‘ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா’
புதுக்கோட்டையில் தெற்கு 3ம் புதுக்குளமும் சந்திக்கும் இடத்தில் ஒரு பூங்கா இருந்தது. நான் சொல்வது 1960 களில். அங்கு 10 அடி நீள இரும்புச்சங்கிலியில் தொங்கும் தொட்டிப்பலகை பிரசித்தம். அதில் ஒருவர்தான் உட்கார்ந்துகொண்டோ நின்றுகொண்டோ ஆட முடியும். முறை வைத்து அந்த ஊஞ்சலில் நாங்கள் ஆடியிருக்கிறோம். நான் மட்டும்தான் அதில் 180 டிகிரி தாண்டி ஆடுவேன். சவுக்குக் குச்சியோடு பூங்கா காவல்காரர் எங்களை அடிக்க ஓடிவருவார். ஆடும் ஊஞ்சலிலிருந்து தடாலென்று குதித்து ஓடியிருக்கிறேன்.
என் பூர்வீக மண் நச்சாந்துபட்டியில் ‘நச்சாங்கம்மாய்’ என்கிற ஏரிக்கரையில் ஓர் ஆலமரம் உண்டு. அதற்குப் பெயர் ‘ஆலயம்’. அதன் விழுதுகள் 20 அடி நீளத்துக்கு இறங்கியிருக்கும். தரையை உதைத்துக் கொண்டு அதில் ஆடினால் புவிஈர்ப்பு விசையை பூமி இழந்தது போன்ற ஓர் உணர்வில் மிதக்கலாம். அவ்வளவு சுகம்.
இஸ்லாமியர்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை ஒரு புதன்கிழமையில் ஒரு பண்டிகை வரும். அன்று குடும்பம் குடும்பமாக தோட்டம், துரவுகள், பூங்காக்கள் சென்று கூட்டாஞ்சோறு ஆக்கி சாப்பிடுவார்கள். அறந்தாங்கி புகை வண்டி நிலையத்திற்கு கிழக்கே எங்களுக்கு ஒரு தோப்பு இருந்தது. தாறுமாறாக வளர்ந்திருக்கும் புளியமரக் கிளையில் சாரைக் கயிறைத் தொங்கவிட்டு, ஒரு சிறிய தலையணையை அதில் பரப்பி முறை வைத்து நாங்கள் ஊஞ்சல் ஆடுவோம். ஊஞ்சலின் சுகமான நினைவுகளில் நான் என்னையே இழந்திருக்கிறேன். ‘ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா’
அறந்தாங்கியில் எங்கள் வீடும் எங்கள் பெரியத்தா வீடும் அடுத்தடுத்து இருக்கும் பெரியத்தா வீட்டில் கூடத்தில் இரு சுவர்களுக்கு இடையே தண்டவாளத்தைப் பொருத்தி, அதில் பொருத்திய ‘ய’ வடிவக் கொக்கியிலிருந்து தொங்கும் சங்கிலிகளில் அந்த ஊஞ்சல் ஆடும். அந்த ஊஞ்சல்தான் எங்களின் ஞாயிற்றுக்கிழமை உலகம். நாங்கள் ‘பொண்ணு மாப்பிள்ளை’ என்று விளையாடுவோம். நான்தான் மாப்பிள்ளை. அந்த ஊஞ்சலின் நடுவில் என்னை மட்டும் உட்கார வைத்து எல்லாரும் ஆட்டிவிடுவார்கள். நான் சிங்கப்பூரிலிருந்து அறந்தாங்கி வருகிறேனாம். அப்போதே சிங்கப்பூர் என் வாழ்க்கையில் சம்பந்தப்பட்டு விட்டது. அந்த ஊஞ்சல்தான் கப்பலாம். எல்லாரும் சேர்ந்து என்னை கப்பலிலிருந்து அழைத்து வருவார்கள். ஒரு பாய் விரிக்கப்பட்டு எனக்கு விருந்து பரிமாறப்படும். சலித்த மண்தான் சோறு. தண்ணீரில் நாயுருவிக் காய்கள், இலைகள் பூக்களைப் போட்டு கறிக்குழம்பு தயாராய் இருக்கும். நாயுருவிக் காய்கள்தான் இறைச்சித் துண்டுகள். ஈரக் களிமண் உருண்டையை செங்கல் தூளில் முக்கி எடுத்து அரச இலையில் வைக்கப்பட்டிருக்கும். அதுதான் லட்டாம். அதே உருண்டையைத் தட்டையாக்கி அதே செங்கல்தூளில் முக்கினால் அதுதான் வடையாம். சாம்பல் தூளில் முக்கிய செவ்வகத்துண்டு மைசூர்பாகு. எல்லாவற்றையும் தொட்டு சப்புக்கொட்டி சாப்பிடுவதுபோல் நடிக்க வேண்டும். என் பெரியத்தாவுக்கு ஏகணிவயல் கிராமத்தில் ஒரு சின்னவீடு இருந்தது. அந்த சின்ன வீட்டை சமீபத்தில்தான் பெரியவீட்டோடு சேர்த்திருந்தார். அவரை நான் ‘பெரியம்மா’ என்றுதான் கூப்பிடுவேன். ‘ஞாயித்துக்கெழம வந்துட்டா இந்தக் கழிச்சல்ல போன பாளயங்களுக்கு அளக்குடுக்க முடியல. இது என்ன வீடா சந்தக் கடையா’ என்று கத்திக்கொண்டு ஒரு மூங்கிக் குச்சியை ஓங்கிக்கொண்டு வருவார். எல்லாரும் வீட்டிலிருந்து வெளியேறி ஓடுவோம். அன்றும் அப்படித்தான் நடந்தது. எல்லாரும் வெளியேற நான் ‘மாப்பிள்ளை’ கடைசியில் வெளியேறினேன். வலதுகாலை வாசலுக்கு வெளியே வைத்து இடதுகாலை எடுப்பதற்குள் பெரியம்மா கதவைச் சாத்தியதில் என் கெரண்டைக் காலை கருணைக்கிழங்கைச் சீவுவதுபோல் சீவிவிட்டது அந்தக் கதவு. எனக்கு ஒன்றும் அப்போது தெரியவில்லை. வீட்டுக்கு வந்தேன். வைத்த அடியெல்லாம் ரத்தம். அத்தா என்னை அப்படியே இடுப்பில் தூக்கி ‘எங்கய்யா விழுந்தே’ என்றார். அப்போதுதான் காயத்தையே நான் பார்க்கிறேன். ஈரத்துணியால் மயிலிறகில் வருடுவதுபோல் அத்தா என் புண்ணை சுத்தம் செய்தார். அம்மா மஞ்சலை உரசி மஞ்சப்பத்துப் போட்டார். என்னைத் தூக்கிக்கொண்டு போய் பெரியத்தா வீட்டுக் கதவைத் தட்டினார். பெரியம்மா ‘யாரது’ என்று அதட்டியபடி கதவைத் திறந்தார். ‘எம்புள்ள காலு ஒன் கண்ணுக்குத் தெரியலியா? நீ கதவச் சாத்துனதுல எம்புள்ள காலப் பாரு. புள்ளய பெத்துருந்தாத்தானே புள்ளயோட அருமெ தெரியும்’ நச்சென்று சொல்லிவிட்டு அத்தா திரும்பிவிட்டார். ‘தெருவுல கெடக்கிற மலட்டு நாய்களெ வீட்டுக்கள்ள வச்சா இப்புடித்தான்.’ என்று என் அத்தா சொன்ன வார்த்தைகள் மொழிமாற்றம் செய்யப்பட்டு பெரியத்தா காதில் பெரியம்மா ஊதினார். பெரியத்தா எங்க வீட்டுக் கதவைத் தட்டினார். வெளியில் நின்றபடி அத்தாவை அசிங்கம் அசிங்கமாகத் திட்டினார். எனக்கு அழுகை வந்தது. ‘அண்ணே’ என்கிற மரியாதையை அத்தா விட்டுக் கொடுக்கவே இல்லை. ‘நா அப்புடிச் சொல்லலேண்ணே’ என்றுதான் திரும்பத் திரும்பச் சொன்னார். நாங்கள் யாரும் அதன்பிறகு பெரியத்தா வீட்டுக்குப் போவதில்லை. அங்கிருந்து யாரும் எங்கள் வீட்டுக்கு வருவதில்லை.
அடுத்த இரண்டு வாரத்திலேயே கேரளாவிலிந்து ஒரு தேக்கு உத்திரம் எங்கள் வீட்டில் இறங்கியது. காரைக்குடியிலிருந்து ஒரு லாரியில் தொட்டிப் பலகை வந்திறங்கியது. சோமு ஆசாரி உத்திர மரத்தை இழைத்து ‘ய’ கொக்கியைப் பொருத்தினார். கொத்தனார் மணி சுவர்களைப் பொத்து உத்திரத்தை நிறுத்தினார். அதிலிருந்து அந்த ஊஞ்சல் அழகாக இறங்கி ஆடியது. ‘ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா’ பெரியத்தா வீட்டு ஊசஞ்சல் கேட்பாரற்று அனாதையாகத் தொங்கிக் கொண்டிருக்கிறது. இப்போது ஞாயிற்றுக்கிழமைகளில் எல்லாக் கூட்டமும் எங்கள் வீட்டில்தான். அத்தம்மா அந்த ஊஞ்சலில் உட்கார்ந்துதான் குர்ஆன் ஓதுவார். என்னை அருகில் அழைத்து உச்சந்தலையில் ஊதி, இரு கைகளையும் பரப்பி என் உடம்பு முழுக்கத் தடவுவார். குர்ஆன் வசனம் ஆடைபோல் என்னைக் காக்கும் என்பது அதன் அர்த்தமாம். இன்றுவரை அப்படித்தான் நான் காக்கப்படுவதாக மானசீகமாக உணர்கிறேன். சின்ன பித்தளை உரலை ஒரு கையிலும் உலக்கையை மறு கையிலும் தாங்கிப்பிடித்து வெற்றிலை இடிப்பார். தரையில் வைத்து இடித்தால் சத்தம் வருமாம். அந்த உரல் கொஞ்சம் வெற்றிலைக் கலவையோடு எனக்காகக் காத்திருக்கும். அதைச் சொரண்டி அள்ளி எனக்கு ஊட்டுவார். என் சிவந்த உதடுகளைக் கிள்ளிக் கொஞ்சுவார். பிறகு நான் சிங்கப்பூர் வந்துவிட்டேன். ஆனாலும் அந்த ஊஞ்சல் நினைவுகள் என் நெஞ்சைக் கிள்ளிக் கொண்டே இருந்தது.
அங்மோகியோவில் ஒரு வீட்டில் வாடகைக்கு இருந்தேன். என் நெருங்கிய நண்பர் சுந்தர்ராமன் ஒருநாள் வீட்டுக்கு வந்தார். அவர் சொன்னார். ‘இந்தக் கூடம் விசாலமா இருக்கு. எங்கிட்ட ஒரு பெரம்பு கூடை ஊஞ்சல் இருக்கு. இங்க ஆடவிட்டால் நல்லா இருக்கும். நீங்க ஆடிக்கிட்டே சாப்பிடலாம். பேப்பர் படிக்கலாம்’ என் ஊஞ்சல் நினைவுகளை அந்த வார்த்தைகள் கிள்ளிவிட்டன. அடுத்த ஒரு வாரத்தில் அந்த பெரம்பு ஊஞ்சல் என் வாசல் கதவைத் தட்டி உள்ளே வந்துவிட்டது. அதற்கென்று ஒரு பிரத்யேகமான கொக்கி உண்டு. ‘பவர்டிரில்’ போட்டு கான்கிரீட் கூரையில் அதைப் பொருத்த வேண்டும். அறந்தாங்கிப் பையன் ராஜ்குமார் இங்கு கட்டட வேலை செய்கிறார். அவரை அழைத்தேன். அரை மணி நேரத்தில் பொருத்திக் கொடுத்து ஊஞ்சலையும் ஆடவிட்டார் ‘ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா’ வீட்டுக்காரர் ஒரு நாள் வீட்டுக்கு வந்தார். ஊஞ்சலைப் பார்த்துவிட்டு என்னைப் பார்த்தார். அந்தப் பார்வையில் தெறித்த நெருப்பு பயங்கரமாகச் சுட்டது. ‘யாரக்கேட்டு இந்தக் கொக்கிய அடுச்சீங்க. இருக்குறது வாடகைக்கு. என்னமோ சொந்த வீட்ல இருக்குறதுமாரி செஞ்சிருக்கீங்க. செவத்தில ஆணி அடிச்சால எனக்குப் புடிக்காது. படுச்சவுங்க நீங்க. இப்புடிச் செய்வீங்கன்னு எதிர்பார்க்கல. ஒங்க ஆட்வான்ஸை இந்த மாசம் கழிச்சுக்கிர்றேன். இந்த மாசத்தோட வீட்ட காலி பண்ணுங்க. இல்லேன்னா? அந்ந அளவுக்குப் போகமாட்டீங்கன்னு நெனக்கிறேன்’ என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார். ஒரு மாதத்தில் காலி செய்வது இருக்கட்டும். வீடு கிடைக்குமா? கிடைத்துவிட்டது. இனிமேல் ஊஞ்சல் என்றால் சொந்தவீட்டில்தான். முடிவு செய்தேன்.
சொந்தவீடு வாங்கிவிட்டேன். பஃபலோ ரோட்டில்தான் வீடு. வீட்டுக்குப் பக்கத்திலுள்ள கேம்பெல்லேனில் புராதனச் சாமான்கள் விற்கும் கடையில் ஓர் ஊஞ்சல் ‘என்னை எடுத்துக்க’ என்றது. விலை கேட்டேன். 1100 வெள்ளி என்றார். நழுவிவிட்டேன். அடுத்த ஆண்டும் அதே கடையில் அதே ஊஞ்சல். விலை கேட்டேன் 900 வெள்ளி என்றார். அந்த ஊஞ்சல் விற்றுவிட்டது. இது புது ஊஞ்சல் என்று பொய் சொன்னார். சுந்தர்ராமன் சென்னையில் கலைப்பொருட்கள் விற்கும் சில கடைகளைக் கூகுல் செய்து சில ஊஞ்சல்களைக் காட்டினார். என் பழைய நினைவுகளை அழகாக அவிழ்க்கும் ஓர் ஊஞ்சலும் அதில் இருந்தது. விலை கேட்டேன். ‘ஒரு லட்சம்’ என்றார்.
‘எப்படி அனுப்புவீர்கள்?’
‘காசை எங்கள் அக்கவுண்டில் போட்டுவிட்டால் அடுத்தநாளே கப்பலில் அனுப்பிவிடுவோம்.’
கப்பலா? எனக்கு ஏற்கனவே கப்பல் அனுபவம் இருக்கிறது. அனுப்பிவிட்டேன் என்று அவர் ரசீதைக் காட்டுவார். சரக்கு வரவில்லை என்று இங்குள்ளவர் கையை விரிப்பார். ஒரு ஆண்டுக்கு முன் அனுப்பிய என் 400 புத்தகங்கள் இன்னமும் எனக்கு வந்து சேரவில்லை. அந்த விலைக்கு கெம்பல் லேனில் 2 ஊஞ்சல் வாங்கிவிடலாமே.
ஒரு ஹரிரயா மாதம். கேலாங்கில் ஒரு பொருட்காட்சி நடந்தது. ஓர் இந்தோனேசியப் பெண் அழகான நாற்காலிகள் மேசைகள், தொலைக்காட்சிப் பெட்டிகள் தையல் இயந்திரங்கள் வைக்கும் மரப்பீடங்கள் என்று அழகழகான சாமான்களை விற்றுக் கொண்டிருந்தார். இவரிடம் நிச்சயம் ஊஞ்சல் கிடைக்கலாம். அவரிடம் சென்றேன்.
‘ஆறடி நீளம் ஒன்றரையடி அகலம் ஊஞ்சல் இருக்கா?’
‘அட! அதே அளவு. இருந்தது. நேற்றுத்தான் விற்றது’
‘விலை என்னம்மா?’
‘600வெள்ளி’
600 வெள்ளி நியாயமான விலைதான். மனசுக்குள் பூரித்தேன்.
‘எனக்கொன்று கிடைக்குமா?’
‘ஆர்டர் கொடுத்தால் செய்து தருவோம்.’
’600 வெள்ளி முன்னதாகவே கொடுக்க வேண்டுமா?
‘இல்லை. 50 வெள்ளி கொடுங்கள். மீதம் ஊஞ்சல் கிடைத்ததும் தரலாம். சங்கிலியின் நீளம் சொல்லுங்கள்.’
‘2 மீட்டர்’
உடனே ஆர்டர் புத்தகத்தை எடுத்தார். ஓர் ஊஞ்சல் பலகையை வரைந்தார் நீள அகலத்தை குறித்தார். முன்பணம் 50 வெள்ளி என்று எழுதி ரசீதைக் கொடுத்துவிட்டார்.
ஒரு மாதம் ஓடிவிட்டது. வீட்டுக் கதவு தட்டப்பட்டது. திறந்தேன். முதுகிலே சுமந்துவந்த ஊஞ்சலை வெகு சிரமப்பட்டு தரையில் இறக்கினார். ஊஞ்சலைத் தூக்கியதில் வளைந்த முதுகை கொஞ்சம் கொஞ்சமாக நிமிர்த்தும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அவர் இந்தோனேஷியர். ‘அசைக்க முடியாத கனம் என்று சைகையில் சொன்னார். அந்த ஊஞ்சலை தரையில் சாய்த்து அவர் ஒரு பக்கம் நான் ஒரு பக்கமாகப் பிடித்து வீட்டுக்குள் கொண்டு வருவதற்குள் 3 முறை தரையில் வைத்து இளைப்பாறிக் கொண்டேன். ஊஞ்சல்தான் சொன்னோம். கனத்தைப் பற்றிச் சொல்லவே இல்லையே. அது ஒரு காட்டு மரம். பயங்கரக்கனம். அப்படியே தொலைக்காட்சிப் பெட்டிக்கு எதிரே கிடத்திவிட்டு படுத்துக் கொண்டேன். ஆடும் ஊஞ்சலில் பிறகு படுக்கலாம். ஆடாத ஊஞ்சலில் இப்போது படுப்போம். ஒரு மாத காலக் காத்திருப்புக்குப் பிறகல்லவா வந்திருக்கிறது. வந்த்தில் மகிழ்ச்சிதான். அந்தக் கனம்தான் என்னைச் சுடுகிறது
அந்த அறந்தாங்கிப் பையன் ராஜ்குமாரை அழைத்தேன். வந்தார். லேசாக தூக்க முயற்சித்து ஊஞ்சல் மேலேயே விழுந்தார். ‘என்ன சார் இப்புடிக் கனக்குது’ என்றார். இருவரும் ஆளுக்கு ஒரு பக்கமாகத் தூக்கிவிட்டு இரண்டே வினாடியில் வைத்துவிட்டோம். ‘சார் 100 கிலோவுக்கு மேலே இருக்கும் சார். இந்த வெயிட்ட தொங்கவிர்றது ரிஸ்க் சார். ஆடும்போதே கொக்கி புடுங்கிக்கிரும்.அப்புடியே துணிஞ்சு கொக்கி அடிச்சு மாட்டினாலும் ஹெச்டிபிக்கு தெரிவிக்கணும் சார். இல்லாட்டி நாளக்கி யார் கொக்கி அடிச்சான்னு கேட்டு என்னப் புடுச்சிடுவாங்க சார். நீங்க ஹெச்டிபிக்கிட்ட கேட்டுட்டு சொல்லுங்க சார்’ என்று விட்டாப் போதும் என்று ஓடிவிட்டார். கூடத்தில் காலணி அலமாரி ஒன்று இருக்கிறது. பக்கத்திலுள்ள மரப்பீடத்தில் ஒரு தையல் இயந்திரம் இருக்கிறது. அதற்கும் பக்கத்தில் ஒரு நாற்காலி. அதில் மருந்து மாத்திரை இருக்கிறது. இந்த 3 உருப்படிகளையும் நகர்த்தினேன். அந்தத் தொட்டிப் பலகையை … இல்லை … பாறையை தரையோடு நகர்த்தி சுவரோரத்தில் கிடத்தினேன். அதற்கு மேல் அந்த 3 உருப்படிகளையும் நிறுத்திவிட்டேன். அவைகளுக்கு வந்த வாழ்வு. தரையில் கிடக்கவேண்டியது இந்தோனேஷியாவிலிருந்து வந்த ஊஞ்சல் பலகையின் மீது ஜம்மென்று அமர்ந்திருக்கிறது. அதற்குப் பக்கத்தில்தான் சாப்பிடும் மேசை. மேசையில் அமர்ந்தபடி ஊஞ்சல் பலகையைப் பார்க்கிறேன். ‘ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா’ என்று எப்படிப் பாடுவேன். ஆனாலும் அலை மோதுகிறேன். அந்த ஊஞ்சலைப் பார்க்கும்போதெல்லாம்.நெஞ்சில் யாரோ ஊசியால் நச்சுநச்சென்று குத்துவதுபோல் உணர்கிறேன். வீட்டு வசதி வாரியத்திடம் எப்போது கேட்பது? எப்படிக் கேட்பது? எப்போது ஊஞ்சலை ஆடவிடுவது? அப்படியே ஆடவிட்டாலும் பயமில்லாமல் எப்போது ஆடுவது? எந்தக் கேள்விக்கும் விடை தெரியவில்லை.
ஒன்று மட்டும் புரிந்தது. பிறந்த மண்ணை உதறிவிட்டு வரும்போதே உயிரை வருடும் பல நினைவுகளையும் உதறிவிட்டுத்தான் வரவேண்டியுள்ளது
யூசுப் ராவுத்தர் ரஜித்