தமிழ் நாட்டில் இத்தனை மாவட்டங்கள் தேவையா ?

author
2 minutes, 27 seconds Read
This entry is part 3 of 5 in the series 8 டிசம்பர் 2019

என்.எஸ்.வெங்கட்ராமன்

கடந்த சில நாட்களாக, தமிழக அரசு புதிய மாவட்டங்கள் அமைத்து வருகிறது. 2019ம் ஆண்டில்,  கடந்த 11 மாதங்களில், 32 மாவட்டங்கள், 37 மாவட்டங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த செயலை பெரிய சாதனை போல் தமிழக அமைச்சர்கள் பரப்புரை செய்து வருகின்றனர்.

புதிய மாவட்டங்கள் ஏற்படுத்தப்படுவதால், மேலும் அதிக அளவு மாவட்ட ஆட்சியாளர்களும், அதிகாரிகளும், கட்டமைப்பு வசதிகளும் தேவைப்படும். கணிசமான அளவில் நிhவாக செலவு கூடும்.

தமிழ்நாட்டின் நிதிநிலைமையும், நிதி பற்றாக்குறையும் பெரிதளவில் கவலை தரும் நிலையில், புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படுவதால், மேலும் அரசின் செலவுகள் கூடி மேலும் நிதி நிலைமை மோசமாகாதா என்ற கவலை பொதுமக்கள் மத்தியிலுள்ளது.

புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படுவதால், தமிழ்நாட்டில் குறிப்பிட்டு சொல்லும் விதத்தில் மாற்றமோ, முன்னேற்றமோ ஏற்படுமா என்ற சந்தேகம் பொதுமக்களின் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இதனால், நிர்வாகம் சீர்பட்டுவிடுமா என்ற கேள்வியில் நியாயம் உள்ளது.

புதிய மாவட்டங்கள் ஏற்படுவதால்,  நிர்வாக அமைப்பு பெரிதாக வலுவடையும் என்று அரசு சார்பில் கூறப்படுகின்றது. ஆனால்,புதிய மாவட்டங்கள் எந்த அளவில் நன்மை ஏற்படுத்தும் என்பதை குறித்து தமிழக அரசின் சார்பில் விரிவான அறிக்கையோ, விளக்கமோ பொதுமக்களுக்கு தரப்படவில்லை.

பொத்தாம் பொதுவாக, மக்களுக்கு மாவட்ட நிர்வாக அலுவலகங்களை  அணுகுவது எளிதாகும் என்று அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது, தற்போது மூன்று மணி நேரம் பிரயாணம் செய்து அரசு அலுவலகத்தை அடைவோருக்கு 30 நிமிட பிரயாணத்தில் அடையலாம் என்று கூறப்படுகின்றது. இது என்ன வாதம்? எத்தகைய விளக்கம் ?

சமீப காலங்களில், தொழில் நுட்பங்கள் பெரிதளவில் வளர்ந்து, தகவல்; தொடர்பு எளிதாகி உள்ளது.முதல் மந்திரியும், அமைச்சர்களும் சென்னையில் இருந்து கொண்டு தொலைவிலுள்ள கட்டிடங்களை காணோலி காட்சி மூலம் திறந்துவைப்பதை காண்கிறோம். சென்னை அலுவலகத்தில் அமர்ந்து  பல மாவட்டங்களிலுள்ள மாவட்ட ஆட்சியாளர்களுடனும், உயர்அதிகாரிகளுடனும் ஒரே சமயத்தில் கலந்து பேசி,தீர்மானங்களை வகுத்து செயற்படுத்த முடிகிறது.

இத்தகைய, தொழில் நுட்பம் வளர்ந்துள்ளதால், மாவட்டங்களின் எண்ணிக்கையை குறைக்க வாய்ப்புள்ளது  என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்து கொண்டிருக்கும் நிலையில், இத்தகைய அறிவுரைகளை காதில் கேட்டுக்கொள்ளாமல், தமிழக அரசு மாவட்ட எண்ணிக்கையை அதிகரித்து வருகின்றது.

பல மாவட்டங்களை பிரித்து, மேலும் பல மாவட்டங்களை ஏற்படுத்துவது ஒரு மிக முக்கியமான அடிப்படை தீர்மானம்,  பல கோணங்களில், ஆழமாக சிந்தித்து முடிவெடுக்க வேண்டிய விஷயம். பல மட்டங்களில் ஆராய்ந்து விரிவான அறிக்கையை அடிப்படையாக கொண்டு முடிவெடுக்க வேண்டும்.எடுத்தோம் கவிழ்த்தோம் என்ற ரீதியில், புதிய மாவட்டங்கள் ஏற்படுத்த அரசு தீர்மானித்துள்ளது என்ற சந்தேகம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.

இத்தகைய விரிவான,சாதக பாதகங்களை விவரமாக விவரித்து ஆராய்ந்து முடிவு எடுக்கப்பட்டுள்ளதா என்றும், யார் இத்தகைய திட்டத்தை முன்மொழிந்தார்கள் என்றும் புரியவில்லை. சில அதிகாரிகள் இத்தகைய முடிவுகளை பரிந்துரை செயதிருக்கலாம். அவ்வாறு செய்திருந்தால் அந்த விரிவான அறிக்கையை மக்களுக்கு ஏன் அறிவிக்கவில்லை ? பொது மக்கள் பங்கேற்கும் விதமாக, பொதுமக்களின் ஆலோசனைகளை ஏன் கேட்கவில்லை என்றும் புரியவில்லை.

முக்கியமான நிர்வாக விவரங்களை குறித்து முடிவெடுக்கும் போது பதவியில் அமர்ந்திருக்கும் அதிகாரிகளின் ஆலோசனைகளை மட்டும் கேட்டு அரசு செயல்படுவது சரியல்ல. அரசாங்க பதவியில் இல்லாத, பல ஆண்டுகள் இந்தியாவிலும், வளர்ந்த நாடுகளிலும் நிர்வாகத்துறையில் பணி புரிந்து அனுபவங்களுள்ள நிபுணர்கள் பலர் உள்ளனர்.இத்தகைய நிபுணர்கள் உள்ள குழுவினை அமைத்து இந்த குழுவின் ஆலோசனைகளையும் அரசு கேட்டிருக்க வேண்டும்.

இன்றைய சூழ்நிலையில், பல அரசு உயர்அதிகாரிகள், அமைச்சர்களின் எண்ண ஓட்டத்திற்கு சாதகமாக அறிக்கை அளிப்பது கண்கூடாக தெரிகின்றது. அரசு அதிகாரிகளின் ஆலோசனைகளை மட்டும் பெற்று நிபுணர்களின் அறிவுரைகளை கேட்காமல் புதிய மாவட்டங்களை ஏற்படுத்துவது போன்ற  முக்கியமான முடிவுகளை அரசு எடுக்கலாமா ?

மேலும் பல மாவட்டங்கள் அமைப்பதால், அரசு அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும், பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பு ஏற்படுவதால் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டங்கள் கூடுவதால், மாவட்ட அளவில் மேலும் பல அரசு துறையில் கான்ட்ராக்ட் கிடைக்க கூடும் என்பதால், ஒப்பந்தக்காரர்களும்,அவர்களிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு அவர்களுக்கு சிபாரிசு செய்து பிழைப்பை நடத்தும் அரசியல்வாதிகளும், இடைத்தரகர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அரசு அலுவலகங்களில் பெரிதளவு லஞ்ச லாவண்யம் உள்ள நிலையில் நிர்வாகத்தில் அரசியல்வாதிகளின் குறுக்கீடு பெரிதளவில் உள்ள நிலையில் புதிய மாவட்டங்கள் அமைக்கப்படுவதால் நிர்வாகம் சீரடையுமா என்பது கேள்விக்குறி.

புதிய மாவட்டங்கள் அமைப்பதால், தற்போது அரசு துறையில் நிலவும் லஞ்ச லாவண்யம் குறையப்போவதில்லை.   லஞ்ச லாவண்யம் மேலும் கூடவே வாய்ப்புள்ளது.

தமிழ்நாட்டில் மேலும் எத்தனை மாவட்டங்கள் உருவாகும் என்று தெரியவில்லை. ஒவ்வொரு தாலுக்காவையும், ஒரு மாவட்டமாக அறிவித்தாலும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை என்று பொதுமக்கள் பேசுவதை கேட்க முடிகின்றது.

32 மாவட்டங்கள் 37 மாவட்டங்களாக மாறுவதனால் நிர்வாகத்துறையில் முன்னேற்றம் ஏற்படுமா என்று நிபுணர்;கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

தமிழக அரசின் புதிய மாவட்டம் அமைக்கும் நோக்கம் நிபுணர்களுக்கும், பொதுமக்களுக்கும் புரியாத புதிராக உள்ளது.

எல்லா விஷயங்களையும், விவரமாக அலசும் ஊடகங்களும், செய்திதாள்களும் பல மாவட்டங்கள் உருவாகுவதால் எந்த அளவிற்கு தமிழ்நாட்டிற்கு நன்மை ஏற்படுத்தும் என்று, தங்களின் கருத்துகளை எடுத்துரைக்க மக்களுக்கு சந்தர்ப்பம் ஏற்படுத்தி தரவில்லை என்பது ஆச்சரியத்தை அளிக்கின்றது.

நன்றி

என்.எஸ்.வெங்கட்ராமன்

Series Navigationதளை
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *