ஜனாதிபதி முதல் சாதாரண ஜனம் வரை – ஒரு பார்வை

This entry is part 9 of 9 in the series 27 அக்டோபர் 2019

குமரி எஸ். நீலகண்டன்

இந்திய ஜன நாயகமானது வலுவானது. உலகிற்கு வழி காட்டக் கூடியது. ஆனால் பொதுநலப் போர்வையை போர்த்திக் கொண்டு அலைகிற சுயநலவாதிகளால் ஜனநாயகமானது தனது ஆரோக்கியத்தை இழந்து கொண்டிருப்பது எதார்த்தம்.

இன்றைய இந்திய சமூகத்தில் படித்தவர்களில் பத்து பேரிடம் இந்திய ஜனாதிபதி யாரென்று கேட்டால் எத்தனை பேர் சரியாக பதில் சொல்வார்கள்? உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் தனது ஜனாதிபதியின் பெயரைக் கூட தெரியாத அளவில் படித்த சாதாரண ஜனங்களை நமது பாரம்பரியமிக்க பாரத தேசத்தில் கண்டு கொண்டிருக்கிறோம். யாரோ உழைத்து உருவாக்கிய அலைபேசி, கம்ப்யூட்டர் போன்ற உயர்ந்த தொழில் நுட்பக் கருவிகளை தனது பயனுள்ள பொழுதுகளில் அடகு வைத்து பொழுதை போக்கும் சமூகத்தை காணும் போது நாம் நமது எதிர்காலத்தை எண்ணி அதிர்ந்து கொண்டிருக்கிறோம்.

இந்த அதிர்வுகளில் உதிர்ந்த எழுத்துக்களின் கோர்வையே மூத்த பத்திரிகையாளரும் பிரபல எழுத்தாளருமான ப.திருமலை அவர்களின் ஜனாதிபதி முதல் சாதாரண ஜனம் வரை என்ற நூல்.

சுதந்திர இந்தியாவில் அனைவருக்கும் வாக்குரிமை என்று நேரு கூறிய போது கவர்னர் ஜெனரலாக இருந்த மவுன்ட் பேட்டன் அதிர்ந்து போனார். அறுநூறு ஆண்டுகள் பழமையான  பிரிட்டீஷ் நாடாளுமன்றத்திற்கான தேர்தலில் வாக்குரிமை என்பது படிப்படியாகத்தான் கொடுக்கப்பட்டது. இந்தியாவில் போதியக் கல்வியறிவில்லை. இது விஷப் பரிட்சையென மவுன்ட் பேட்டன் எச்சரித்தாராம். அப்போது குறிப்பிட்ட வயதுடைய அனைவருக்கும் வாக்குரிமை என்று இந்திய மக்களின் மீது நம்பிக்கை கொண்டு கூறினாராம் நேரு.

ஊராட்சி தத்துவத்தின் மகத்துவத்தைக் கூறி உள்ளாட்சித் தேர்தலின் முக்கியத்துவத்தையும் கூறுகிறது இந்நூல். இலவசம் என்ற மாயையில் தன்னை இழந்து நிற்கும் தமிழகத்தை மீட்டெடுக்கும் நோக்கில் கல்விக்கும் மருத்துவத்திற்கும் மட்டுமே இலவசம் கோருகிறது இந்நூல்.

குடியரசுத்தலைவர் பதவி முதல் ஆளுநர் பதவி வரை அவர்கள் தேர்ந்தெடுக்கும் முறையிலிருந்து அவர்களின் அதிகார வரம்பு வரை அழகாக வரையறுத்துக் கூறுகிறது. லோக் ஆயுக்தா. லோக்பால் ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் அவை தோன்றிய வரலாற்றையும் அதன் தேவையையும் தெளிவாக எடுத்துக் கூறுகிறது இந்நூல்.

வாக்குரிமையின் முக்கியத்துவத்துடன் வாக்காளரின் சக்தியை நிதர்சனமாய் கூறுகிறார் ஆசிரியர்.

ஒரே நேரத்தில் தேர்தலை நேர் எதிர் விளைவுகளுடன் விவாதிக்கிறது . ஜனநாயகத்தில் இடைத்தேர்தலிலுள்ள இடறுகளை இனிதாய் கூறுகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்களால் நாடாளுமன்றத்தில் நடக்கும் இடக்கு முடக்குகளை கூறி அவர்களை பொறுப்புடன் எச்சரிக்கிறது இந்நூல். தேர்தல் நேரத்தில் மட்டுமே தொகுதிக்கு வரும் உறுப்பினர்களைப் போல், தேர்தல் நேரத்தில் மட்டுமேப் பேசப்படுகிற லஞ்சத்தையும் ஊழலையும் ஒழிக்க தொடர்ந்து போராட வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்துகிறது இந்நூல். இந்திரா காந்தியின் அரசியல் வளர்ச்சியையும் அவரது அதிகார வல்லமையையும் வளமையுடன் அலசுகிறார் ஆசிரியர்.

கறுப்புக் கொடி அரசியலின் இருண்ட பக்கங்கள் வெளிச்சமாகின்றன இந்த நூலின் வெள்ளைப் பக்கங்களில். சங்கம் வளர்த்த மதுரையில் பல அரசியல் தலைவர்கள் சங்கமித்த வரலாறையும் பேசுகிறது நூல்.

திரைக்கு முன்னால் பின்னால் மேடை பொதுவாழ்வென நடித்துக் கொண்டிருக்கிற பல ஆளுமைகளின் மத்தியில் அன்பால் தமிழகத்தை ஆண்ட எம்.ஜி.ஆரைப் பற்றி இளந்தலைமுறையினர் இந்த நூல்வழி தெளிவாக அறிய இயலும். வெள்ளையாய் இருப்பவர்கள் பொய் சொல்ல லாம். ஆனால் வாக்கு இயந்திரம் பொய் வாக்கு சொல்லாது என்றே கூறுகிறது இந்நூல்.

சுதந்திரத்திற்கு பின்னர் நடைபெற்ற எல்லா மக்களவைத் தேர்தல்களையும் ஒரு பரந்த பார்வையுடன் விளக்கி இன்றைய சமூகப் பாதுகாப்பிற்கு காந்தியின் தேவையையும் வலியுறுத்துகிறது வளமையான இந்நூல்.

மக்களின் மகத்துவத்துடன் காந்தியின் தேவையைக் கூறி நிறைவு பெறுகிறது. இந்தியாவின் அறியாத வரலாற்றினை எல்லோரும் அறியுமளவில் வழங்குகிறது இந்த நூல்.

இந்த நூலின் எழுத்தோட்டமானது ஒரு வளமையான நகரத்தின் நடுவே பாய்ந்தோடுகிற நதியின் நீரோட்டம் போலானது. இங்கே ஈரமும் இருக்கும். வறட்சியும் இருக்கும். ஏற்றத் தாழ்வுகள் இருக்கும். ஆக்ரோஷமான சூழலில் அலைகிற மீன்களாக மக்கள் இருப்பார்கள். நதியைப் போல் திருமலை அவர்களின் எழுத்தும் எல்லா சூழல்களிலும் ஒரு ஒழுங்கான நீரோட்டத்தில் எதார்த்தத்தை உள்வாங்கிக் கொண்டு நேர்மையாக தனது தளத்தில் பயணித்துக் கொண்டே இருக்கும். சமூக ஒற்றுமைக்கும் வளத்திற்கும் மேம்பாட்டிற்காகவும் தனது அறப்பூர்வமான எழுத்துக்களால் எதிரொலித்துக் கொண்டிருக்கும் திருமலையின் நூல்களில் இந்நூல் இன்றைய தலைமுறையின் ஒவ்வொரு உறுப்பினரும் படிக்க வேண்டிய மிக முக்கியமான நூலாகும்.

நூல் தலைப்பு – ஜனாதிபதி முதல் சாதாரண ஜனம் வரை

ஆசிரியர் – ப.திருமலை

பாவைமதி வெளியீடு

எண் – 55, வ.உ.சி. நகர், மார்கெட் தெரு,

தண்டையார்ப் பேட்டை, சென்னை – 600 081

94441 74272, 95001 14229

பக்கங்கள் – 160

விலை – 150

Series Navigation’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
author

குமரி எஸ். நீலகண்டன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *