-முருகானந்தம், நியூ ஜெர்சி
புள்ளி விபரங்களுக்கு (data) முக்கியத்துவம் கொடுத்தவர் பாரதியார். தேவையான இடங்களில் அவற்றைத் தனது கவிதையிலும், கட்டுரையிலும் பயன்படுத்தியுள்ளார். இன்று நாம் அவற்றைப் படிக்கும்போது அந்தப் புள்ளி விபரம் அவர் காலத்து விபரம். நூறாண்டு காலத்திற்கு முந்திய விபரம். ஆவணம் (document) போன்ற விபரம் என்றெல்லாம் எண்ணத் தோன்றுகிறது. நூறு ஆண்டுகளில் அந்த விபரம் எவ்வளவு மாறியிருக்கிறது, மாற்றத்திற்கான காரணங்கள் என்ன என்று சிந்திக்கவும் தோன்றுகிறது.
பாரதி 1908-இல் எழுதிய பாட்டு “எங்கள் தாய்”. இதில் இந்தியாவின் ஜனத்தொகையையும், எத்தனை மொழிகள் பேசப்படுகின்றன என்ற விபரத்தையும் குறிப்பிட்டுள்ளார் .
“முப்பது கோடி முகமுடை யாள்உயிர்
மொய்ம்புற ஒன்றுடையாள் – இவள்
செப்பு மொழிபதி னெட்டுடை யாள்எனில்
சிந்தனை ஒன்றுடையாள்”
அன்று இந்தியாவின் ஜனத்தொகை முப்பது கோடி. இன்று ஆயிரத்து முந்நூறு கோடி. மருத்துவ முன்னேற்றம் (medical advances), மகப்பேறு முன்னேற்றம் (lower mortality rates), விவசாயத்துறை முன்னேற்றம் (green revoluation) முதலியவை இந்த மாற்றத்திற்கு சில காரணங்கள். அன்று இந்தியாவில் 18 மொழிகள்பேசப்பட்டுவந்தன. இன்று அதிகாரபூர்வமாய் 22 மொழிகள்பேசப்படுதாய் அரசு தெரிவிக்கின்றது. கணக்கில் வராத மொழிகளையும் சேர்த்தால் மொத்தம் 150 மொழிகள் என்று விக்கிபீடியா சொல்கிறது.
பாரதி 1909- ஆம் ஆண்டில் “திசை” என்ற பெயரில் ஒரு கவிதை எழுதியுள்ளார். இது ஒரு ரசமான கவிதை. இதில் பாரதியின வானநூல் அறிவு தெளிவாகத் தெரிகிறது. பல வினாக்களை எழுப்பியுள்ளார். ஒளியின் வேகம் என்ன? சூரியஒளி பூமியை வந்து சேர எவ்வளவு நேரமாகும்? சிரியஸ் (Sirius) நட்சத்திரத்திலிருந்து புறப்படும் ஒளி நம்மை வந்தடைய எவ்வளவு வருடமாகும்? அன்றைய நாள் உபகரணங்களின்(instruments) எல்லை தானென்ன? எவ்வளவு தொலை வ்ரை நட்சத்திரத்தைக் காணமுடியும்? இக்கேள்விகளுக்கு அவர்தரும் புள்ளி விபரங்களை இக்கவிதையில் காணலாம்.
“ஒருநொடிப் பொழுதில் ஓர்பத்(து)
ஒன்பதா யிரமாம் காதம்
வருதிறல் உடைத்தாம் சோதிக்
கதிரென வகுப்பர் ஆன்றோர்
கருதவும் அரிய(து) அம்ம!
கதிருடை விரைவும் அஃது
பகுதியி னின்(று)ஓர் எட்டு
நிமிடத்தில் பரவும் இங்கே
(காதம்- 10 மைல்)
உண்டொரு வான்மீன் அஃதை
ஊணர்கள் ஸிரியஸ் என்ப
கண்டஅம் மீனின் முன்னை
விரைவொடு கதிர்தான் இந்த
மண்டலத்(து) எய்த மூவாண்(டு)
ஆமென மதிப்ப ராயின்
எண்டரற்(கு) எளிதோ அம்மீன்
எத்தனை தொலைய(து) என்றே
(ஊணர்கள் – வெளி நாட்டவர்; எண்டரற்கு- எண்ணுவதற்கு)
கேட்டிரோ நரர்கள், வானில்
கிடைக்கும்எண் ணரிய மீனில்
காட்டிய அதுதான் பூமிக்
கடுகினுக்(கு) அணித்தாம் என்பர்
மீட்டும்ஓ ராண்டு மூவா
யிரத்தினில் விரைந்(து)ஓர் மீனின்
ஓட்டிய கதிர்தான் இங்ஙன்
உற்றிடும் தகைத்தும் உண்டே !”
( அணித்து- அருகிலிருப்பது; தகைத்து- தன்மையையுடையது)
மானுடக் கிருமி கோடி
வருத்தத்தால் பயின்று கண்ட
ஊனுரு கருவி யால்இஃ(து)
உணர்ந்ததென்(று) உணரு வீரால்
தானும்இக் கருவி காணத்
தகாப்பெருந் தொலைய வாகும்
மீனுள கோடி கோடி
மேற்பல கோடி என்பர்
(ஊனுரு-ஊனமுறு)
அறிவெனும் புள்ளும் எய்த்(து) அங்(கு)
அயர்வோடு மீளும் கண்டீர்
செறியும்இத் திசைதான் எல்லை
இலதெனச் செப்பும் மாற்றம்
பொறி தவிர்ந்(து) உரைத்த லன்றிப்
பொருள் இதென்(று) உளத்தி னுள்ளே
குறிதரக் கொள்ள லாமோ?
கொஞ்சமோ திசையின் வெள்ளம்”.
(புள் -பறவை; எய்த்தல்-இளைத்தல்; மாற்றம்-வாசகம்)
மேற்கண்ட பாடலில் பாரதியார் தரும் விபரங்கள்:
- ஒளியின் வேகம் ஒரு நொடிக்கு 190,000 மைல் (தற்போதைய கணிப்பு 186,000!)
- சூரிய ஒளி பூமி வந்து சேர எட்டு நிமிடங்கள் ஆகும் . சில பதிப்புகளில் எட்டு விநாடி என்று இருக்கிறது. நிமிடம் என்பதே பொருந்துவதாகும். (தற்போதைய கணிப்பு: எட்டு நிமிடம் 20 வினாடி)
- சிரியஸ் (Sirius) நட்சத்திரத்திலிருந்து ஒளி நம்மை வந்தடைய மூன்று ஆண்டுகள் ஆகும். (தற்போதைய கணிப்பு: 8.6 ஆண்டுகள்)
- பூமிக்கு மிக அருகாமையில் இருக்கும் நட்சத்திரம் சிரியஸ்; (தற்போதைய கணிப்பு: ப்ராக்ஸிமா சென்டாரி (Proxima Centauri), 4.2 ஆண்டு தொலைவில் உள்ளது; பாரதி கட்டுரை எழுதி 5 ஆண்டுகளிற்குப்பின்,1915-இல் கண்டுபிடிக்கப்பட்டது; தற்போது சிரியஸ் ஆறாவது இடத்தில் உள்ளது)
- இன்னும் ஒரு பெயர் குறிப்பிடாத நட்சத்திரத்திலிருந்து ஒளி வந்து சேர 3000 ஆண்டுகள் ஆகும் ( தற்போதைய கணிப்பு: ஒரு நட்சத்திரமல்ல, பல கோடி நட்சத்திரங்கள் அவ்வளவு தொலைவில் உள்ளன)
- உபகரணங்களுக்கு எட்டாத நட்சத்திரங்கள் கோடி கோடி (தற்போதைய கணிப்பு- அவ்வாறே )
- திசைகளுக்கு எல்லை இல்லை (தற்போதைய கணிப்பு- அவ்வாறே; வெளி விரிய, விரிய, அதன் மேல் உள்ள பிரபஞ்சம், அதோடு என்றும் விரிந்து கொண்டே இருக்கிறது. எனவே திசைகளுக்கு எல்லையில்லை (infinite))
இப்பாடலில் உள்ள புள்ளி விபரங்கள் நூறாண்டுக்கு முன் கொடுத்த விபரங்கள் என்றாலும் பெரும்பாலானவை இன்றும் சரியாக உள்ளது. இது பாரதி தன் காலத்து வான நூலைக் கவனமாகத் தெரிந்து வைத்துள்ளார் என்ற செய்தியையும், அறிவியலில் அவருக்கு உள்ள ஆர்வத்தையும் காட்டுகிறது. பாடல் முழுவதையும் படிக்கும்போது பாரதி விஞ்ஞானத்தையும், மெய்ஞ்ஞானத்தையும் இணைக்க விரும்புகிறார் என்று தோன்றுகிறது. பாடலின் சாராம்சம் இதனை விளக்கும்.
“ஒளியின் வேகம் வினாடிக்கு 190,000 மைல்கள். அப்படி இருந்தும் நமக்கு அருகாமையில் உள்ள நட்சத்திரமான சூரியனிடமிருந்து ஒளி பூமிக்கு வர எட்டு நிமிடங்கள் ஆகின்றன. சூரியனுக்கடுத்து அருகாமையில் உள்ள நட்சத்திரமான சிரியசிலிருந்து வந்து சேரவோ, மூன்று ஆண்டுகள் ஆகும். 3000 ஆண்டுத் தொலைவில் கூட ஒரு நட்சத்திரம் உண்டென்று அறிஞர் கூறுவர். மானிட இனம் பெரும் சிரமப்பட்டுத் தயாரித்த கருவிகளை வைத்துக் கண்டுபிடித்த உண்மைகள் இவை. சொல்லப்போனால், இந்தக் கருவிகளின் ஆற்றலுக்கு மீறிய தூரத்தில் இன்னும் கோடி கோடி நட்சத்திரங்கள் உண்டென்பர் அறிஞர். திசைக்கு எல்லை உண்டா என்று தேடும் அறிவுப் பறவை, தேடித் தேடி அயராதா? தேடித் தேடி இளைக்காதா? எட்டுத்திசைகளுக்கும் எல்லை இல்லை என்று அறிஞர் கூறும் வாசகம் நம் அறிவிற்கு அப்பாற்பட்டதென்று, உணர்ந்து சொன்னதே தவிர கருவியால் அளந்து சொன்னதல்ல. நம்மால் அளக்க முடியுமோ திசையெனும் வெள்ளத்தை!”
பாரதி 1910-ஆம் ஆண்டில் எழுதிய கவிதை “சாதாரண வருஷத்துத் தூமகேது”. இது மார்ச் மாத கர்ம யோகி பத்திரிகையில் வெளியானது. சாதாரண வருஷம் எனும் தமிழாண்டில் பூமிக்கு வந்து பல மாதங்கள் சஞ்சரித்த ஹேலி வால் நட்சத்திரம் (Halley’s Comet) பற்றியது. பாடல் பின்வருமாறு-
“தினையின் மீது பனைநின் றாங்கு
மணிச்சிறு மின்மிசை வளர்வால் ஒளிதரக்
கீழ்த்திசை வெள்ளியைக் கேண்மைகொண் டிலகும்
தூம கேதுச் சுடரே, வாராய்
எண்ணில்பல் கோடி யோசனை யெல்லை
எண்ணிலா மென்மை இயன்றதோர் வாயுவால்
புனைந்தநின் நெடுவால் போவதென் கின்றார்
மண்ணகத் தினையும் வால்கொடு தீண்டி
ஏழையர்க்(கு) ஏதும் இடர்செயா தேநீ
போதிஎன் கின்றனர்; புதுமைகள் ஆயிரம்
நினைக்குறித்(து) அறிஞர் நிகழ்த்துகின் றனரால்
பாரத நாட்டில் பரவிய எம்மனோர்
நூற்கணம் மறந்துபன் னூறாண் டாயின
உனதியல் அன்னியர் உரைத்திடக் கேட்டே
தெரிந்தனம்; எம்முளே தெளிந்தவர் ஈங்கிலை
வாராய், சுடரே! வார்த்தை சிலகேட்பேன்
தீயார்க் கெல்லாம் தீமைகள் விளைத்துத்
தொல்புவி யதனைத் துயர்க்கடல் ஆழ்த்திநீ
போவைஎன் கின்றார்; பொய்யோ மெய்யோ?
ஆதித் தலைவி ஆணையின் படிநீ
சலித்திடும் தன்மையால், தண்டம்நீ செய்வது
புவியினைப் புனிதமாப் புனைதற் கேஎன
விளம்புகின் றனர்; அது மெய்யோ, பொய்யோ?
ஆண்(டு))ஓர் எழுபத் தைந்தினில் ஒருமுறை
மண்ணைநீ அணுகும் வழக்கினை யாயினும்
இம்முறை வரவினால் எண்ணிலாப் புதுமைகள்
விளையும்என் கின்றார்; மெய்யோ, பொய்யோ?
சித்திகள் பலவும் சிறந்திடு ஞானமும்
மீட்டும்எம் மிடைநின் வரவினால் விளைவதாப்
புகலுகின் றனர்அது பொய்யோ, மெய்யோ?
இப்பாடலின் சாராம்சம்-
சிறுதினையின் மீது நெடும்பனையை வைத்தாற்போல் தோற்றமளிக்கின்ற வால் நட்சத்திரமே! வருக!. கிழக்கில் உதிக்கும் விடி வெள்ளியுடன் சிநேகம் பூண்டிருக்கிறாய். பல கோடி மைல் நீளத்தில், வாயுக்களால் ஆன உனது வால் சுடர் விட்டுக் கொண்டிருக்கிறது. பூமியையும் உன் வாலால் தொட்டு ஏழை மானிடரைத் துன்புறுத்தாமல் சென்று விடு. உன்னைப் பற்றிப் புதுமையான பல விஷயங்களை மேலைநாட்டு அறிஞர் சொல்லுகின்றனர். எம் மக்கள் வான நூல் மறந்து பல நூற்றாண்டுகள் ஆயின. வெளிநாட்டார் சொல்லியே உன்னைத் தெரிந்து கொண்டோம். உன்னைக் கற்றுத் தெளிந்தவர் எம்மிடையே இல்லை. சுடரே, வா! உன்னிடம் நான் சில கேள்விகள் கேட்பேன்.
தீயவருக்குத் தீங்கு விளைவித்து, பூமிக்குத் துயர் விளைவித்த பின் தான் செல்வாய் என்று சிலர் சொல்லுகிறார்கள். இது மெய்யோ, பொய்யோ?
ஆதி சக்தியின் ஆணையின்படி, நீ எம்மைத் தண்டிக்க வந்திருப்பது, புவியினைப் புனிதமாக்கவே என்று சிலர் சொல்லுகிறார்கள். இது மெய்யோ, பொய்யோ?
75 ஆண்டுக்கொரு முறை நீ பூமிக்கு வருவது வழக்கம் என்றாலும், இந்த முறை விஜயத்தால் பல புதுமைகள் விளையுமென்று சிலர் சொல்லுகிறார்கள் இது மெய்யோ, பொய்யோ?
உன் வரவால் எம்மிடம் சீரிய சித்திகளும், சிறந்த ஞானமும் மறுபடியும் வந்து சேரும் என்று சிலர் சொல்லுகிறார்கள். இது மெய்யோ, பொய்யோ?
இப்பாடலில் அவர் தரும் புள்ளி விபரங்கள் –
ஒளி விடும் வால் உடையது வால் நட்சத்திரம்
பல கோடி மேல் தூரம் நீளமானது இந்த வால்
வாயுக்களால் ஆனது (gas and dust)
75 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூமிக்கு வருவது இந்த வால் நட்சத்திரம் (Halley’s comet)
இந்த ஆண்டில் இது விடிவெள்ளியைக் (Venus) கடந்து செல்வதால், விடிவெள்ளியின் அருகில் தென்படுகிறது
மேற்கூறிய புள்ளி விபரங்கள் அனைத்தும் அன்றும் உண்மை. இன்றும் உண்மை.பெரிய மாற்றங்கள் இல்லை. பாரதி எழுதிய இக்கவிதை அவரது வான நூலறிவையும், நாட்டுப் பற்றையும் படம் பிடித்துக் காட்டுகிறது.
அமெரிக்காவின் அற்புத எழுத்தாளரும், அங்கத எழுத்தாளருமான (satirist) மார்க் ட்வைன் (Mark Twain) 1835-ஆம் ஆண்டு ஹேலி வால் நட்சத்திரம் வந்தபோது பிறந்தார். 1910 ஆம் ஆண்டு மறுபடியும் வால் நட்சத்திரம் வரும் என்று தெரிந்த போது அவர்சொன்னது- “வால் நட்சத்திரத்தோடு வந்த நான் வால் நட்சத்திரத்தோடு போகாவிடின் பெருத்த ஏமாற்றமாகும். ஒன்றாகவே வந்த இரண்டு கோமாளிகள் ஒன்றாகவே செல்லவேண்டும் என்று கடவுள்கூட நினைத்திருப்பார்”. அவர் கணித்த மாதிரியே, மார்க் ட்வைன் ஏப்ரல் 21, 1910-இல் காலமானார். பாரதி அதே வால் நட்சத்திரம் பற்றி ஒரு மாதத்திற்கு முன் எழுதியது பாரதி- மார்க் ட்வைன் வாசகர்களால் மறக்கமுடியாதது.
பாரதி 1920-இல் எழுதிய பாட்டு அல்லா, அல்லா, அல்லா. இப்பாட்டில் மறுபடியும் தனது பிரபஞ்சம் பற்றிய கருத்துகளையும், விவரங்களையும் கூறுகிறார்.
“பல்லாயிரம் பல்லாயிரம் கோடிகோடி அண்டங்கள்
எல்லாத் திசையிலும்ஓர் எல்லையில்லா வெளிவானிலே
நில்லாது சுழன்றோட நியமம்செய்தருள் நாயகன்
சொல்லாலும் மனத்தாலும் தொடரொணாத பெருஞ்சோதி”
(அல்லா, அல்லா,அல்லா)
இப்பாடலின் சாராம்சம்:
எல்லையில்லாத வெளிவானில் (space and sky), எல்லாத் திசையிலும் பல்லாயிரம் பல்லாயிரம் கோடி கோடி அண்டங்கள் (celestial bodies) இருக்கின்றன. இயங்குகின்றன. சுழல்கின்றன (moving in an orbit). நில்லாமல் சுழலும் வரை இயக்கத்துக்கு யாதும் குறைவில்லை. நில்லாமல் சுழலும் நியதி அமைத்தவன் யார்? அல்லா, அல்லா,அல்லா!
எல்லையில்லாதது வெளி (space), எல்லாத்திசையிலும் உள்ளது எண்ணற்ற அண்டங்கள் (galaxies or celestial bodies), என்று பாரதி கொடுக்கும் புள்ளி விபரங்கள் இன்றும் அறிவியலார் ஏற்கும் விபரங்கள். அண்டங்களின் சுழற்சிக்கு ஊறு வந்தால் ஆபத்து வரும் என்பதை நன்கு உணர்ந்திருக்கிறார் பாரதி. தடம் மாறி வந்த விண்கல் தாக்கித்தானே பறக்காத டைனசார் (non-avian dinosaur) அனைத்தும் அழிந்தன.
இவ்வாறு அறிவியலில் ஆர்வம் கொண்டவராகவும், வானியலில் ஞானமுடையவராகவும், புள்ளி விபரங்களின் ஆற்றல் தெரிந்தவராகவும் பாரதி இருந்திருக்கின்றார். பள்ளியில் படித்த காலத்தில் கணக்குப் பாடத்தில் அக்கறை காட்டாத அவர், காலப்போக்கில் தனது பொது அறிவாலும் (common sense), பத்திரிக்கைத் தொழிலில் (journalism) ஈடுபட்டதாலும் புள்ளி விபரங்களின் (data) அருமையையும், அவசியத்தையும் உணர்ந்து தனது படைப்புக்களில் பயன்படுத்தியுள்ளார். நூறாண்டிற்குப் பின், அப்படைப்புக்கள் ஆவணத் தகுதி (document status) பெற்று, தமிழ் இலக்கிய வானில் சுடர்விட்டுப் பிரகாசிக்கின்றன.
(இக்கட்டுரையில் உள்ள பாரதி பாடல்களையும், சொல்லகராதியையும் கவிஞர் பத்ம தேவன் உரைஆசிரியராய் வெளியிட்ட புத்தகத்திலிருந்து எடுத்திருக்கிறேன். கடினமான பாடல்கள் சந்தி பிரித்து எழுதப்பட்டுள்ளன. பாரதியார் கவிதைகள், கற்பகம் புத்தகாலயம், 2018, சென்னை. )
- சொல்லும் செயலும்
- முடிச்சுகள்
- மொழிவது சுகம், செப்டம்பர் 7, 2019
- இந்தியா சமீபத்தில் ஏவிய சந்திரயான் -2 தளவுளவி பிரிந்து நிலவு நோக்கிச் சீராய் இறங்கத் துவங்கி இறுதியில் மின்னலைத் தகவல் அனுப்பத் தவறியது
- இளஞ்சிவப்புப் பணம் – அத்தியாயம் ஒன்று
- தமிழ் நாடகம் – உள்ளிருந்து
- அப்பாவின் முகம் பார்க்கும் கண்ணாடி
- பாரதியும் புள்ளி விபரமும்
- ஆகச்சிறந்த ஆசிரியர்
- யாவையும் உண்மை
- ’ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் 3 கவிதைகள்