–லதா ராமகிருஷ்ணன்

இராமாயணத்தில் கதாநாயகன் இராமன். இராவண னின் நிறைய நற்குணங்களை வால்மீகி எடுத்துக் காட்டி யிருந்தாலும் அவன் சீதையைக் கவர்ந்து சென்றது அந்தக் கதாபாத்திரத்தின் Tragic Flaw என்பதா கவே சித்தரித்திருப்பார்.
ஆனால், இங்கே ஏனோ நிறைய பேருக்கு இராவண னையே இராமாய ணத்தின் நாயகனாகக் காட்ட ஆர்வம்.
மனைவியை சந்தேகித்தான் என்று இராமனைக் கட்டங்கட்டி அடிப்பவர்கள், இன்னொருவன் மனைவியைக் கவர்ந்து சென்றதை இராவணனுக்கு சீதைமேல் உள்ள தீராக்காதலாக எளிதாகப் பகுத்து விடுகிறார்கள்.
சமீபத்தில் ஒரு பெண்ணியவாதி தன்னை சூர்ப்பனகை என்று பெருமையாகக் குறிப்பிட்டிருந்தார். திருமண மானவன் என்று தெரிந்தும் இராமனை அடைய நினைக்கும் சூர்ப்பனகை, அதற்காக சீதையைக் கொல்லவும் துணிபவள்.
அது நடக்காது என்று தெரிந்ததும் அண்ணனிடம் சென்று தன் விஷயத்தைக் கூறாமல் காட்டில் ஒரு அழகிய பெண் இருப்பதாகவும், அவள் அண்ணனுக்கே ஏற்றவள் என்றும் ஏற்றிவிட, அந்த வர்ணனையில் மயங்கித்தான் இராவணன் சீதையைக் காணச் சென்று அந்த அழகில் மயங்கித்தான் அவளைக் கவர்ந்துவரு கிறான்.
வெறும் உடலழகில் மயங்குவதுதான் காதலா?
அசோகவனத்தில் சீதையைத் தொடக்கூட இல்லையே என்று இராவணனுக்கு வக்காலத்து வாங்குபவர்கள் விருப்பமில்லாத பெண்ணைத் தொட்டால் அவன் தலை வெடித்துவிடும் என்று ஏற்கெனவே அவனால் பங்கப்படுத்தப்பட்ட பெண்ணொருத்தியின் சாபமே அவனைத் தள்ளியிருக்கச் செய்கிறது என்பதை வசதியாக மறந்துவிடுகிறார்கள்.
ஒரு கதையில் வரியிடை வரிகளை வாசிப்பது என்ற பெயரில் அந்தக் கதையை நம் இஷ்டத்திற்கு மாற்று வது எந்தவிதத்தில் நியாயமாகும்?
இன்றைய Bigg Boss இல் கமலஹாஸன், ராமனுடை யது வெற்றிபெற்ற காதல், இராவணனுடையது தோற்ற காதல் என்று இரண்டையும் ஒருதரத்ததாக்கிப் பேசினார்.
எதற்கு இந்தத் தேவையற்ற வியாக்கியானம்?
நடப்புவாழ்க்கையில் விரும்பாத ஒரு பெண்ணை வலுக்கட்டாயமாகத் தூக்கிச் செல்பவனை என்னவென்று சொல்வோம்?
இதையெல்லாம் நியாயப்படுத்துவதால்தான் ஒருதலைக் காதல் என்று சொல்லிக்கொண்டு தன் காதலை ஏற்க மறுக்கும் பெண் மீது அமிலத்தை ஊற்றுவதும், அவளைக் கொலைசெய்யவும் துணிவ தும் நடக்கிறது என்றுகூடச் சொல்லமுடியும்.
சீதை யாரை விரும்பினாள் என்பது இங்கே ஒரு பொருட்டேயில்லையா?
- இராமனும் இராவணனும் காதலும் கமலஹாசனும்
- பரவும் தொலைக்காட்சி நாடகங்கள் எனும் தொற்றுநோய்!
- இந்திய புதிய கல்விக்கொள்கை – ஓர் சிங்கப்பூர் ஒப்புநோக்கு – அத்தியாயம் ஒன்று
- நீ நீயாக இல்லை …
- கலித்தொகையில் ஓரிரவு.. குறிஞ்சிக்கலி:29. முதுபார்ப்பான் கருங்கூத்து
- பிச்சை
- தேவதை துயிலும் கல்லறை
- இந்திய விண்வெளித் தேடல் வாரியம் ஏவிய விண்சிமிழ் சந்திரயான் -2 ஆகஸ்டு 20 ஆம் தேதி நிலவை நெருங்கும்
- நிலவில் மனிதர் தங்கும் குடியிருப்புக் கூடங்கள் வடிப்பதில் எதிர்ப்படும் பொறியியல் சவால்கள்
- சொல்ல வல்லாயோ….
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 204 ஆம் இதழ்
- 10வது ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடிய சொப்கா குடும்ப மன்றம்.
லதா ராமகிருஷ்ணனின் கருத்தே என் கருத்தும். தொடக்கூடாத உறவுப் பெண்ணொருத்தியை ராவணன் தொட்ட போது அவள் இட்ட சாபமே அவன் மனைவியல்லாத வேறு எந்தப் பெண்ணைத் தொட்டாலும் அவன் தலை வெடித்துச் சிதறும் என்பது. அவன் ஒரு பெண் பித்தன். இதை நானும் என் கட்டுரைகளில் கூறியுள்ளேன்.
பாராட்டுகள்.
ஜோதிர்லதா கிரிஜா
மிக்க நன்றி.
வெறும் உடலழகில் மயங்குவதுதான் காதலா? –
அது ஏன் “வெறும்’ என்ற இடைச் சொருகல்.
காலத்தின் அலையில் நேற்றைய கதவுக்குப் பின்னிருந்து இமை படபடத்து மோகமுள் தைத்த காலங்கள் போயிந்து என ஆன பின்னும் ஏன் இன்னும் பழமை?
இராவணன், இராமன் இருவருமே ஆண்கள்.
சூர்ப்பனகை பெண் , ஆண் மேல் கொள்ளும் ஈர்ப்புக்கும்,
ராவணன் ஆண் பெண் மேல் கொள்ளும் ஈர்ப்புக்கும் ஆன குறியீடா கொண்ட காப்பியம் அது.
பெண்கள் இட்டுக் கட்டி புறம் சொல்லும் குணமாகவும்
ஆண்கள் கவர்ந்து போருக்கு துணிபவராகவும் காட்டப்பட்டிருக்கிறது.
அண்ணன் பெண்டாட்டி அரை, தம்பி பெண்டாட்டி தனது எனும் கிராம சொலவடை அழகாக எடுத்தாண்ட காப்பியம்.
லெக்ஷ்மண் கோடு பெண்ணின் சந்தேக நிலை சொல்லும் இடையில், சீதை பார்வையில் தம்பிக்கு அப்படியொரு எண்ணமிருக்கோ என தோன்றுவது,
தீக்குளித்தல்
என அக்கால மனநிலை சேர்ந்த மனோ தத்துவ அலசல் கொண்ட் ஓர் காப்பியம் அது.
எப்படி எம் ஜி ஆர் , பலரால் கடவுளாக கொண்டாடப் பட்டாரோ,
அது போல் அக் காப்பிய நாயகர்களும் கடவுளானார்கள்.
அந்த மாயவலைப் பிண்ணலில் இருந்து வெளி வந்தால், கமல் கமெண்ட்டை ஜஸ்ட் லைக் தட் கடந்து போக முடியும்.
கமல் ஐயங்கார் அறியாத இந்து பாத்திரங்களா?
வணக்கம். நடிகர் கமலின் கமெண்ட் ஐ மட்டுமா – ஒரு காப்பியத்தை இத்தனைக் கொச்சையாகப் புரிந்துகொள்ளும், புரியவைக்கப் பார்க்கும் உங்களைப் போன்றோரின் கமெண்ட்களைக்கூட கடந்துபோய்விட முடியும்; ஆனால், எதைக் கடந்துபோய்விட வேண்டும் என்பது எனது தேர்வு. அதை நீங்கள் எனக்கு சொல்லித்தர முயலவேண்டாம். ’வெறும்’ என்ற வார்த்தை உங்களுக்கு இடைச்செருகல். எனக்கு அப்படியல்ல. அதை என் வாக்கியத்தில் பிரக்ஞாபூர்வமாகக் கையாண்டிருக்கிறேன். ஒரு பெண்ணைக் கடத்திக்கொண்டுபோவதும், அவளுக்குப் பிடிக்கவில்லை என்று தெரிந்தும் அவளை மோகிப்பதும், அதேபோல் ஒரு ஆண்மகன் தன்னை விரும்பவில்லை என்று தெரிந்தும் அவன் மனைவி யைக் கொன்றால் அவன் தன்னிடம் வருவான் என்று நினைப்பதும் – இதெல்லாம்தான் காதல் என்று நீங்கள் நினைத்தால் அப்படியே வைத்துக்கொள்ளுங்கள். ஒரு காப்பியத்தின் அடிநாதமான விஷயத்தைப் பார்க்க மறுப்பவர்களிடம் எதைப் பேசியும் பயனில்லை. ராமன் ஒரு சொல் ஒரு இல் – என்றிருந்ததெல்லாம் பொருட்படுத்தத் தக்கதல்ல என்ற மனப்போக்குடையவர்களிடையே எதைப் பேசியும் பயனில்லை. இராமாயணம் ’அண்ணன் பொண்டாட்டி அரைப் பொண்டாட்டி என்ற சொலவடையை அழகாக எடுத்தாண்ட காவியம் என்று சொல்லும் உங்களைப்போன்ற மாபெரும் அறிவுஜீவிகளிடம், திறனாய்வாளர்களிடம் எதைப் பேசியும் பயனில்லை. கமல் அய்யங்கார் என்றில்லை – அறிவுஜீவிகளாகத் தங்களைத்தாங்களே பாவித்துக்கொள்வோர் எல்லோருமே அவரவருக்குத் தெரிந்த அளவில் மட்டுமே, அதுவும் அவரவர் விரும்பும் அளவில் மட்டுமே காப்பியங்களை, முற்றும் தெரிந்த பாவனையில் பொருள்பெயர்த்துத் தருகிறார்கள். அப்படியொரு மிக அபத்தமான பொருள் பெயர்ப்பை, ஒப்புநோக்கலைக் கேட்க நேரும்போது ஓரளவு வால்மீகி ராமாயணத்தின் தமிழ் மொழிபெயர்ப்பையும், கம்ப ராமாயணத்தையும் அவை மீதான கண்ணியமான, காத்திரமான விளக்கங்கள், கருத்துகளையும் படித்திருக்கும் காரணத்தால் (அப்படியும் பலநேரங்களில் வாய்மூடியிருந்தாலும்) சமயங் களில் எதிர்வினையாற்றாமல் கடந்துபோக முடிவதில்லை. ஆனால், எளிய மக்களுக்கு ஒரு காவியத்தின் அடிநாதம் புரிந்துவிடுகிறது என்பது ஆறுதலளிக்கும் விஷயம்.