ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்-இலக்கிய இலக்கணங்கள்

This entry is part 4 of 6 in the series 20 அக்டோபர் 2019

கதை கவிதையெழுதுவதை விட

மொழிபெயர்ப்பாளராவதைவிட

வெகுஎளிதாய்

விமர்சகராகிவிட்டால் போச்சு!

விவஸ்தையோடு எழுதுவதுதான் விமர்சனம்

என்பதெல்லாம் வெட்டிப்பேச்சு.

  •  

  மொழிபெயர்ப்பாளரை உதைபந்தாக உருட்டியவண்ணம்

  இலக்கிய மைதானத்தில் வலம்வந்துகொண்டிருக்கிறார்கள்.

  பந்தை உருட்டமுடிந்தவர்களெல்லாம்

  பந்தாகிவிட முடியுமா என்ன ?

  கேட்டால் கொடும்பாவியெரித்திடுவார்களோ –

  ஒரே கலவரமாயிருக்கிறது.

  •  

ஏன் அரசியல் கவிதையே எழுதுவதில்லை யென்று கேட்டார்

ஒரே யொருவரைப் பழிப்பதும் பகடி செய்வதும்

ஒரேயொரு குலத்தை மலமெனப் பேசுவதும்

நலங்கெட ஏசுவதும்

ஒரேயொரு மதத்தை விதவிதமாய் நிந்திப்பதும்

வக்கிரமாய்ச் சித்தரிப்பதுமே

அரசியல் என்ற புரிதலோடு.

  •  

அதிநேயமாய் சக படைப்பாளிகளைப் பேசுவதான

உத்தியைக் கையாண்டு

தன்னை யொரு அதிகாரமாய் கட்டமைத்துக்கொள்பவர்

புத்தியோடு அதைக் கண்டுபிடித்துவிடுபவர்களை

மதிகெட்டவர்களென்று முத்திரைக் குத்திவிடுகிறார்!

  •  

கொஞ்சம் விட்டால் போதும்

’அ’னா ’ஆ’வன்னா சொல்லிக்கொடுக்க ஆரம்பித்துவிடுகிறார்கள்;

மிஞ்சி மிஞ்சிப் போனால் நான்கெழுத்தில்

மேதாவியாகிவிடப் பார்க்கிறார்கள் எப்போதும்

  •  

இலக்கிய இலக்கணங்கள் – 2

அரட்டையடித்துக்கொண்டிருந்தவர்கள்

குறட்டை விட்டுத் தூங்கியெழுந்தவர்கள்

பரட்டைத்தலையே வாரிமுடிந்த கூந்தலெனக் கொள்பவர்கள்

இரட்டை மூக்குகள் இருப்பதாக பாவனை செய்பவர்கள்

சிரட்டை தான் தேங்காயின் சாராம்சமெனக் கையடித்து

சத்தியம் செய்பவர்கள்

கரகரக் குரலில் அபஸ்வரமாய்ப் பாடி

இசையை வாழவைப்பவர்கள்

கத்திக்கத்தியே தன் கருத்தை சத்தானதாக்கும்

வித்தகம் பழகியவர்கள்

மொத்தமாய் குத்தகைக்குக்கு எடுக்கப் பார்த்தும்

இத்தனை காலமும் இனியும் தப்பித்து வாழும்

இலக்கியம்.

Series Navigationமாலை – குறும்கதைஒரு சிற்பியின் சுயசரிதை – எஸ். தனபால் (காலச்சுவடு பதிப்பகம்)
author

ரிஷி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *