கனடாவில் இருந்து வெளிவரும் தளிர் இதழின் ஆறாவது ஆண்டு நிறைவு விழா சென்ற ஞாயிற்றுக்கிழமை ரொறன்ரோவில் உள்ள குயின்ஸ் கலாச்சார மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இளம் தலைமுறையினருக்காக இவர்கள் நடத்திய இசை, நடனப்போட்டியான ‘சலங்கையும் சங்கீதமும்’ என்ற நிகழ்வின் இறுதிச் சுற்றும் நேற்றையதினம் வெகு சிறப்பாக அந்த மண்டபத்தில் நடை பெற்றது இந்த நிகழ்வில் பார்வையாளர்கள், பெற்றோர்கள் என மண்டபம் நிறைந்த கலைஞர்கள் மற்றும் இசைக்கலைஞர்கள், நடனக்கலைஞர்கள் என ஒரு விழாக்கோலம் பூண்ட மாபெரும் நிகழ்வு அரங்கேறியது.
சலங்கையும் சங்கீதமும் இசை நடனப் போட்டியின் இறுதிச் சுற்றில் நடனத்தில் சிறந்த மூன்று பேரும், இசை நிகழ்ச்சிப் பாடலில் சிறந்த மூன்று பேரும் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கான விருது மற்றும் தங்க பதக்கங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள். தளிர் இதழின் அட்டைப்பட நாயகியான இசையழகி தளிர் மகள் மயூரதி தேவதாஸ் அவர்களும் தளிர் குழுமத்தினால் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். பிரதம ஆசிரியர் சி. சிவமோகன், பேராசிரியர் இ. பாலசுந்தரம், குழுமத்தின் தலைவர் எஸ். கிருஸ்ணகோபால், கவிஞர் சுரேஸ் அகணி, வைத்தியகலாநிதி போல் ஜோசெப் ஆகியோரின் உரையைத் தொடர்ந்து ஏழாவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் ‘தளிர்’ இதழும் இந்த நிகழ்வின்போது வெளியிட்டு வைக்கப்பட்டது.
பிரபல எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்கள் விசேட இதழை வெளியிட்டு வைத்து வெளியீட்டுரை நிகழ்த்தினார். அவரது உரையில் ‘கனடாவில் முத்தமிழ் விழாக்களுக்குச் சென்றிருக்கின்றேன், ஆனால் இன்றுதான் முத்தமிழ் வித்தகர்கள் கூடியிருக்கும் ஒரு சபையைக் காண்கிறேன். இயல், இசை, நாடகத்தில் புகழ் பெற்ற பல கலைஞர்கள் கலந்து கொண்டிருப்பது மட்டுமல்ல, சிலர் நடுவர்களாகவும் வந்து கலந்து கொண்டிருப்பது பெருமைக்குரியது. எமது மொழி பண்பாடு கலாச்சாரத்திற்கு மதிப்பளித்து இப்படியான ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்த நண்பரும் தளிர் இதழின் ஆசிரியருமான சிவமோகனுக்கும், தளிர் குழுமத்தினருக்கும் இந்தப் பாராட்டு உரியது. இந்த மண்ணில் ஈழத்தமிழர்களின் சரித்திரம் ஆரம்பமாகிச் சுமார் 40 வருடங்களாகிவிட்டன.’
‘முதல் 10 வருடங்கள் குறைந்த அளவிலேயே தமிழர்கள் இந்த மண்ணில் வாழ்ந்ததால், எங்கள் மொழியை வளர்ப்பதில் அதிகம் ஈடுபாடு கொள்ளவில்லை, ஆனால் கடந்த 30 வருடங்களாக மொழி ஆர்வலர்கள் தமிழ் மொழி அழிந்து விடக்கூடாது என்பதில் கவனமாகச் செயற்படுகின்றார்கள். ரொறன்ரோ கல்விச் சபையில் ஒரு ஆசிரியராகவும் நான் கடமையாற்றுவதால், இங்கே பிறந்த இந்தப் பிள்ளைகளின் மொழி உணர்வை நான் பெரிதும் பாராட்டுகின்றேன். இந்தப் பாராட்டு இந்தப் பிள்ளைகளுக்கு மட்டுமல்ல, அவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் இது போன்ற தமிழ் இசை, கலைப் போட்டிகளை நடத்துபவர்களையும் சாரும்.’
‘சிலர் பணத்தைக் காட்டி வேண்டும் என்றே பிறமொழிகளை புகுத்தி எங்கள் மொழியின் வளர்ச்சியை உடைக்க நினைக்கிறார்கள். வேற்று மொழிகளை அறிந்திருப்பது நல்லதுதான், ஆனால் அதற்காக எங்கள் தாய் மொழியைப் புறக்கணிக்கக் கூடாது. மொழி அழிந்தால் நம் இனம் அழிந்துவிடும் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. நல்ல சிறந்த தமிழ் பாடல்களைத் தெரிவு செய்து போட்டியில் பங்கு பற்றிய இளம் தலைமுறையைச் சேர்ந்த அனைவருக்கும், மற்றும் நடுவர்களாக வந்து இளம் தலைமுறையினருக்கு ஊக்கம் தந்தவர்களுக்கும், தன்னார்வத் தொட்டர்களுக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.’ என்று குரு அரவிந்தன் தனது வெளியீட்டு உரையில் குறிப்பிட்டிருந்தார்.
இறுதியாக இடம் பெற்ற நன்றியுரையில் இந்நிகழ்வில் கலந்து கொண்ட, ஆதரவுதந்த அனைத்து உள்ளங்களுக்கும் தளிர் குழுமம் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.
மணிமாலா – கனடா.
- கனடா தளிர் இதழின் ஆறாவது ஆண்டு விழா
- பெரும்பான்மை கட்சியினரின் ஆட்சியா அல்லது வன்முறை கும்பலின் ஆட்சியா ?தீர்மானிக்க வேண்டிய நேரம்
- ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
- செல்லம்மாவின் செல்லப்பிள்ளை
- அசூரச் சூரியச் சக்தி உற்பத்தி நிறுவகம் இந்திய மாநில எரிசக்தி வாரியத்துக்கு 2000 மெகாவாட் சூரியக்கனல் மின்சக்தி நிலையங்கள் அமைக்கத் திட்டம்