பெரும்பான்மை கட்சியினரின் ஆட்சியா அல்லது வன்முறை கும்பலின் ஆட்சியா ? தீர்மானிக்க வேண்டிய நேரம்
பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும், விரிவான விவாதத்திற்கு பின் பிரச்சினைகள் பல கோணங்களில் அலசப்பட்டு, பின் வாக்கெடுப்பின் அடிப்படையில், குடியுரிமை திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இது நாகரீகமான, ஜனநாயக அடிப்படையில், எடுக்கப்பட்ட முடிவு. ஜனநாயக சித்தாந்தத்தின் அணுகுமுறையில், பெரும்பான்மை மக்களின் ஆதரவு பெற்ற திட்டங்களையே அமல்படுத்தப்பட வேண்டும். மற்றவர்களும் இந்த முறையை ஒப்புக் கொண்டு செயற்பட வேண்டுயது அவசியம். நாட்டில் ஜனநாயகம் தழைக்க இந்த நாகரீகமான நிலை மிகவும் தேவை.
குடியுரிமை பிரச்சினை, இந்தியா சுதந்திரம் பெற்று இரண்டு நாடாக பிரிந்த காலத்திலிருந்தே தொடர்ந்து வருகின்றது. பல முன்னாள் பிரதம மந்திரிகள், குறிப்பாக காங்கிரஸ் கட்சியை சார்ந்த பிரதமர்கள், குடியுரிமை திட்டம் அமல்படுத்துவது குறித்து பல முறை ஆலோசனை செய்துள்ளார்கள். இந்த திட்டத்திற்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியை சார்ந்த முன்னாள் பிரதம மந்திரி மன்மோகன் சிங் பாராளுமன்றத்தில், குடியுரிமை சட்டத்தின் அவசியத்தைப்பற்றி உரையாற்றியுள்ளார். ஆனால், இந்த திட்டத்தை அமல்படுத்த இந்தியாவின் முன்னாள் பிரதம மந்திரிகள் எவருக்கும் துணிவில்லை. இந்த நிலையில் மோடி அரசு குடியுரிமை சட்டத்தை, ஜனநாயக முறையில் நிறைவேற்றியுள்ளது.
ஆனால், தற்போது சில எதிர் கட்சிகள், சில சமூக ஆர்வலர்கள், மதகுருமார்கள், பாராளுமன்றம் எடுத்த தீர்மானத்தை ஏற்க மறுத்து, போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அரசியலில் ஆர்வம் கொண்ட சில மாணவர்களையும் தூண்டிவிட்டு, போராட்டத்தில் எல்லோரும் பங்கேற்க வேண்டும் என்று அறைகூவல் விட்டுள்ளனர்.
இதனால், இந்த போராட்டம் வன்முறை போராட்டமாக மாறிவிட்டது. பல பேருந்துகள் எரிக்கப்பட்டுள்ளன. காவல் நிலையங்கள் தாக்கப்பட்டுள்ளன. விஷமிகள் போராட்டத்தில் இறங்கி மேலும் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த வன்முறையை கண்டிக்காமல், சில எதிர்கட்சி தலைவர்கள், சில சமூக ஆர்வலர்கள் மற்றும் சில செய்திதாள்களும், ஊடகங்களும், வன்முறையில் ஈடுபடுவது மக்களின் கோபத்தை வெளிப்படுத்தும் விதமாக உள்ளது என்று விவரித்து, வன்முறை நியாயமானது என்பது போல கூறிவருகின்றனர். ஒரு மாநிலத்தின் முதல் மந்திரி, குடியுரிமை திட்டத்தை ஐ.நா. சபைக்கு கொண்டு சென்று விவாதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இவர்கள் பிரச்சினையை தீர ஆராய்ந்து, பொறுப்புணர்ச்சியுடன் கூறு கின்றாரா என்பதே சந்தேகமாக உள்ளது.
நாட்டின் ஒருமைப்பாட்டை குலைக்கும் வகையில், இந்த போராட்டத்தை நடத்தி, தேர்தலில் வெற்றி பெற்ற திரு.மோடியை, வீதிகளில் தோற்கடிக்க முயலுகிறார்களா என்ற சந்தேகமும் சிலருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில், தற்போது 130 கோடிக்கு மேல் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். போராட்டத்தில் இறங்கி வன்முறையில் ஈடுபடுபவர்கள் சில நூறு பேர்களே ஆவர். இவர்கள் நாட்டு மக்களின் எண்ண ஓட்டத்தை பிரதிபலிப்பதாக எண்ண முடியாது. கோடிக்கணக்கான மக்கள் அமைதி காத்து வருகின்றனர்.
ஜனநாயக சித்தாந்தங்களின் அடிப்படை, தனிமனித சுதந்திரம் என்பதில் ஐயமில்லை. ஆனால், சுதந்திரம் அளவில்லாத அளவில் உள்ளது என்று யாரும் எண்ணக்கூடாது. கொள்கை எதிர்ப்பிற்காக பொது சொத்துகளை நாசமாக்கலாம், அது சுதந்திரம் என்று எண்ணுவது அறிவீனம்.
தற்போது, பெரும்பான்மை மக்களிடமுள்ள கவலை, வன்முறை கும்பல் நாட்டின் கொள்கை முடிவுகளை தீர்மானிக்கும் நிலை இந்தியாவில் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்ச உணர்வுதான்.
இந்தியாவில், இத்தகைய வன்முறை போராட்டத்தால் சிக்கலான நிலைமை ஏற்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபடுவோர் சிலரே. ஆனாலும், இவர்கள் வன்முறையில் ஈடுபட்டு பொது வாழ்க்கையை நிலைகுலைய செய்துவிடுகின்றனர். இவர்களை பார்த்து பொது மக்கள் அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது.
சமீப காலங்களில் பல ஆக்கபூர்வமான தொழில் மற்றும் வளர்ச்சி திட்டங்கள், வன்முறை போராட்டக்காரர்களின் செயலால் ஸ்தம்பித்து போயுள்ளன. பல திட்டங்கள் கைவிடப்பட்டுள்ளன. பல திட்டங்கள் மிகுந்த ஆலோசனைக்கு பின் அமல்படுத்தப்பட்டாலும், நீதிமன்றங்களில் ஒப்புதலை பெற்றிருப்பினும், போராட்டக்காரர்கள் ஏற்க மறுக்கின்றனர். சில மாநில அரசுகளும், போராட்டங்களின் வன்முறைக்கு பயந்து, அவர்களுக்கு அடிபணிந்து திட்டங்களை கைவிடுகின்றன.
இந்த நிலை மேலும் நீடித்தால் இந்திய நாட்டின் எதிர்காலமே கேள்விக்குரியாகிவிடும். நாட்டின் ஸ்திரத்தன்மை பெரிதளவில் பாதிக்கப்படும்.
கோடிக்கணக்கான மக்கள்,அமைதியாக தங்களது வேலைகளிலும், தொழில்களிலும் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் உழைப்பு, நாட்டின் முன்னேற்றத்திற்கும், அவர்கள் குடும்பங்களின் நன்மைக்கும் பெரிதளவில் உதவுகிறது. இவர்கள், வன்முறையில் ஈடுபடும் போராளிகள், மற்றும் அவர்களை தூண்டிவிடும் சில அரசியல் கட்சிகள் மற்றும் சில ஊடகங்கள், செய்திதாள்களின் போக்கையும் கண்டு விரக்தி அடைந்துள்ளனர்.
ஜனநாயகத்தை காப்பதற்காகவும், நாட்டின் முன்னேற்றத்தில் பின்னடைவு ஏற்படாமல் இருப்பதற்காகவும் வன்முறையில் ஈடுபடும் போராட்டக்காரர்களையும், அவர்களை தூண்டி விடுவோர்கயையும் கண்டித்து, அவர்களை ஒடுக்க வேண்டுமென்பது காலத்தின் கட்டாயம்.
நன்றி
என், எஸ்.வெங்கட்ராமன்
என், எஸ்.வெங்கட்ராமன்
என், எஸ்.வெங்கட்ராமன்
- கனடா தளிர் இதழின் ஆறாவது ஆண்டு விழா
- பெரும்பான்மை கட்சியினரின் ஆட்சியா அல்லது வன்முறை கும்பலின் ஆட்சியா ?தீர்மானிக்க வேண்டிய நேரம்
- ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
- செல்லம்மாவின் செல்லப்பிள்ளை
- அசூரச் சூரியச் சக்தி உற்பத்தி நிறுவகம் இந்திய மாநில எரிசக்தி வாரியத்துக்கு 2000 மெகாவாட் சூரியக்கனல் மின்சக்தி நிலையங்கள் அமைக்கத் திட்டம்