கோட்ஸே, பிரபாகரன்: தீவிரவாதம், பயங்கரவாதம், மத பயங்கரவாதம், மத அடிப்படைவாதம், இனவாதம் – சில குழப்பங்கள் சில விளக்கங்கள் சில குறிப்புகள்

This entry is part 11 of 14 in the series 19 மே 2019

2002 குஜராத் கலவரத்தின் போது, பாஜகவை குறிவைத்து நடத்தப்பட்ட ஊடகப்போரில் முதலில் உபயோகிக்கப்பட்ட வார்த்தை ”காவி பயங்கரவாதம்”. இந்த வார்த்தையை பிரவீண் சுவாமி என்ற பத்திரிக்கையாளர் தி இந்து பத்திரிக்கை நடத்தும் பிரண்ட்லைன் என்ற பத்திரிக்கையில் உபயோகித்தார் என்று விக்கி சொல்லுகிறது. உண்மையா என்று தேடிப்பார்த்தேன். இணையத்தில் கண்டுபிடிக்கமுடியவில்லை.

விக்கி இணையப்பக்கம். https://en.wikipedia.org/wiki/Saffron_terror
(விக்கி இணையப்பக்கத்தை நான் மிகப்பெரிய ஆதாரமாக எடுத்துகொள்ளவில்லை. ஆனால் செய்தி தொகுப்பாக எடுத்துகொள்கிறேன்)

2008இல் மலேகான் குண்டுவெடிப்புகளுக்கு பின்னர் அதில் சம்பந்தப்பட்டவர்களாக சில இந்துக்களை கைது செய்தது இந்திய போலீஸ். இதன் பின்னர் பேசிய பி.சிதம்பரம் இந்தியர்கள், காவி பயங்கரவாதத்திடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று அறிவுறுத்தினார்.

காங்கிரஸ் தலைவரான ராகுல்காந்தி, இந்தியா எதிர்நோக்கும் மிகப்பெரிய பயங்கரவாதம் இந்து பயங்கரவாதம் தான் என்று அமெரிக்கர்களிடம் பேசியதை விக்கி லீக்ஸ் பதிவு செய்திருக்கிறது.

ஆர்.வி.எஸ் மணி என்ற முன்னால் அதிகாரி, ”இந்து பயங்கரவாதம் – உள்துறை அமைச்சகத்தில் உள்ளே நடந்தவை” என்ற பெயரில் புத்தகம் வெளியிட்டார். அதில் எவ்வாறு சோனியா காந்தி தலைமையில் இருந்த யுபிஏ அரசாங்கம் ”இந்து பயங்கரவாதம்” பற்றிய ஒரு கதையாடலை முன்னிருத்த வேண்டும் என்று திட்டமிட்டது என்பதை விளக்கியிருந்தார்.

இந்து பயங்கரவாத செயல்களாக முன்னிருத்தப்படுபவை ஆறு நிகழ்வுகள்.

 1. 1999 இல் கிரஹாம் ஸ்டெயின்ஸ் என்ற ஆஸ்திரேலிய பாதிரியார் அவரது குடும்பத்தோடு கொளுத்தப்பட்டது.
 2. 2002 குஜராத் கலவரம்
 3. 2007இல் நடந்த சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்புகள்
 4. 2007 அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு
 5. 2008 மலேகான் குண்டுவெடிப்பு
 6. 2007 மெக்கா மசூதி குண்டுவெடிப்பு

இத்தோடு சேர்ந்து கமலஹாசன் போன்றவர்கள், காந்தியை கொன்ற கோட்ஸே ஒரு இந்து பயங்கரவாதி என்றும் ஆரம்பித்திருக்கிறார்கள்.

இதற்கு எதிர்வினையாக இணையத்தில் பேசியிருக்கும் ரங்கராஜ் பாண்டே, மாரிதாஸ் போன்றவர்கள், மதத்தோடு பயங்கரவாதத்தை பிணைப்பது தவறான செயல் என்றும், அப்படி இணைத்தால், இஸ்லாமியர்கள் செய்யும் பயங்கரவாத செயலை, இஸ்லாமிய பயங்கரவாத செயல் என்று சிலர் சொல்லிவிடுவார்கள் என்றும், அதனால், இந்து மதத்தை இந்த பயங்கரவாத செயல்களோடு இணைக்கக்கூடாது என்றும் கூறியிருக்கிறார்கள்.

முட்டையில் மயிர் பிடுங்கும் வேலை போல தோன்றினாலும் இந்த வார்த்தைகளை நாம் அதன் விளக்கத்தின் அடிப்படையில் புரிந்துகொள்ளவேண்டும் என்று கருதுகிறேன். இல்லையேல் வார்த்தைகளின் பொருளை விட அது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற அடிப்படையிலேயே பேசப்படும் குழப்பத்தில் நாம் ஆழ்வோம்.

மத அடிப்படைவாதம் என்பது என்ன? Religious fundementalism என்பது எளியதாக புரிந்துகொள்ளக்கூடியது. உதாரணமாக ஒரு மதத்தை சார்ந்த ஒருவர், அந்த மதத்தின் அடிப்படை கொள்கைகளை பின்பற்றுவதே மத அடிப்படைவாதம்.

கொல்லாமை என்பதை எடுத்துகொள்வோம்.

சமணர்கள் கொல்லாமை என்ற அடிப்படை கருதுகோளை கொண்டவர்கள். ஈ எறும்புக்கு கூட துன்பம் விளைவிக்கக்கூடாது என்று விசிறிக்கொண்டே செல்லும் சமணத்துறவிகள் மத அடிப்படைவாதிகள். சமணர்கள் இதனால் பூண்டு, உருளைக்கிழங்கு போன்று பூமிக்கு அடியில் விளையும் காய்கறிகளை உண்ணமாட்டார்கள். ஏனெனில் அவ்வாறு நோண்டும்போது புழுக்கள் இறக்க காரணமாக ஆகிவிடுவோம் என்பது அவர்கள் கருத்து.

யாகம் வளர்த்து அதில் பலியிடுவது இந்துக்களின் கொள்கை. இதனை ரிக் வேதம் முதற்கொண்டு நமது கோவில்களில் ஆடுகள் பலி கொடுப்பது வரை இந்துக்களின் கொள்கை மரபு, அடிப்படையாக பார்க்கலாம். யாகம் வளர்த்து கோவில்களில் பலி கொடுப்பதை தவிர வேறு இடங்களில் விலங்குகள் மீது அஹிம்சையை ரிக் வேதம் முதற்கொண்டு போதிக்கின்றன இந்து கொள்கைகள். ஆடு பலி கொடுக்கக்கூடாது என்று அரசாங்கம் தடுத்தும் பலி கொடுப்பது என்பதை தொடர்ந்து செய்யும் இந்துக்களை மத அடிப்படைவாதிகள் என்று சொல்லலாம்.

மத்யமா பிரதிபத் என்னும் (மைய பாதை?) என்று உரைக்கும் புத்தர் கொல்லாமையை வலியுறுத்தினாலும், அதற்காக தன்னுயிரை மாய்த்துகொள்வதை ஆதரிக்கவில்லை. எல்லாவற்றிலும் அளவு மீறாமல் இருப்பதே சரியான கொள்கை என்று உரைக்கிறார். இது ஏறத்தாழ இந்து கொள்கையையே வலியுறுத்துவதாக பார்க்கலாம்.

ஆகவே மத அடிப்படைவாதம் என்பது தான் கொண்ட மதத்தின் கொள்கைகளை கடுமையாக பின்பற்றுவதையே குறிப்பிட முடியும். ஒரு சமணர் வேக வைத்த உருளைக்கிழங்கு மட்டுமே கிடைக்கும் ஒரு இடத்தில், அதனை சாப்பிடமுடியாது என்று பட்டினி இருப்பதை இப்படிப்பட்ட ஒரு மத அடிப்படைவாதம் என்று சொல்லலாம்.

மத அடிப்படைவாதம் என்பதில் மேலே கொல்லாமை என்ற ஒரு கருத்தை மட்டுமே எடுத்து பேசினாலும் மத அடிப்படைவாதம் வெறுமே வன்முறையை மட்டுமே பேசுவதல்ல. மதத்தின் கொள்கைகளை விடாப்பிடியாக பிடித்துகொண்டிருக்கும் எல்லாமே மத அடிப்படைவாதம் தான். அது ஐந்து வேளை தொழுவதாக இருந்தாலும் சரி, சந்தியாவந்தனம் செய்வதாக இருந்தாலும் சரி, புத்தகம் சொல்லுகிறது என்று தசமபாகம் கொடுப்பதாக இருந்தாலும் சரி .. இவை எல்லாமே மத அடிப்படைவாத செயல்கள்தான்.

தீவிரவாதம் என்பது பொதுவாக வன்முறையை கையிலெடுத்து கொள்வதை பேசுவது. தான் கொண்ட கொள்கையை வன்முறை மூலம் நிலைநாட்டுவதை தீவிரவாதம் என்று கூறலாம்.

தீவிரவாதம் என்பதை வலது தீவிரவாதம், இடது தீவிரவாதம், மைய தீவிரவாதம் என்று பிரித்து பேசுவார்கள். (உதாரணமாக பாசிசம் என்பது மைய தீவிரவாதம்.. நீங்கள் நினைப்பது போல வலது தீவிரவாதம் அல்ல)

தற்போது மத தீவிரவாதமும் பேசப்படுகிறது. மத தீவிரவாதத்தை பெரும்பாலும் வலது தீவிரவாதம் என்று வரையறுத்தாலும் அது சரியல்ல.

தீவிரவாதத்துக்கு தெளிவான இலக்கு உண்டு.

தீவிரவாதம் என்பது எதிர்தரப்பு என்பதை தெளிவாக வரையறுக்கிறது.
அந்த எதிர்தரப்புடன் எந்த சமரசத்தையும் நிராகரிக்கிறது.
தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறது.
சில வேளைகளில் வன்முறையை கையில் எடுக்கிறது.
தன்னுடைய குழுக்குள்ளேயே இருக்கும் கருத்து வேறுபாட்டை சகித்துகொள்ளாது.
எதிர்தரப்பில் இருப்பவர்கள் மனிதர்கள் அல்ல, விலங்குகள் அல்லது பேய்கள் போன்ற கருத்தை பரப்புவது.

உதாரணமாக கம்யூனிஸ்டுகள் இந்த மேற்கண்ட நிலைப்பாடுகளை எப்படி எடுக்கிறார்கள் என்று பார்க்கலாம். கம்யூனிஸம் முதலாளிகள் என்பவர்களை தெளிவாக வரையறுக்கிறது. அவர்களுடன் எந்த சமரசத்தையும் தொழிலாள வர்க்கம் செய்துகொள்ளக்கூடாது என்று சமரசத்தை நிராகரிக்கிறது. சிலவேளைகளில் வன்முறையை கையிலெடுக்கிறது. தன் குழுக்குள்ளே இருக்கும் கருத்துவேறுபாட்டை சகித்துகொள்வதில்லை. லெனின் டிராட்ஸ்கி போன்றவர் தொட்டு சமீபத்திய கம்யூனிஸ இயக்கங்கள் வரை இதனை பார்க்கலாம். எதிர்தரப்பில் உள்ள முதலாளிகளை மனிதர்கள் என்று பார்க்காமல், விலங்குகளாகவோ அல்லது பேய்களாகவோ உருவகப்படுத்துகிறது.

இதே போல இஸ்லாமும் முஸ்லீம்கள் காபிர்கள் என்று பிரித்து வரையறை செய்கிறது. காபிர்களுடன் சமரசத்தை நிராகரிக்கிறது. சிலவேளைகளில் வன்முறையை கையில் எடுக்கிறது. தன்னுடைய குழுவுக்குள்ளேயே இருக்கும் கருத்து வேறுபாட்டை சகித்துகொள்வதில்லை (ஷிஆக்கள், அஹ்மதியாக்கள், சன்னிகள் ஒவ்வொருவரும் தன்னுடைய நிலைப்பாட்டையே சரியானதாகவும் மற்றவர்களை காபிர்களாகவும் சித்தரிப்பதை காணலாம்) காபிர்களை விலங்குகள் போலவும் பேய்கள் போலவுமான கருத்தை பரப்புகிறது.

இதுவே யூதத்திலும் அதன் வழி வந்த கிறிஸ்துவத்திலும் உள்ளக்கிடக்கையாக இருக்கிறது. கிறிஸ்துவம் யூதர்களை அவ்வாறு சித்தரித்ததாலேயே யூதர்கள் மீதான இனப்படுகொலை நடத்தப்பட்டது. கிறிஸ்துவம் அப்படி கிறிஸ்துவரல்லாதவர்களை சித்தரித்ததாலேயே வட அமெரிக்காவிலும் தென் அமெரிக்காவிலும் ஆப்பிரிக்காவிலும் இனப்படுகொலை அடிமைமுறை ஆகியவற்றை சர்ச்சுகளும் சர்ச்சுகளின் ஆசீர்வாதத்தின் கீழ் போர்ச்சுக்கீசிய, ஸ்பானிய மற்றும் இதர ஐரோப்பிய நாடுகள் செய்தன.

பயங்கரவாதம் என்பது என்ன?
தீவிரவாதம் முற்றி, அப்பாவிகளை கொல்ல ஆரம்பிக்கும்போது அது பயங்கரவாதமாகிறது.
பயங்கரவாதத்தின் முதல் குறிக்கோள், திகில் உணர்வை பரப்புவதே.

ஷியா பிரிவினரது மசூதிக்குள் கும்பிட்டுகொண்டிருப்பவர்களை தற்கொலை படையாக குண்டுகளை வைத்துகொண்டு உள்ளே சென்று கொல்லுபவர்கள், ஒவ்வொரு ஷியா பிரிவினரும் தனது மசூதிக்கு செல்லவே பயப்படவேண்டும் என்ற திகில் உணர்வை பரப்புகிறார்கள். அதற்காகவே ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே இருக்கும் ஒரு இடத்தை தேர்வு செய்து அங்கு குண்டு வெடிக்கிறார்கள்.

பயங்கரவாதம் என்பது தனிநபர் தாக்குதல் அல்ல. ஒரு குறிப்பிட்டவரை கொல்லுவது கொலை. கிரகாம் ஸ்டெயின்ஸை கொன்ற தாராசிங் செய்தது பயங்கரவாதம் அல்ல. அது ஒரு கொலை. காந்தி என்ற தனி நபரை கொல்லுவதும், கிரகாம் ஸ்டெயின்ஸ் என்ற தனிநபரை கொல்லுவதும், ராஜீவ் காந்தி என்ற தனிநபரை கொல்லுவதும் பயங்கரவாதம் அல்ல. அது assasination. அது தனிநபர் கொலை.

பயங்கரவாதத்தின் நோக்கம், எதிர்தரப்பை சேர்ந்த அப்பாவி மக்களை அவர்கள் எதிர்பாராத நேரத்தில் கொன்று, அவர்கள் எங்கேயும் பாதுகாப்பாக இருக்கமுடியாது என்ற திகில் உணர்வை பரப்புவதுதே.

9/11 இல் இரட்டை கோபுரம் தாக்கப்பட்டது, 26/11 இல் மும்பையில் அஜ்மல் கஸாப் போன்றவர்கள் அப்பாவி மக்களை கொன்றது, 2002இல் அக்ஸர்தாம் கோவிலில் புகுந்து அங்கே வழிபட்டுகொண்டிருந்த 30 பேர்களை படுகொலை செய்தது, 2015இல் ஷிஆ பிரிவினர் மசூதியில் குண்டு வைத்து வழிபடுபவர்கள் 40 பேரை கொன்றது போன்றவை பயங்கரவாத செயல்கள்.

மத பயங்கரவாதம் என்பது மதத்தின் அடிப்படை கொள்கைகளால் தூண்டப்பட்டு, அந்த மதம் எவரை எதிரிகள் என்று வரையறுக்கிறதோ அவர்கள் மீது பயங்கரவாத செயல்களை செய்வதே மத பயங்கரவாதம்.

உதாரணமாக யூத மதம், யூதரல்லாதவர்களை கோயிம் என்று வரையறுக்கிறது. இஸ்லாமியர்களுக்கு ஷரியா என்ற சட்டம் எவ்வாறு குரான், ஹதீஸ் புத்தகங்கள் மீது உருவாக்கப்பட்டுள்ளதோ அதே போல, யூதர்களுக்கு ஹலாக்கா என்ற சட்டம் Jewish Halakha, தோரா எனப்படும் பைபிள் பழைய ஏற்பாடு மீதும், தால்முது என்னும் யூத அறிஞர்களின் கருத்து தொகுப்பின் மீதும் உருவாக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலிய சட்டமும், ஹலாக்காவும் ஒரே விசயத்தில் இரண்டு கருத்துக்களை கொண்டிருந்தால், ஹலாக்காவையே பின்பற்றுவோம் என்று சொல்லும் யூத மத அடிப்படைவாதிகள் இஸ்ரேலில் இருக்கிறார்கள். யூத ஹலாக்காவின் படி யூதரல்லாத அப்பாவி குழந்தைகளை கொல்லுவது சரியானது. அதனை இஸ்ரேலிய சட்டமன்றமான நெஸ்ஸெட் உருவாக்கிய சட்டம் மறுக்கிறது.

இது பற்றிய யூத இதழான டிக்குன் பத்திரிக்கையில் வந்த கட்டுரையை காணலாம்.
https://www.tikkun.org/jewish-ayatollahs

இது போன்று யூத தெய்வத்தையும், கிறிஸ்துவ மதத்தின் தெய்வத்தையும் ஒப்புகொள்ளாவதர்களை, அழிக்க வேண்டும் என்ற வசனங்கள் பைபிள் முழுவதும் விரவிக்கிடக்கின்றன.

உதாரணமாக சாமுவேலின் இந்த பக்கத்தை பார்க்கலாம்.

1 சாமுவேல் அதிகாரம் 15

And Samuel said to Saul, “The Lord sent me to anoint you king over his people Israel; now therefore listen to the words of the Lord. 2 Thus says the Lord of hosts, ‘I have noted what Amalek did to Israel in opposing them on the way when they came up out of Egypt. 3 Now go and strike Amalek and devote to destruction all that they have. Do not spare them, but kill both man and woman, child and infant, ox and sheep, camel and donkey.’”

1 சாமுவேல் அதிகாரம் 15
2 படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: இஸ்ரயேலர் எகிப்தினின்று வெளிவந்தபோது அமலேக்கியர் அவர்களை வழி மறித்ததற்காக அவர்களை நான் தண்டிக்கப் போகிறேன். [2]
3 ஆகவே சென்று அமலேக்கியரைத் தாக்கி, அவர்கள் உடைமைகளை அனைத்தையும் அழித்தொழியும். அவர்கள்மீது இரக்கம் காட்டாமல் ஆண்களையும், பெண்களையும், பிள்ளைகளையும், பாலகர்களையும், மாடுகள், ஆடுகள், ஒட்டகங்கள், கழுதைகள் அனைத்தையும் கொன்று விடும்”.

ஆனால் சாமுவேல், யூதர்களின் தெய்வமான கர்த்தர் சொன்னதை முழுமையாக பின்பற்றவில்லை. இரக்கத்துடன் ஆகாக் என்னும் அரசன், ஆட்டுக்குட்டிகள் போன்றவற்றை கொல்லாமல் விட்டுவிட்டார். இதற்காக யூதர்களின் தெய்வம் கர்த்தர் வருந்துகிறது.

10 அப்போது ஆண்டவரின் வார்த்தை சாமுவேலுக்கு அருளப்பட்டது. அவர் கூறியது:
11 “சவுலை அரசனாக்கியதற்காக நான் வருந்துகிறேன். ஏனெனில் அவன் என்னைப் பின்பற்றாமல் விலகிவிட்டான். என் வார்த்தைகளின்படி நடக்கவில்லை”. சாமுவேல் மனம் வருந்தி இரவெல்லாம் ஆண்டவரிடம் மன்றாடினார்.

கிறிஸ்துவ மதக்கொள்கையின் படி, இந்த கர்த்தராக இருந்ததும் இயேசுதான். ஆகவே இந்த வசனங்களை கிறிஸ்துவர்களும் பயன்படுத்துகின்றனர். கிறிஸ்துவர்களுக்கு உதவாத, அல்லது கிறிஸ்துவர்களை நிராகரிக்கும் மக்களை கொல்ல இந்த தெய்வத்தின் ஆணையாக இதனை கருதுகிறார்கள்.

இணைப்பு

தற்போது இந்த வசனங்கள் கிறிஸ்துவத்தை பரப்புபவர்களுக்கு, சங்கடங்களை கொடுத்தாலும், இதனை நியாயப்படுத்த கட்டுரை மீது கட்டுரையாக எழுதி, அது தெய்வத்தின் கட்டளை அதனை செய்தே ஆகவேண்டும், அதனை கேள்வி கேட்பது சரியல்ல என்று சொல்லுகிறார்கள்.

இதே போல இஸ்லாமிய மத கொள்கைகள் காபிர்களை கொல்ல சொல்லுகின்றன.
காபிர் என்பது அல்லாவை கும்பிடாதவர் அல்ல. முகம்மதுவிடம் அல்லா ஜிப்ரீல் மூலமாக பேசுகிறார் என்பதை ஒப்புகொள்ளாதவரே காபிர். நிராகரிப்பவர் அல்லது மறுப்பவர். அந்த கால குரேஷிகள் அனைவருமே அல்லாவை வணங்கியவர்களே. ஆனால், முகம்மது அல்லாவிடம் ஜிப்ரீல் மூலமாக பேசுகிறார் என்பதையோ அல்லது முகம்மதுவின் இதர போதனைகளையோ ஏற்கவில்லை. அதனால் அவர்கள் காபிர்கள் என்றானார்கள்.

இதனாலேயே இன்றும், ஷிஆக்களை ஒரு சில சன்னி மத தலைவர்கள் காபிர் என்று சொல்லுகிறார்கள். இதனால், அவர்களை கொல்லுவது சட்டப்பூர்வமாக சரியானதாக ஆகிவிடுகிறது. அதனாலேயே ஷிஆக்களின் மசூதிக்குள் புகுந்து தன்னுயிரை மாய்த்து பல ஷிஆக்களை கொல்ல முனைகிறார்கள். இதே போல அஹ்மதியாக்களை காபிர்கள் என்று அறிவிக்கிறார்கள்.

அல்லாவை வணங்கும் ஷிஆக்களும் அஹ்மதியாக்களும் காபிர்கள் என்று கொல்லத்தகுதியானவர்கள் என்றால், அல்லாவையே வணங்காத இந்துக்களும் கிறிஸ்துவர்களும் என்ன அடையாளத்தின் கீழ் வருவார்கள்?

ஆகையால் கிறிஸ்துவம், இஸ்லாம், யூதம் ஆகிய மதங்களின் பார்வையில் அந்த மதத்தில் இல்லாதவர் கொல்ல தகுதியானவர் ஆகிவிடுகிறார்.

இந்த பார்வை இல்லாதவை இந்திய மரபு மதங்கள். அதாவது ஜைனம், பௌத்தம், இந்து மதம் என்று இன்று அழைக்கப்படும் மதங்களின் தொகுப்பு (ஷண் மதங்கள் என்று அழைக்கப்படும் காணாபத்தியம், சாக்தம், சைவம், வைணவம், சௌர்யம், கௌமாரம்). உதாரணமாக கணபதியை முழுமுதல் தெய்வமாக வரிக்கும் காணாபத்தியத்தில் கணபதியை கும்பிடாதவர்களை கொல்ல வேண்டும் என்ற கருத்து கிடையாது.

ஆகையால் கீழ்த்தேய மதங்களை மேற்கத்திய மதங்களின் பார்வையில் பார்ப்பதும், அதன் படி இதனை வரையறுப்பதும் தவறானதும், குழப்பமானதும், தேவையற்றதும் ஆகும். ஆனால், மேற்கத்திய தத்துவவியலில் கரைதேறியவர்கள் கீழ்த்தேய மதங்களை ஆராயும்போது மேல்த்தேய மதங்கள் சொல்லுவது போல கீழ்த்தேய மதங்களும் இருக்கவேண்டும் என்று எதிர்பார்த்து அதன் படி அங்கும் இங்கும் இருக்கும் ஒரு சில வார்த்தைகளை தேடிப்பிடித்து மேல்த்தேய மதங்களின் வரையறைக்கும் கீழ்த்தேய மதங்களை திணிக்க முயல்கிறார்கள்.

இதனாலேயே வரலாற்றில் நடந்த சில அவல நிகழ்வுகளை மத ரீதியில் பார்த்து, இந்து மரபும் வன்முறை மிகுந்தது; இந்தியர்கள் வன்முறையாளர்கள்; இந்து பயங்கரவாதிகள் போன்ற கருத்துருவங்களை உருவாக்குகிறார்கள்.

முருகனை நம்பாதவர்களை கொல்லு என்று முருகனும் சொல்லவில்லை, எந்த முருக பக்தரும் சொல்லவில்லை என்னும்போது இந்துக்களின் வன்முறையை எப்படி வரையறுப்பது?

தமிழ்நாட்டில் முருகனை நம்பும் இரண்டு சாதிகள் சண்டை போட்டுகொள்கின்றன. அங்கே இருப்பது மத சண்டை இல்லை. ஜாதி சண்டை கூட இல்லை. அங்கே இருப்பது இனக்குழுக்களின் மோதல். எங்கள் வீட்டு பெண்ணை இன்னொருத்தன் கையை பிடித்து இழுத்துவிட்டான், அல்லது என்னுடைய மச்சானை வேறொரு ஜாதியை சார்ந்தவன் அடித்துவிட்டான் என்றதும் கூட்டம் சேர்த்து கொண்டு போய் அடிப்பதற்கு இனவாதம் அல்லது குழு மனப்பான்மை எனலாம். இந்த சண்டைகள் நிரந்தரமானவை அல்ல. இந்த சண்டைகளுக்கு கொள்கையோ கோட்பாடோ உருவாக்கப்படவில்லை. ஒரே கிராமத்தில் இருக்கும் பல்வேறு குடும்பங்களுக்கு இடையேயான கொடுக்கல் வாங்கல், அடிதடி போன்றவை பொருளாதாரத்திலும் கௌரவத்திலும் பெருமையிலும் நிலைபெற்றவை. இன்று அவை அனைத்தும் பொருளாதார அடிப்படையை கொண்டவையாக வேகமான நகரமயமாதலால் ஆகிகொண்டிருக்கின்றன. இன்று அடித்துகொள்ளும், இரண்டு சாதிகள் நாளைக்கு ஒரு தேர்தலுக்கான அரசியல் கூட்டணியால் சேர்ந்து கொள்ளலாம். அது நடந்துகொண்டேதான் இருக்கிறது. இவற்றுக்கு தத்துவ பின்புலம் இல்லை. இவை காலம் தோறும் மாறுகின்றன.

இந்தியாவை பொறுத்தமட்டில், கிறிஸ்துவர்களும் இஸ்லாமியர்களும் ஏறத்தாழ வேறு ஜாதியினர் போலத்தான். ஒவ்வொரு ஜாதிக்கும் எவ்வாறு தனித்தனி பழக்க வழக்கங்கள் இருப்பதை இந்துகள் உணர்ந்துகொள்கிறார்களோ அதே போல கிறிஸ்துவர்களையும் இஸ்லாமியர்களையும் வேறொரு ஜாதியாகத்தான் பார்க்கிறார்களே தவிர தனி மதமாக பார்க்கவில்லை. தனி மதம், சிறுபான்மை என்பதெல்லாம் இன்றைய அரசாங்கம் கொடுக்கும் அலகுகளே தவிர, கிராம, நகர வாழ்க்கையில் அது இன்னொரு ஜாதியாகத்தான் இருக்கிறது. என்ன உலகெங்கும் பரந்து இருக்கும் ஜாதி. அவ்வளவுதான்.

அதனால்தான், சைவர்களின் கோவிலுக்கு போகும் வைணவர்களை போலவே, மாரியம்மன் கோவிலுக்கு போகும் வைணவர்களை போலவே, நாகூர் தர்க்காவுக்கும் வேளாங்கண்ணி கோவிலுக்கும் இந்துக்கள் தன்னிச்சையாக போவார்கள். அருள் இறங்கும் இடம். அவ்வளவுதான்.

இஸ்லாமியர்களுக்கு இந்துக்கள் மீது வன்முறை செலுத்த மத கோட்பாடுகள் உண்டு. ஆனால், இந்துக்கள் இஸ்லாமியர்கள் மீது வன்முறை செலுத்த மத கோட்பாடுகள் இல்லை. இஸ்லாமியர்கள் இந்துக்கள் மீது செலுத்தும் வன்முறைக்கு எதிராகவே இந்துக்களின் வன்முறை இதனால் வெடிக்கிறது.

இஸ்லாமியர்கள் இந்துக்கள் மீதும், கிறிஸ்துவர்கள் மீதும் செலுத்தும் வன்முறை மத பயங்கரவாதம். ஆனால், இந்துக்கள் பதிலடி கொடுப்பது மத பயங்கரவாதம் அல்ல. அது ஜாதி சண்டை. என்னுடைய வீட்டை கொளுத்தினால் உன்னுடைய வீட்டை கொளுத்துவேன் என்ற பதிலுக்கு பதில் குணம்.

நீட்சியாக பார்க்கவேண்டுமென்றால், கிறிஸ்துவர்கள் மெஜாரிட்டியான ஒரு சில இடங்களை தவிர (மண்டைக்காடு) இந்துக்களும் கிறிஸ்துவர்களும் இணக்கமாகவே வாழ்கிறார்கள். எந்த இடத்திலும் அவர்கள் கலவரத்தில் இறங்கவில்லை. பார்சிகள், யூதர்கள், சிரியன் கிறிஸ்துவர்கள், ஆப்பிரிக்க சித்திகள் என்று பலர் இந்தியாவுக்கு அகதிகளாக அடைக்கலமாக வந்து தங்கி வாழ்ந்திருக்கிறார்கள். இவர்களை வரவேற்று தங்க இடம் அளித்து அவர்கள் வாழ வசதி செய்து கொடுத்திருக்கிறார்கள் இந்து அரசர்கள். இவர்களுக்கு இடம் கொடுக்கும்போது இவர்களிடம் ஒரே ஒரு கட்டளையையே கொடுத்திருக்கிறார்கள். அதாவது பசுக்கொலை செய்யக்கூடாது என்பதே அது. இவர்களை கொல்லவோ அல்லது இவர்களை துரத்தவோ எந்த விதமான முயற்சியிலும் இந்துக்கள் ஒரு போதும் ஈடுபட்டதில்லை.

இதிலிருந்தே சண்டை என்பதை இந்துக்கள் ஜாதி சண்டையாகவும், இஸ்லாமியர்கள் மத சண்டையாகவும் பார்க்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ளலாம். நாளைக்கு இஸ்லாமியர்கள் அமைதியாக வாழ திரும்பினால், இந்துக்கள் எந்த விதமான பிரச்னையும் இல்லாமல் அவர்களுடன் சேர்ந்து வாழ்வார்கள். ஆனால், இஸ்லாமிய மத அடிப்படையில் வாழ முயற்சிக்கும் ஒரு இஸ்லாமியர் என்றுமே இந்துக்களோடு இணக்கமாக வாழ இயலாது. அது இன்று இல்லையென்றாலும் நாளை அது சண்டையாகவே வெளிவரும்.

இதனாலேயே இஸ்லாமிய கருத்துக்களை படித்து பரப்பும் மததலைவர்களால் தூண்டப்பட்ட இளைஞர்கள் முஸ்லீமல்லாதவர்கள் மேல் தொடுக்கும் வன்முறை பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, இந்தோனேஷியா, மலேசியா, பங்களாதேஷ், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், ஈரான், ஈராக், சவுதி அரேபியா, சிரியா, லெபனான், எகிப்து, சூடான், நைஜீரியா, லிபியா, இங்கிலாந்து, ஸ்பெயின், ஜெர்மனி, நெதர்லாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் பரவலாக இருக்கிறது. இது அப்பாவி மக்களை குறிவைத்து தாக்குதல் தொடுக்கிறது. இதில் அவர்கள் மெஜாரிட்டி மைனாரிட்டி என்பதெல்லாம் இரண்டாம் பட்சமாக இருக்கிறது. மேலே குறிப்பிட்ட நாடுகளில் நடந்த பயங்கரவாத செயல்கள் அனைத்துமே பத்திரிக்கைகளில் வந்தவையே. அந்த வரிசை முழுமையானதும் அல்ல. ஒவ்வொரு பயங்கரவாத செயலையும் நியாயப்படுத்தி அதன் வரலாற்றுகாரணங்களை விரிவாக எழுதி பல அறிவுஜீவிகள் புத்தகங்கள் முதற்கொண்டு எழுதியிருக்கிறார்கள். ஆனால் என்னவோ வீட்டுக்கு நடுவில் நின்றுகொண்டிருக்கும் யானையை விட்டுவிட்டார்கள்.

இதே கருத்துக்களை ஏறத்தாழ கொண்டிருக்கும் யூத மதமும், கிறிஸ்துவ மதமும் ஏன் தங்களது வரலாற்று வன்முறையை கைவிட்டுவிட்டன? இதற்கு இரண்டு பதில்கள் உண்டு.
முதலாவது அவர்களது அந்த கொள்கையின் மாபெரும் தோல்வி.
யூத மதம் முதலாம் நூற்றாண்டில் மாபெரும் தோல்வியை சந்தித்தது. அவர்களது யாஹ்வே என்னும் தெய்வம் இருப்பதாக நம்பப்பட்ட அவர்களது பிரம்மாண்டமான கோவில் ரோமானியர்களால் இடித்து தரைமட்டமாக ஆக்கப்பட்டது. யூதர்கள் நாடெங்கும் சிதறடிக்கப்பட்டார்கள். என்றென்றும் யூதர்களுக்கு உதவும் என்று வாக்களித்த அவர்களது தெய்வம் அவர்களை கைவிட்டதை தத்துவரீதியில் அவர்களால் நியாயப்படுத்த முடியவில்லை.
பாபிலோனியர்களாலும் இன்னும் பலராலும் ஜெருசலம் அழிக்கப்பட்டபோதெல்லாம், யூதர்கள் சரியாக யாஹ்வே தெய்வத்தின் கட்டளைகளை நிறைவேற்றவில்லை அதனால்தான் யாஹ்வே தெய்வம் அவர்களை தண்டித்தது என்பது யூத மதத்தில் நிரந்தர நியாயப்படுத்தலை உருவாக்கிகொண்டார்கள். முதலாம் நூற்றாண்டில் ரோமானியர்களால் அவர்களது இடம் ஆக்கிரமிக்கப்பட்டு அவர்கள் துரத்தப்பட்டபின்னால், அவர்கள் தங்களது வன்முறை போதனைகளை ஒதுக்கி வைத்து தங்களது மனிதாபிமான மற்றும் கலை, இலக்கிய சாதனைகளை மையப்படுத்தி மாறினார்கள். மற்றொரு மாபெரும் தோல்வி, கிறிஸ்துவ மதத்தின் யூத எதிர்ப்பு பிரச்சாரத்தால் மதி கலங்கிய ஹிட்லரால் இனப்படுகொலை செய்யப்பட்டது. இது போன்ற மதரீதியான கொள்கை தோல்விகளால், இன்றைய பெரும்பாலான யூதர்கள் தங்களது யூத இன அடையாளத்தையே முக்கியமாக கருதுகிறார்கள். மத அடையாளத்தை அல்ல.

இதே போல கிறிஸ்துவ மதமும், சிலுவைப்போர்களில் மாபெரும் தோல்வியை சந்தித்தது. முக்கியமாக குழந்தைகள் நடத்திய குழந்தைகள் சிலுவைப்போர்கள். எந்த பாவமும் செய்யாத குழந்தைகள் போருக்குபோனால், இயேசு கிறிஸ்து அவர்களுக்கு வெற்றி தந்தே ஆகவேண்டும் என்று கருதி நடந்த இந்த குழந்தைகள் சிலுவைப்போர்கள், பல லட்சக்கணக்கான குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டதில் முடிந்தது. அந்த தோல்விகளே ஐரோப்பாவில் மறுமலர்ச்சியை தோற்றுவித்தன. பைபிளை விட்டுவிட்டு புராதனமான அரிஸ்டாட்டில் போன்றவர்களது எழுத்துக்களை அறிவாளிகள் ஆராய முற்பட்டார்கள். பழைய அறிவியல் மீண்டும் புத்துணர்ச்சி பெற்றது. கிறிஸ்துவத்தின் தோல்வியே ஐரோப்பா அறிவியல் சார்புள்ளதாக ஆனதன் காரணம்.

இரண்டாவது காரணம், வெகுவேகமான தொழில்மயமாகும் சூழல். இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகள் தொழில்வளத்தில் இன்று முன்னேறி நிற்கின்றன. பொருளாதார முன்னேற்றம் இன்று மனிதர்களால் உருவாக்கப்பட்ட சட்டங்களை அனைவரும் பின்பற்றுவதில் நிலை கொண்டு நிற்கின்றது. இதற்கு முந்திய மதரீதியான சமூக ஒழுங்குபடுத்தல்கள் தேவை இல்லை என்பது மட்டுமல்ல, அவை பிரச்னைகளை உண்டு பண்ணும் என்பதாலும் மத சட்டங்கள் ஏறத்தாழ புதைக்கப்பட்டுவிடுகின்றன.

அமெரிக்க நியூஸ்வீக் பத்திரிக்கையில் வெளிவந்த கட்டுரை இதனை பேசுகிறது.
https://www.newsweek.com/us-views-god-and-life-are-turning-hindu-79073
அமெரிக்கர்கள் ஏன் இந்துக்களாக ஆகிவருகிறார்கள் என்ற தலைப்பில் எழுதப்பட்ட கட்டுரை.
//But recent poll data show that conceptually, at least, we are slowly becoming more like Hindus and less like traditional Christians in the ways we think about God, our selves, each other, and eternity.//

கருத்து ரீதியாக அமெரிக்கர்களின் கடவுள், சமூகம் பற்றிய பார்வை இந்துக்களின் பார்வை போல இருக்கிறது என்று சொல்கிறது இந்த கட்டுரை. மாறிவரும் சமூகத்தில் பல்வேறு தரப்பினர் வாழும்போது அவர்களது பல்வேறு ஆன்மீக பார்வைகளை ஏற்றுகொள்ளும் இந்த குணத்தை இந்து பார்வை என்று சொல்லுகிறார் லிஸா மில்லர்.

வான்கூவர் சன் என்ற பத்திரிக்கையில் வந்த இந்த கட்டுரையும் இதனையே வலியுறுத்துகிறது
https://vancouversun.com/news/staff-blogs/we-are-all-hindus-now-revisited

ஆனால், மதவாத கிறிஸ்துவர்களுக்கு பஞ்சம் இல்லை. அதனால்தான் இன்று இந்தியா ஏழை நாடாக இருக்கும்போதே மதமாற்றத்தை செய்துவிடவேண்டும் என்று பல கோடிகள் இந்தியாவில் மதமாற்றத்துக்காக கொட்டப்படுகின்றன. அதனால் நடக்கும் குழப்பங்களும் குடும்ப பிரச்னைகளும் நாம் அறிந்தவைதான்.

வைணவர் மாரியம்மன் கோவிலுக்கு போவதும், வைணவர் இயேசுவை மெஸியாவாக ஏற்றுகொள்வதும் ஒரே மாதிரியான விஷயம் அல்ல என்பது சாதாரண இந்துவாக இருக்கும் வரைக்கும் புரிவதில்லை. மெஸியாவாக ஏற்றுகொண்டபின்னால், அவருக்கு நடக்கும் போதனைகள் அவரை முழு மதவாத கிறிஸ்துவராக ஆக்கியபின்னால் அவர் திரும்பி மாரியம்மன் கோவிலுக்கு போவது என்பது நடக்காத ஒன்று.

இன்றைய இந்தியாவில் குரானையும் இஸ்லாமிய கருத்துக்களையும்போதிக்கும் மதரசாக்களுக்கும், பைபிளை போதிக்கும் இறையியல் கல்லூரிகளுக்கும் இந்திய அரசாங்கம் செலவு செய்கிறது. ஆனால் வேதங்களையோ அல்லது தேவாரம் திருவாசகம், மற்றும் இந்து மத கருத்துக்களை போதிக்கும் பாடசாலைகள் மூடப்பட்டுவிட்டன. ஏறத்தாழ அவை இன்று இல்லை. அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் மதமாற்றம் பெருகுவதை யாராலும் தடைசெய்யமுடியாது.

வளர்ந்த நாடுகள் இந்து மத கொள்கைகளை மனதளவில் ஏற்றுகொள்ளும்போது, இந்தியா தீவிரவாத கருத்துக்களுக்கு பலியாவதைத்தான் நாம் இன்று பார்க்கமுடிகிறது.

மதமாற்றத்துக்காக கொட்டப்படும் கோடிகள் இந்து மதத்தை ஒரு சாத்தான் மதம் என்று பிரச்சாரம் செய்வதற்கும், அதில் தீமைகளை கண்டுபிடிப்பதற்கும் செலவும் செய்யப்படுவதும் எதிர்பார்க்கக்கூடியதுதான். இதனால்தான் இந்தியாவின் சாதி என்பது மிகப்பெரிய தீமை போல பிரச்சாரம்செய்யப்படுகிறது. (இஸ்லாமிய சமூகத்தில் கிறிஸ்துவ சமூகத்திலும் இருந்த கொடூரமான அடிமைமுறை பரவாயில்லை ஆனால் சாதி பெரிய தீமை! )

இந்தியாவின் நீண்ட நெடிய வரலாற்றில் இருந்த சில துக்க நிகழ்வுகள், இந்து மதத்தின் அடிப்படை போல பிரச்சாரம் செய்யப்படுகின்றன. எண்ணாயிரம் சமணர் வாதில் தோற்று தற்கொலை செய்துகொண்டது, எண்ணாயிரம் சமணர்களை இந்துக்கள் கொடூரமாக கொன்றது போல பிரச்சாரம் செய்யப்படுகிறது. இந்தியாவில் பாலியல் வன்முறைக்கு ஆளாகும் சிறுமி பற்றிய ஒவ்வொரு செய்தியும் இந்து மதத்தின் மீது எரியப்படும் சாணியாக ஆக்கப்படுகிறது.

கோட்ஸே இந்து, அவன் தீவிரவாதி, ஆகவே அவன் இந்து தீவிரவாதி என்று சொல்லுவது இப்படிப்பட்ட ஒரு மடத்தனமே. சரியாக சொல்லவேண்டுமென்றால், அகதியாக்கப்படும் ஒரு சமூகத்தின் பிரதிநிதியாக தன்னை வரித்துகொண்டு, அந்த துன்பங்களுக்கு காரணம் என்று காந்தியை நினைத்து அவரை கொல்ல முயன்ற ஒரு மடத்தனமான செயல் என்று சொல்லலாம். கோட்ஸே காந்தியை கொன்றதும், மகாராஷ்டிராவில் இருந்த ஒன்றுமறியாத அப்பாவி பார்ப்பனர்கள் மீது காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் வெறியாட்டம் ஆடினார்கள். ஏராளமான அப்பாவி பார்ப்பனர்கள் கிராமங்களில் கொல்லப்பட்டார்கள். பல்லாயிரக்கணக்கான பார்ப்பனர்கள் மகாராஷ்டிராவின் கிராமங்களிலிருந்து வெளியேறி நகரங்களுக்கு சென்றது இதனால்தான். ஆனால் இவ்வாறு பார்ப்பனர்கள் கொல்லப்பட்டது வரலாற்று புத்தகங்களில் பதியப்படவில்லை, அல்லது நமது பொது நினைவில் ஊன்றப்படவில்லை. காந்தியை கோட்ஸே என்னும் இந்து கொன்றது மட்டுமே பேசப்படுகிறது.

நான் எதற்காக காந்தியை கொன்றேன் என்று வாக்குமூலமாக கோர்ட்டில் பேசியிருக்கிறார். அதனை படியுங்கள்.
ஆர்.எஸ்,எஸின் சாதி மறுப்பு போராட்டங்களில் கலந்துகொண்டு, சாதி ஏற்றத்தாழ்வை ஒழிக்கும் செயல்பாடுகளில் கலந்துகொண்டதை பேசியிருக்கிறார். காந்தியை பற்றி கூறும்போது, காந்தியின் அஹிம்சை என்ற கருத்து, இந்துக்களுக்கு ஏராளமான துன்பத்தையும் கொலைகளையும் கொண்டு வந்தது என்று சொல்லுகிறார். காந்தி இல்லாத இந்தியா, தன் மக்களை உருப்படியான ராணுவம் கொண்டு பாதுகாக்கும், அவரால் பலவீனப்படுத்தப்படாது என்று அவர் மடத்தனமாக கருதியதால் காந்தியை கொன்றார் என்று சொல்லுகிறார்.
https://www.freepressjournal.in/india/why-i-killed-gandhi-godses-final-address/1528208

இந்த பேச்சில், இந்துக்களின் மத நம்பிக்கை இப்படி சொல்லுகிறது அதனால் செய்தேன் என்ற வார்த்தை அல்ல. காந்தியின் ஒரு சில செயல்பாடுகளால் பாதிக்கப்பட்டு அதற்கான எதிர்வினை. இது தீவிரவாதம். ஆனால் மத தீவிரவாதம் அல்ல. மத அடிப்படைவாதமும் அல்ல. மத பயங்கரவாதமும் அல்ல.

அதே போல பிரபாகரன் ஒரு இந்து என்பதால் அவர் ராஜீவ் காந்தியை கொன்றது இந்து பயங்கரவாதமா? அல்லது தமிழ் அடையாளத்தை அவர் முன்வைத்ததால், அது தமிழ் பயங்கரவாதமா? அல்ல. அவர் செய்தது தீவிரவாதம். தனிநபர் படுகொலை. ராஜீவ் காந்தி மீண்டும் பிரதமரானால், தான் எதிர்பார்க்கும் ஈழம் என்ற நாட்டை உருவாக்கமுடியாது என்ற மடத்தனமான சிந்தனை காரணமாக அவரை கொலை செய்தார் பிரபாகரன்.
மார்ட்டின் லூதர் என்ற அமெரிக்க கருப்பின தலைவரை கொன்றது பயங்கரவாதம் அல்ல. இனவாதத்தினால் தூண்டப்பட்ட தனிநபர் கொலை. அதனால் வெள்ளையர்கள் எல்லாருமே பயங்கரவாதிகளும் அல்ல, இனவாதிகளும் அல்ல.

மாடுகளை திருடி தின்றதாக அக்லக் என்பவரை ஒரு சில இந்துக்கள் கொன்றார்கள் என்பதால் அதனை இந்து பயங்கரவாதம் என்று இந்திய ஊடகங்களிலிருந்து அமெரிக்க ஊடகங்கள் வரைக்கும் போட்டு தாளித்துகொண்டிருந்தார்கள். மாடுகளை திருடியதற்காக கொல்லுவது என்பது இந்தியாவில் எல்லா காலங்களிலும் இருந்து வருவதுதான். ஆனால் பாஜக ஆட்சியில் நடந்தால் அது உலகமகா பிரச்னையாக ஆகிவிடுகிறது.
https://www.dinamalar.com/news_detail.asp?id=744995
எங்கள் ஊரில் கோழி திருடியதற்காக ஒருவர் அடித்து கொல்லப்பட்டார். கோழி, இந்துக்களின் புனித பறவையாக இருந்து, அது பாஜக ஆட்சி செய்யும்போது நடந்திருந்தால் அதுவும் இந்து பயங்கரவாதமாக உருவாக்கப்பட்டு, உலகமகா பிரச்னையாக ஆக்கியிருந்திருப்பார்கள்.

டைரக்ட் ஆக்‌ஷன் டே என்று ஜின்னா உருவாக்கிய இனப்படுகொலையை மாரிதாஸ் பேசியிருக்கிறார். அது இஸ்லாமிய பயங்கரவாதம் அல்ல. இந்துக்களை கொன்றால், பாகிஸ்தான் கிடைக்கும் என்ற தற்காலிக குறிக்கோளுக்காக செய்யப்பட்ட தீவிரவாதம். அது மத பயங்கரவாதம் அல்ல. காபிர்களை கொல்லுங்கள் என்ற இஸ்லாமிய போதனையால ஜின்னா அதனை செய்யவில்லை. தனது பாகிஸ்தான் என்ற குறிக்கோளுக்கு உதவும் என்பதால் அவர் அந்த தீவிரவாத செயலை செய்தார்.

ஆனால் இலங்கையில், கிறிஸ்துவர்களை ஈஸ்டர் தினத்தில் சர்ச்சுகளில் கொன்றது இஸ்லாமிய பயங்கரவாதம். அதற்கு அவர்கள் கிறிஸ்துவர்கள் என்ற ஒரு காரணம் தவிர வேறு காரணம் இல்லை. ஷிஆக்களை அவர்களது மசூதியில் கொல்வதற்கு காரணம் இஸ்லாமிய பயங்கரவாதம். ஷிஆக்கள் காபிர்கள் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற ஒரு காரணம் தவிர வேறு காரணம் இல்லை.


ஆகவே, ஒரு இந்துவோ அல்லது பௌத்தரோ, அல்லது சமணரோ பயங்கரவாதியாக இருக்கமுடியாது. ஏனெனில் இந்து மதத்தின் எந்த கருத்தும், பௌத்தர்களின் எந்த நூலும், சமணர்களின் எந்த நூலும் அப்பாவிகளை கொல்வதை அனுமதிக்கவில்லை. எந்த இந்திய, கீழைத்தேய மரபும் அப்படிப்பட்ட ஒரு நிலைப்பாட்டை என்றுமே எடுத்ததில்லை. அப்படி நடந்தால் அதனை கடுமையாக கண்டித்தே வந்திருக்கிறது. சொல்லப்போனால், இந்த கொள்கையாலேயே இந்தியா படையெடுத்துவந்த துருக்கர்களிடமும் பெர்ஷியர்களிடமும் அடிமைப்பட்டது என்பது வரலாறு. போர் தர்மத்தின் படி நடந்த இந்து அரசர்கள் படைஎடுத்து வந்தவர்களிடமும் அதே போர்தர்மத்தை எதிர்பார்த்தார்கள். அப்பாவி பெண்களையும் குழந்தைகளையும் கொன்றும் அடிமைப்படுத்தியும் சங்கிலிகளால் பிணைத்து அடிமைகளாக ஆக்கி எடுத்து சென்றபோதும் தங்கள் போர்தர்மத்தை விடாது கைப்பிடித்து மாபெரும் தோல்விகளை அடைந்தார்கள். இறுதியில் ஜமீன் தார்களாக குறுகி அழிந்தார்கள்.
முகலாயர்களுக்கு எதிரான போரில் தங்களது போர்தர்மத்தை மாற்றிகொண்டு கெரில்லா படை போல செயல்பட்ட சிவாஜியின் படைகளும், அப்பாவி பெண்களை குழந்தைகளை எதிர்தர்ப்பாக இருந்தாலும் பாதுகாத்தார்கள், அவர்களை துன்புறுத்தவில்லை, அடிமைப்படுத்தவில்லை.

அப்பாவிகள் மீது பயங்கரவாதத்தை செய்வது என்றுமே இந்து நூற்கள்படி நியாயப்படுத்த முடியாதது. ஆகவே இந்து பயங்கரவாதம் என்று ஒன்று இருக்கவே முடியாது.

இந்து பயங்கரவாத செயல்கள் என்று காங்கிரஸ் அரசால் பிரச்சாரப்படுத்தப்பட்ட எந்த செயல்களை எடுத்தாலும் அவை போலியாக உருவாக்கப்பட்டவையாகத்தான் தோன்றுகின்றன. உதாரணமாக சம்ஜோதா எக்ஸ்பிரஸ் வெடிகுண்டு சஃதர் நகோரி போன்ற சிமி தலைவர்களால் நடத்தப்பட்டது. ஆனால் அதனை சுவாமி அசீமானந்தா செய்ததாக ஜோடிக்கப்பட்டது. இறுதியில் சுவாமி அசீமானந்தா விடுதலை செய்யப்பட்டார். ஆனால் அப்போதிலிருந்தே சிபிஐ போன்ற அமெரிக்க நிறுவனங்கள் இஸ்லாமிய பயங்கரவாதம் என்றே இந்த நிகழ்வுகள் குறித்து வந்திருக்கின்றன. அவர் சம்பந்தப்பட்ட மூன்று நிகழ்வுகளுமே அவருக்கு சம்பந்தமில்லை என்று விடுதலை செய்யப்பட்டார்.

அதற்காக இந்துக்கள் முஸ்லீம்கள் மீது தாக்குதலே நடத்தமாட்டார்கள் என்று சொல்லவரவில்லை. முஸ்லீம் படைகளும் இந்துக்களின் படைகளும் காலம் காலமாக போர் புரிந்துதான் வந்திருக்கின்றன. அப்பாவி இந்துக்கள் மீது முஸ்லீம்கள் தாக்கினால், அப்பாவி முஸ்லீம்கள் மீது இந்துக்களும் தாக்குவார்கள் என்றுதான் நானும் கருதுகிறேன். ஆனால் அது ஒரு சாதி சண்டை போலத்தானே தவிர அது ஒருமதரீதியான தாக்குதல் அல்ல. நாளைக்கு இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே ஒரு சமாதானம் பேசப்பட்டால், இந்துக்கள் சமாதானமாகவே சென்றுவிடுவார்கள். மாயாவதி பிராம்மணர்களுக்கும் ஜாதவ்களுக்கும் இடையே ஒரு கூட்டணியை உருவாக்கியது போல, ஜாதவ்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையேயும் கூட்டணி உருவாக்கியிருக்கிறார். இன்று சண்டை செய்யும் சாதிகள் நாளை சமாதானமாக செல்லலாம். அதற்கான வாசல் என்றுமே இந்துக்களிடம் திறந்திருக்கிறது. அதே போல முஸ்லீம்களிடமும் அந்த வாசல் திறந்திருக்க வேண்டும். எவ்வாறு கிறிஸ்துவ சமூகம், கிறிஸ்துவ புத்தகத்தின் வன்முறை பக்கங்களை மூடி வைத்ததோ அதே போல இஸ்லாமியர்களும் தங்கள் புத்தகங்களின் வன்முறை பக்கங்களை மூடி வைப்பதன் மூலமே அந்த வாசல் திறக்கும்.

இன்று பெரும்பாலான இந்திய முஸ்லீம்கள் அந்த வாசலை திறந்தே வைத்திருக்கிறார்கள். அதனால்தான் இன்று பெரும்பாலான இந்துக்களும் முஸ்லீம்களும் சுமுகமாக வாழ்கிறார்கள். ஆனால், இஸ்லாமிய புத்தகங்களை விளக்குகிறேன் பேர்வழி என்று வரும் இஸ்லாமிய இறையியல் பேச்சாளர்கள், சாதாரண முஸ்லீம்களிடம், நீ பின்பற்றும் மதம் இதனைத்தான் சொல்லுகிறது என்று திரும்பத்திரும்ப போதனைகளை செய்கிறார்கள். இப்படிப்பட்ட போதனையாளர்களை முஸ்லீம்களே தனிமைப்படுத்தும்போது மட்டுமே, தற்சமயம் மெல்ல மெல்ல மூடிக்கொண்டிருக்கும் வாசல்களை திறந்தே வைத்திருக்கமுடியும்.

மத போதனையால் தூண்டப்பட்டு தீச்செயல் செய்வதற்கு ஒரு ஆள் போதுமானதாக இருக்கிறது. ஆனால், அதன் விளைவு அந்த மதபோதனையை பற்றி அறியாத பல்லாயிரக்கணக்கான முஸ்லீம்கள் பாதிக்கப்பட காரணமாக ஆகிறது. இதனை பெரும்பாலான முஸ்லீம்கள் அறிந்தே இருக்கிறார்கள்.

மத அடிப்படைவாதம் எல்லாமே தீயதோ அல்லது ஒடுக்கவேண்டியதோ அல்ல. ஒருவர் தைப்பூசத்துக்கு அலகு குத்திகொண்டு தன்னை வருத்திகொண்டு காவடி எடுப்பது அவரது தனி உரிமை. ஒரு பெண் தலையை மறைக்கும் பர்தா அணிந்து கொள்வது அவரது தனி உரிமை. ஐவேளை தொழுவதோ, அல்லது கேதார கௌரி விரதம் இருப்பதோ அவரவர் தனி உரிமை. அதில் யாரும் தலையிட வேண்டிய தேவை இல்லை. சமணர் ஒருவர் அம்மணமாக செல்வதோ, அல்லது பௌத்தர் ஒருவர் காவி உடை அணிந்து பிச்சை எடுத்து உண்பதோ அவரவர் உரிமை, அவரவர் ஆன்மீக வழி. அதில் யாரும் தலையிட தேவையும் இல்லை. ஏன் சொல்லப்போனால் ஒருவர் ஐந்து பெண்களை திருமணம் செய்து கொள்வதை என் மதம் அனுமதிக்கிறது என்று சொன்னாலும் அது பிரச்னை இல்லை. வயதுக்கு வந்த ஐந்து பேர் எப்படி வாழவேண்டும் என்பதை அவர்களே கூட முடிவு செய்து கொள்ளலாம், அதற்கான இடம் இருக்கவேண்டும் என்றுதான் நான் கருதுகிறேன்.

முண்டாசு அணிந்தவர்கள் முண்டாசு அணியாதவர்களை கொல்ல எங்கள் மதம் சொல்லுகிறது என்று ஆரம்பித்தால், அதில்தான் பிரச்னை வருகிறது. உங்களுடைய சுதந்திரம் என்னுடைய மூக்குக்கு முன்னால் நின்று விடுகிறது. அல்லது என்னுடைய மதம் குழந்தைகளை பலாத்காரம் செய்வதை அனுமதிக்கிறது என்று ஆரம்பித்தால் சமூகத்துக்கு பிரச்னை.

இது இன்றோ நாளையோ முடிந்துவிடக்கூடிய விவாதமோ, அல்லது பிரச்னையோ அல்ல. ஆனால் குறைந்தது, விவாதத்துக்கான தளமாவது திறந்தே இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். தமிழரான பாரூக் என்பவர் நாத்திகராக இருந்தார் என்பதால் அவர் கொலை செய்யப்பட்டதும் அது பற்றி வாய்மூடி மௌனியாக இருக்கும் ஊடகவியலாளர்களும், அறிவுஜீவிகளும், அரசியல்வாதிகளும், முஸ்லீம் தலைவர்களும், தீவிரவாதத்துக்கே துணை போகிறார்கள். அரசாங்கத்தில் உள்ளவர்களும் இப்படிப்பட்ட விஷயங்களை சகதியை தாண்டுபவர்கள் போல தாண்டி சென்றுவிடுகிறார்கள். இது முஸ்லீமாக இருக்கும் இந்தியர்களுக்கும் நல்லதல்ல, இதர இந்தியர்களுக்கும் நல்லதல்ல.

விவாதத்தை அனைத்து தரப்பினரும் முன்னெடுங்கள். விவாதத்துக்கான வாசல்கள் திறந்தே இருக்கட்டும்.

Series Navigationதீர்ப்பும் விசாரணையும்குறியீட்டளவிலான சித்திரக்குள்ளர்கள்
author

சின்னக்கருப்பன்

Similar Posts

Comments

 1. Avatar
  ஒரு அரிசோனன் says:

  மிகத் தெளிவான கருத்துகள். தீவிரவாதம், பயங்கரவாதம், சாதிச்சண்டை என்றால் என்ன என்று விளக்கத்துடன் எழுதப்பட்டிருக்கிறது. இந்துக்களின் சண்டை பங்காளி/சாதிச்சண்டை, மற்ற சமயங்களின் சண்டைகள் கொள்ளைக்காகக் கொல்லும் சண்டை என்ற வேறுபாடுகளையும் விளக்கியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *