம்பாட்டு நெறிப்பாடுகள்
author

லதா ராமகிருஷ்ணன்

Similar Posts

2 Comments

  1. Avatar
    ஜெ.சாந்தமூர்த்தி says:

    லதா ராமகிருஷ்ணனின் ‘இலக்கியவாதிகள் இரண்டாந்தர பிரஜைகளா?’நல்ல கட்டுரை.கிரிக்கெட் ஆட்டக்காரரையும்
    முதல்தர பிரஜை வரிசையில் சேர்த்துக் கொள்ளலாம்.சினிமாக்
    காரரையோ,அரசியல்வாதியையோ,கிரிக்கெட்காரரையோ
    காணும் தமிழ் மக்களின் முகத்தில் தெரியும் பரவசம்
    அருவருப்பானது.ஜெயகாந்தனின் கம்பீரமும்,தன்னம்பிக்கையும்,
    ஆணவ மிடுக்கும் ஒவ்வொரு எழுத்தாளரிடமும் வரும்போது
    நிலைமை மாறும்.

  2. Avatar
    சுரேஷ் says:

    மிகச் சரியான கேள்வி .அதே சமயம் இன்று சரியான வாசகர்கள் இல்லை. புத்தகப் பிரியர்களும் இல்லை. வாசகர்களால் புகழ வேண்டியவர்கள். யாசகர்களால் புகழப்படுகின்றனர். எந்த தொலைக்காட்சி இலக்கியத்திற்கென நேரத்தை ஒதுக்குகிறது ? வாசிப்பு பழக்கம் இல்லாது போனால் தமிழினி மெல்லச் சாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *