.
மீனாட்சிசுந்தரமூர்த்தி
நூல் அறிமுகம்; எட்டுத்தொகை நூல்களில் ஒன்று.கடவுள் வாழ்த்து நீங்கலாக 401 பாடல்களைக் கொண்டுள்ளது.நான்கடிச் சிறுமையும்,எட்டடிப் பெருமையும் உடையது.307,391 ஆம் பாடல்கள் மட்டும் 9 அடிகளாக உள்ளன. தொகுத்தவர் பூரிக்கோ என்பவராவார்.மாந்தர்தம் மனதின் உணர்வுகளைக் கருப்பொருளின் துணை கொண்டு அழகுற அகவற் பாக்களால் வெளிப்படுத்தும் அகப்பொருள் பற்றிய நூலிது.
திணை ;குறிஞ்சி(மலையும் மலை சார்ந்த இடமும்)
கூற்று;தோழி.
துறை; தோழி கையுறை மறுத்தது.
தலைவன் தலைவிக்காகக் கொண்டு வந்த மலர்களைத் தோழியிடம் தந்து அவளிடம் சேர்க்க வேண்ட அவள் அதனை வாங்க மறுத்து உரைத்தது.
பாடியவர்;திப்புத் தோளார்.
பாடல்;01.
செங்களம் படக்கொன்று அவுணர்த் தேய்த்த
செங்கோல் அம்பின் செங்கோட்டு யானை
கழல்தொடி சேஎய்க் குன்றம்
குருதிப் பூவின் குலைக்காந் தட்டே.
பொருள்;
வீரக் கழலணிந்த கால்களைப் பதித்து ,,சிவந்த தந்தங்களைக் (பகைவரைக் குத்தியதால் அவர்தம் இரத்தம் பட்டுச் சிவந்த) கொண்ட பிணிமுகம் எனும் யானையின் மீதேறி தொடியணிந்த ((வளையல் பெண்கள் எனில்,காப்பு ஆடவர் எனில்)கரங்களால் நீதி தவறாத செங்கோல் போலும் அம்புகளை ஏவி அரக்கர்தமை அடியோடு அழித்த செந்நிற அழகன் முருகனின் குன்றத்தில்(எங்கள் மலையும் இதுதான்) இரத்த நிறத்தில் தனியாக அல்ல கொத்துக் கொத்தாய் மலரும் காந்தள் மலர்கள் மிகவாக உள்ளன.
ஆதலின் நீ தரும் காந்தள் மலரை ஏற்க இயலாது.என்கிறாள் தோழி.
’ நயமறிவது;
நங்கையரின் கரங்களுக்கு உவமையாகச் சொல்லப்படுவது ஐந்து நீண்ட இதழ்களாலான அல்லிவட்டமாக மலரும் காந்தள் மலர்.
இங்கு தலைவன் காந்தள் மலரைப் பரிசாக்கித் தலைவியைச் சந்திக்க அனுமதி வேண்டுகிறான்.முல்லை மலரைத் தந்திருந்தால்
ஒருவேளை தோழி ஏற்றிருப்பாள். ஏனெனில் அவன் கற்பு மணம் விழைகிறான் என்று.
அவனோ களவொழுக்கமே விழைகிறான் என்பது இதனால் புலனாக தோழி ஏற்க மறுப்பதன் வாயிலாக இதனை ஏற்க இயலாது விரைந்து உற்றார் பெற்றோருடன் வந்து வதுவை (மணம்) கொள் என்று அறிவுறுத்துகிறாள்.
பழகும் விதத்தில் மட்டுமல்ல தரும் பொருளில் அதுவும் பூவில் கூட
மனநிலையும் மாந்தர் இயல்பும் அறியக் கூடும் என்ற செய்தி நமக்குக் காணக் கிடைக்கிறது.
செவ்வேள், காந்தள் மலர், யானை, குன்றம் இவை குறிஞ்சித் திணையின் முதல் மற்றும் கருப்பொருட்களாவதால் இப்பாடல் குறிஞ்சித் திணை ஆனது.
முருகன் அரக்கரைப் பூண்டோடு அழித்தான்.தீமை நெஞ்சில் கொண்டவரை எமது குலத்தவர் வென்றிடுவர்.நீ இங்ஙனம் கையுறை தந்து எண்ணியது பெற முடியாது. கற்பு மணம் கொள்ளாமல் தவிர்க்க நினையாதே’ என்று எச்சரிக்கை செய்ததுமாகிறது இது.
செம்மை நிறத்தையே மிகுதியும் சொல்லி தலைவி நின் போக்கால் சினமுற்றே இருக்கிறாள் என்றதுமாம்.
‘செங்கோல் அம்பு’ என்றது நீதி தவறாத பண்பினர் நாங்கள் என்றதுவாம். நீ தரும் மலர் எமது குன்றமெங்கும் நிறைந்துள்ளது
இதற்கெல்லாம் மயங்குதல் இல்லை என்றதாம்
உய்த்துணர்வது;
செவ்வேளின் கரத்தின் வீரம் சொல்லி குன்றமெங்கும் கைகள் போன்ற காந்தள் மலர்கள் மிகுந்துள்ளது.என்றதில்
வீரத்தோடு வந்து மகள்பேசி (தலைவியை நிச்சயம் செய்) நங்கையர் மலர் தூவி வாழ்த்த மணம் புரிந்து கொள் என்றதாம்.
நிறைவாக;
காந்தள் மலர் நோய் பல(வாதம்,மூட்டு வலி,தொழு நோய்) தீர்க்கும் மூலிகையுமாகும்.
இது இன்று ஈரோடு, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் சுமார் 500 எக்டர் அளவில் பயிரிடப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
செங்காந்தள் என்றதால் வெண்காந்தள் மலரும் உள்ளமை அறியலாகிறது.
.
- கவிதைகள்
- 2022 ஆண்டில் இந்தியா அடுத்து முற்படும் மூவர் இயக்கும் விண்வெளிச் சிமிழ் தயாரிக்க ரஷ்ய நூதனச் சாதனங்கள் பயன்படுத்தும்
- மன்னிப்பு எனும் மந்திரச்சொல்
- நூலக அறையில்
- இனிய தமிழ் கட்டுரைகள் ஆசிரியர் மணிமாலா மதியழகன் , சிங்கப்பூர்
- பரிசோதனைக் கூடம்
- இந்திய புதிய கல்விக்கொள்கை – ஓர் சிங்கப்பூர் ஒப்புநோக்கு – அத்தியாயம் மூன்று
- பாரதம் பேசுதல்
- ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
- இலக்கிய நயம் : குறுந்தொகை
- கருஞ்சக்தி இயக்கம் பற்றி விளக்கும் தற்போதைய புதிய பிரபஞ்ச நியதி