யாவையும் உண்மை

author
0 minutes, 48 seconds Read
This entry is part 10 of 11 in the series 8 செப்டம்பர் 2019


கௌசல்யா ரங்கநாதன்
          —–
-1-
வாராது வந்த மாமணியாய், திருமணமாகி பல வருடங்களுக்கு பிறகே, அதுவும் பல டாக்டர்களிடம் செக்கப்புக்கு போய், கோவில்கள், கோவில்களாய் சுற்றி, விரதமிருந்து, அங்க பிரதட்சிணம் செய்து,
மண் சோறு தின்று, அன்னதானம் செய்து, சுமங்கலிப் பெண்டிருக்கு புடவைகள், ஜாக்கெட்டுகள் வாங்கி கொடுத்து, அனாதை ஆசிரம குழந்தைகளுக்கு வேண்டிய பொருள் உதவிகள் என்று
என்ன, என்னவெல்லாமோ செய்து பிறந்து, மூன்றே மாதங்களான எங்கள் பெண் குழந்தை ரமாவை எப்படியெல்லாம் சீரும், சிறப்புமாய் வளர்க்க வேண்டும் .. மற்ற வேலைக்கு போகும் தாய்மார்கள் போல
கடைகளில் விற்கும் புட்டி பால் கொடுக்க கூடாது..தாய் பால் மட்டுமே குடித்து வளரட்டும், திட உணவு உட்கொள்ளும் வரை..அப்படியே திட உணவுக்கே பழக்கினாலும் அவ்வப்போது தாய் பாலையும்
கொடுக்க வேண்டும்..இந்த உலகத்தில் கலப்படமில்லாதது என்று அறியப்படுவது இரண்டு மட்டுமே..ஒன்று தாய் பால்..பிறிதொன்று பெற்றெடுத்த தாயின் எதிர்பார்ப்புகள் இல்லாத அன்பு என்பதால்..
ஆனால்  சில நாட்களாய் ரமாகுட்டிக்கு தாய் பால் கொடுக்கும் போதெல்லாம் காய்ச்சல் வருகிறது. “அதெப்படி தாய்ப்பால் கொடுக்கும்போது ஒரு குழந்தைக்கு காய்ச்சல் வரும்..மற்ற எல்லா
பால் பவுடர்களையும் விட மிக சிறப்பானது தாய் பால் மட்டும்தானே..ஒரு தாய் என்பவள் வெறும் தாய் பாலை மட்டுமே கொடுப்பதில்லை தன் குழந்தைக்கு! கூடவே தன் அன்பையும், அதற்கு அந்த பருவத்தில் விளங்குகிறதோ,
 இல்லையோ, அதை கொஞ்சி மகிழ்வதுடன், மழலை மொழியில் அதனுடன் பேசி,மகிழ்ந்து, விளையாடி,கதைகள் பல சொல்லி,தாலாட்டு பாடி,  
அந்த குழந்தைக்காகவே பல பகலிரவுகள் கண் விழித்து, தாய்பால் கொடுக்கும்போது வாய்க்கு ருசியாய்
 சாப்பிட்டால் எங்கே தன் குழந்தைக்கு ஒத்துக்கொள்ளாமல் குழந்தையின் உடல்நிலை பாதிப்புக்குள்ளாகி விடுமோ என்று அஞ்சி தன் வாயைக் கட்டி,வயிற்றைக்கட்டி என்பார்களே, அப்படி, அன்று தொடங்கி
அந்த குழந்தையின் வளர்ச்சியை ஒவ்வொரு ஸ்டேஜிலும் கண்காணித்து அந்த குழந்தைக்கு ஒரு கலியாணம் பண்ணி வைத்த பிறகும் வரும் மருமகளிடம்” இவனுக்கு இது ஒத்துக்காது..அது ஒத்துக்காது” என்றெல்லாம் அக்கரை காட்டி…
ஊம் நினைத்தால் மெய் சிலிர்த்து போகிறது..என் ரமாகுட்டியை ஒரு முதல்தர பிரஜையாய் வளர்ப்பேன்..எதுவொன்றையும் பார்த்து, பார்த்து செய்வேன்..அதற்கு முதற்கண்ணாய், கண்ட, கண்ட புட்டி பால் பவுடர்களை கொடுத்து கெடுத்து விடக் கூடாது என்பதற்காகவே மைய அரசில் பணியாற்றிடும் நான் பேறுகால  விடுப்பும், அதை தொடர்ந்து மேலும் 3 மாதங்கள்
விடுப்பும் எடுத்துக் கொண்டு மிக ஜாக்கிரதையாய் வளர்த்து வந்தும் எங்கள் ரமாகுட்டிக்கு தாய்பால் கொடுக்கும் போதெல்லாம் காய்ச்சல் வருகிறதென்பதே நிஜம்.. தவிரவும் எனக்கென்னவோ,போதிய அளவு தாய் பால் சுரக்காததால்,
 டாக்டர்கள்,மற்றும் பாட்டிமார்கள் அறிவுரைப் படியும் “எத்தை தின்றால் பித்தம் தெளியும்” என்பார்களே அப்படி எல்லாம் செய்து கொண்டுதான் இருக்கிறேன் என்றாலும்,தாய்ப்பால் மட்டுமே ஒரு குழந்தைக்குக்கு பத்தவில்லை என்பதால், டாக்டர்கள் அறிவுரைப்படி மிகச்சிறந்த பால் பவுடர் வாங்கி கொடுத்தும்கூட , அதென்னவோ எனக்கு எதுவும் விளங்கவில்லை பேதியின் மூல காரணம் என்ன? என்ன செய்யலாமென..
வீட்டில் உள்ள மாமியாரும், அம்மாவும் “குழந்தைக்கு வயிறு ஒப்புசம்னு தோணுது..ஒண்ணு செய்.. வசம்பு எடுத்து தண்ணீர் விட்டு குழைத்து
வயிறு பகுதியில் பத்துபோல போடு..கூடவே ஒரு விரலால் அப்படி குழைத்த வசம்புவை குழந்தை நாக்கிலும் தடவு.. என்பார்கள்.  அவர்களிடம் எப்படி அந்த ஸோகால்ட் வசம்பு ஒத்துக்
கொள்ளும் குழந்தைக்கு ..அதுவும் தரையில் தண்ணீர் விட்டு குழைத்த ஒன்றை எப்படி குழந்தையின் நாக்கில்.. என்னதான் குழந்தை இருக்கும் வீடென்பதால் ஒரு நாளைக்கு காலையில் இரண்டு
முறைகளும், மாலையில் இருமுறைகளும் வீட்டு வேலை செய்யும் பெண்மணியை விட்டு சுத்தமாய் பெருக்கிய பின், கிருமிநாசினி கலந்த தண்ணீர் தெளித்த பிறகு மாப் போட்டு சுத்தம் செய்தாலும்..
இந்த பழக்கத்தை நாங்கள் காலா காலமாய் செய்துகிட்டுதானே வரோம்..உனக்கு செஞ்சோம்..உன்கூட பிறந்தவங்களுக்கெல்லாம் செஞ்சோம்..அப்பல்லாம் முணுக்குனு ஒரு தும்மல் போட்டாக்கூட
டாக்டர்கள் ஏதும்மா..இதையேதான் எங்களை பெத்தவங்களும் எங்களுக்கு செஞ்சாங்க..நாங்கள்ளாம் ஆரோக்கியமா வளரலையா என்ன? உங்களையெல்லாம் பெற்று வளர்க்கலையா..இப்ப பூச்சி பிடிக்கிறே”
என்பார்கள்.  என் அம்மாவாகட்டும், மாமியாராகட்டும் அவர்கள்தான் ரமாவை குளிப்பாட்டி விட்டு உலர்ந்த துண்டால் துடைத்து விட்டு, சாம்பிராணி புகை போட்டு, வாரம் ஒருமுறையோ, இருமுறைகளோ,
கார வெத்திலை, கொஞ்சம் ஓமம், துளசி, வெள்ளைபூண்டு எல்லாம் எடுத்து பொடித்து, சுத்தமான தண்ணீர் விட்டு அடுப்பில் கொதிக்க வைத்து, அதில் கொஞ்சம் கல் உப்பை போட்டு, நன்றாக கலக்கி,
வடிகட்டி, ஒரு பாலாடையோ இரண்டு பாலாடையோ புகட்டுவார்கள்..  மாதம் ஒருமுறை குழந்தை வளர்ந்த பிறகு வேப்பிலை கொழுந்து எடுத்து அம்மியில் ஓட்டி(அரைத்து)., கொஞ்சம் உப்பு கலந்து, அதை சிறு, சிறு,
உருண்டைகாளாக்கி ஒரு ஞாயிறன்று வீட்டில் உள்ள அனைத்து பேர்களுக்கும் அம்மாவோ, பாட்டியோ கொடுத்து விழுங்கச் செய்வார்கள்…ஆனால் இன்று!  என்னதான் என் அம்மாவோ,
மாமியாரோ இதையெல்லாம் ஓரளவுக்கு செய்கிறார்கள்தான்..இதெல்லாம் விட ஒரு குழந்தைக்கு வேண்டியது போஷாக்கான தாய்பால் ஒன்று மட்டும்தான் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை.
“இப்ப நீ லீவில் இருக்கிறவரையில் தாய்பால் கொடுப்பேதான் ரமா குட்டிக்கு..அருகிருந்தும் பார்த்துக்க முடியும் எங்களை சிரமப்படுத்தாம..ஆனா..கொஞ்சம் யோசிச்சு பாரு..உன் லீவு முடிஞ்சு நீ ஆபீசுக்கு போக,ஆரம்பிச்சவுடனே,என்ன செய்ய முடியும்?.மனசு கிடந்து அடிச்சுக்கும்.
 அதனால இப்பத்திலிருந்தே கொஞ்சம், கொஞ்சமாய் குழந்தை, அதுவும் பெண் குழந்தையா வேற
போச்சு..புட்டிபால் கொடுத்து பழக்கு.அப்பப்ப தாய்பாலும் கொடு” என்றனர்.  எனக்கு இப்படி மாற்றி, மாற்றி குழந்தைக்கு கொடுப்பதில் விருப்பம் இல்லையென்றாலும் போதிய அளவு எனக்கு
தாய் பால் சுரக்கவில்லை என்பதாலும் வேறு மாற்று பால் பவுடர்களுக்கு தாவியபோது அது என்னவோ சொல்லி வைத்தாற்போல எந்த மிகச்சிறந்த பிராண்ட் பால் பவுடர்களும் ரமாகுட்டிக்கு
ஒத்துக் கொள்ளாமல் நை, நை என்று அழுதது.சில சமயங்களில் பாட்டி வைத்தியம் கை கொடுத்தது.பல சமயங்களில் குழந்தை நல டாக்டர்களின் உதவியைத்தானே நாட வேண்டியிருக்கிறது
என்பதே நிசம்.. டாக்டர்கள்தான் என்ன செய்வார்கள்.?மிகச்சிறந்த குழந்தை நல டாக்டர்களையும் பார்த்தாயிற்று.. “அனேகமாய் ஒரு பிறந்த குழந்தைக்கு முதல்ல சில பால் பவுடர்கள் ஒத்துக்காதுதான்..
நீங்க தாய்பால் போதிய அளவு சுரக்கலைனு சொல்றதால,அதுக்கு சில மெடிசின்ஸ் எழுதித்தரேன் எனும்போது, அம்மாவாகட்டும், மாமியாராகட்டும் “இதுக்கெல்லாம் எதுக்கு டாக்டர்?” என்று
 சொல்லி கை வைத்தியமாய் வெள்ளைப் பூண்டை பாலில் வேகவைத்து உண்ணச் சொல்வதுடன், வேறு என்ன, என்னவோ செய்த பிறகு ஓரளவுக்கு தாய் பால் சுரக்க ஆரம்பித்தாலும், வளர்ந்துவரும் ஒரு குழந்தைக்கு,  அது மட்டுமே போதுமானதாக இல்லை..அப்போதுதான் குழந்தை ரமாவுக்கு தாய்பாலும் ஒத்துக் கொள்ளாமல் காய்ச்சல் வர ஆரம்பித்திருந்தது..
அதெப்படி தாய்பால் கொடுத்தால் குழந்தைக்கு காய்ச்சல் வரும் என்று சிலர் கேலி பேசினர்.. இன்னம் சிலர் “குழந்தைக்கு தாய் பால் கொடுக்கும் வரையிலாவது அம்மா என்பவள், கொஞ்சம் வாயைக்கட்டணும்..கண்டதை, கண்ட நேரத்தில் தின்னுக்கிட்டே இருக்க கூடாது என்றனர்..
என் குழந்தை பருவத்தில் கண்டதை,நேரம் காலம் பாராமல் வகை,வகையாகவும், வயிறு முட்டுமளவுக்கும் தின்றதாக லேசு,பாசாக ஞாபகம்.
ஓரளவுக்கு,வளர்ந்த பிறகு,மற்ற இளம் பெண்கள் போல, காலையில் இரண்டு இட்லி, கொஞ்சம் பால்..மதியம் எண்ணையில் வறுக்காத, அரை வேக்காட்டில் எடுத்த பச்சை காய் கறிகள் என்று எல்லாமே அரை வயிறுக்கு  மட்டுமே உண்பதை வழக்கமாக்கி கொண்டேன்.நண்பர்கள்,
உறவினர்கள், வீடுகளுக்கெல்லாம் செல்லும்போதுகூட,  green tea அல்லது அரை டம்ளர் மோர் மட்டுமே குடிப்பேன்..அதுவும்,
 இப்போது ரமா பிறந்த பிறகு எதுவொன்றையும் பார்த்து, பார்த்து சாப்பிடுகிறேன்..தினம்தோறும் பால் குடிக்கிறேன்..பழங்கள் சாப்பிடுகிறேன், அவைகளையும் சுத்தமாய் கழுவிய பிறகே..முடிந்த அளவுக்கு எனக்கு பத்திய சாப்பாடுதான்..டானிக்குகள், மற்ற மருந்துகள் எல்லாமே,
  டாக்டர் பிருஸ்கிரைப் பண்ணியதை,  “காலாவதியாகும் தேதி”பார்த்து,வாங்கி, வேளை தவறாமல் எடுத்துக் கொள்கிறேன்..மறந்தும், எந்த ஸ்டார் ஹோட்டல்களிலும்கூட, சாப்பிடுவதே இல்லை..அப்படி எதுவொன்றையும், மிக,மிக,கவனமாகவும், நுணுக்கமாகவும்,
பார்த்து, பார்த்து செய்தும் ஏன் தாய்பால் குழந்தைக்கு ஒத்துக் கொள்ளவில்லை என்பது விளங்கவில்லை. புதிராய் இருக்கிறது எனக்கு.  அழுகை, அழுகையாய் வருகிறது.. என்னை சுற்றியுள்ளவர்கள் கேலி
பேசுகிறார்கள் நான் இல்லாத போது.. தாய்பால் கொடுத்தால் எங்கே என் அழகு கெட்டு விடுமோ என்றெண்ணி அதை நான் தவிர்த்திட வேண்டி நாடகமாடுகிறேனாம்…அதுவும் என்னைப் பார்த்து,
 என்னை நன்கு அறிந்தவர்களே சொல்லும் போது எங்கு போய் முறையிடுவது என் நிலைமையை..அம்மா கூட ஒரு முறை என்னிடம் “நான் கேட்கிறேனேனு தப்பா நினைக்காதேடி..ஆனாலும் உன் கிட்ட கேட்காம இருக்க முடியலை என்னால்..உன்
புருஷன்காரன் தாய் பால் கொடுக்காதேனு உன்னை…” என்ற போது, கேட்பது அம்மாவென்றும்  பாராமல் சீறினேன்..”என்னம்மா ஒரு பெத்த பெண்ணைப் பார்த்து இப்படியொரு கேள்வி கேட்கிறே?உன் பெண் இப்படியெல்லாம் நடந்துகொள்வானு எப்படிமா உன் மனசில் தோணிச்சு”?
என்றேன்..”என்னடி தப்பா கேட்டுட்டேன் உன்னை? அப்படி உன் புருஷன்காரன் கேட்டிருந்தாலும் இதிலென்ன தப்பு? ஆமாண்டி..இன்னம் எத்தனை நாட்கள்தான் நீ லீவு போட முடியும் ஆபீசுக்கு?அப்புறம்,
நீ ஆபீசுக்கு போயிட்டா என்னடி பண்ண முடியும் நாங்க? அதுக்குள்ள ஏதாவது ஒரு பால் பவுடரை வாங்கி கொடுத்து பழக்கணும் இல்லையா? நானாகட்டும், உன் மாமியாராகட்டும் வேற என்னடி
செய்ய முடியும்னு நினைக்கிறே?” என்ற போதும் “அம்மா நான் மத்த அம்மாக்கள் போல இல்லை..என் குழந்தைக்கு தாய் பால் மட்டுமே, அது வத்தற வரை கொடுக்கணும்னு நினைக்கிறவ…என்
புருஷனும் உன் இஷ்டப்படியே செய்..நீ வேலையை விட்டாக்கூட என் ஒருத்தன் சம்பளமே போதும்னுதான் சொல்றார்..ஆனா அது என்னவோ விளங்கலைமா எனக்கு ..தாய்பால் நான் கொடுக்கும்போதெல்லாம் ஏம்மா என்
குழந்தைக்கு காய்ச்சல் வருது.. டாக்டர்களிடமும் காட்டியாச்சு..” ஹாஸ்பிடல்ல கொடுத்த சார்ட்படி போலியோ சொட்டு மருந்து, தடுப்பூசிகள் எல்லாம் கரக்டா கொடுக்கிறீங்கள்ள ” என்ற போது,”நான்
கரக்டா கொடுக்கிறேன் டாக்டர் என்றேன்.ஆனாலும் டாக்டருக்கும் சந்தேகம் .”எனக்கு எதுவும் விளங்கலை. அதெப்படி ஒரு குழந்தைக்கு தாய் பால் ஒத்துக்காமப் போகும்..ஐ டவுட்..வேற ஏதோ காரணங்கள் இருக்கலாம்னு தோணுது.. Let us wait for a few days..இன்னொண்ணு,
 சொன்னா தப்பா” என்றவர் சற்றே தயங்கி,..”தினமும் சுடு தண்ணியில்,  கிருமிநாசினி இரண்டொரு சொட்டு விட்டு, நல்ல சோப் போட்டு
குளிச்சுப் பாருங்க.எந்த காரணம் கொண்டும்.என்னதான் நான் லேடி டாக்டராயிருந்தாலும், சொல்ல முடியலை வெளிப்படையாய்..தாய்பால் சுரக்கிற இடத்தை சுத்தமா, இன்ஃபெக்க்ஷன் ஆகாமப்
 பார்த்துக்குங்க..நான் இதை சொல்ல வேண்டியதில்லை..ஏன்னா, நீங்கள்ளாம் படிச்சு, வேலை பார்க்கிறவங்க” என்ற போது  சொன்னேன் “நான் இதை எப்பவுமே அப்சர்வ் பண்ணிக்கிட்டுத்தான் இருக்கேன் டாக்டர் என்று..அப்போது அந்த லேடி டாக்டரும்,”ஆல் ரைட்..எனிவே, நான் இப்ப
கொஞ்சம் மெடிசின்ஸ் எழுதித்தரேன்..கம் ஆப்டர் எ வீக்ஸ் டைம் “என்றார்.. அம்மாவும், மாமியாரும் சொன்னார்கள்..”அது
என்னவோ எங்களுக்கு விளங்காத புதிராவே இருக்குடிமா தாய் பால் கொடுக்கிறப்பல்லாம் ஏன்தான் குழந்தைக்கு காய்ச்சல் வருதுனு..குழந்தை எதையாச்சும் கீழே கிடக்கிறதை..” என்ற போதே மடக்கி,
“குழந்தை இன்னம் தவழவே ஆரம்பிக்கலைன்றப்ப எப்படி கீழே கிடக்கிறதை எடுத்து வாய்க்குள் போட்டுக்கும்?” என்றேன்.. “கோபிச்சுக்காதேம்மா..அப்ப ஒண்ணு செஞ்சு பார்க்கலாம்..ஏன் நாம்
நல்ல பசும்பாலா,மாடுகள் கறக்கிற இடத்துக்கே போய் வாங்கிக்கிட்டு வந்து குழந்தைக்கு கொடுத்துப் பார்க்கக் கூடாது? என்றார்கள்.
“பசும்பால் எங்கே கிடைக்கும் இங்கே? இப்பத்தான் எங்கே பார்த்தாலும் பாக்கட் பால் தானே” என்ற போது “அடுத்த தெருவில ஒரு வீட்டில் பசு மாடு வச்சிருக்காங்க..அவங்க கிட்ட, கெஞ்சி,கூத்தாடி, சுத்தமான பசும்பாலாய் என்ன விலை கேட்டாலும் கொடுத்து வாங்கிக்கிட்டு வந்து ரமாகுட்டிக்கு கொடுத்து பார்ப்போமே” என்ற யோசனையையும் புறம் தள்ள முடிய வில்லை..எருமைப்பால்
போலவோ, பாக்கட் போலவோ பசும்பால் அடர்த்தியாய் இருக்காது..தண்ணீராய்தான் இருக்கும்.  பசும்பால் கொடுத்த பிறகு குழந்தை என்னவோ முன்போல அழாமல்தான் இருந்தது.. காய்ச்சலும் வரவில்லை
எனினும் டாக்டர்கள் செக்கப்புக்கு பிறகு குழந்தையின் எடை குறைந்திருப்பாதாக சொன்னார்கள்..  
“பசும்பால் மட்டுமே பத்தாதும்மா..கொஞ்சம் தாய்ப்பாலையும் டிரைப் பண்ணி பாருங்களேன் இப்ப” என்ற டாக்டர் அட்வைசையும் புறம் தள்ள முடியாமல் இப்போதாவது, அதாவது டாக்டர்கள் எழுதிக்கொடுத்த
 மருந்துகள் ரெகுலராய் எடுத்துக் கொண்டதால் தாய்பால் ஒத்துக்கொள்ளும்..இனி காய்ச்சல் வராது என்றெண்ணி தாய்பால் கொடுக்க முன்போலவே குழந்தைக்கு மறுபடி காய்ச்சல் வந்தது..
செய்வதறியாது திகைத்துப் போய், கடவுளை வேண்டினோம்.. பசும்பால் மட்டுமே பத்தாமல் குழந்தை அழுதுகொண்டே இருந்ததாலும் வாங்கி வந்த பசும்பால் தீர்ந்து விட்டதாலும் என்ன செய்வதென்று விளங்காமல்,
 கையைப் பிசைந்து கொண்டிருக்கையில் வீட்டு வேலைக்காரப் பெண்மணி ஓடோடி வந்து குழந்தைக்கு தாய்ப் பால் கொடுத்தாள். நாங்கள் போய் பார்த்த போது “என்னிய மன்னிச்சிரும்மா..கொளந்தையும்,
 அழுதுகிட்டே இருந்திச்சில்ல.உன்னாலும் தாய் பால் கொடுக்க முடியலை. அதான் நான் கொடுத்தேன்” என்றவளுக்கும் சமீபத்தில்தான் ஒரு குழந்தை பிறந்திருந்ததாலும், அவளுக்கு தேவைக்கு அதிகமாய் பால் சுரந்ததாலும், “அம்மாவும், மாமியாரும் ஒருசேர,
 “நீ என்னம்மா தப்பு பண்ணிட்டே? இது உலக வழக்கம்தானே..உன் தாய்பால் குழந்தைக்கு ஒத்துக்கும்னா நீயே உன்னால் முடிஞ்சா கொடேன்
இந்த குழந்தைக்கும்..ஆனா,எந்த காரணம் கொண்டும், நீ பெத்த குழந்தையை பட்டினி போடக்கூடாது..இது எவ்வளவு மகத்தான புண்ணியம்..இந்த கொடுப்பினை உனக்கு இருக்கு.. ஆனா எங்களுக்கு!” என்றனர்..–
-2-
அழுகை, அழுகையாய் வந்தது . என் பிரச்சினையை சொல்லி அழவும் ஆளில்லை. சொன்னாலும் நம்பப் போவதில்லை.. வேறொரு தாய்க்கு இப்படியொரு பிரச்சினையிருந்து அதை என்னிடம் வந்து சொன்னாலும், நானும் இப்படித்தான் நடந்து கொள்வேன்..
நம்ப மாட்டேன்தான். “அதெப்படி தாய்பால் உன் குழந்தைக்கு ஒத்துக் கொள்ளாமல் போகும்?” என்று குறுக்கு கேள்விகள் கேட்பேன்.”தலைவலியும், காய்ச்சலும் தனக்கு வந்தால்தான்” என்பது ஆன்றோர் வாக்கு.ஒவ்வொரு
 சமயம் எனக்கே கூட நான் அப்படியொரு நம்பிக்கையை என்னுள் வளர்த்துக் கொண்டிருப்பது தவறோ என்றே தோன்றும்..காக்கை உட்கார” என்ற பழமொழிக்கொப்ப ரமா குட்டிக்கு
தாய்பால் கொடுக்கும் போதெல்லாம் காய்ச்சல் வருவதே கூட குழந்தையின் உடம்பில் ஏதாவது கோளாறாகவும் கூட ஏன் இருக்க கூடாது? அதர்வைஸ் எனக்கே ஏன் உடலில் ஏதாவது கோளாறுகூட…ஏன் அப்படி இருக்கக் கூடாது என்று ஒரு மனமும்,அப்படித்தான் இருக்க வேண்டும்
என்று இன்னொரு மனமும் சொல்லியது..ஏனெனில் குழந்தையை சர்வ ஜாக்கிரதையாய், கண்களை இமை காப்பது போல அவ்வளவு முன் ஜாக்கிரதையாக அல்லவா வளர்க்கிறேன் குழந்தை இரவு
நேரங்களில் கொஞ்சமே சிணுங்கினால் கூட..குழந்தையை எறும்பு, அல்லது கொசு போல ஏதாவது கடித்து, அதனால் அழுகிறதா, மின் விசிறி சுற்றுகிறதா, இப்படி இன்னம் என்னவெல்லாமோ
செய்தும், அது ஏன் நான் தாய்பால் கொடுத்தால் மட்டுமே அன்றைக்கென்று பார்த்து உடனே குழந்தைக்கு காய்ச்சல் வருகிறது சொல்லி வைத்தாற்போல..நான் ஏன் ஒரு நல்ல மனநல மருத்துவரை
பார்க்க கூடாது என்று கூட தோன்றியது ஒவ்வொரு சமயம்..ஆனாலும் அதையும் வெளிப்படையாய் சொல்ல முடியவில்லை.. என் தவிப்புணர்ந்த என்னவர் சொன்னார் “ஐ நோ யுவர் பிராபிளம்..
என்ன செய்யலாம்னு யோசிப்போம்..வேற நல்ல  அனுபவமுள்ள டாக்டர்களா பார்த்து கன்சல்ட் பண்ணலாம்..அதுவரை..அதுவரை..” என்று தயங்கியவரை பார்த்து ..
-3-
“சொல்லுங்க எதுவானாலும் பிராங்கா:” என்ற என்னிடம் சொன்னார் “ரமா குட்டிக்கு பவுடர் பால் ஒத்துக்கலை..அதே சமயம் தாய் பாலும் ஒத்துக்கலை..பசும்பாலும் கிடைக்கலை இப்ப..கிடைச்சாலும் அது மட்டுமே பத்தவும் இல்லை.. ஆனா
நம்ம வீட்டில வேலை செய்யற பெண்மணியோட தாய்பால் மட்டும் எப்படி ஒத்துக்குதுனு விளங்கலை..எக்ஸ்பர்ட் குழந்தை  டாக்டர்களாலேயே இன்னதுதான் காரணம்னு கண்டு பிடிக்க முடியாம, மாத்தி,மாத்தி, ஏதேதோ மெடிசின்ஸ் எழுதித் தராங்க..
 இப்ப வேறவொரு சைல்ட் ஸ்பெஷலிஸ்ட் கிட்ட சிரமப்பட்டு அப்பாய்ன்ட்மென்ட் வாங்கியிருக்கேன்..பார்ப்போம் இவராவது
இந்த பிரச்சினைக்கு ஏதாவது தீர்வு சொல்றாரானு..காட் ஈஸ் கிரேட்.. அதுவரைக்கும் நம்ம வீட்டில் வேலை செய்யற பெண்மணியை விட்டே ஏன் தாய்பாலை நம்ம குழந்தைக்கு ஃபீட் பண்ணச் சொல்லக்
கூடாது, ஆஸ் எ ஸ்டாப்காப் மெஷர்”, என்றபோது, சொன்னேன் “உங்கம்மாவும், எங்கம்மாவும் அவங்க கிட்ட பேசி தாய்பால் கொடுக்க ஏற்பாடு பண்ணிட்டாங்க” என்று.. “புவர் கேர்ல்.
அந்தம்மாவுக்கு கொடுக்கிற சம்பளத்தில அவங்க சத்தான சாப்பாடு சாப்பிட முடியாதுன்றதால கொஞ்சம் சம்பளத்தை ஏத்தி கொடுப்போம்.. அதர்வைஸ் நாமே நல்ல ப்ரூட்ஸ், பச்சை
காய்கறிகள், சத்துணவு பானங்கள், தினம் ஒண்ணு, இரண்டு முட்டைகள்னு வாங்கி கொடுப்போம்” என்றார்..”எனக்குதான் கொடுப்பினை இல்லை பெத்த குழந்தைக்கு தாய்பால் நிறைய
சுரந்தும் கொடுக்க முடியாதபடி ஒரு சோதனையை கடவுள் கொடுத்திருக்கார்.. அப்படிகூட சொல்ல மாட்டேன்..முன் ஜன்ம வினை..ஊம்” என்ற என்னைப் பார்த்து என்னவர், “ஏன் வீணா மனசை போட்டு அலட்டிக்கிறே கண்ட, கண்டதை எல்லாம் நினைச்சு..
இப்ப நான் அப்பாய்ன்ட்மென்ட் வாங்கியிருக்கிற டாக்டர் வர்ல்ட் பேமஸ் சைல்ட் ஸ்பெஷலிஸ்ட்.. இதுவரை உனக்கு கொடுக்கப்பட்ட மெடிசின்ஸ்,  clinikal repoerts, அதே போல
ரமாகுட்டியோடது எல்லாம் அந்த டாக்டர் கிட்ட முன்கூட்டியே கொடுத்து ஸ்டடி பண்ண சொல்லியிருக்கேன்..பார்ப்போம்” என்றவரை பார்த்து ஹீனமாய் புன்னகைக்கத்தான் முடிந்தது என்னால்.
-4-
அந்த குறிப்பிட்ட நாளும் வந்தது.அந்த  டாக்டர் அப்பாய்ன்ட்மென்ட் கிடைத்திருப்பதே மிக,மிக அதிர்ஷ்டம் என்றார்கள்.  டாக்டர் மிக அன்பாய் பேசினார்.. நிதானமாய்
ஒவ்வொன்றையும் ஆராய்ந்து பார்த்தார்.  உங்களை பத்தி ஆதியோடந்தமாய் சொல்லுங்கம்மா எதையும் மறைக்காம, ஒரு தகப்பங்கிட்ட சொல்றாப்பல..டாக்டர்கள் கிட்டவும், வக்கீல்கள்
கிட்டவும் எதையும் மறைக்க கூடாது” என்ற போது நான் அழுது விட்டேன்.
“ஏம்மா அழறீங்க?கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கிட்டு உங்க சந்தேகங்கள் எல்லாத்தையும் அது பிறத்தியாருக்கு சில்லியா தோணினாலும் எங்கிட்ட ஃபிராங்கா சொல்லுங்க” என்றார்.
“டாக்டர் சார் நான் எதையும் மறைக்காம வெளிப்படையாதான் சொல்றேன்..ஆனா எங்க ஃபாமிலி மெம்பர்ஸ்களாகட்டும், மத்தவங்களாகட்டும் என்ன,என்னவோ சொல்றாங்க, அதாவது,  நான் குழந்தைக்கு
தாய்பால் கொடுத்தா என் அழகு குறைஞ்சு போயிடுமோனு நினைச்சு குழந்தைக்கு தாய் பால் கொடுத்ததும் காய்ச்சல் வருதுனு பொய் சொல்றதாகவும், இன்னம் சிலர் சொல்றாங்க.. குழந்தை பிறந்த சில மாதங்களிலேயே
 நான் வாயைக் கட்டாம கண்டதையும்  தின்றேனாம்..அதனால் தான் நான் தாய் பால் கொடுக்கிறப்பல்லாம் குழந்தைக்கு காய்ச்சல் வருதுனும்..பட்,அப்படி எதையும், ஒருபோதும் நான் தின்றவள் இல்லை..
அது மட்டுமில்லை..கன்சீவ் ஆனதுமே என் மனசில் ஓடினதே, பிறக்கப்போற குழந்தைக்கு நான் மாக்சிமம் தாய்பால்
மட்டுமே கொடுக்கணும்னுதான் நினைச்சேன்.  இதை என் கணவர்கிட்ட கூட சொல்லியிருக்கேன். குழந்தைக்கு வேளா வேளைக்கு தாய்ப்பால் கொடுக்கணும்ன்றதாலதான் நான் வேலையை விடக்கூட
தயாராயிருக்கேன்.. ஆனாலும் என் மேல வீண்பழி சுமத்தி என்னை அழ வச்சு பார்க்கிறதில சிலருக்கு மகிழ்ச்சி..இவ்வளவு ஏன் !சில  சைல்ட் ஸ்பெஷலிஸ்ட் டாக்டர்களேகூட
அதெப்படி ஒரு பிறந்த குழந்தைக்கு தாய்ப் பால் ஒத்துக்காம போகும்னு ஏதேதோ அறிவுறைகள் சொல்றாங்களேவொழிய என் பிரச்சினைதான் என்னனு கண்டு பிடிக்கலை” என்ற போது டாக்டர் என்னிடம்
சொன்னார் “நான் உங்களோடது, உங்க குழந்தையோட, எல்லா reportsம் உன்னிப்பாய் பார்த்தேன். என் யூகம் கரக்டானு ஊர்ஜிதம் பண்ணிக்க மேலும் சில கிளினிகல்
டெஸ்ட்ஸ் எடுக்க வேண்டியிருக்கு.. ஹோப் யு வில் கோவாப்பரேட்” என்ற போது “ஓகே சார்” என்றார் என்னவர்.. ஆனால் எனக்கு மட்டும் அந்த சந்தேகம் மனதில் இருந்துகொண்டேதான் இருந்தது..அதாவது ஒவ்வொரு டாக்டகளிடமும் போகும் போதெல்லாம், பணம் பறிக்க வேண்டி,  எதையோ சொல்லி மறுபடி டெஸ்டுகள் எடுக்க பணித்து, கலர் கலராய் மாத்திரை, மருந்துகள் கொடுத்து” கம் ஆப்டர் எ வீக்ஸ்   டைம்” எனலாம், டாக்டர்கள் என்று நினைத்திருந்த என்னிடம், டாக்டர் கேட்டார்..
-5-
“ஏம்மா உங்க பாலிய பருவத்தில நீங்க நிறைய, நிறைய ஜங்க் ஃபுட்ஸ் சாப்பிட்டதுண்டா”? என்ற போது எனக்கு அவர் கேள்வியே கேனத்தனமாய் பட்டது.. இருப்பினும் வந்த இடத்தில் ஏடாகூடமாய் நடந்து
 கொள்ளக்கூடாது என்பதால் “ஆமாம் சார்..என் பாலிய பருவத்தில் நிறைய, நிறைய, ஜங்க் ஃபுட்ஸ், நினைச்ச போதெல்லாம் தின்னதுண்டு.. இது தவிர பொறித்த கிழங்கு வகைகளும் கூட…
எனக்கு அவ்வளவாய் பச்சை காய்கறிகள் பிடிக்காது..பழ வகைகள் அறவே பிடிக்காது.. நம்ம உணவு வகைகள் கட்டோட பிடிக்காது.. அப்ப அந்த அறியாத வயசில் நான் சாப்பிட்டதுக்கும், இப்ப என் குழந்தைக்கு தாய்பால்,
 நான் கொடுக்க முடியாததுக்கும் என்ன சம்பந்தம் சார் இருக்கு” என்ற என்னிடம், “இருக்கு..நீங்க சின்ன வயசில சாப்பிட்ட அளவுக்கதிகமான ஜங்க் ஃபுட்ஸ், அது எங்கெங்கோ, எந்தெந்த அன்ஹைஜீனிக் சூழல்லயோ,ஈ,கொசுக்கள் மொய்க்க செஞ்சு, பாக் பண்ணி அனுப்பினது, அது,
 காலாவதியானப்புறமும் விஷத்தன்மை கொண்டதாய் மாறிடும்னும்,யாரும்
 குறிப்பாய்,உங்க வீட்டுல உள்ள வயசானவங்க உங்களுக்கு சொல்லியிருருக்க மாட்டாங்கனு நினைக்கத் தோணுது..அதனால,அந்த ஜங்க்
 ஃபுட்ல சேர்க்கப்பட்ட பிரஸர்வேடிவ் கெமிகல்ஸ் உங்க பிளட்டில கலந்து போயிருக்கிறதால, நீங்க தாய் பால் கொடுக்க முடியலை உங்க
குழந்தைக்குன்றதே சுடும் நிசம்.இப்ப இன்னம் அதிக அளவில குழந்தைகளுக்கு சுதந்திரம் கிடைச்சிருக்கு. வீட்டு பெண்மணிகளும் வேலைக்கு போக வேண்டியிருக்கிறதாலயும்,வீட்டில் உள்ள குழந்தைகளையும் தாய்மார்கள் கவனிக்க முடியாததாலும்,
இதுபோல புற்றீசல் கணக்காய் தேசத்தின் பல இடங்களிலிருந்தும், இதுபோல ஜங்க்ஃபுட் வியாபாரம் ஒண்ணையே குறியாய் வச்சு மிக அதிக அளவில், விளம்பரமெல்லாம் கொடுத்து ஆல் இண்டியா மார்கெட்டை பிடிச்சு
கோடிகளில் நாட்டின் மூலை, முடுக்களில் எல்லாம் கலர், கலராய் சின்ன பெட்டி கடைகளிருந்து,  டிபார்ட்மென்ட் ஸ்டோர்ஸ் வரை வியாபாரம் கொடி கட்டி பறக்கிறதாலயும், வீட்டிலும், முன்னைப்போல்,தாத்தா,பாட்டிமார்கள்,  
 உடனிருந்து பேரக்குழந்தைகளுக்கு பார்த்து, பார்த்து பொருள்விளங்கா உருண்டைனும், பயத்தமாவு உருண்டைனும், உளுந்து சேர்த்த பொருள்கள்னும்,அயர்ன் சத்து சேர்க்க வேண்டி, நாட்டு வெல்லம்,இல்லைனா,கருப்பட்டி கொண்டும்,
 செய்யப்பட்ட தின்பண்டங்களை அதிக அளவில் செஞ்சு கொடுக்க முடியலை..இது மட்டுமா!வேர்கடலையை வறுத்து தின்னக் கொடுப்பாங்க.. அதையே கொதிக்கிற தண்ணியில வேக வச்சும், சில சமயம் வேர் கடலையை வறுத்து அத்தோட வெல்லம் சேர்த்து உருண்டைகளாய்
பிடிச்சும் கொடுப்பாங்க.  பல்லுக்கும் அது உறுதியை கொடுக்கும்..பொட்டுக்கடலை (சென்னை மொழியில ஒடைச்ச கடலை) நாட்டுசர்க்கரை சேர்த்து மாலை பள்ளி விட்டு வீட்டுக்கு,வந்ததும் குழந்தைகளுக்கு
கொடுப்பாங்க.. எஸ்பெஷலி பெண் குழந்தையா பிறந்துட்டா அதுங்களுக்கு உளுத்தம் களி, உளுந்து வடை, ஆவியில வேக வச்ச இட்லி..கம்பம் கூழ்..கேழ்வரகுல தின்பண்டம்னும்,
இப்படி பார்த்து, பார்த்து செஞ்சு கொடுப்பாங்க..குழந்தைகள் ஆரோக்கியத்தில மட்டுமில்லை..மத்தவங்க ஆரோக்கியத்திலும் கண்ணும் கருத்துமாய் இருப்பாங்க அந்தக் கால மனுசங்க..தினம் சமையல்ல ஒரு கீரை கட்டாயம், அதுவும் அப்ப பறிச்சதாய் ஃபிரெஷாய்
இருக்கும்..அது முளைக்கீரையோ, அரைக்கீரையோ, வெந்தையக் கீரையோ, மொடக்கத்தான் கீரையோ இப்படி.. கீரைகளுடன் பச்சை காய்கறிகளும் செய்வாங்க.. இதனால்தானோ என்னவோ அந்தக்கால மனுஷங்க எல்லாருமே,குழந்தைகள் உட்பட,
 ஆரோக்கியமாவே, நோய்,நொடினு எதுவும் இல்லாம இருந்தாங்க ..ஆனா இப்ப கண்ட, கண்ட ஜங்க் ஃபுட் தின்றது, காலையில் கூட டூ மினிட்ஸ் நூடுல்ஸ்னு எதையோ..ஐயாம் நாட் எக்ஸாஜிரேடிங்..
இதனால 10 வயசுக்குள்ளாறவே ஒரு சிறுவனுக்கு ஓபீசிடின்ற உடல் பருமன் வியாதி எல்லாம் வந்துடுது .நான் உங்களை போரடிக்கிறனோ! பட் திஸ் ஈஸ் தி ஃபாக்ட் …நம்ம
கவர்ன்மென்ட் என்னவோ இப்பதான் விழிச்சுக்கிட்டு இது போல சுகாதாரமில்லாத ஜங்க் ஃபுட்ஸையெல்லாம் பான் பண்ண யோசிச்சுக்கிட்டிருக்கிறதா ஒரு நியூஸ் படிச்சேன்..நிசமாலுமே அப்படியொரு
முடிவு எடுத்து நாடு பூரா இது போல ஜங்க் ஃபுட்ஸ்களை தடை பண்ணினாதான் நம்ம வருங்கால சந்ததியினர் நிசமாலுமே திடகாத்திரமா, நோய், நொடியில்லாம வாழலாம்..அன்னைக்கே ஸ்வாமி விவேகானந்தர் சொன்னாராம்..
“ஆரோக்கியமான, நூறு இளைஞர்களை என்னிடம் தாருங்கள்.. நான் இந்த நாட்டின் தலைவிதியையே மாத்தி காட்டறேன்னு..அப்படியொரு ஆரோக்கியமான,பாரதம் உருவாகாதானுதான் என்னைப்போல உள்ள டாக்டர்கள் மட்டுமல்ல,
நாட்டுப் பற்று மிகுந்தவங்க, அவங்க படிச்சவங்களாய்தான் இருக்கணும்னு அர்த்தமில்லை..
 நம்ம நாடு செழிச்சு வளரணும்னு நினைக்கிறாங்க..ஸோ, கமிங் டு தி பாயிண்ட்..உங்க மனசை திடப்படுத்திக்குங்க..உங்க தாய்பால் உங்க குழந்தைக்கு ஒத்து வராதுதான்..இன்னொரு குழந்தையே உங்களுக்கு பிறந்தாலும்கூட..இதுதான் நிசம்..ஸோ,நீங்க
இப்பத்திய பிராக்டீஸையே இன்னம் சில மாதங்களுக்கு கண்டினியூ பண்ணுங்க..அப்புறம் மெல்ல, மெல்ல  உங்க குழந்தைக்கு திட உணவை கொடுத்து பழக்கலாம்” என்றபோது,
” டாக்டர்,இனி, நான் எந்த சூழல்லயும் எங்க குழந்தைக்கு கண்ட, கண்ட ஜங்க் ஃபுட் கொடுக்கமாட்டேன், அழுது அடம் பிடிச்சாலும் கூட.. என் அனுபவம், மத்த தாய்மார்களுக்கும் ஒரு பாடமாய் இருக்கட்டும்” என்றேன்.  வேறு என்னதான் செய்வது!              
                                                                                                                 ————-

PS:

“கிழக்கு வாசல் உதயம்” என்றதொரு மாத இதழில், அதன் Editor, திரு.உத்தமசோழன், “பிரபா இயற்கை வேளாண் பண்ணையின்” முக்கியஸ்தரான திரு. ஜீவானந்தம் அவர்களை நேர்முகம்
கண்டு பல விஷயங்களை பேசியபோது திரு. ஜீவானந்தம், அவர்கள் சொன்னாராம்..”கலப்படம் இல்லாத,  அல்லது கலப்படம் செய்ய முடியாத உணவு என்று எதுவுமே இல்லை தாய்ப்பாலையும்
சேர்த்து என்று..வியந்துபோன திரு.உத்தம சோழன் அவர்கள் கேட்ட கேள்வியும், அதற்கான பதிலையும் அப்படியே அந்த  பகுதியிலிருந்து எடுத்து கீழே கொடுத்திருக்கிறேன்..

 கேள்வி: “தாய்ப்பாலிலும் கலப்படமா?”

பதில்: “ஆமாம்..வெளிநாட்டில ஒரு வசதியான வீட்டுக் குழந்தைக்கு விடாத ஜுரம்..என்னென்னவோ மருந்து கொடுத்தும் நிக்கல..டாக்டர்கள் பல விதமா சோதனை பண்ணிட்டு, ஒரு ரெண்டு நாளு
தாய்ப்பாலை நிறுத்த சொல்லியிருக்காங்க..தாய்ப்பாலை நிறுத்தினதும் ஜுரம் நின்னுடிச்சி..”

 கேள்வி: ” என்னங்க இது?”

அதற்கான பதில்: “ஆமாம்.அந்த இளம் தாய் ரொம்ப வசதியான வீட்டுப் பெண்ணாம்.அதனால ரொம்ப நவீனமா செய்யற பாக்கட் தீனிகளை வாங்கி அடிக்கடி சாப்பிட்டிருக்கு..அந்த பாக்கட் தீனிகள்ள
இருந்த ரசாயனக் கலவைகளின் சாரம் அந்த இளம் தாயின் ரத்தத்தில் கலந்து, தாய்ப்பாலும் விஷமாயிருக்கு..அவ்வளவுதான்..”

“அடப்பாவமே!” இது Editor  கேள்வி.
பதில்: “தாய்ப்பாலே விஷமானு மனசு ஆடிப்போச்சு”  

Series Navigationஆகச்சிறந்த ஆசிரியர்’ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் 3 கவிதைகள்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *