இளஞ்சிவப்புப் பணம் – அத்தியாயம் ஒன்று

author
0 minutes, 3 seconds Read
This entry is part 5 of 11 in the series 8 செப்டம்பர் 2019

அழகர்சாமி சக்திவேல்

உலகம் முழுதிலும் இருந்து, அச்சடிக்கப்படும் பணத்தாள்களுக்கு சிவப்பு, நீலம் என பல்வேறு வண்ணங்கள் இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே. அது போலவே பணத்திற்கும் பல்வகை வண்ணங்கள் இருப்பது நம்மில் நிறைய பேருக்குத் தெரியாது. ஒரு சிலருக்கு கறுப்புப்பணம் என்றால் தெரியும். சட்டத்திற்குப் புறம்பாக ஈட்டிச் சேர்த்து வைக்கும் பணம் எல்லாம் கறுப்புப்பணம்தான். அதே நேரத்தில், சட்டத்திற்கு உட்பட்டு, நேர்மையாய் சம்பாதிக்கும் பணத்தை, நாம் வெள்ளைப் பணம் என்கிறோம். இத்தோடு பணத்தின் நிறவகைகள் நின்று போகிறதா என்றால் அதுதான் இல்லை. பணத்திலும், நீலப்பணம், பச்சைப்பணம், சிவப்புப் பணம், ஊதாப்பணம், சாம்பல் பணம் என்று பல வகைகள் இருக்கிறது. ஒரு நிறுவனத்தை உதாரணத்திற்கு எடுத்துக் கொள்ளுவோம், அந்த நிறுவனம் திட்டமிட்டு செலவு செய்து, அதன் மூலம் திட்டமிட்ட வரவுகளைப் பெற முடிந்தால், மேற்படி நிறுவனத்தின் அந்த சேமிப்புப்பணத்தை, நாம் பச்சைப் பணம் என்கிறோம். அதே நேரத்தில், மேற்படி நிறுவனம், அப்படித் திட்டமிடாமல் செலவு செய்து பண விரயம் ஆகிவிட்டால், அப்படி விரயமான பணத்தை, நாம் நீலப் பணம் என்கிறோம். ஒரு தனி மனிதனை எடுத்துக் கொண்டால், குறிப்பிட்ட வட்டி கொடுக்கும் அவனது வங்கி சேமிப்புப் பணம், குறிப்பிட்ட வட்டி கொடுக்கும் அவனது நிரந்தர வைப்புத்தொகை போன்றவற்றை நாம் பச்சைப் பணம் என்கிறோம். பச்சைப்பணம் நம் கையை விட்டுப் போகாது.. ஆனால் முதலீடு செய்த பணத்திற்கு, நிறைய வட்டி தராது. அதே நேரத்தில், அதே மனிதன், ஷேர் மார்க்கெட் போன்ற பங்குச்சந்தைகளில் முதலீடு செய்யும் பணத்தை, நாம் சிவப்புப் பணம் என்கிறோம். ஏனெனில், சிவப்புப் பணம் சில நேரங்களில் அதிக லாபமும் தரலாம், சில நேரங்களில் அதிக நஷ்டமும் தரலாம். அதனால், முதலீடு செய்த அசலில் இருந்தே, அதிகப் பணம், நம் கையை விட்டும் போகும் சூழ்நிலையும் சிவப்புப் பணத்தால் உருவாகலாம்..

சிவப்பிற்கும், பச்சைக்கும் நடுவில், நடுத்தரமாய் லாபம் அல்லது நஷ்டம் தரும் பணத்தை, நாம் மஞ்சள் பணம் என்கிறோம். மஞ்சள் பணத்தால், நமக்கு நடுத்தரமான வட்டி கிடைக்கும், கூடவே, நடுத்தரமான நஷ்டத்திற்கான வாய்ப்பும் இருக்கும். இப்படி பணத்தின் நிறங்களை, நாம் அடுக்கிக்கொண்டே போகலாம். சுற்றுச்சூழல் அறிவியலில் முதலீடு செய்யப்படும் பணத்தைக் கூட, நாம் பச்சைப்பணம் என்றே சொல்கிறோம். பணத்தின் வண்ணம் இத்தோடு நின்று விடவில்லை. வயதில் முதியவர்களின் பண வர்த்தகத்திறனை, ஊதா நிறப் பணம் என்றும், மாற்றுத் திறனாளிகளின் பண வர்த்தகத்திறனை சாம்பல் நிறப் பணம் என்றும் உலகம் அழைக்கிறது. சரி.. நாம் இந்தக் கட்டுரையில் காணப்போகும் பணத்தின் நிறம் என்ன? மேலே சொன்ன பண நிறங்களில் சொல்லப்படாத, பிங்க் மணி என்ற இளஞ்சிவப்புப் பணம் குறித்தே, நாம் இங்கே பேசப்போகிறோம்.       

திண்டுக்கல்லில் வசிக்கும் தேவ இந்திரா என்ற திருநங்கை, தனக்குப் பொருத்தமான உள்ளாடைகள் வாங்க ஆசைப்பட்டு கடைத்தெருவுக்குச் செல்கிறாள். ஜவுளிக் கடைக்குள் சென்றவுடன் தான் அவளுக்குப் புரிந்தது. அங்கே அவளை மதிக்க யாரும் இல்லை என்று. அவள் மார்பகத்துக்கு ஏற்ற பிராக்களை எடுத்துக் கொடுக்க, கடைப் பெண்ணுக்கு ஒரு தயக்கம். உள்ளே இருக்கும் திருநங்கையால், கடையில் இருக்கும் மற்ற பெண்கள் கடையை விட்டு வெளியே செல்ல, “கடை வியாபாரம் கெடுகிறதே” என்று கடை முதலாளிக்கு ஒரு கவலை. திருநங்கை தேவ இந்திராவிற்கோ தர்ம சங்கடம். பிரா வாங்காமலே, அவள் வீடு திரும்புகிறாள். தனது மன வருத்தத்தை, கூட இருக்கும் மற்ற திருநங்கைகளுடன் பகிர்ந்து கொள்கிறாள். எல்லோருமே தேவ இந்திரா போல பாதிக்கப்பட்டவர்கள்தான். எல்லோரும் சேர்ந்து ஒரு முடிவு எடுக்கிறார்கள். தங்களுக்கு என, திண்டுக்கல்லிலேயே “பூ வனம்” என்ற ஒரு ஜவுளிக்கடை திறக்கிறார்கள். கடையில், திருநங்கைகளுக்கு ஏற்றவாறு, பலவித பிராக்கள், சுடிதார்கள், பொருத்தமான ஜட்டி போன்ற உள்ளாடைகள் என்று விதவிதமாய் வாங்கி வைக்கிறார்கள். திண்டுக்கல்லிலும், திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்தும், பல திருநங்கைகள் கடைக்கு வருகிறார்கள். வியாபாரம் ஓகோவென்று கொடிகட்டிப் பறக்க ஆரம்பிக்கிறது. முதல் மாடியில் ஆரம்பித்த கடை, இப்போது நான்கு மாடிகளை அடைத்து நிற்கும் பெரிய கடையாக மாறுகிறது. திருநங்கைக் கடையின் வளர்ச்சியை, மற்ற கடைக்காரர்கள் உற்று நோக்க ஆரம்பிக்கிறார்கள். கொஞ்ச நாளில், திருநங்கைகளுக்கென, மற்ற கடைக்காரர்களின் ஜவுளிக்கடைகளிலும் ஒரு குறிப்பிட்ட விற்பனைக்கூடம் உருவாக்கப்படுகிறது. இப்போது தேர்தல் வருகிறது. தேர்தல் செலவுக்கான குறிப்பிட்ட தொகையை, திருநங்கை தேவ இந்திரா தொடங்கிய ஜவுளி நிறுவனம் ஏற்றுக்கொள்கிறது. திருநங்கை தேவ இந்திராவால், அவள் ஆதரித்த கட்சிக்காரர் ஜெயிக்கிறார். நண்பர்களே, நான் இங்கே ஒரு கற்பனைக்கதை மட்டும் சொல்லுவதாய் எண்ண வேண்டாம். மாறாய், இப்படி நடக்க வாய்ப்பிருக்கிறது என்று நான் சொல்வதாய் மட்டுமே எடுத்துக்கொள்ளுங்கள். ஆம்.. தேவ இந்திரா போன்ற மூன்றாம் பாலின மனிதர்கள், இந்தியப் பொருளாதார வளர்ச்சியில் எடுத்துக்கொள்ளும் வர்த்தகப்பங்கு சுமார் 1.5 சதவிகிதம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, வருடந்தோறும், இந்திய மூன்றாம் பாலினத்தவரால், இந்தியாவில் நடக்கும் வர்த்தகப் பரிமாற்றம், சுமார் மூவாயிரம் கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இப்படி, மூன்றாம் பாலின மக்களின் வாங்கும் திறன், விற்கும் திறன் இவைகளுக்கு அடிப்படையான பணமே இளஞ்சிவப்புப் பணம் என்று அழைக்கப்படுகிறது. டோரத்திப் பணம் என்று அமெரிக்காவில் செல்லமாக அழைக்கப்படும் இந்த இளஞ்சிவப்புப் பணம், அமெரிக்காவில் என்ன மதிப்பில் இருக்கிறது தெரியுமா? ஒரு வருடத்திற்கு 900 பில்லியன் டாலர்கள் ஆகும். அதாவது, இந்திய மதிப்பில் அறுபத்திமூன்று ஆயிரம் கோடிகள் ஆகும். இனி உலக அளவில், இளஞ்சிவப்புப் பணத்தின் தாக்கத்தை நாம் பார்ப்போம்.

அமெரிக்காவைப் பொறுத்தவரை, தேர்தலில் நிற்கும் கட்சி வேட்பாளர்களில் பலர், மூன்றாம் பாலினத்திடம் இருந்து வெளிப்படையாக நன்கொடை பெறுவது என்பது பல காலங்களாக நடந்து வரும் ஒரு நிகழ்வு ஆகும். இப்படிபட்ட தேர்தல் நன்கொடைகளை, அமெரிக்காவும் அனுமதிக்கிறது என்பது ஒரு குறிப்பிடத்தக்க விசயம் ஆகும். 2000 ஆண்டில், 5 மில்லியன் டாலர்கள் ஆக இருந்த இந்த மூன்றாம் பாலின நன்கொடை, வருடா வருடம், கொஞ்சம் கொஞ்சமாய் பெருகிக் கொண்டே போவது கண்கூடு. சரி… மூன்றாம் பாலின வர்த்தகம் எப்படி எல்லாம் அமெரிக்காவில் பெருகுகிறது என்பதையும் ஆராய்ந்தால், ‘பிராண்டிங்’ என்ற வர்த்தக முறையைப் பயன்படுத்தி, குறிப்பிட்ட நுகர்பொருட்களை, “மூன்றாம் பாலினப் பொருட்கள்” என அடையாளப்படுத்துவதன் மூலம், கம்பெனி வர்த்தகம் பெருகுவதை நாம் கண்டுபிடித்து விடலாம். அமெரிக்க வரலாற்றை எடுத்துக்கொண்டால், இந்த மூன்றாம் பாலின பிராண்டிங் முறை 1970களின் இறுதியில், மில்க் என்ற மூன்றாம் பாலின அரசியல் தலைவரால் உருவாக்கப்பட்டது என்பது எனது கணிப்பு. அப்போது, அமெரிக்காவில், மூன்றாம் பாலின மக்கள் பெரும்பான்மையாய் வசிக்கும் மாவட்டம் ஆக காஸ்ட்ரோ இருந்தது. காஸ்ட்ரோவில் கேமராக்கடை வைத்து இருந்தார் மில்க். மூன்றாம் பாலினத்தின் முன் அவரது கடை மிகப் பிரபலம் ஆக இருந்தது. அந்த நேரத்தில், காஸ்ட்ரோ மாவட்டம் முழுவதும், முக்கியமாய் மூன்றாம் பாலின மக்களிடம், கூர்(Coor) என்ற பெயருடைய பீர், அமோகமாக விற்பனை ஆகிக்கொண்டு இருந்தது. இதைக் கவனித்த மில்க், கூர் பீர் கம்பெனியில் ‘மூன்றாம் பாலின மக்கள், வண்டி ஓட்டுனர்களாக சேர்த்துக்கொள்ளவேண்டும்’ என மறைமுக நிபந்தனை விதித்தார். கூர் கம்பெனி இதை முதலில் ஏற்றுக் கொள்ளவில்லை. மில்க்கும் அவரது மூன்றாம் பாலின நண்பர்களும் அதனை எதிர்த்தனர். பின்னர், மில்க்கின் ஆலோசனையின் பெயரில், கூர் பீர் வாங்க, காஸ்ட்ரோ மாவட்டத்தின் பல மதுக்கூடங்கள் மறுத்தபோது, கூர் பீரின் விற்பனை சரிந்தது. விற்பனைச் சரிவால், கூர் கம்பெனி, மூன்றாம் பாலினத்திடம் பணிந்தது. அதன் பலனாய், மூன்றாம் பாலின மக்கள், கூர் கம்பெனியில் வேலைக்கு சேர்த்துக்கொள்ளப் பட்டனர். இது மில்க்குக்கு கிடைத்த ஒரு அரசியல் வெற்றி ஆகும். இந்த நாளில் இருந்து மூன்றாம் பாலின பிராண்டிங் ஆரம்பித்து விட்டது என்பது எனது அபிப்பிராயம் ஆகும். பீர் போன்ற நுகர்வுப்பொருளில் ஆரம்பித்த பிராண்டிங் முறை, மூன்றாம் பாலின மதுக்கூடங்கள், மூன்றாம் பாலின ஹோட்டல்கள் என வளர்ந்து, இப்போது மூன்றாம் பாலின கார் சேவை போன்ற சேவைத் துறைகளிலும் முத்திரை பதித்து இருக்கிறது.

மூன்றாம் பாலின வர்த்தகத்தின் பிரமாண்டத்தை உணர்ந்து கொண்ட பல அமெரிக்க வர்த்தக நிறுவனங்கள், தங்கள் நிறுவனம், “மூன்றாம் பாலின ஆதரவு தரும் நிறுவனம்” என்று வெளிஉலகிற்கு அறிவித்து, அதனை நிலைநிறுத்த, பல விளம்பர உத்திகளைக் கையாள்கிறது. உதாரணமாக, Absolute Vodka என்ற சுவீடன் மது நிறுவனம், வானவில் வண்ண நிறத்தில் தனது மதுபாட்டில்களை விரபனைக்குக் கொண்டு வந்தது. உலகின் பெரிய நிறுவனங்களில் ஒன்றான கோக் நிறுவனமும், தனது பங்கிற்கு, மூன்றாம் பாலின விளம்பரங்களை, தனது கோக் பாட்டில் உறையில் சேர்த்துக் கொண்டது. அமெரிக்காவின் பிரபல வானூர்தி நிறுவனமான அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின், மூன்றாம் பாலினம் மூலம் கிடைத்த வர்த்தகம், 1990-களில், 20 மில்லியன் டாலர்கள் ஆக இருந்தது. அதன் பிறகு, அந்த நிறுவனம், நிறைய மூன்றாம் பாலின ஆதரவு விளம்பரங்களை பல்வேறு ஊடகங்களில் வெளியிட்டது. இதனால், அந்த நிறுவனத்துக்கு, மூன்றாம் பாலின வாடிக்கையாளர்கள் பெருக, அந்த நிறுவனத்தின் மூன்றாம் பாலினம் மூலம் கிடைத்த வர்த்தகம், 2000களில், கிட்டதட்ட 200 மில்லியன் டாலர்களுக்கு ஏறி சாதனை படைத்தது. இந்தச் செய்தியில் இருந்து, மூன்றாம் பாலின வாங்கும் திறனான, இளஞ்சிவப்புப் பணத்தின் முக்கியத்துவம், நமக்குத் தெரியவரும். 2005இல் எடுக்கப்பட்ட புள்ளியியல் விவரத்தின்படி, அமெரிக்க இளஞ்சிவப்பு பணத்தின் மதிப்பு சுமார் 900 பில்லியன் டாலர்கள் ஆகும். இது, அமெரிக்காவில் வாழும் ஆசிய அமெரிக்கர்களின் (ஆண்-பெண்களின்) வாங்கும் பணத்திறனை விட அதிகம் ஆகும். மேலும், ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் (ஆண்-பெண்) வாங்கும் திறனான 1.2 ட்ரில்லியன் டாலர்களுக்கு இணையானது ஆகும். மூன்றாம் பாலின நுகர்வுப் பொருட்கள், அமெரிக்காவில் “டிங்கி” என்று செல்லமாக அடையாளப்படுத்தப்படுவதில் இருந்து, அமெரிக்காவின் மூன்றாம் பாலினப் பொருளாதாரம் குறித்த முக்கியத்துவத்தை நாம் அறிந்து கொள்கிறோம். இனி மற்ற நாடுகளில், இந்த மூன்றாம் பாலினப் பொருளாதாரம் எப்படி இருக்கிறது என்பதையும் நாம் கொஞ்சம் ஆராய்வோம்.

இளஞ்சிவப்புப் பணம் குறித்த விழிப்புணர்வு, சீனாவில் சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்னரே, ஒரு குறிப்பிட்ட வடிவம் பெற ஆரம்பித்தது என நாம் சொல்லலாம். சீனாவில், சுமார் ஏழு கோடிகள் எண்ணிக்கையில்,  மூன்றாம் பாலின மக்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. அந்த 7 கோடி பேரில், சுமார் ஐந்து சதவிகிதம் பேர்தான், “நாங்கள் மூன்றாம் இனம்” என வெளியில் வந்து தங்களை அறிவித்துக் கொண்டவர்கள். சீனாவில், ஓரினச்சேர்க்கை ஒரு குற்றமில்லை என்றாலும், இந்தியா போலவே, சீனாவிலும் இன்னும், ஓரினச்சேர்க்கை, ஒரு முழுமையான சமூக அங்கீகாரம் பெறவில்லை. எனினும், ஷாங்காய் போன்ற, சீனப் பெரு நகர வாசிகளின் முற்போக்கான எண்ணங்களால், மூன்றாம் பாலின வர்த்தகம், சீனாவில் உயரப் பறக்க ஆரம்பித்து விட்டது என்பதும் உண்மைதான். சீனாவின், தற்போதைய மூன்றாம் பாலின வர்த்தகத் திறன், வருடத்திற்கு சுமார் 350 பில்லியன் டாலர்கள் ஆகும். இந்திய மதிப்பில், இருபத்திரண்டு ஆயிரம் கோடிகளாக இருக்கும் இந்த சீனாவின் மூன்றாம் பாலின வர்த்தகத்திறன், அமெரிக்காவின் மூன்றாம் பாலின வர்த்தகத்திறனான, 900 பில்லியன் டாலர்களுக்கு கீழேயும், இங்கிலாந்தின் மூன்றாம் பாலின வர்த்தகத்திறனில் பாதியாகவும், தற்போது இருக்கிறது. சீனாவின் சனத்தொகை சுமார் 1.4 பில்லியன்கள் என்பதால், கொஞ்ச வருடங்கள் கழித்து, அதன் மூன்றாம் பாலின வர்த்தகம், அமெரிக்காவையும் மிஞ்சி, உலகின் முதல் இடத்தைப் பிடித்துவிடும் என்பது வெள்ளிடை மலை. இலங்கையைத் தவிர, பெரும்பாலான புத்தமதம் வேரூன்றிய நாடுகளில் மூன்றாம் பாலின வர்த்தகம் கொடி கட்டிப் பறக்கிறது. ஓரினச்சேர்க்கை குறித்த எதிர்மறைக் கருத்துக்களை. அதிகம் பேசாத மதம் என நாம் புத்தமதத்தைச் அடையாளப் படுத்தலாம். எனவே புத்தமதம் சார்ந்த நாடுகள், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, அதன் நாடுகளில், மூன்றாம் பாலினத்துக்கென, பல விடுதிகள், கேளிக்கைகள் போன்றவற்றை ஏற்படுத்தி அதன் பொருளாதாரத்தை முடிந்தவரை முன்னேற்றிக் கொள்கிறது. இதில் தாய்லாந்து, வியட்நாம், தைவான், ஹாங்காங், கம்போடியா போன்றவை, சில குறிப்பிடத்தக்க நாடுகள் ஆகும், சிங்கப்பூர் இன்னும், அதன் ஓரினச்சேர்க்கையை தண்டிக்கும் சட்டத்தை நீக்காத போதும், அனுமதிக்கபட்ட மூன்றாம் பாலின வர்த்தகம், சிங்கப்பூரிலும் ஓரளவிற்கு இருக்கிறது என்பது கண்கூடு.

மூன்றாம் பாலின வர்த்தகத்திறன், இங்கிலாந்தைப் பொறுத்தவரை வருடத்திற்கு 7 பில்லியன் பவுண்டுகள் ஆகும். “பிங்க் பவுண்டு” என்று செல்லமாக அழைக்கப்படும் இந்த இளஞ்சிவப்புப்பணம், இந்திய மதிப்பிற்கு, சுமார் ஐம்பத்தாறாயிரம் கோடிகள் ஆகும். மூன்றாம் பாலின ஒலிம்பிக் விளையாட்டுக்கள், இசைவட்டுக்கள் போன்ற பலவிதமான வடிவங்களில், மூன்றாம் பாலின வர்த்தகம், இங்கிலாந்தில் ஒரு குறிப்பிட்ட பொருளாதார வடிவம் பெற்று இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. ஐரோப்பாக் கண்டத்தின் பெரும்பான்மையான நாடுகளில், ஓரினச்சேர்க்கை அங்கீகாரம் பெற்று உள்ளதால், அங்கேயும் இளஞ்சிவப்புப் பணம் ஒரு முக்கிய பொருளாதார இடத்தை பெற்று இருக்கிறது. கொலம்பியா போன்ற லட்டின் அமெரிக்க நாடுகள், ஆஸ்திரேலியா, நியுசிலாந்து போன்ற ஆசிய பசிபிக் நாடுகளிலும் இளஞ்சிவப்புப் பணப்புழக்கம் தாராளமாக இருக்கிறது என்று புள்ளியியல் விபரங்கள் சொல்கின்றன. இந்தியா அண்மையில், ஓரினச்சேர்க்கையை அங்கீகரித்துள்ளது என்ற காரணத்தால், இன்னும் சில காலங்களில், சீனாவைப் போல், இந்தியாவும், இளஞ்சிவப்புப் பண வர்த்தகத்தில் லாபம் பார்க்கும் என்பது இன்னொரு தொலை நோக்கு ஆகும். சரி.. இளஞ்சிவப்புப் பணம், எந்த மாதிரி வடிவங்களில் எல்லாம், உலகில் பொதிந்து இருக்கிறது என்பதை, இனி நாம் பார்ப்போம்.  

Series Navigationஇந்தியா சமீபத்தில் ஏவிய சந்திரயான் -2 தளவுளவி பிரிந்து நிலவு நோக்கிச் சீராய் இறங்கத் துவங்கி இறுதியில் மின்னலைத் தகவல் அனுப்பத் தவறியதுதமிழ் நாடகம் – உள்ளிருந்து
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *