பாகிஸ்தானிலிருந்து தப்பி வந்த இந்து தலித் அமைச்சர் ஜோகேந்திர மண்டலின் ராஜினாமா கடிதம் – பகுதி 2

author
0 minutes, 13 seconds Read
This entry is part 5 of 8 in the series 24 மார்ச் 2019

மொழிபெயர்ப்பு: ராஜசங்கர்

டாக்கா கலவரத்தின் பின்னணி21. டாக்கா கலவரத்தின் முக்கிய காரணங்கள் ஐந்து:

[3]அ. கால்ஷீரா மற்றும் நாச்சோல் பற்றிய ஒத்திவைப்பு தீர்மானங்கள் சட்டபேரவையில் கொண்டுவர அனுமதி மறுக்கப்பட்டது. அதை எதிர்த்து இந்து உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்து தங்களின் எதிர்ப்பை காட்டிய தைரியத்திற்கு தண்டனை தருவது.
ஆ. ஸூரஹர்தி குழுவுக்கும் நஜிமுதீன் குழுவுக்கும் இருந்த கருத்து வேறுபாடு மற்றும் குழு மோதல் பாராளுமன்ற கட்சியில் பிளவு ஏற்படும் அளவுக்கு போனது.
இ. கிழக்கு மற்றும் மேற்கு வங்காளத்தை இணைக்கும் முயற்சியை சில இந்து மற்றும் முஸ்லீம் தலைவர்கள் மேற்கொண்டது  கிழக்கு வங்காள அரசுக்கும் முஸ்ஸிம் லீக் தலைவர்களுக்கும் கவலை அளித்தது. அவர்கள் அதைத் தவிர்க்க எண்ணினர்.அவர்களின் சிந்தனைப்படி கிழக்கு வங்காளத்தில் ஒரு பெரிய மதக்கலவரம்  நடந்தால் அது கண்டிப்பாக மேற்கு வங்காளத்திலும் பரவும். அங்கு முஸ்லீம்கள் கொல்லப்படலாம். கிழக்கு மற்றும் மேற்கு வங்காளங்களில் நடக்கும்.மதக்கலவரங்களின் விளைவுகள் இந்த ஒற்றுமை முயற்சியை முளையிலேயே கிள்ளி எறியும்.
ஈ. வங்காளி முஸ்லீம்களுக்கும் வங்காளி  அல்லாத முஸ்லீம்களுக்கும் இடையே இருந்த நம்பிக்கையின்மை பெரிதாக வளர ஆரம்பித்தது. இதை இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே வெறுப்பை உருவாகுவதன் மூலமே ஒழிக்க முடியும். இவர்கள் பேசும் மொழியும் சிக்கலுக்கு ஒரு காரணம்.
உ. பணமதிப்பை குறைக்காததன் விளைவு மற்றும் இந்திய-பாகிஸ்தான் வணிகத்தில் ஏற்பட்ட முட்டுக்கட்டையின் விளைவுகள் கிழக்கு வங்காளப் பொருளாதாரத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்தின. இந்த பாதிப்பு முதலில் நகரப் பகுதிகளிலும் பின்பு கிராமப் பகுதிகளிலும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தின. வரும் பொருளாதார பஞ்சத்தில் இருந்து முஸ்லீம்களின் கவனத்தை இந்துக்களுக்கும் எதிரான ஜிகாத் மூலம் விலக்க முடியும் என முஸ்லீம் லீக் தலைவர்களும் அரசு அதிகாரிகளும் நினைத்தனர்.
மலைக்கவைக்கும் தகவல்கள் – பத்தாயிரம் பேர் கொல்லப்பட்டனர்

bangladesh-hindus-genocide-jihad-islam-muslim

22. நான் ஒன்பது நாள் டாக்காவில் தங்கியிருந்த போது கலவரம் நடந்த நகரப்  பகுதிகளையும் புறநகர் பகுதிகளையும் பார்வையிட்டேன். பி.ஸ். தேஜ்கானில் இருக்கும் மிர்பூருக்கும் சென்றேன். டாக்கா – நாராயண்கஞ் மற்றும் டாக்கா–சிட்டகாங் வழி இருப்பு பாதைகளிலும் ரயில் பெட்டிகளிலும் நூற்றுக்கணக்கான இந்துக்கள் கொல்லப்பட்டது எனக்கு அதிர்ச்சியளித்தது.
டாக்கா கலவரத்தின் இரண்டாவது நாள், நான் கிழக்கு வங்காள முதலமைச்சரைச் சந்தித்து அவர் மாவட்ட நகரங்களிலும் கிராமங்களிலும் கலவரம் நடக்காமல் இருக்க எல்லாவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்த வேண்டும் என மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட கேட்டுக்கொண்டேன்.1950 பிப்ரவரி 20 ஆம் தேதி நான் பாரிசால் நகரத்திற்கு போனேன். அங்கு நடந்தவைகளைக் கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தேன். இந்த மாவட்ட நகரத்தில் பெரும்பாலான இந்து வீடுகள் எரிக்கப்பட்டன.  பெரும் எண்ணிக்கையிலான இந்துக்கள் கொல்லப்பட்டனர். நான் அந்த மாவட்டத்தில் கலவரம் நடந்த அனைத்து பகுதிகளையும் பார்வையிட்டேன். அங்கு முஸ்லீம் கலவரக்காரர்கள் செய்த கொடுமைகள் இதுவரை நான் அறியாதவையாக இருந்தன.
அருகில் இருக்கும் காஷிபூர், மாதப்ஷா (Madhabpasha ) மற்றும் லகுட்யா எனும் பகுதிகள் நகரத்தில் இருந்து ஆறு மைல் தொலைவில் இருந்தும் வானங்கள் செல்லக்கூடிய சாலைகளால் இணைக்கப்பட்டிருந்தும் கலவரக்காரர்களின் பிடியில் இருந்து தப்பவில்லை.மாதப்ஷா (Madhabpasha ) ஜமின்தார் வீட்டில் 200 பேர் கொல்லப்பட்டனர். மற்றும் 40 பேர் காயமடைந்தனர். மைவ்லாடி (Muladi) எனும் இடம் நரக வேதனையை அனுபவித்தது.மைவ்லாடி பந்தர் எனும் இடத்தில் மட்டும் 300 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர். அந்த கலவரக்காரர்களில் முஸ்லீம்களும் அரசு அதிகாரிகளும் இருந்தனர்.

bangladesh-jihad-islam-murdered-hindus

பக்கத்தில் இருந்த கிராமத்திற்குச் சென்றபோது இறந்தவர்களின் எலும்புக்கூடுகளைப் பல இடங்களில் பார்த்தேன். ஆற்றோரங்களில் நாய்களும் கழுகுகளும் பிணங்களைத் தின்பதை பார்த்தேன். எனக்கு வந்த தகவல்படி அங்கு ஆண்களை ஒட்டு மொத்தமாக கொன்று விட்டு அங்கு இருந்த பெண்களை முஸ்லீம் தலைவர்களுக்குள் பங்கிட்டுக் கொண்டனர்.
பிஸ். ராஜ்புர் இல் இருக்கும் கைபார்ட்டகளி (Kaibartakhali ) எனும் இடத்தில் 63 பேர் கொல்லப்பட்டனர். காவல் துறை அலுவலகத்திற்கு அருகில் இருக்கும் இந்து வீடுகளும் கொள்ளையடிக்கப்பட்டன. உள்ளே இருந்த இந்துக்கள் கொல்லப்பட்டு வீடுகள் எரிக்கப்பட்டன.பாபுகன்ஞ் கடைவீதியில் இருந்த எல்லா இந்து கடைகளும் கொள்ளையடிக்கப்பட்டு அவர்கள் எரிக்கப்பட்டனர்.  நிறைய இந்துக்கள் கொலை செய்யப்பட்டனர்.பெறப்பட்ட தகவல்களில் அடிப்படையில் குறைந்த பட்சம் 2,500 பேர் பாரிசால் மாவட்டத்தில் மட்டும் கொல்லப்பட்டனர்.டாக்காவிலும் கிழக்குவங்காளத்திலும் கொல்லப்பட்ட இந்துக்களின் எண்ணிக்கை பத்தாயிரம் ஆகும்.உற்றார் உறவினரை இழந்த பெண்கள் மற்றும் குழந்தைகளின் அவலக்குரல் என்னுடைய இதயத்தை உருக்கியது. “இஸ்ஸாத்தின் பெயரால் பாகிஸ்தானை பீடித்துவிட்டது எது?” என நான் என்னையே கேட்டுக்கொண்டேன்.
டெல்லி ஒப்பந்தத்தைச் செயல்படுத்த எந்த ஆர்வமும் இல்லை(இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருக்கும் சிறுபான்மையினரை காக்க வழிவகை செய்ய லியாகத் அலிகானுக்கும் நேருவுக்கும் இடையில் நடந்த ஒப்பந்தம் டெல்லி ஒப்பந்தம் என அழைக்கப்படுகிறது.)
23. மார்ச்சின் பிற்பகுதில் கிழக்கு வங்காளத்தில் இருந்து இந்துக்கள் அகதிகளாக வெளியேறுவது ஆரம்பித்தது. குறைந்த கால அளவில் எல்லா இந்துக்களும் வங்காளத்தை விட்டு வெளியேறிவிடுவார்கள் எனத்  தோன்றியது.இதற்கு எதிராக போர்க்குரல் இந்தியாவில் எழுந்தது. ஒரு தேசியப் பேரழிவு நிகழ்வதை தடுக்க முடியாது போல் தோன்றியது. இப்படி வந்திருக்கக்கூடிய அவலம் ஆனது ஏப்ரல் 8 ஆம் தேதி கையெழுத்திடப்பட்ட டெல்லி ஒப்பந்தத்தால் தவிர்க்கப்பட்டது.பயத்தில் இருந்த பங்களாதேசத்து  இந்துக்களின் தைரியம் குறைந்தது. அவர்களது பயத்தைத் தவிர்க்க நான் கிழக்கு வங்காளத்தில் பெரும் சுற்றுப்பயணம் மேற்கொண்டேன். டாக்கா, பாரிசால், பரிதாபூர், குலானா ஜெஸ்ஸூர் மாவட்டங்களில் பல இடங்களுக்குச்  சென்றேன். அங்கு பல டஜன் கூட்டங்களில் பேசினேன். அதில் இந்துக்களைத் துணிவுடன் இருக்கும் படியும் அவர்களின் குடும்ப வீடுகளையும் சொத்தையும் விட்டு விட்டுப்  போக வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டேன்.கிழக்கு வங்காள அரசும் முஸ்லீம் லீக் தலைவர்களும் டெல்லி ஒப்பந்ததின் விதிகளை புழங்குவார்கள் என நம்பியே இதைச் சொன்னேன். ஆனால், நாட்கள் செல்லச் செல்ல கிழக்கு வங்காள அரசோ முஸ்லீம் லீக் தலைவர்களோ இந்த ஒப்பந்தத்தைப்  புழக்கத்திற்கு கொண்டுவருவதில் எந்த முயற்சியும் எடுக்க மாட்டார்கள் என எனக்குப் புரிந்தது.கிழக்கு வங்காள அரசு  டெல்லி ஒப்பந்தத்தில் சொல்லப்பட்ட அரசு இயந்திரங்களை அமைப்பதிலோ அல்லது வேறு எந்த விதமான நடவடிக்கைகளையோ  எடுக்க வில்லை. டெல்லி ஒப்பந்தத்திற்குப் பிறகு உடனடியாக தங்கள் சொந்த ஊருக்குக் கிளம்பிய இந்துக்கள் அவர்களின் வீடுகளும் நிலங்களும் முஸ்லீம்களால் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்ததை கண்டார்கள். அவைகள் அவர்களுக்குத் திருப்பி தரப்படவில்லை.
மவுலானா அக்ரம் கானின் வெறுப்பு பரப்புரை24. முஸ்லீம் லீக் தலைவர்களின் மீதான என்னுடைய சந்தேகம் உறுதிப்பட்டது எப்போது எனில் நான் முஸ்லீம் லீக் மாகாண தலைவர் ஆன மவுலானா அக்ரம் கான் மாத பத்திரிக்கையான “முகம்மதி” யின் “பைசக்” மாத வெளியீட்டில் எழுதியதைப் படித்த போது தான்.இதற்கு முன்னர், பாகிஸ்தானின் சிறுபான்மையினர் துறை அமைச்சர் ஆன முனைவர் ஏ. எம். மாலிக் டாக்கா ரேடியோ நிலையம் அதனுடைய முதல் ரேடியோ ஒலிபரப்பை செய்த போது பேசினார். அப்போது முகம்மது நபி கூட அரேபியாவில் இருந்த யூதர்களுக்கு அவர்களுடைய சமய உரிமையை அளித்தார் எனக் கூறினார். இதற்குப் பதில் அளித்த மவுலானா அக்ரம் கான் அந்தப் பத்திரிக்கையில் கீழ்க்கண்டவாறு எழுதினார்:

bangladesh-muslims-kill-hindu-friday-prayer

“முனைவர் மாலிக்கினுடைய பேச்சு அரேபியாவின் யூதர்களைக் குறிப்பிடாமல் இருந்திருந்தால் நன்றாகவே இருந்திருக்கும். முகம்மது நபியால் அரேபியாவின் யூதர்களுக்கு அவர்களுடைய உரிமைகள் தரப்பட்டது உண்மை தான். ஆனால், அது வரலாற்றில் முதல் பகுதி மட்டுமே. ஆனால், வரலாற்றின் கடைசிப்பகுதி தூதர் முகம்மது “எல்லா யூதர்களையும் அரேபியாவை விட்டு துரத்துங்கள்” என்று உத்தரவிட்டதைக் கொண்டுள்ளது.”முஸ்லீம்களிடையே அரசியல், சமூக, மத வாழ்க்கையில் உயர்ந்த இடத்தைக்  கொண்டிருக்கும் மவுலானா கானின் எழுத்திற்குப் பிறகும் நான் நூருல் அமின் அமைச்சரவை நம்பிக்கை குறைவாக நடந்து கொள்ளாது என சிறிய எதிர்ப்பார்ப்பு வைத்திருந்தேன். ஆனால், டி.என் பராரி யை சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக டெல்லி ஒப்பந்தத்தின் படி  நூருல் அமின் நியமித்த போது அந்த எதிர்ப்பார்ப்பு சுக்கு நூறானது. டெல்லி ஒப்பந்தத்தின்படி சிறுபான்மையினரில் இருந்து ஒருவரைத்தான், சிறுபான்மையினருக்கு நம்பிக்கை வரும்படி சிறுபான்மை நலத்துறை அமைச்சராக நியமிக்கபடவேண்டும்; அவர் தான் கிழக்கு மற்றும் மேற்கு வங்காள அரசுகளுக்கு தொடர்பாளராக இருப்பார்.
நூருல் அமின் அரசின் அக்கறையின்மை25. என்னுடைய ஒரு பொது அறிக்கையில், டி.என் பாராரியை சிறுபான்மையினரின் சார்பான அமைச்சராக நியமித்தது எந்த நம்பிக்கையையும் கொண்டுவரவில்லை என்பதைக் கூறினேன். மாறாக அது சிறுபான்மையினரின் மனதில் நூருல் அமின் அரசின் மேல் மிச்சமிருந்த கொஞ்ச நஞ்ச எதிர்ப்பார்ப்புகளையும் நம்பிக்கையையும் உடைத்தது என்பதைச் சொல்லி இருந்தேன். நூருல் அமினின் அரசு டெல்லி ஒப்பந்தத்தை நடைமுறைக்குக் கொண்டு வருவதில் விருப்பம் இல்லாது இருப்பதோடு மட்டுமல்லாமல் டெல்லி ஒப்பந்தத்தின் முதன்மை விதிகளை தோற்கடிக்க விரும்பியது என்றும் எனது அறிக்கையின் மூலம் நான் கூறினேன்.

bangladesh-jihad-islam_dead-hindus

நான் திரும்பவும் சொல்கிறேன். டி.என் பாராரி அவரை மட்டும் தான் முன்னிறுத்துகிறார், வேறு யாரையும் அல்ல. அவர் வங்காள சட்டசபைக்கு காங்கிரஸ்ஸின் சீட்டிலும் அதன் பணம் மற்றும் அமைப்பு பலத்திலும் தான் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் பட்டியல் வகுப்பு குழு வேட்பாளர்களை எதிர்த்தவர். அவருடைய தேர்தலுக்கு சில நாட்களுக்குப் பிறகு காங்கிரஸுக்குத் துரோகம் செய்து விட்டுப் பட்டியல் வகுப்பு குழுவில் சேர்ந்துகொண்டார். அவர் அமைச்சராக நியமிக்கப்பட்டவுடன் குழுவில் இருக்கும் தகுதியையும் இழந்துவிட்டார். பராரியின் முந்தைய செயல்கள், தகுதிகள், நடத்தைகள் ஆகியவை டெல்லி ஒப்பந்தத்தில் சொல்லப்பட்ட ஒரு அமைச்சர் பதவிக்கு அவர் தகுதியானவர் அல்ல என்று சொல்லும் என் அறிக்கையை எனக்குத் தெரிந்தவரையில் கிழக்கு வங்காள இந்துக்கள் ஒப்புக்கொள்வார்கள்.
26. அந்த பதவிக்கு நான் நூருல் அமீனிடம் மூன்று பெயர்களை பரிந்துரைத்திருந்தேன். நான் பரிந்துரைத்ததில் ஒருவர், எம்.ஏ, எல்எல்.பி. முடித்து டாக்கா உயர் நீதிமன்றத்தின் வழக்குரைஞர் ஆக பணிபுரிபவர். அவ்ர் பஷல் ஹக் அமைச்சவரையில் முதல் நான்கு வருடம் பணிபுரிந்தவர், ஆறு வருடம் தலைவராக கல்கத்தா நிலக்கரி நிறுவனத்தில் பணியாற்றியவர், மேலும் ஆறு வருடம் மூத்த துணைத்தலைவராக பட்டியல் வகுப்பு குழுவிற்கு பணியாற்றியவர். நான் பரிந்துரைத்ததில் இரண்டாவது நபர், எம்.ஏ, எல்எல்.பி. அவர் ஏழு வருடம் சட்ட மேலவையில் உறுப்பினராக பணியாற்றியவர்.எனக்கு தெரியவேண்டிய விஷயம் என்னவென்றால் என்ன காரணங்களுக்காக நூருல் அமின்  இந்த இரண்டு நபர்களில் ஒருவரை அமைச்சராக நியமிப்பதை விட்டு விட்டு நான் சரியான காரணங்களை முன்வைத்து எதிர்க்கும் ஒரு நபரை அமைச்சராக நியமித்தார் என்பது தான்.மாற்றிச்சொல்வது பற்றிய எந்த பயமும் இல்லாமல் இதைச் சொல்கிறேன், நூருல் அமீனின் பாராரியை அமைச்சராக நியமிக்கும் முடிவு டெல்லி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவது பற்றி எந்த நடவடிக்கையும் எடுக்காததின் முடிவான நிருபணம் ஆகும். கிழக்கு வங்காளத்தில் இந்துக்கள் அவர்களின்  உயிர், சொத்து, உடைமைகள், கவுரவம், மதம் பற்றி எந்த பயமும் இல்லாமல் வாழ்வதுதான் அந்த டெல்லி ஒப்பந்தம் உருவாவதற்கான முதன்மை காரணம் ஆகும்.
இந்துக்களை கசக்கி பிழியும் அரசின் திட்டம்27. இந்த இடத்தில் உங்களிடம் ஓரிரு முறைக்கு மேல் சொன்னதான, கிழக்கு வங்காள அரசு இன்னமும் அந்த மாநிலத்தில் இருக்கும் இந்துக்களை கசக்கி பிழியும் திட்டத்தை நன்கு திட்டமிட்டு நடைமுறை படுத்தி வருகிறது என்பதை திரும்பவும் சொல்ல விரும்புகிறேன். இந்துக்களைப் பாகிஸ்தானில் இருந்து விரட்டியடிக்கும் திட்டம், நன்றாக் திட்டமிட்டப்பட்டு நடைமுறைப்பட்டுத்தப்பட்ட திட்டம். வெற்றிகரமாக மேற்கு பாகிஸ்தானில் (இன்றைய பாகிஸ்தான்) செயல்படுத்தப்பட்டுவிட்டது. அதுவே இப்போது கிழக்கு பாகிஸ்தானிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.டி.என் பாராரி யை அமைச்சராக நியமித்ததும் அந்த விஷயத்தில் நான் செய்த பரிந்துரைகளுக்கு கிழக்கு வங்காள அரசு தந்த மோசமான விளக்கமும் இஸ்ஸாமிய அரசு என்று அவர்கள் அழைக்கும் அரசு எப்படி இருக்கும் என உறுதி செய்கிறது. இந்துக்களுக்கு பாகிஸ்தான் முழு திருப்தியையோ அல்லது முழு பாதுகாப்பையோ அளிக்கவில்லை. அவர்கள் இப்போது இந்து அறிவாளிகளை துரத்த முயற்சி செய்கிறார்கள். ஏனென்றால் அப்போது தான் பாகிஸ்தானின் சமூக,அரசியல், மற்றும் பொருளாதார வாழ்க்கை இந்து அறிவாளிகளால் மாற்றம் அடையாமல் இருக்கும்.

bangladesh-genocide-hindu-skulls

இணை ஓட்டுமுறையை தவிர்க்கும் செயல்கள்
28. எனக்குப் புரியாத விஷயம் என்னவென்றால் ஓட்டுமுறை பற்றிய கேள்வி இன்னமும் முடிவாகாமல் இருப்பது தான். சிறுபான்மை சப் கமிட்டி நிறுவப்பட்டு மூன்று வருடங்கள் ஆகின்றன. அது மூன்று முறை கூடி இருக்கிறது. இணை ஓட்டுப் பதிவா அல்லது பொது ஓட்டுப்  பதிவா எனும் விவாதம் கடந்த டிசம்பரில் கூடிய கமிட்டியின் விவாத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.அதில் எல்லா அங்கீகரிக்கப்பட்ட சிறுபான்மையினரும் கலந்து கொண்டு அவர்களின் இணை ஓட்டு பதிவிற்கும், கூடவே பின் தங்கிய மைனாரிட்டிகளுக்கு இடங்கள் ஒதுக்கப்படவேண்டும் என்பதற்கும் அவர்களின் ஆதரவைத் தெரிவித்தனர். கடந்த ஆகஸ்டில் நடந்த இந்த கமிட்டியின் மற்றொரு கூட்டத்திலும் இது விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. ஆனால், இந்த விஷயம் பற்றிய எந்த விவாதமும் இல்லாமல் அந்த கூட்டம் காலவரையற்று ஒத்திவைக்கப்பட்டது. இந்த முக்கிய விஷயத்தில் பாகிஸ்தானின் ஆட்சியாளர்கள் செய்யும் இந்த தவிர்க்கும் நடவடிக்கைகளின் பின் இருக்கும் காரணத்தை பற்றித் தெரிந்து கொள்ள எந்த சிரமமும் இருக்கவில்லை.
இந்துக்களின் மோசமான எதிர்காலம்.29. டெல்லி ஒப்பந்தத்தின் விளைவாக கிழக்கு வங்காளத்தில் இந்துக்களின் தற்போதைய மற்றும் எதிர்காலம் பற்றி பேசும் போது தற்போதைய நிலவரம் ஆனது எந்த வித திருப்தியும் அளிக்காததோடு நிச்சியமற்றதாக இருக்கிறது, எதிர்காலமோ இருண்டும் பயமளிப்பதாகவும் இருக்கிறது. கிழக்கு வங்காள இந்துக்களின் நம்பிக்கை எந்த வித்திலும் கூட்டப்படவில்லை. கிழக்கு வங்காள அரசாலும் முஸ்ஸீம் லீக் தலைவர்களாலும் டெல்லி ஒப்பந்தம் ஆனது ஒரு காகிதக்கழிவு போலவே நினைக்கப்பட்டது. கிழக்கு வங்காளத்தில் இருந்து பெரும் எண்ணிக்கையில் குறிப்பாக பட்டியல் வகுப்பினர் கிழக்கு வங்காளத்திற்கு வருவது அங்கு இந்துக்கள் இழந்த நம்பிக்கை திரும்பி விட்டதற்கான அறிகுறி இல்லை. அது மேற்கு வங்காளத்திலும் இந்தியாவின் மற்ற பகுதிகளும் அவர்களுக்கு நல்ல வாழ்க்கை கிடைக்கவில்லை என்பதை காட்டுகிறது. கூடவே அகதிகள் முகாமில் இருக்கும் வாழ்க்கை ஆனது அவர்களை அவர்களின் வீட்டிற்கு திரும்ப செல்ல வலியுறுத்துகிறது. மேலும் அவர்கள் தங்களுடைய வீட்டில் இருந்து விலையுர்ந்த பொருட்களை திரும்ப எடுத்து போகவும் தங்களுடைய சொத்தை விற்றுவிட்டு போகவும் தான் வருகிறார்கள். சமீப காலமாக கிழக்கு வங்காளத்தில் எந்த வித மதக்கலவரம் நடைபெறாமல் இருப்பதற்கு டெல்லி ஒப்பந்தம் காரணம் இல்லை. இது எந்த வித ஒப்பந்தம் இல்லாமல் இருந்திருந்தால் கூடவே இது போலவே இருந்திருக்கும்.
30. டெல்லி ஒப்பந்தம் ஆனது ஒரு முடிவானது அல்ல என்பது இங்கு ஒத்துக்கொள்ளப்படவேண்டும். அது இந்தியா மற்றும் பாகிஸ்தானிற்கு இடையில் இருக்கும் பல பிரச்சினைகளையும் சிக்கல்களையும் தீர்ப்பதற்கு ஏதுவான காரணிகளை உருவாக்கும் எண்ணத்துடன் எழுதப்பட்டது. ஆனால் இந்த ஆறு மாத காலத்தில் எந்த விதமான சிக்கலோ அல்லது பிரச்சினையோ தீர்க்கப்படவில்லை. ஆனால் அதற்கு மாறாக மதவெறுப்பு பரப்புரையும் இந்தியாவிற்கு எதிரான பரப்புரையும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் மூழுமூச்சில் பாகிஸ்தானால் செய்யப்பட்டது. மூஸ்ஸீம் லீக்கால் பாகிஸ்தான் முழுவதும் கொண்டாடப்பட்ட காஷ்மீர் நாள் கொண்டாட்டங்கள், இந்தியாவுக்கு எதிரான மத வெறுப்பு பரப்புரைக்கு நல்ல உதாரணம் ஆகும். பாகிஸ்தான் பஞ்சாப் இன் ஆளுநரால் பேசியது பொழுது இந்திய முஸ்ஸீம்களின் பாதுகாப்பிற்கு பாகிஸ்தானுக்கு ஒரு உறுதியான ராணுவம் தேவைப்படும் என்று சொன்னது இந்தியா பற்றி பாகிஸ்தானின் அணுகுமுறையை எடுத்துக்காட்டுகிறது. இது இரண்டு நாடுகளுக்கு இடையே மேலும் பிரச்சினைகளை அதிகரிக்கவே செய்யும்.
கிழக்கு வங்காளத்தில் இன்று என்ன நடக்கிறது31. இன்று கிழக்கு வங்காளத்தின் நிலை என்ன? ஐம்பது லட்சம் இந்துக்கள் இந்திய பிரிவினையின் பின் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார்கள். இப்படி இந்துக்கள் வெளியேறிவதற்கு பலகாரணங்கள் இருக்கின்றன, அதில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற கலவரமும் ஒன்று. இந்து வழக்குரைநர்களை, மருத்துவர்களை, கடைகாரர்களை, வியாபாரிகளை, புறக்கணித்த முஸ்ஸீம்களின் செயலால் இந்துக்கள் மேற்கு வங்காளத்திற்கு அவர்களின் வாழ்வாதாரத்தை தேடி வெளியேறினார்கள். இந்து வீடுகளில் வாடகை இல்லாமல் குடியிருப்பது, சட்டரீதியான நடைமுறை ஏதும் இல்லாமல் வீடுகளை ஆக்கிரமித்து கொள்வது போன்ற செயல்கள் இந்துக்களை இந்தியாவிற்கு போக வைத்தது. இந்து வீடு உரிமையாளர்களுக்கு வாடகை தரும் பழக்கம் வெகு நாட்களுக்கு முன்பே நிறுத்தப்பட்டது. கூடவே அன்சார்கள் (உள்நாட்டு பாதுகாவலர்கள்) இந்துக்களின் உடமைகளுக்கும் உயிருக்கும் பெரும் கேடாக இருக்கிறார்கள் என எனக்கு பல புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. கல்வித்துறையால் இஸ்ஸாமிய மதமாக்கப்படும் கல்வி முறையால் மேல் நிலை பள்ளி மற்று கல்லூரிகளின் ஆசிரியர்கள் அவர்களின் பழைய சொந்த முறைகளை விட்டுவிட்டு இந்தியாவுக்கு தப்பி ஓடினார்கள். இதன் விளைவாக பல கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. கொஞ்ச காலம் முன்பு எனக்கு கிடைத்த தகவலின் படி கல்வித்துறை மேல்நிலை பள்ளிகளுக்கு, எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் எல்லா ஆசிரியர்களும் மாணவர்களும் பள்ளி துவங்கும் முன் குரான் சொல்வதில் கண்டிப்பாக கலந்து கொள்ளவேண்டும் என சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

வங்க வன்முறைகள்

இன்னொரு அறிக்கையோ பள்ளிகளில் உள்ள கட்டிடங்களை இந்த ஜின்னா, இக்பால், லியாகத் அலி, நஜிமுதீன் போன்ற பன்னிரண்டு சிறந்த முஸ்ஸீம்களின் பெயரில் இருக்கவேண்டும் என சொல்லியிருக்கிறது. சமீபத்தில் நடைபெற்ற கல்வியாளர்கள் மாநாட்டில் பேசிய அதிபர், கிழக்கு வங்காளத்தில் இருக்கும் 1500  ஆங்கில மேல்நிலை பள்ளிகளில் 500 மட்டுமே இயங்குவதாக சொல்லியிருக்கிறார். மருத்துவர்கள் வெளியேறியதால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க எந்த விதமான வழிமுறைகளும் இல்லை. இந்து கடவுள்களுக்கு வழிபாடு செய்துகொண்டிருந்த அனைத்து பூஜாரிகளும் வெளியேறிவிட்டனர். முக்கியமான வழிபாட்டு தலங்கள் கைவிடப்பட்டுள்ளன. இதன் விளைவாக இந்துக்கள் அவர்களின் மதத்தை பின்பற்றும் வழி இல்லாமல் இருப்பதோடு மட்டுமல்லாது அவர்களின் சமூக பழக்கவழக்கங்களான திருமணம் போன்றவற்றை செய்யக்கூட வழி இல்லாமல் இருக்கிறார்கள். கடவுள்களின் திருவுருவச்சிலைகள் செய்துகொண்டிருந்த தச்சர்கள், ஓவியர்கள் முதலானோரும் வெளியேறி விட்டார்கள். பஞ்சாயத்து யூனியன்களில் இந்து தலைவர்கள் காவல்துறையினர் மற்றும் அரசு அதிகாரிகளின் துணையுடன் துரத்தியடிக்கப்பட்டு அந்த இடங்களுக்கு முஸ்ஸீம்கள் வந்தார்கள். மிச்சமிருந்த ஒரு சில இந்து அரசு அதிகாரிகளின் வாழ்க்கையானது, அவர்களை விட அனுபவம் குறைவான முஸ்ஸீம்களுக்கு பதவி உயர்வு தருவதாலும் எந்த வித காரணம் இல்லாமல் வேலையில் இருந்து நீக்கப்படுவதாலும், மோசமாக இருக்கிறது. சமீபத்தில் சிட்டகாங்கில் அரசு பொது வழக்குரைநர் பதவியில் இருந்த ஒரு இந்துவை பதவியில் இருந்து  நீக்கப்பட்டார். ஸ்ரீஜகுடா நெல்லி சென்குப்தா (Srijukta Nellie Sengupta) எனப்படும் அவர் மேல் எந்த விதமான முஸ்ஸிம்களுக்கு எதிராக நடந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டோ வைக்கப்படவில்லை.
இந்துக்கள் முற்றிலுமாக விலக்கப்பட்டனர்.32. திருட்டுகளும் கொள்ளைகளும் மேலும் கொலைகளும் முன்போலவே நன்றாக நட்ந்து கொண்டு உள்ளன. காவல் துறை அதிகாரிகள் இந்துக்களால் செய்யப்படும் பாதிக்கும் மேற்பட்ட புகார்களை பதிவே செய்வதில்லை. இந்து பெண்களை கடத்துவதும் கற்பழிப்பு செய்வதும் ஓரளவுக்கு குறைந்துவிட்டது என்பது சரியே. ஆனால் உண்மை என்வென்றால் 12 இல் 30 வயதுக்குட்பட்ட இந்து பெண்கள் இப்போது கிழக்கு வங்காளத்தில் இல்லாமல் போனது தான்.கிராமங்களின் வசிக்கும் ஒரு சில பட்டியல் வகுப்பு இந்து பெண்களும் கூட இந்த முஸ்ஸீம் குண்டர்களால் கற்பழிக்கப்பட்டனர். என்னிடம் வந்த புகார்களை வைத்து பார்த்தால் முஸ்ஸீம் குண்டர்கள் பெரும் அளவில் இந்து பட்டியல் வகுப்பு பெண்களை கற்பழித்து உள்ளனர். சந்தைகளில் இந்துக்களால் விற்கப்படும் சணல் மற்றும் மற்றைய விவசாய பொருட்களுக்கு முஸ்ஸீம் வியாபாரிகள் ஒரு பொழுதும் முழு விலை தருவதில்லை. இந்துக்களை பொறுத்தவைரை சமநீதி, சட்டம், ஒழுங்கு என்பவை பாகிஸ்தானில் இல்லாமல் போய்விட்டன.

Series Navigationபாகிஸ்தானிலிருந்து தப்பி வந்த இந்து தலித் அமைச்சர் ஜோகேந்திர மண்டலின் ராஜினாமா கடிதம் – 1பாகிஸ்தானிலிருந்து தப்பி வந்த இந்து தலித் அமைச்சர் ஜோகேந்திர மண்டலின் ராஜினாமா கடிதம் – 3 – இறுதி பகுதி
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *