வள்ளுவர் வாய்மொழி _1

This entry is part 2 of 10 in the series 10 நவம்பர் 2019

(குறள்போலும் 50)

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

(*முன் குறிப்பு)

  • இன்றிருப்பின் யான் எழுதியிருக்கலாகும்
    பின்வரும் அதிகாரத்தை.
  • பத்திருந்த இடத்தில் பதினொன்று; என்றும்
    உத்தரவாதமில்லை யெதுவும்.
  • ஒன்று பலவாகப் பொருள்படு மொன்றுக்கு
    நன்றாமோ ஒன்றுணர்த்தும் தலைப்பு?
  • பதிலாகலாம் கேள்வியே சிலநேர மென்றபோதும்
    அதுவேயாகலாகா தெப்போதும்.

1.

இன்றைய உம் கொடும்பசிக்கு இரையாகினேன்
நன்று நன்று; வேறென்ன வுரைக்க?

2.
நம் சொத்தென் றெம்மைச் சொல்வார்
தம் உம் நம் யார்யார்?

3.
என் உடையைப் பேசப் புகுமுன்
எண்ணுமின் ஆடையற்றோரை.

4.
நீர் எனக்காற்றும் உதவி நாளும்
சோர்வின்றிச் சிலகுறள்கள் படித்தறிதல்.

5.
அறிதலெனல் வெறுமே மனனம் செய்வதல்ல
அறிவிலேற்றி அன்றாடம் பின்பற்றல்.

6
அறிவென்பது யாதெனில் யாரையும்
அறிவிலி யென்னா திருத்தல்.

7.
ஏழே சொற்களில் எழுதினேன ழித்திடாதீர்
கீழேயுள்ள மூன்றை.

8.
காய்சில நன்றாம் கவரலாம் புசிக்கலாம்
பாயெனில் படுப்பதே உசிதமாம்.

9.
வடிவம் மாறலா மெனில் பகடையில்
இடம்பெறும் எண்கள் மாறா.

10.
சக்கரம்போல் வாழ்க்கை யெனில் மேலோர்
வக்கிரமாக மாட்டா ரென்றும்.

11.
என்னுள் கடத்தலே எனக்கான வள்ளுவம்
சொன்ன சொல் எண்ணுவம்.

12.
எம் குரலை யாம் கேட்டலின் நன்று
உம் குரலில் எம் குறள் கேட்டல்.

13.
பேச்சுரிமை, படைப்புரிமையென்பார் கை
வீச்சரிவாள் மாற்றுக்கருத்தாளருக்காய்.

14.
ஊர்ப்பழிமுழுக்க ஒரு தலையி லேற்றிய பின்
காரில் வலம்வரலாம் வழுவிலராய்.

15
ஏசிப்பேசியே காசுசேர்த்துவிட்டார்; கவலையில்லை
வீசுதென்றலுக்கு விலையில்லை.

16
தன் குழந்தையும் தனதில்லையென் றறியார்
என்னைத் தமதேயாம் என்பார்.

17
யார் நீங்கள் காற்றை சுவாசிக்க என்றால்
பேர்பேராய் காறித்துப்பாரோ?

18.
வெள்ளையாய் சக மனதைக் கற்பார் படைப்பாளி
உள்நோக்கங் கற்பிப்பார் கயவாளி.

19.
குண மொதுக்கி குற்றம் பெருக்கி
ரணகாயமாக்கி மிதித்தல் பழகு.

20.
அறிவோம் – உலகுண்டு நமக்கு முன்பும் பின்பும்
சிறுதுளிமட்டுமே நாம் மானுடத்தில்.

21.
எம் வரிகள் எம் வாழ்வு _
உம்வரியிருக்கு மும் உயர்வுதாழ்வு.

22.
இப்பொழுதும் இவ்வரிகளில் நீவிர் காண்பதெலாம்
தப்பெனில் வீணாம் மொழியும்.

23.
அவரிவருக்குமட்டுமானவை யல்ல எம் சொற்கள்
எவருக்குமானவை காண்.

24.
இப்படிச் சொல்வது அவருக்கு மட்டுமல்ல _
உமக்கும்தான்.

25.
சித்திரம் வரைந்த கையை முறித்துத்தான்
பத்திரப்படுத்த வேண்டுமா? ஏன்?

26.
சத்தமிட்டே பொய்யை மெய்யாக்கச் சித்தமாயின்
சத்திழந்துபோவோம் நாம்.

27.
வீணையை காட்சிப்பொருளாக்கல்போலும்
சிலர்க்கு வள்ளுவம் வாங்கலும்.

28.
கை யொரு பக்கமாய்ச் சாய்ப்பின்
வைத்த எடைக்கல்லால் பயனென்ன பின்?

29.
ஊர்கூட்டித் திட்டித் தீர்த்து உயர்ந்தாரெனப்
பேர்பெற்றார்தான் உத்தமராமோ?

30.
யார்யார்க்கோ பூ காய் கனி தந்த வேர்களை
நீருரிமை பாராட்டல் தகுமோ?

31.
கொள்கலம் நீவிர் குறுகியிருந்தா லெனை
அள்ள நேரமாகும் அதிகம்.

32
அள்ளத்தான் வேண்டுமா? அவசியமில்லை யேதும்;
கள்ளமுரைக்காதிருந்தாலே போதும்.

33.
நல்லதென்ன அல்லதென்ன _ சொல்லென்கிறீர்கள்;
சொல்லித் தெரிவதல்ல உள்ளுணர்வுகள்.

34

எல்லாம் தெரிந்தவராய்ப் பேசுவா ரொரு
சொல்லா லம்பலப் படுவார்.

35
அத்தனை பேரும் முட்டாள்களென்பார் மனம்
முட்டும் அறிவுகெட்டத்தனம்.

36
முன்னோடிப் பரிசு வாங்கலின் மேல்
முந்திச் சென்று உதவுதல்.

37
வெறும் உறுமலும் பொருமலும் கனலுமிழுங்கண்களும்
பெருமைசேர்க்கப் போதுமோ, சொல்லும்?

38
வல்லுறவுக் காளான பெண்ணையும் சாதி சொல்லித்
தள்ளுவார் கொள்ளுவார் புல்லர்கள்.

39
இப்புறம் போற்றிப் பெண்ணை யப்புறம் பண்டமாக்கல்
தப்பன்றோ – பத்திரிகைதர்மமாமோ?

40
பேசக் கசக்குமோ பொய், பித்தலாட்ட் வன்முறை வசனங்கள்
காரும் வீடும் பதவியும் வசப்பட.

41
பூரண பேச்சுச்சுதந்திரமுண் டவர் கட்சித் தலைவ ரைக்
தாராளமாய்த் துதிபாடுதற்கு.

42
சொல்லொணாத் துயருறுவார் புல்லுருவிகள் சிலர்
நல்லவிதமா யெல்லாம் முடிந்தால்.

43

அடுக்குமா அவர்களிருவரும் நண்பர்களாகிவிடல்?

நடுக்கமெடுக்கும் ரத்தக்காட்டேரிகளுக்கு.

44

அறைக்குள்ளிருந்தே புரட்சி பேசுவோர்க்கென்றும்

ஆறாக ஓட வேண்டும் அடுத்தவர் குருதி.

45

எத்தனைக்கெத்தனை எல்லோரையும் இழித்துரைப்பாரோ

அத்தனைக்கத்தனை ஆன்ற எழுத்தாளராவார்.

46

அகிலமெங்கும் சுற்றிவருவார் இந்தியக்குடிமகனா(ளா)ய்

சொந்தமண்ணை சதா நிந்தித்தவாறே.

47

சொற்களைக் கற்களாக்கிக் குறிபார்த்து எளியார்தலை

யெறிவாரே விற்பன்ன ரிங்கே.

48

பொதுப்படையாய் அதிகாரவர்க்கத்தைக்கண்டமேனிக்குத் திட்டு;

குறிப்பாய் அவரில் சிலரிடம் நட்பு பாராட்டு.

49

எது எப்படியோ, எங்காவது ஒரு தலை உருளாதா

ஊடக மைதானங்களில் ஓங்கி யுதைத்திருப்பதற்கு.

50

உருண்டைத்தலைகளே உருட்ட வாகானவை; மொந்தைப்

பெருக்கமே அறிவாளியாக்கு மெனை.

  •  
Series Navigationசொல்வனம் இணையப் பத்திரிகையின் 210 ஆம் இதழ்துணைவியின் இறுதிப் பயண நினைவு நாள் [9/11] [நவம்பர் 9, 2018]
author

ரிஷி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *