முதியோர் இல்லம்

This entry is part 3 of 9 in the series 27 அக்டோபர் 2019

கதீஜா ஒரு வித்தியாசமான பெண். தொடக்கப்பள்ளி 6லேயே முதியவர்களை சொந்தங்களை விட நெருக்கமாய் நேசிக்கிறார். அவருடைய தமிழாசிரியர் எப்போதோ சொன்னார். ‘முதியவர்களை நேசியுங்கள். நீங்கள் முதியவர்களாகும்போது உலகமே உங்களை நேசிக்கும்.’  என்று. உடம்பு முழுவதும் பச்சைக் குத்திக் கொண்டதுபோல் அந்த வாசகம் அவரோடு ஒட்டிக் கொண்டது. ஈசூனில் இருக்கும் ஒரு பெரிய முதியோர் இல்லத்தில் தன்னை ஒரு தொண்டூழியராக இணைத்துக் கொண்டார். சனிக்கிழமைகளில் காலை 9 முதல் 12 வரை தேர்வே இருந்தாலும் அதைப் புறக்கணிக்கும் அளவுக்கு அந்தத் தொண்டூழியத்தில் அவருக்கு ஈடுபாடு. முதியோர் இல்லத்தில் தங்காமல் வீட்டிலேயே இருக்கும் முதியவர்களோடு 3 மணிநேரம் இருக்க வேண்டும். ஒவ்வொரு சனிக்கிழமையும் அவர் செல்ல வேண்டிய இடத்திற்கு முதியோர் இல்ல நிர்வாகம் அழைத்துச் செல்லும். கதீஜாவுக்கு தன் வார்த்தைகளால் ஒத்தடம் கொடுக்கத் தெரியும். நெற்றியில் உள்ளங்கையைப் பரப்பி மறு கையால் ஒரு கையைப் பற்றிப் பிடித்து ‘கடவுள் உங்களுக்கு ஒரு குறையும் வைக்கமாட்டார்’ என்ற கதீஜாவின் வார்த்தைகள் அவர்களின் வலிகளை ஆற்றியது. சொந்தப் பேரர்களே தங்களைத் தொட்டுப் பார்ப்பது அரிது.  அந்த பரிவான தொடுதலை அவர்கள் விரும்புகிறார்கள். கதீஜாவுக்கு அது புரிந்திருந்தது. வெள்ளிக்கிழமையிலிருந்தே தொண்டூழியப் பிரிவின் தலைவர் சரோஜாவுக்கு தொலைபேசிகள் வரத் தொடங்கிவிடும். எல்லாருமே கதீஜாவை அழைப்பார்கள். கதீஜாவின் அந்த சேவை அத்தனை பேருக்குமே அதிசயம்.

கதீஜாவின் தாய் அமீதா. ஒரு மருத்துவமனையின் தாதி. கதீஜாவுக்கு 6 வயதாகும்போதே கணவர் இறந்துவிட்டார். கதீஜாவையே தன் வாழ்க்கையாக்கிக் கொண்டதால் தனக்கென்று ஒரு வாழ்க்கையை அவர் சிந்தித்ததே இல்லை. பாசிர் ரிஸ்ஸில் அவர்கள் இருக்கும் அந்த வீட்டுத் தொகுதியிலேயே அவர்களைத் தெரியாதார் யாருமில்லை. கதீஜாவை ஒரு தீர்க்கதரிசியைப் பார்ப்பதுபோல் அவர்கள் பார்க்கிறார்கள்.

ஜூரோங்கில் இருக்கும் ஒரு முதியவர் வீட்டுக்கு கதீஜா செல்கிறார். அவருடைய தொலைக்காட்சியில் படம் தெரிவதில்லையாம். ரொம்பக் கவலையாக இருந்தார். வீட்டுக்கு வந்த கையோடு தன் 40 அங்குல தொலைக்காட்சியை அனுப்பி வைத்து அதைப் பொருத்திக் கொடுக்க ஏற்பாடும் செய்துவிட்டார். முதியோர் இல்லத்தில் பார்வையாளர் பிரிவில் சில பிளாஸ்டிக் நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. தன் வீட்டில் இருந்த மிகப் பெரிய சோஃபா செட்டை அந்தப் பார்வையாளர் அறையில் பயன்படுத்த அனுப்பி வைத்தார் கதீஜா. கதீஜா எதைச் செய்தாலும் அம்மாவுக்கு சம்மதமே.

ஒரு நாள் காலை ஒரு ரொட்டித் துண்டில் பழக்கூழைத் தடவிக்கொண்டே அமீதா கேட்டார். அந்த சோஃபா உன் அத்தா வாங்கியதம்மா. அவர் ஞாபகமாக இருக்கட்டும் என்று நினைத்திருந்தேன். அதை முதியோர் இல்லத்துக்கு கொடுத்துவிட்டாய். கொஞ்சம் கஷ்டமாக இருந்தது.’ கதீஜா சொன்னார். ‘எனக்கும் தெரியுமம்மா. தெரிந்துதான் அனுப்பினேன். அந்த சோஃபா நம் வீட்டில் இருப்பது நமக்குப் பயன். அங்கு இருந்தால் அது அத்தாவுக்குப் பயன். அல்லாஹவிடம் அவைகள் சாட்சி சொல்லுமம்மா. அத்தாவின் மறுமை வாழ்வு மணக்குமம்மா.’ அமீதா அதிர்ந்தார். கொஞ்சம் சிலிர்த்தார். இந்தப் பிஞ்சுக்கு எப்படி இத்தனை சீக்கிரத்தில் இவ்வளவ் பெரிய முதிர்ச்சி. கைகளைப்பற்றி முத்தமிட்டார். கலங்கினார்.

கதீஜா இப்போது பல்கலைக் கழகத்தில் கணக்கியல் பிரிவில் சேர்ந்து படித்துக் கொண்டிருக்கிறார். அந்த முதியோர் இல்லம் தன் 75வது ஆண்டுவிழாவைக் கொண்டாடுகிறது. 15 ஆண்டுச் சேவைக்கான நீண்டநாள் தொண்டூழிய விருதை அமைச்சர் கதீஜாவுக்கு வழங்குகிறார் என்பதே அந்த நிகழ்ச்சியின் மிகப்பெரிய சிறப்பு. வருகையாளர்கள், முதியோர்கள், சாதா நாற்காலிகள், சக்கரநாற்காலிகள் என்று அந்த இல்லமே அமர்க்களமாய் அலங்கரித்துக் கொண்டிருந்தது. அங்கிருந்த ஒவ்வொருவரும் அந்த விருது ஏதோ தனக்கே கிடைப்பதுபோல் மகிழ்ந்தார்கள். நிகழ்ச்சி தொடங்கியது. சம்பிரதாயங்கள் ஒவ்வொன்றாய் நடைபெற்றது. நிகழ்ச்சித் தொகுப்பாளர் அறிவித்தார் ’15 ஆண்டுகள் தொடர்ந்து தன்னை முதியோர் இல்லத்துக்கு அர்ப்பணித்துக் கொண்ட கதீஜாவுக்கு இப்போது அமைச்சர் அவர்கள் விருது வழங்குகிறார்கள்’  அதுவரை கைதட்டியே பழக்கமில்லாதவர்கள், கைதட்டவே முடியாதவர்கள் கூட கைகளைத் தட்டினர். அந்த அற்புதமான மகளைப் பெற்றெடுத்த பெருமையில் அமீதா முதல் வரிசையில் அமர்ந்திருந்தார். விருதைத் தந்துவிட்டு அமைச்சர் சொன்னார். ‘மாணவப் பருவத்திலிருந்தே கதீஜாவின் இந்தச் சேவையுள்ளம் தனித்துவம் வாய்ந்தது. பல பிளாஸ்டிக் மணிகளுக்கிடையே கிடக்கும் தங்க மணிபோல் கதீஜா எனக்குத் தெரிகிறார். இந்தப் பெண் இவ்வளவு  பெருமைகளைப் பெறும் அளவுக்கு உயர்ந்திருக்கிறாரென்றால் அதற்கு முக்கியக் காரணம் அவருடைய தாயார். உங்களைப் போன்ற குடிமக்களைப் பெற்றதற்கு இந்த நாடு பெருமைகொள்கிறதம்மா.’ அரங்கத்தில் மகிழ்ச்சி ஆரவாரம் வெகுநேரம் நீடித்தது.

கதீஜா இப்போது ஒரு கணக்காயர். ஒரு நிறுவனத்தில் சேர்ந்து அடிக்கடி ஹாங்காங், சங்காய் சென்று வந்து கொண்டிருக்கிறார்.  வீட்டில் இருந்த எல்லாப் பொருள்களையுமே முதியோர் இல்லத்துக்கு அனுப்பிக் கொண்டிருந்தாலும், வீட்டுக்கு வேண்டிய சாமான்களை அவ்வப்போது வெளிநாடுகளிலிருந்து வாங்கிவந்துவிடுவார். இப்போது வீட்டில் இருக்கும் எல்லாச் சாமான்களுமே கதீஜா வாங்கியதுதான். ‘எதைத் தொட்டாலும் ‘என்னை கதீஜாதான் வாங்கினார்’ என்று சொல்லும்’ என்று அமீதா வேடிக்கையாகச் சொல்வார். அந்தக் கூடத்தில் நிற்கும் தாத்தா கடிகாரம் முதியோர் இல்லத்துக்கு ஒரு நல்ல நன்கொடை கொடுத்து கதீஜாதான் வாங்கினார். அந்த இல்லத்துக்கு ஒரு வெளிநாட்டு கொடையாளர் ஒரு தாத்தாக் கடிகாரத்தை நன்கொடை கொடுத்ததால், பழைய கடிகாரம் இப்போது கதீஜா வீட்டுக்கு வந்துவிட்டது. அமைதியான நதி. அழகான ஓடம். ஆடாமல் நகர்கிறது ஓடம். அவர்களின் வாழ்க்கையும்தான். நதியும் ஓடமுமாக அமீதாவும் கதீஜாவும்.

அன்று கதீஜா வேலைக்குச் செல்லவில்லை. உடல்நல மில்லை. அமீதா வேலைக்குப் புறப்பட ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார். இந்த ஆண்டில் அவர் பணிஓய்வு பெறுகிறார். அந்த சாப்பாட்டு மேசையில் ஒரு ரொட்டித்துண்டை தண்ணீரில் நனைத்து சிறிதாகக் கடித்து வெகுநேரம் மென்று கொண்டிருக்கிறார். கண்களை இறுக்க மூடி விழுங்க முயற்சிக்கிறார். விழுங்க முடியாதது முகத்தில் தெரிகிறது. தன் அறையிலிருந்து கவனித்த அமீதா ஓட்டமும் நடையுமாக வருகிறார். பக்கத்தில் வந்து நின்றபோது கதீஜா அப்படியே அவர்மேல் சாய்ந்துவிட்டார். ‘மு..ழு..ங்..மு..டி..ய..லே.’ கண்கள் மூடியபடியே இருந்தது.  இமைகளை விலக்கிப் பார்த்தார். கருவிழி மேலே போய்க்கொண்டிருக்கிறது. கூரை தலைமேல் விழுகிறது. தரை கால்களை பூமிக்குள் இழுக்கிறது. அமீதாவால் நிலைகொள்ள முடியவில்லை. ஆம்புலன்ஸுக்கு தொடர்பு கொண்டார். அடுத்த சில நிமிடங்களிலேயே சங்கூதிக்கொண்டு ஒரு மருத்துவர் பட்டாளமே வந்துவிட்டது. அதற்குக் காரணம் இருந்தது. வந்த டாக்டர்கள் உடனுக்குடன் சிகிச்சைகள் மேற்கொண்டனர். மானிட்டர் துடிக்கிறது. சலைன் பாட்டில் தொங்கவிடப்பட்டுவிட்டது. கதீஜாவுக்கு இப்படி ஆகும் என்று ஏதோ ஏற்கனவே தெரிந்ததுபோல் அவர்கள் செயல்படுவதைக் கண்டு அமீதா பதறினார். மருத்துவர் கேட்டார். ‘காலையில் சாப்பிடும்  மாத்திரையை சாப்பிட்டாரா?’  ‘என்ன மாத்திரை? எதற்குச் சாப்பிடவேண்டும்?’ அட! அமீதாவுக்கு எதுவுமே தெரிவிக்கப்படவில்லை என்று அந்த மருத்துவருக்குப் புரிந்துவிட்டது. இனி மேலும் எப்படி மறைப்பது? ‘அம்மா கொஞ்சம் அமையியாய் இருங்கள். அவசர சிகச்சைப் பிரிவில் முதலாவதாக உங்கள் மகள் இருக்கிறார். அதனால்தான் உடனே வந்தோம். உங்கள் மகளுக்கு …. மார்புப் புற்றுநோய். உடனே அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். தொண்டை அடைப்பது ஆபத்தான அறிகுறி.

‘இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் (எல்லாரும் அல்லாஹ்விடமிருந்தே வந்தோம். அல்லாஹ்விடமே மீள்வோம்) …… நா பெத்த மகளே கதீஜா…என்னம்மா சொல்றாங்க இவங்க. … கண்ணெத் தொறம்மா. எல்லாம் பொய்யின்னு சொல்லும்மா. அல்லாஹ்.. என்னய்யா இது. ஒன் தீர்ப்பு தப்பா இருக்காதேய்யா..’ இரு தாதிகள் அமீதாவை அணைத்துப் பிடித்துக் கொண்டாலும் அவர்களால் சமாளிக்க முடியவில்லை. அமீதாவின் அலறலில் அந்த தாத்தாக் கடிகாரத்தின் பெண்டுலம் அதிர்ந்தது. அந்த வீட்டுத் தொகுதியே கூடிவிட்டது. எதிர் வீட்டு சீனப்பாட்டி அமீதாவை மடியில் தாங்கிக் கொண்டார். என்ன கொடுமை இது. ஒரு பூ பற்றி எரியுமா? மேகம் நெருப்பு மழை பெய்யுமா? அரிசிகள் அணுகுண்டாகுமா?

டாக்டர்கள் தொடர்கிறார்கள். நாடியைப் பார்த்துவிட்டு கையை விட்டபோது கீரைத்தண்டு மாதிரி கை தொப்பென்று விழுந்தது. அந்த முழு நிலா தன் அத்தாவைப் பார்க்கப் புறப்பட்டுவிட்டது. பெருங்கூட்டம் கூடிவிட்டது. தகவல்கள் பறக்கின்றன. இந்தியாவிலிருந்து அமீதாவின் அக்காள் வந்துகொண்டிருக்கிறார். இன்று மாலைக்குள் வந்துவிடுவார். முதியோர் இல்லத்திலிருந்து எல்லாரும் சக்கரநாற்காலிகளை உருட்டிக் கொண்டு பல வேன்களில் வந்து இறங்குகிறார்கள். இதுவரை கதீஜா கவனித்த அத்தனை பேரும் அந்த வீட்டுத் தொகுதியின் கீழ். ஒரு தனி நபருக்கு இத்தனை பேர் கூடுவது இதுவரை வரலாற்றில் இல்லையே. அமீதாவின் அக்காவும் வந்துவிட்டார். எல்லாம் முடிந்துவிட்டது. அழகான ஒரு பளிங்கு மாளிகை அப்படியே மண்ணில் புதைந்துவிட்டது.

கதீஜா இல்லாத வீடு. அமீதா. துணைக்கு அவர் அக்கா. எப்படிச் சமாதானம் சொல்வது.? துக்கம் தாங்கமுடியாது. தாங்கமுடியாதபோது அந்தத் துக்கமே வாழ்க்கையாகிவிடுகிறது. அமீதாவுக்கு பழகிவிட்டது. எந்தப் பொருளைத் தொட்டாலும் ‘கதீஜா’ என்று முணுமுணுக்கிறது. பிறகு உரக்கப் பேசுகிறது. பிறகு எல்லாப் பொருளுமாகச் சேர்ந்து ஓலமிடுகிறது. அழகான குருவிக்கூடு. அதோடு அன்று பிறந்த குஞ்சுகள். சுற்றிலும் காட்டுத்தீ. எப்படித் தாங்குவார். என்ன சொல்லித் தேற்றுவது. ஓடுகிறது நாட்கள்

40ஆம் நாள் பாத்திஹா. அடுத்த நாள் அக்கா ஊருக்குப் போகிறார். எல்லாருமாகச் சேர்ந்து அந்த பாத்திஹாவுக்கு ஏற்பாடு செய்தார்கள். எல்லாமும் முறைப்படி முடிந்தது. ஹஜ்ரத் துஆ ஓதியபோது கூட்டம் கண்ணீரால் ‘ஆமின்’ சொன்னது.  எல்லாரும் கலைந்துகொண்டிருக்கிறார்கள். ஒரு முக்கியச்சேதி சொல்ல வேண்டுமென்று முதியோர் இல்ல நிர்வாகி தேனப்பனை மட்டும் அமீதா இருக்கச் சொல்லியிருந்தார். எல்லாரும் சென்றுவிட்டார்கள். முக்கியமான ஒரு சிலர் தவிர. அந்த கூடத்தின் மூலையில் அமீதாம்மாவும் தேனப்பனும் எதிர்எதிராக நாற்காலியில் அமர்ந்திருக்கிறார்கள். அமீதா சொன்னார். ‘ஐயா, வணக்கம்…என் அக்கா நாளை ஊர் போகிறார். எந்தப் பொருளைத் தொட்டாலும் கதீஜா குரல் கேட்கிறதய்யா. நான் எப்படி அய்யா இங்க தனியா இருப்பேன். முடியாதய்யா.  இந்த வீட்ட ஒடனே வித்திடுங்க. கதீஜா பேர்ல ஒரு ட்ரஸ்ட்ட ஏற்படுத்துங்க. அவசர அவசியத்துக்கு அதுலேருந்து ஒதவுங்க. ரிடயர் ஆயிட்டேன். சிபிஎஃப்ல நெறயா காசிருக்கு. மாதாமாதம் செலவுக்கும் காசு வரும். எனக்காகுற செலவ தந்துர்றேன். ஒங்க இல்லத்துல எனக்கொரு எடங்கொடுங்கய்யா. யார் மேல கதீஜா அதிகமா பிரியமா இருந்தாங்களோ அவங்களோடவே நா வாழ்ந்துர்றய்யா. எங்க அக்கா போன ஒடனேயே என்னெ அழச்சிட்டுப் போயிடுங்கய்யா..’ எதற்குமே கலங்காத தேனப்பன் குலுங்கிக் குலுங்கி அழுவது பரிதாபமாக இருந்தது. தேனப்பன் சொன்னார். ‘நாள வரக்கும் சரோஜா இங்க இருப்பாங்க. ஒங்க அக்கா ஊருக்குப் போன ஒடனே அவங்க ஒங்கள அழச்சிக்குட்டு வருவாங்க. நீங்க தங்குறதுக்கு உள்ள ஏற்பாட்ட நா போயிப் பாக்குறேன். கலங்காதீங்கம்மா.’ எதிர்வீட்டுச் சீனப்பாட்டி ஆங்கிலத்தில் சொன்னார். ‘அழாதேம்மா. நீ அழுதா உன் கண்ணீரில் இந்த கட்டடமே இடிந்து விழுந்துவிடும்.’

அக்கா ஊர் போய்விட்டார். ஓர் அழகான வேனில் அமீதாம்மாள் முதியோர் இல்லம் போய்க் கொண்டிருக்கிறார். அறக்கட்டளை நிறுவப்பட்டு விட்டது. அமீதாம்மாள் இறந்த காலத்தை கொஞ்சம் கொஞ்சமாக மறந்துகொண்டிருக்கிறார். முதியோர் இல்லமே  சொந்த இல்லமாகி விட்டது.

அந்த ஆண்டு தொண்டூழியம் மற்றும் அறக்கொடைக்கான அதிபர் விருது ஒன்று அறிவிக்கப்படுகிறது. அரிதான அந்த விருதை அந்த ஆண்டு அமீதா பெறப்போகிறார். அதே ஆண்டுதான் முதியோர் இல்லத்தின் 80வது ஆண்டுவிழாவும் நடக்கிறது. இதோ அந்த விழா நடந்துகொண்டிருக்கிறது. விருதுக்காக அமீதாவின் பெயர் அறிவிக்கப்பட்ட போது மழையில்லாத இடி மின்னலில் அந்த அரங்கம் அதிர்ந்தது. அமீதா அமைதியாக மேடைக்கு வருகிறார். அந்த விருதை அதிபரிடமிருந்து அமீதா பெற்றுக் கொள்கிறார். நிகழ்ச்சி நெறியாளர் அமீதாவிடம் வந்தார். ‘ஓரிரு வார்த்தைகள் நீங்கள் பேசவேண்டுமென்று எல்லாரும் விரும்புகிறார்கள். உங்களால் பேசமுடியுமென்றால் அறிவிக்கிறேன். இணக்கமாகத் தலையாட்டினார் அமீதா. நெறியாளர் அறிவிக்கிறார். நாலைந்து விமானங்கள் அருகில் பறப்பதுபோன்ற ஆரவாரம். எல்லாம் அடங்கிவிட்டது. என்ன சொல்லப்போகிறார் அமீதா? நிசப்தம். ஒலிவாங்கி அருகே வந்தார். அதிபரைப் பார்த்து தலைகுனிந்து வணக்கம் சொன்னார். பின் கூட்டத்தைப் பார்த்தார். கூட்டம் மௌனித்துக் கிடந்தது.

அமீதா பேசினார் ‘என் கணவரை அதிகம் நேசித்தேன். அல்லாஹ் பறித்துக் கொண்டான். என் மகளை அதைவிட அதிகமாக நேசித்தேன். என் மகளையும் அல்லாஹ் பறித்துக் கொண்டான். இந்த விருது நான் விரும்பாவிட்டாலும், அல்லாஹ் விரும்புகிறான். என் விருப்பம் என் விருப்பம் என்றபோது இவைகள் வலித்தன. அல்லாஹ்வின் விருப்பம் என்று என்னைத் தேற்றிக் கொண்டபோது எல்லா வலிகளும் ஆறிவிட்டன. எனக்காக துஆ செய்யும் உங்கள் எல்லாருக்கும் என் அஸ்ஸலாமு அலைக்கும், வணக்கம். நன்றி.

யூசுப் ராவுத்தர் ரஜித்

Series Navigationநாளைய தீபாவளிசமீபத்திய இரு மலேசிய நாவல்கள் –
author

யூசுப் ராவுத்தர் ரஜித்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *