Posted in

ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள் – 3

This entry is part 6 of 7 in the series 17 நவம்பர் 2019

வாழ்நெறி

நான் நீங்கள் அவர்கள் என்ற
மூன்று வார்த்தைகளின்
நானாவித இணைவுகளில்
ஐந்துவிரல்களுக்கிடையே
ஆறேழு மோதல்களை உருவாக்கி
எட்டும் திசையெல்லாம்
’அமைதிப்புறா’ அடைமொழியும்
கிட்டுமென்றால்
ஒன்பது நாட்கள் ஒரு வாரத்திற்கு
என்றாலும்
பத்துதான் முதல் ஒன்று கடைசி
யென்றாலும்
இரண்டை மூன்றென்றாலும்
ஏழை சுழியமென்றாலும்
வேறு என்னென்னவோ
இன்னும் சொன்னாலும்
சரி யென்று சொல்வதே
அறிவுடைமையாக……

***

2. நாய்வால்

வழக்கம்போல் ஒருநாள் சோறுவைத்தபின்
நாயின் வாலைக் கடன் கேட்டான்.

வியப்போடு அவனைப் பார்த்தவாறே
செஞ்சோற்றுக்கடன் தீர்க்க
பெருகும் ரத்தத்தையும் பொருட்படுத்தாமல் அதைப்
பிய்த்துகொடுத்தது நாய்.

தன் பணிவைத் தெரிவிப்பதாய் _
தனக்கு அவரை யிவரை மிகவும் பிடிக்கும்
என்று தெரிவிப்பதாய் _
அடிமைச்சேவகம் செய்ய தான் தயாராக இருப்பதைத்
தெரிவிப்பதாய் _
சமயங்களில் வாலைப் பிறர் சுருட்டி முறுக்க
வலியோடு அனுமதித்தும்
பலவாறாய் முயன்றுபார்த்த பின் _

வாலைத் திருப்பிக்கொடுத்தவன்
நாயிடம்
‘உன் வாலால் ஒரு லாபமுமில்லை”
என்றான் வெறுப்போடு.

’என் வால் என் உறுப்புகளில் ஒன்று
வர்த்தகப் பண்டம் அல்லவே,
நீயாக அப்படி நினைத்துக்கொண்டால்
அதற்கு நான் என்ன செய்வது.’
என்று வருத்தத்தோடு பதிலளித்தவாறே
அறுந்த வாலை ஒட்டும் மார்க்கம் தேடி
அங்கிருந்து அகன்றது நாய்.

***

3. பறவைச்சிறகுகள்

’பாவம் உனக்குப் பேச்சே வரவில்லை’ என்கிறீர்கள்.
’நான் பேசிக்கொண்டுதானிருக்கிறேன்
உங்களுக்குத்தான் புரியவில்லை’ என்கிறேன்.

’பாவம், பேசுமொழியே இல்லையே உனக்கு’
என்று பச்சாதாபப்படுகிறீர்கள்
’எனக்கு மொழியுண்டு; உங்களால் அதைப்
பழகமுடியவில்லை’ என்கிறேன்.

’நாங்கள் எத்தனை முன்னேறிவிட்டோம்!
பாவம் நீ அதே கூட்டைத்தான்
இன்னமும் கட்டிக்கொண்டிருக்கிறாய் _’
என்று அனுதாபப்படுகிறீர்கள்.

’உங்கள் வீடு கட்டலைப்போலவே
என் கூடு கட்டலின்
முன்னேறிய தொழில்நுட்பங்களை
உங்களால் அறியவியலாது’
என்று சுட்டிக்காட்டுகிறேன்.

போனால் போகட்டும் என்று
பரிந்துபேசினால்
பெரிதாய் சிலுப்பிக்கொள்கிறாயே
என்று கோபப்படுகிறீர்கள்.

பரிந்துபேசுவதுபோல் உங்கள் பெருமையை
பீற்றிக்கொண்டேயிருந்தால் எப்படி
என்று சிரித்தபடியே

உங்களிடம் என்றுமே இல்லாத
என் சிறகுகளை விரித்துப்
பறந்துசெல்கிறேன்.


***

Series Navigation8.பாணன் பத்துபாத்திமா தற்கொலை- ராமஜன்ம பூமி- கேடுகெட்ட அரசியல் உருவாக்கும் ஊடக விவாதங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *