8.பாணன் பத்து

This entry is part 5 of 7 in the series 17 நவம்பர் 2019

                         

      பாணனின் தொடர்பாக இப்பத்துப் பாடல்களும் அமைந்துள்ளதால் இப்பெயர் பெற்றது. பாணர்கள் பலவகையான தொழில்களைச் செய்து வாழ்ந்தவர் ஆவர். இதில் சொல்லப்படும் பாணன் யாழ் வாசிப்பவன். தலைவன், தலைவி ஆகியோர்க்குப் பணிகள் செய்வதோடு தூதும் சொல்ல வல்லவன். அவர்கள் இருவரும் சினந்தாலும் வருந்தாதவன். அவர்களின் வாழ்வுக்குத் தன்னால் முடிந்த மட்டும் உதவி செய்பவன்.

=====================================================================================

1.எல்வளை நெகிழ மேனி வாடப்

பல்இதழ் உண்கண் பனிஅலைக் கலங்க,

துறந்தோன் மன்ற, மறம்கெழு குருசில்;

அதுமற்று உணர்ந்தனை போலாய்

இன்னும் வருதி; என்அவர் தகவே?

      [எல்=ஒளி; பனி=துன்பம்; அலைக்கலங்க=அலைத்தலாலே கலங்க; மறம்கெழுகுரிசில்=வீரம் பொருந்திய பெருந்தகை; தகவு=தகுதி]

      அவன் குறித்த காலத்துல வராததால அவ மனசு வருந்திக் கெடக்கறா. அப்ப  தோழி அவன்கிட்டேயிருந்து பாணன் தூதா வந்திருக்கறதாகச் சொல்றா. அவன் வந்து அவக்கிட்ட இன்னும் கொஞ்சநாளு பொறுத்துக்குங்கன்னு சொல்றான். அப்ப பாணன்கிட்டத் தோழி சொல்ற பாட்டு இது.

      “பாணனே! இவளோட ஒளியான வளையெல்லாம் நெகிழ்ந்து போகவும், ஒடம்பெல்லாம் வாடவும், அழகான இதழ் போல இருக்கற மை பூசிய கண்ணெல்லாம் பனிக்காலத்துல வருந்திக் கலங்கவும், அவன் பிரிஞ்சு போயிட்டான். அது ஒனக்கும் தெரியும். ஆனா தெரியாதது போல் நீயும் வந்திருக்க. அவன் பெருமைதான் என்ன?”

=====================================================================================

2.கைவல் சீறியாழ்ப் பாண! நுமரே

செய்த பருவம் வந்துநின் றதுவே

எம்மின் உணரார் ஆயுனும், தம்வயின்

பொய்படு கிளவி நாணலும்

எய்யார் ஆகுதல் நோகோ யானே?

      [சீறியாழ்=சிறுயாழ்; நுமர்=உன் தலைவன்; தம்வயின்=தம்மிடம்; நாணம்=வெட்கம்; எய்யார்=பொருந்தார்; நோகோ=வருந்துவேனோ]

      அவன் பிரிஞ்சு போனதால அவ வருத்தப்பட்டிருக்கும்போது பாணன் தூதா வரான். அந்தப் பாணன் கிட்ட்த் தோழி சொல்ற பாட்டு இது.

      ”சின்ன யாழை நல்லா வாசிக்கற பாணனே! ஒன் தலைவரு வரேன்னு சொன்ன கார்காலமும் வந்திடுச்சி. நீயே பாரு. அவரு இக்காலத்துல என்னைப் போலவே தனியா இருக்கறத நெனச்சு வருந்தலதான் ஆனாலும் அவரு எங்கிட்ட சொல்லிட்டுப் போன பொய்யை நெனச்சாவது வெக்கப்படமாட்டாரா? அதுக்காக நானும் வருந்தறேன் பாரு.

=================================================================================

3.பலர்புகழ் சிறப்பின்நும் குருசில் உள்ளிச்

செலவுநீ நயந்தனை ஆயின், மன்ற

இன்னா அரும்படர் எம்வயின் செய்த

பொய்வ லாளர் போலக்

கைவல் பாண!எம் மறவா தீமே.

      [குருசில்=தலைவன்; உள்ளி=நினைந்து; நயந்தனை=விரும்பினை;

 இன்னா=பொறுக்க இயலாத; வயின்=இடம்]

      அவனோட நாட்டுக்குப் போகப் போறேன்னு சொன்ன பாணன்கிட்ட அவ சொல்ற பாட்டு இது

      “யாழ் வாசிக்கறத்தில தெறமையான பாணனே! எல்லாரும் புகழ்ந்து பேசற என் தலைவரைப் பாக்க நீ அவர் இருக்கற எடத்துக்குப் போறத விரும்பினா, எப்பவும் வருந்திக்கிட்டே இருக்கற துன்பத்தை எனக்குக் குடுத்த அந்தப் பொய் சொல்றதுல சிறந்தவரா இருக்கற அவரப் போல என்னை நீயும் மறந்துடாத.”

=====================================================================================4.மைஅறு சுடர்நுதல் விளங்கக் கறுத்தோர்

செய்அரண் சிதைத்த செருமிகு தானையொடு

கதழ்பறி நெடுந்தேர் அதர்படக் கடைஇச்

சென்றவர்த் தருகுவல் என்னும்;

நன்றால் அம்ம, பாணனது அறிவே!

      [மை=குற்றம்; கறுத்தோர்=பகைவர்; சிதைத்த=அழித்த; செரு=போர் கதழ்=விரைவு; அதர்=வழி; தருகுவல்=தருவாய்; கடைஇ=செலுத்தி]

      அவன் சொன்னபடி வராததால அவ ரொம்ப வருந்திக் கெடக்கறா. அப்ப அங்கு வந்த பாணன் ’நான் போயி அவன்கிட்டச் சொல்லி அவனக் கூட்டியாரேன்’னு சொல்றான். அந்தப் பாணன்கிட்ட அவ சொல்ற பாட்டு இது.

      ”பகைவரோட மதிலை எல்லாம் அழிச்சதோட, போர்க்களத்துல படையோடு சேந்துக்கிட்டு வேகமா போறக் குதிரை பூட்டிய தேரை வச்சிருக்கறவரு நம்ம தலைவர். அவர்கிட்டப் போய்ச் சொல்லி ஒன் அழகான நெத்தி இன்னும் அழகா இருக்கறதுக்கு நான் அவரை இங்கக் கொண்டு வரேன்னு சொன்ன இந்தப் பாணனோட அறிவு துன்பமான என் மனசுக்கு ரொம்ப நல்லா இருக்கு.

=====================================================================================5.தொடிநிலை கலங்க வாடிய தோளும்

வடிநலன் இழந்தஎன் கண்ணும்  நோக்கி,

பெரிதுபுலம் பின்னே, சீறியாழ்ப் பாணன்;

எம்வெங் காதலொடு பிரிந்தோர்

தம்மோன் போலான், பேரன் பினனே.

      [தொடி=தோள்வளை; தம்மோன்=தமக்குத் தலைவன்; வடி=மாவடு போன்ற கண்; வெம்=விரும்பும்; தம்மோன் போலான்=தலைவனைப் போன்றவன் அல்லன்]

      அவ அவனைப் பிரிஞ்சு வாடி இருக்கும்போது அங்க வந்த சிலர் அவன் வர்றதுக்கு இன்னும் கொஞ்ச நாளு ஆகும்னு சொல்றாங்க. அதைக் கேட்ட பாணனும் அவளுக்காகப்   பொலம்பறான். அதைப் பாத்து அவ சொல்ற பாட்டு இது.

      ”தோழி, நாம போட்டிருக்கற வளையெல்லாம் கழண்டு போச்சு; மாவடு போல் இருக்கற என் கண்ணு அழகில்லாம போயிடுச்சு; இதையெல்லாம் பாத்த பாணன் ரொம்ப வருந்தினான். எங்கிட்ட அன்பு வச்சுட்டுப் பிரிஞ்சு போன அவரைப் போல இல்ல இவன். எங்கிட்ட அன்பு காட்டறான்.”

=====================================================================================

6. கருவி வானம் கார்சிறந்து ஆர்ப்ப,

பருவம் செய்தன பைங்கொடி முல்லை

பல்ஆன் கோவலர் படலைக் கூட்டும்

அன்புஇல் மாலையும் உடைத்தோ

அன்பில் பாண! அவர்சென்ற நாடே?

      அவனும் அவளைப் பிரிஞ்சுத் துன்பப்படறதப் பாணன் பாக்கறான். அவன்  சொன்னபடிக் கார்காலத்துல வராததால அவளும் வேதனையோட ஒடம்பு மெலிஞ்சு போறா. அப்ப, ”பிரிஞ்சிருக்கறது அவருக்கும்தானே இருக்கு? நீங்க மட்டும் இப்படி ஒடம்பு வீணாகிப் பொலம்பலாமா?”ன்னு அவகிட்டக் கேக்கறான். அதுக்கு அவ சொல்ற பாட்டு இது.

      ”அன்பில்லாத பாணனே! மானம் இடி இடிச்சு மழை பெய்ய ஆரம்பிச்சிடுச்சு. முல்லைக்கொடியெல்லாம் பூக்கற அரும்புகளை வச்சிக்கிட்டுக் கார்காலத்தைக் காட்டுது. மாடு மேய்க்கற எடையருங்க தலையில முல்லைப் பூவைச் சூடிக்கிட்டு வீட்டுக்குத் திரும்பற மாலை நேரம் இது. அதே மாலை நேரம் அவரு போயிருக்கற எடத்துலயும் இருக்குமில்ல; சொல்லு?

=====================================================================================

7. பனிமலர் நெடுங்கண் பசலை பாய,

துனிமலி துயரமொடு அரும்படர் உழப்போள்

கையறு நெஞ்சிற்கு உயவுத் துணைஆக,

சிறுவரைத் தங்குவை யாயின்,

காண்குவை மன்னால் பாண!எம் தேரே.

      [பசலை பாய=பசலை நோய் படர; துனி=வெறுப்பு; படர்=துன்பம்;

 உழப்போள்=வருந்துவோள்; உயவு=பேச்சுத்துணை; சிறுவரை=சிறிதுநேரம்; தங்குவை=தங்கினால்]

      தான் திரும்பிப்போறதுக்கு ரொம்ப நாள் ஆயிட்டதால பாணனைக் கூப்பிட்டு, “நீ போ மொதல்ல; நான் வந்திடுவேன்”னு சொல்லி அவளுக்கு ஆறுதலா பேசிக்கிட்டிரு”ன்னு அவன் சொல்ற பாட்டு இது.

      ””பாணனே! குளிர்ச்சியான பூப்போல இருக்கற அவ கண்ணுல எல்லாம் பசலை வந்து துன்பப்பட்டுக்கிட்டு இருப்பா. அவளோட துன்பத்துக்கு ஆறுதலா நீ அவகிட்டக் கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இரு. அதுக்குள்ள என் தேரு வந்திடும்.”

=====================================================================================

8.‘நீடினம்’ என்று கொடுமை தூற்றி,

வாடிய நுதலன் ஆகி, பிறிது நினைந்து,

யாம்வெங் காதலி நோய்மிகச் சாஅய்,

சொல்லியது உரைமதி, நீயே

முல்லை நல்வாழ்ப் பாண!மற்று எமக்கே?

      [நீடிலம்=காலம் தாழ்த்தினோம்; நுதலள்=நெற்றி உடையவள்; சாஅய்=மெலிந்து; கொடுமை=குறை; தூற்றி=பழி தூற்றி; பிறிது=மாறுபாடு; வெம்=விரும்பும்]

      அவன் பாசறையிலேயே தங்கிட்டான் அவன்கிட்ட அவ பாணனைத் தூது சொல்லி அனுப்பறா. பாணன் போய்த் தூது சொல்றான். அப்ப அவன் பாணன்கிட்ட அவ சொன்னதை மறுபடியும் சொல்லுன்னு கேக்கற பாட்டு இது.

      ”பாணனே! என்னோட விருப்பமான அவ நான் வர்றதுக்குக் காலம் தாழ்த்தினதால நான் செஞ்ச கொடுமையை எல்லார்கிட்டயும் பழியாச் சொல்லிக்கிட்டிருப்பா. வாட்டமான நெத்தி யோட ஒடம்பு மெலிஞ்சு  இருக்கற அவ உண்மைக்கு நேர் எதிரா சொன்னதெல்லாம் மறுபடி நீ எனக்குச் சொல்லு.”

=====================================================================================9. சொல்லுமதி பாண! சொல்லுதோறும் இனிய;

நாடிடை விலங்கிய எம்வயின், நாள்தொறும்,  

அரும்பனி கலந்த அருள்இல் வாடை

தனிமை எள்ளும் பொழுதில்

பனிமலர்க் கண்ணி கூறியது எமக்கே.

      [சொல்லுதோறும் இனிய=சொல்லுந்தோறும் இனிமை செய்வன; நாடிடை விலங்கிய= பலநாடுகளை விட்டுப் பிரிந்த; எள்ளும்=இகழும்]

அவன் வராததால அவ பாணனைத் தூதா சொல்லி அனுப்பறா. வந்த பாணன்கிட்ட அவன் சொல்ற பாட்டு இது.

      ”பாணனே! சொல்லு. பல நாடுகள் எல்லாம் பிரிக்கறபடி நானும் அவளும் பிரிஞ்சு கெடக்கறோம். எங்கிட்ட அன்பே இல்லாத இந்தப் பனியோட சேந்திருக்கற வாடைக் காத்து தெனம் வந்து வீசி என்னை இகழுது. இந்த மாலை நேரத்துல குளிர்ச்சியான கண்ணு இருக்கற அவ சொன்னதுதான் எனக்கு இனிமையா இருக்கு. அவ சொன்னத மறுபடியும் சொல்லு.”

=====================================================================================10.நினக்கு பாணரேம் அல்லேம்; எமக்கு

நீயும் குருசிலை அல்லை மாதோ!

நின்வெங் காதலி தன்மனைப் புலம்பி

ஈர்இதழ்  உண்கண் உகுத்த

பூசல் கேட்டும் அருளா தோயே!

      [குருசில்=தலைவன்; புலம்பி=வருந்தி; ஈரிதழ்=குளிர்ச்சியான மலர்; உண்கண்=மையுண்ணும் கண்; பூசல்=வருத்தம்]

      அவ அவனைச் சீக்கிரம் வரச்சொல்லி பாணனைத் தூதா அவன்கிட்ட அனுப்பறா. அவனும் போய்ச் சொல்றான். அவனோ இப்ப வர முடியாது. வேலை முடிஞ்ச பின்னாடிதான் வர முடியும்னு சொல்றான். அப்ப பாணன் வெறுப்பா சொல்ற பாட்டு இது.

      ”தலைவனே!. ஒன் மேல அன்பு வச்சிருக்கற அவ அங்க  ஊட்லத் தனியா கெடந்து பொலம்பறா. குளிர்ச்சியான அவ கண்ணெல்லாம் நீர் கொட்டிக்கிட்டு வருந்திக் கெடக்கறத சொல்லியும் நீ வர மாட்டேன்ற. ஒனக்கு பாணனா இருக்க நான் இனிமே விரும்பல. எனக்கு இனிமே நீ தலைவன் இல்ல.”

===============================================================

Series Navigation50 ஆண்டுக்குப் பிறகு கடல்புகு வெனிஸ் நகரத்தில் கடல் அலை உயர்ந்து முடக்கமானது.ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள் – 3
author

வளவ.துரையன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *