நிறைவைத் தரும் காசி வாழ்வு

முனைவர் மு.பழனியப்பன், இணைப்பேராசிரியர், முதுகலைத் தமிழ்த் துறைத்  தலைவர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவாடானை.  

          இந்திய மண்ணில் உள்ள புண்ணிய நகரங்களில் ஒன்று காசி. இங்கு பாயும் கங்கை நதியானது மனிதர்களின் பாவங்களைப் போக்கி அவர்களின் ஆன்மாவை அமைதிப்படுத்துகிறது. இந்தியாவின்  பல்வகை சமயங்களின் கேந்திரமாகவும் இது விளங்குகிறது.  காசியில் சைவம், வைணவம், பௌத்தம், இசுலாம் போன்ற பல சமயம் சார்  இடங்கள், மடங்கள், நிறுவனங்கள் அமைந்துள்ளன.

          இதன் பெருமை சொல்லில் அடங்காததாக உள்ளது. ‘இத்தலத்தில் உயிர் நீங்கும் ஆன்மாக்களுக்குப் பார்வதி பிராட்டியார் சிரம பரிகாரம் செய்யச் சிவமூர்த்தி தாரக மந்திரம்  உபதேசித்து, முக்தி ஈவார்” என்று இத்தலத்தின் பெருமையை உரைக்கிறது அபிதானசிந்தாமணி (ப. 481)

இந்நகருக்குப் பல பெயர்கள் உண்டு. ‘இந்த மகா தலத்தில் ஐந்து குரோசம் சிவலிங்கங்கள் இருத்தலால் ஆநந்தகானம் எனவும், இறந்த உயிரை  அழித்தலாலும், வேதியன் எடுத்த பிடிமணலில் தோன்றிய சிவலிங்கமிருத்தலாலும் அவிமுத்தம் எனவும், ஆன்மாக்கட்குச் சிவானந்தமளித்தலால் ஆனந்தகானம் எனவும், சர்வசங்கார காலத்தில் பூதங்கள் ஒடுங்குமிடம் ஆதலால் மாமயானம் எனவும், சிவமூர்த்தி சோதியுருவாய் எழுந்தருளியிருத்தலால் காசி எனவும், உயிர்க்குத் தருமம் அளித்தலால்  தருமவனம் எனவும் பெயர் பெறும். (மேலது ப. 482)

          இவ்வாறு பெருமை கொண்ட காசி மாநகரைப் பற்றிய பக்தி சிற்றிலக்கியம் காசிக்கலம்பகம் ஆகும். இதனை எழுதியவர் குமரகுருபரர் ஆவார். இவர் கங்கைக் கரையில் மடம் ஒன்றை நிறுவினார். இவர்  தாமிரபரணி ஆற்றின் கரையில் பிறந்து, காவிரியாற்றின் கரையில் வளர்ந்து, கங்கையாற்றின் கரையில் வாழ்வில் நிறைந்தவர். தன் வாழ்நாளின் நிறைவுப் பகுதியைக் காசியில் மடம் கட்டி அங்கேயே வாழ்ந்து நிறைத்தார். குமரகுருபரர் கட்டிய காசிமடம் கங்கைக்கரையில் ஓங்கி உயர்ந்து நின்று இன்றளவும் தமிழும் சைவமும் வளர்த்து வருகிறது.

          குமரகுருரர் தன் குருவாக தருமை ஆதீன நான்காம் குருநாதராம் ஸ்ரீமாசிலாமணி தேசிகரைப் பெற்றார். அவர் வழிகாட்டல்படி திருப்பனந்தாள் திருமடத்தை நிறுவினார்.  குருவாணையின்படி குமரகுருபரர் காசியாத்திரை மேற்கொண்டார். இவர் பயணம் மேற்கொண்ட காலத்தில் இசுலாமிய ஆட்சி காசியில் நடைபெற்று வந்தது. இதன் காரணமாக சைவ சமயம் சற்று ஒடுக்கம் பெற்றிருந்தது. காசிக்குச் சென்ற குமரகுருபரர் காசி பாதுஷாவிடம்  சைவத்தின் பெருமையை நிலைநாட்டி காசியில் மடம் கட்ட கங்கைக்கரையில் நிலம் பெற்றார்.

          காசியை ஆண்ட பாதுஷாவிடம் இந்துஸ்தானி மொழியில் பேச இந்திமொழியைக் கற்றார். சகலகலா வல்லி மாலை பாடித் தன் மொழித்திறத்தை வளர்த்து, பாதுஷாவிடம் பேசினார். பாதுஷாவின் அவைக்குச் சிங்கத்தில் ஏறிச் சென்றார். மேலும் பாதுஷாவின் அவையில் தரப்பெற்ற நெருப்புக்கம்பிகளைக் கைகளால் தொட்டு எவ்விதப் பாதிப்பும் அடையாமல்  இயல்பாய் இருந்தார். இத்தனைச் சோதனைகளுக்குப் பின் பாதுஷாவின் ஆணை பெற்றுக் காசியில் சைவம் சிறக்க ஸ்ரீகுமாரசாமி மடம் கண்டார்.

          இதுவே  திருப்பனந்தாள் மடத்தின் தலைமை மடமாக குமரகுருபரர் காலத்தில் அமைந்தது.  இவரைத் தொடர்ந்து  வந்த ஐந்துஅருளாளர்கள் ஸ்ரீ குமாரசுவாமி மடத்தின் தலைமை ஏற்று அருட்பணி செய்து வநதார்கள்.ஆறாம் அதிபராகப் பதவி ஏற்ற ஸ்ரீ தில்லைநாயக சுவாமிகள் தென்னாட்டில் உள்ள திருமடத்திற்குச் சொந்தமான சொத்துக்களைப் பாதுகாக்க ஏதுவாகத் தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாளில் இப்போதுள்ள காசித்திருமடத்தை நிறுவினார். காசியிலும் திருப்பனந்தாளிலும் மடங்கள் இருந்தாலும் இரண்டும் ஓரே நிறுவனமே. திருப்பனந்தாள் திருமடம் காலப்போக்கில் தலைமை இடமாகத் தொண்டாற்றி வரலாயிற்று. இத்திருமடத்து அதிபர்களைக் ”காசிவாசி” என்றே அழைப்பர். இது காசியின் தொடர்பால் ஏற்பட்ட முறைமை ஆகும்.

          இவ்வாறு காசிக்கும் தமிழகத்திற்கும் நெருங்கிய தொடர்பினைத் திருப்பனந்தாள் மடம் ஏற்படுத்திக்கொடுத்தது. இம்மடத்தின் முதல் அ்திபரான குமருகுருபரர் பல பக்திப்பனுவல்களை எழுதியவர். காசிக்கலம்பகம்,  சகல கலா வல்லி மாலை போன்வற்றில் காசி அனுபவம் பற்றிக் குமரகுருபரர் குறித்துள்ளார்.

          காசியில் சைவம் செழிக்கச் செய்த வரலாறுகள் காசிக்கலம்பகத்தில் ஆங்காங்கே காட்டப்பெற்றுள்ளன. சகல கலா வல்லி  மாலையிலும் சில குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக இசுலாம் சமயத்தவர்கள் சைவ மடத்திற்கு இடமளித்த வரலாறு   பற்றிய சிற்சில செய்திகள் இவ்விலக்கியங்களில் காணப்படுகின்றன. இக்குறிப்புகள் இவ்விரு சமயங்களுக்கு இடையேயான ஒட்டு உறவினைக் காட்டுவதாக உள்ளது.

காசியின் சிறப்பு

          காசிக் கலம்பகத்தில் காசியின் சிறப்பு பலபட எடுத்துரைக்கப்பெறுகிறது. இப்பெருமைகளைப் படிக்கும்போது காசிக்கு சென்றார்க்கு அவை  தாம் கண்டவைகளை மீளவும் மனக்கண்ணில் காணச் செய்யும். காசியைக் காணாதவர்க்குக் காசியைக் காணவேண்டும் என்று ஆவலை ஏற்படுத்தும்.

                    நகரமாய்மறைச் சிகர மானதால்

                    மகர மாயினான் நகரில் காசியே (காசிக்கலம்பகம் 68)

காசி நகரம் வேதங்கள் கூறும்  மெய்ப்பொருளின் சிகரமாக விளங்குவதாகும். அங்குள்ள இறைவன் உயிர்களின் ஆணவ மலத்தை அழிக்கக் கூடியவன் என்று இதன் பெருமையைப் பாடுகிறார் குமரகுருபரர்.  

          காசியில் சொல்லப்படும் சொல் எல்லாம்  வேதச்சொற்களே ஆகும். அங்கு நல்லறமே எங்கும் நிறைந்திருக்கும். முக்திக்கு ஏதுவாக அமைவது இத்தலமே என்று காசி முக்தியளிக்கும் தலமாகக் காட்டப்பெறுகின்றது.  

          ”சொல்லாவது மறையே சொல்லுவது நல்லறமே

          இல்லாவது முத்திக்கு ஏதுவாம் இத்தலமே”(20)

காசியானது மனிதர்களுக்குப் பெருவாழ்வு நல்கும் என்று போற்றப்பெறுகிறது.  மனிதரின் நிறைவுக் காலத்தில் அவர்களுக்கு முதுமை வந்து சேரும்போது அடைக்கலமாக அடையவேண்டிய நகரம் காசியாகும். இந்நகரில் இறப்பதால் முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதனை வலியுறுத்தும் நிலையில்

          ‘‘படுத்த பாயுடனே பிணி மூழ்கினும் பல்விழுந்து நரைத்து அறமூப்பினும்    

          அடுத்தது ஈங்கு இவர்க்கே பெருவாழ்வு எனும் அப்பெரும் பதி எப்பதி என்பீரேல்

          விடுத்துவிட்டு இந்திரத் திருவும் புவி வெண்குடைக்குள் இடும் அரசாட்சியும்

          கடுத்ததும்பு களத்தரைத் தேடுவார் காதலித்து வருந்திருக் காசியே” (24)

என்ற நிலையில்  மூப்படையும் காலத்தில் பெருவாழ்வு பெறவேண்டுமானல் காசிக்கு வரவேண்டும் என்கிறார்  குமரகுருபரர்.  இப்பாடலில் உள்ள வெண்குடைக்குள் இடும் அரசாட்சி என்பது காசி நகர அரசாட்சியை மறைமுகமாகக் குறிப்பதாகக் கொள்ளலாம்.

          காசிக்கு மற்றொரு பெயர் அவிமுத்தம். இப்பெயராலும் காசியைப் பாரட்டுகிறார் குமரகுருபரர்.

          ‘அகமே அவிமுத்தம் ஐயர் இவர்க்கு ஆகம்

          சகமேழும் ஈன்று எடுத்ததாயே – மிகமேவும்

          எண்ணம் பரமே எமக்குஅளித்தல் முச்சுடரும்

          கண்அம் பரமே கலை” (33)

சிவபெருமான் இருக்கும் இடம் அவிமுத்தம் எனப்படும் காசியே ஆகும். இச்சிவனாருக்கு உடல் என்பது ஏழு உலகங்களையும் ஈன்ற பெருமாட்டியாகிய உமையம்பிகையின் உடம்பே ஆகும். இவர் எமக்கு பரமுத்தி அளிப்பார். இவருக்குக் கண்கள் முச்சுடர்கள். இவர் அணிந்திருக்கும் ஆடை திசைகளே ஆகும்.

இவ்வளவில் குமரகுருபரர் தனக்கு பரமுத்தி அளிக்கும் கடவுளாகக் காசிக்கடவுளை வணங்கியுள்ளார். மேலும் இவரின் பாடல்களைக் காசிநாதர் விரும்பிக் கேட்கிறார் என்பதையும் மற்றொரு பாடலில் பதிவு செய்துள்ளார். ‘‘காது கொண்டு எம் கவிதை கொண்டு ஆட்கொண்டகாசி நாதர் கருத்து ஏது அறிகிலேம்”  (36) என்ற பாடலடிகள் குமரகுருபரரின் பாடல்களைக் கேட்டுக் காசிநாதர் ஆட்கொண்டுள்ளார் என்பதை அறிவிப்பனவாக உள்ளன. குமரகுருபரருக்கு காசிநாதர் ‘அடித் தொழும்பு செய்து ஒழுகும் இவ்வேலை ஈந்தார் எமக்கு” (92) என்று அடிமைத் தொழில் செய்ய வழிவகை செய்தாராம்.

இவ்வாறு பல இடங்களில் தன்னை உளப்படுத்திக் காசிக்கலம்பகத்தைப் பாடியுள்ளார் குமரகுருபரர்.

மேலும் காசி நகருக்குச் சென்று காசிநாதருக்குப் பூ, பச்சிலை கொண்டு அர்ச்சனைகள் செய்ய வேண்டுவதில்லை. இருந்தாலும் காசி வந்தவர் அனைருக்கும் சாரூபப் பதவியை அருள்பவர் காசிநாதர் என்கிறார் குமரகுருபரர். ‘‘போது கொண்டு ஒரு பச்சிலை கொண்டுதாம் பூசை செய்திலர் புண்டரிகப்பதம்  ஏது கொண்டு கொடுப்பர்” (36) என்பது குமரகுருபரர் மொழியாகும். காசியில் விசுவநாதரை வணங்காதவர்களும் இருந்துள்ளனர் என்பது இதன்வழி தெரிகிறது. வணங்காதவர்க்கும் முக்தியளிப்பவர் காசிநாதர் ஆவார்.  காசிக்கு வந்து சேர்ந்தவர் யாவரும் முக்தி பெறுவர் என்பது இதன்வழி அறியத்தக்கது.

காசி நகரில் பாதுஷாவைச் சந்திக்கச் சென்ற அனுபவங்கள் சில குறிப்பாகக் காசிக்கலம்பகத்தில் இடம்பெறச் செய்யப்பெற்றுள்ளது.

“தடமலர்ப் படப்பைத் தண்டலைக் காசிக்

கடிநகர் புரக்குங் கண்ணுதற் செல்வன்

வேம்புங் கடுவுந் தேம்பி ழி யாகச்

செஞ்செவி கைப்பயான் றெரித்த சின்மொழி

அஞ்செவி மடுத்தாங் களித்தன னதனால்

வேத்தவை வியப்ப விரைத்தேன் பில்கும்

தேத்தமிழ் தெளிக்குஞ் செந்நாப் புலவீர்

மண்மகள் கவிகைத் தண்ணிழற் றுஞ்சப்

புரவுபூண் டிந்திர திருவொடும் பொலிந்து

முடிவினு முடியா முழுநலங் கொடுக்கும்

செந்நெறி வினவுதி ராயி னின்னிசைப்

பாத்தொடுத் தடுத்த பரஞ்சுடரை

நாத்தமும் பிருக்க வேத்துமி னீரே” (101)

என்ற இந்தப் பகுதியில்  குமரகுருபரரின் சொற்கள் வேம்பம்பழம், கடுக்காய் போல் முதலில் கசப்பாக இருந்தது  என்று குறிக்கப்படுகிறது. இச்சொற்கள் பின்பு  வேந்தவை வியக்கும் வகையில் அமைந்தன என்றும் குறிக்கப்படுகிறது. ஆகவே புலவர்களே நல்ல தமிழ்ப்பாடல்களைக் காசி நாதர் மீது பாடுக என்று குறிப்பால் தான் வேந்தவையில் வெற்றி பெற்ற செய்தியை நிறைவுப் பாடலான காசிக்கலம்பகத்தின் நூற்றி யொன்றாவது பாடலில் வைக்கின்றார். இவ்வாறு பாடுவதால் இந்திரனை ஒத்த பதவி அடைய முடியும் என்ற நிலையில் இப்பாடல் கடைக்காப்பு பாடலாக அமைகின்றது.  ‘‘   மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னரும் என்      பண்கண்டளவில் பணியச் செய்வாய் ” என்று மேலும் ஒரு குறிப்பு சகல கலாவல்லி மாலையில் இடம்பெறுகின்றது. காசிநகர் மன்னர் குமரகுருபரர் பாடும் பாடலுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்ற வேட்கை இந்த மாலையில் காணப்படுகிறது.

          இவ்வளவில் வடநாட்டுக்குச் சென்று பிற மத ஆட்சியில் சைவம் தழைக்கக் குமரகுருபரர்  முயன்ற முயற்சிகளை அறிந்து கொள்ளமுடிகின்றது.

          காசியிலேயே தன் நிறைவு காலம் வரை வாழ்ந்து அங்கேயே தன்னை ஐக்கியமாக்கிக்கொள்ள வேண்டும் என்று எண்ணினார் குமரகுருபரர். அந்த விழைவும் காசிக்கலம்பகப் பாடல் ஒன்றில் பதிவு செய்யப்பெற்றுள்ளது.

          ‘‘காணும்காணும் நதிகள் எல்லாம் புனல் கங்கையே அங்கு உள தெய்வம்யாவையும்

          தாணு எங்கள் அகிலேசரே மற்றைத் தலங்கள் யாவும் தடமதில் காசியே

          பூணும் ஆசை மற்று ஒன்றே உடல்விடும்போது நன்மணிகர்ணிகை பூத்துறை

          பேணுமாறு பெற வேண்டும் அப்புறம் பேயோடு ஆடினும் ஆடப் பெறுதுமே” (17)

குமருகுருபரருக்கு பார்க்கும் நதி எல்லாம் கங்கையாகத் தெரிகின்றது. ஆற்றின் கரையில் உள்ள தெய்வங்கள் எல்லாம் சிவனாகவே காட்சி தருகிறது. பார்க்கும் கோயில்கள் எல்லாம் விசுவநாதர் ஆலயமாகவேத் தெரிகிறது. ஆனால் கங்கைக்கும் மற்ற நதிகளுக்கும் உள்ள வேற்றுமை கங்கையில் உள்ள மணிகர்ணிகை என்ற நீர்த்துறையே ஆகும். அங்கு  இறந்தோர் காதுகளி்ல் பிரணவ மந்திரம் ஓதப்படும். மணி என்றால் பிரணவம் என்று பொருள். பிரணவ மந்திரம் ஓதப்படுவதன் காரணமாக இறந்த உடல், உயிர் ஆகியன மீளும் பிறவாமை என்ற பெருநெறியில் நிற்கும். முக்தி கிடைக்கும். பேயுடன் ஆடும் பிரான் போல் அவர்கள் பண்பு ஆகும். ஆகவே அந்நிலை அடைவதே தனக்குத் தக்கது என்கிறார் குமரகுருபரர்.

          இவ்வாறு காசி என்ற புண்ணிய தலத்தை மனித உயிர்கள் நிறைநிலையாகக் கொள்ளவேண்டும் என்று காட்டித் தானும் அந்த வழியில் நின்று நிலைத்த வாழ்வு பெற்றவர் குமரகுருபரர் . அவரின் பனுவல்களில் காசிக் கலம்பகம் காசி நகரின்  முக்தித் தன்மையைப் பாடுவது. காசி நகரத்தின் சமய நிலையைப் பாடுவது. காசிநகரின் மரபழகைப் பாடுவது. அவ்வகையில் இச்சமய இலக்கியம் பண்பாட்டு நோக்குடையதாக விளங்குகிறது.

author

முனைவர் மு. பழனியப்பன்

Similar Posts

2 Comments

 1. Avatar
  KULASEKARAN E says:

  காசி மடத்தில் தங்குமிடம், உணவுடன் வேலை கிடைக்குமா?

 2. Avatar
  Kannan K says:

  ஒரே நாடு பத்திகையில் இந்த வாரம் “காசி சங்கமம்” என்ற தலைப்பில் ஒரு சிறப்பிதழ் வெளிவர உள்ளது.

  அதில் இந்த கட்டுரையை எடுத்தாள அனுமதி வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *