2019

This entry is part 2 of 8 in the series 15 டிசம்பர் 2019

கு. அழகர்சாமி

ஐயங்களின்

ஆழங்கள்

ஆபத்தானவை.

கேள்விகள்

கூர் கொண்டு

துளைத்தெடுப்பதால்

கொடூரமானவை.

(தேவையான பதில்கள் வேண்டும்

தேவையான கேள்விகளைத் தவிர)

ஏன் தர்க்கிக்கிறாய்?

தர்க்கங்கள் வீண்.

உண்மையைத் தேடி வெறுமனே அவை

அலைய வைக்கும் உன்னை.

உண்மை வெட்டும் ஒளிமின்னலில்

கண் கூசவில்லையா உனக்கு?

உண்மையின் ஒளிக்கீற்று நுழையாத

அபோத இருளில் சுகமாய் உறங்கு.

கனவு காண் நீ விரும்பும் சொர்க்கத்தை.

மூளையைப் பிழியாதே,  ஓய்வு கொடு.

அறிய வேண்டியதேதுமில்லை புதிதாய்-

ஆதிப் புராணங்ளைத் தூசி தட்டு.

எல்லாம் இயம்பப்பட்டு விட்டன அன்றே.

எதுவுமில்லை புதிதாய் இயம்ப- கண்டுபிடிக்க-

(மனிதன் குரங்கிலிருந்து பரிணமித்தான் என்பதைத் தவிர,

ஏனென்றால் மனு நீதியில் அப்படி சொல்லப்படவில்லை)

உன் சுய அடையாளம்

ஒன்றுமில்லை.

நீ ஓர் வெறும் பன்னிரண்டு இலக்க எண்-

வேட்டை நிழலது

உன் இரண்டாம் நிழலாய்ப்

பின்தொடர உன்னை,

உன் சுதந்திரம்

கூண்டுக்குள்.

உலவு

வெகு தொலைவு

கூண்டுக்குள்.

சிறகடித்து வானில்

விதவிதமாய்ப் பறவைகள்

ஒலிக்கின்றனவே?

அவை

சிறகுகளுள்ளவை.

நீ

வித விதமாய்

ஒலித்துப் பறக்க

உன் சிறகுகள்

எங்கே?

உன் திசைகள்

எங்கே?

உன்

வானம் எங்கே?

ஒரே கலாச்சாரம்

ஒரே கருத்து

ஒரே மொழி

ஒரே கல்வி

ஒரே ரேஷன் அட்டை

ஒரே அடையாள அட்டை

ஒரே உயரம்

ஒரே நிறம்

ஒரே  பெயர்

ஒரே முகமூடி

ஒரே குழப்பமென்று நகைக்கிறாயா?

(நகைப்பது போல் தேசத்துரோகம் வேறேதுமில்லை)

ஏன் எதிர்ப்பின் உஷ்ணம் இன்னும்

நீ விடும் மூச்சில்?

நீ மூச்சே விடாமல் வாழப் பழகிக்கொள்ள

ஒருவேளை எங்கிருந்தோ

ஒரு குண்டு குறி வைக்கலாம் அல்லது

கும்பல் கூடி நைக்கலாம் உன்னை.

மற்றபடி இங்கு

எல்லாம் சுபிட்சமாயும் சுமுகமாயும்

இருக்கிறதென்று

நம்பு.

கு. அழகர்சாமி

Series Navigationசொல்வனம் இணையப் பத்திரிகையின் 212 ஆம் இதழ் இன்று (15 டிசம்பர் 2019) வெளியிடப்பட்டிருக்கிறதுகரிவாயுவை எரிவாயு வாக மாற்ற இரசாயன விஞ்ஞானிகள் ஒளித்துவ இயக்க ஊக்கியைப் பயன்படுத்துகிறார்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *