எம்பெருமானுக்கே பல்லாண்டு பல்லாண்டு எனப் பல்லாண்டு பாடி மகிழ்ந்தவர் பெரியாழ்வார். அதோடு நில்லாமல் கண்ணபிரானைக் குழந்தையாக்கிப் பிள்ளைத் தமிழ் பாடிப் போற்றியவர் அவரே.
பிள்ளைத் தமிழின் பத்துப் பருவங்களில் ஒன்றான செங்கீரைப் பருவத்தைப் பாடும்போது,
நம்முடை நாயகனே, நான்மறையின் பொருளே,
நாவியுள் நற்கமல நான்முக னுக்குஒருகால்
தம்மனை யானவனே, தரணி தலம்முழுதும்
தாரகை யினுலகும் தடவி யதன்புறமும்
விம்ம வளர்ந்தவனே, வேழமும் ஏழ்விடையும்
விரவிய வேலைதனுள் வென்று வருமவனே,
அம்ம, எனக்கொருகால் ஆடுக செங்கீரை,
ஆயர்கள் போரேறே, ஆடுக செங்கீரை
[ பெரி—1-6-3 ]
என்று அருளிச் செய்கிறார்.
குழந்தையானது தவழ்ந்து வருகையில் தனது இரண்டு கைகளையும், முழந்தாளையும் தரையில் ஊன்றித் தலையை நிமிர்த்திக் கொண்டு ஆடுவதே செங்கீரையாகும்.
கண்ணபிரானான குழந்தையை செங்கீரை ஆட வேண்டுகிறார் பெரியாழ்வார். அப்போது பெருமாளின் பல பெருமைகளைச் சொல்லிப் போற்றித் துதிக்கிறார். “ நாவியுள் நற்கமல நான்முகனுக்கு ஒருகால் தம்மனையாவனே” என்ற அவரின் துதி மச்சாவாதரத்தை நினைவூட்டுகிறது.
“உமது திருநாபிக் கமலத்தில் தோன்றிய பிரமதேவன் ஒருகாலத்தில் வேதத்தைப் பறிகொடுத்தான். மது, கைடபர் என்னும் இருவர் வேதங்களைப் பறித்துக்கொண்டு செல்ல நான்முகன் கதறி அழுதான். எம்பெருமானாகிய நீர் மீனாக அவதாரம் செய்து அவர்களிடமிருந்து வேதங்களை மீட்டு வந்து பிரமனிடம் கொடுத்தீர். எனவே நான்முகனுக்குத் தாய் போலப் பரிந்துவந்து துன்பம் துடைத்தவரே, செங்கீரை ஆடுக” என்ற பெரியாழ்வாரின் அருளிச்செயல் இன்புறத்தக்கதாகும்.
திருமங்கை மன்னன் எம்பெருமானின் மச்சாவதாரத்தை ஐந்து பாசுரங்களில் அருளிச் செய்கிறார்.
முதலில் “அம்பரமும்” எனத்தொடங்கும் பாசுரத்தை அனுபவிப்போம்.
”கொழுங்கயலாய் நெடுவெள்ளம் கொண்ட காலம்
குலவரையின் மீதோடி, அண்டத் தப்பால்
எழுந்தினிது விளையாடும் ஈசன் எந்தை
இணையடிக்கீழ் இனிதிருப்பீர் ! இனவண் டாலும்
உழும்செறுவில் மணிகொணர்ந்து கரைமேல் சிந்தி
உலகெல்லாம் சந்தனமும் அகிலும் கொள்ள
செழும்பொன்னி வளம் கொடுக்கும் சோழன் சேர்ந்த
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே”
திருமங்கையாழ்வார் திருநறையூர் வருகிறார். இத்தலம் திருமங்கை மன்னன் திரு இலச்சினை பெற்றத் தலமாகும். இத்தலத்தில் கிழக்கே திருமண்டல முகம் நோக்கி, நின்ற கோலத்தில் எழுந்தருளி உள்ள நறையூர் நம்பியின் திருவடியைப் போற்றும்போது ஆழ்வாருக்கு மச்சாவதராம் நினைவில் தோன்றுகிறது.
முன்னொரு காலத்தில் உலகில் பிரளயமாகப் பெருவெள்ளம் உருவெடுத்துத் திரண்டது. அப்பொழுது பெருமான் பெரிய மீன் உருவெடுத்தார். அந்த அவதாரமோ குலமலைகளின் மேலே சென்று உலாவியது. அதற்கு மேலும் அண்டப்பித்தியளவும் கிளம்பி சுகமாக விளையாடியது. அப்படிப்பட்ட பெருமையுடைய எம்பெருமானின் திருவடிகளின் கீழ் இனிதாக வாழ விருப்பம் உள்ளவர்களே” என்று அன்பர்களை மங்கை மன்னன் போற்றுகிறார்.
ஆழ்வார் திருநறையூர் நம்பியை மேலும் பாடுகிறார்.
முந்நீரை முன்னால் கடந்தானை மூழ்த்தநாள்
அந்நீரை மீனாய் அமைத்த பெருமானை
தென்னாலி மேய திருமாலை யெம்மானை
நன்னீர் வயல்சூழ் நறையூரில் கண்டேனே
[ மங்—6-8-2 ]
என்பது அவர் பாசுரம்.
கடல் கடைந்த பெருமான் எனப் போற்றும்போது அக்கடலில் தோன்றிய மச்சாவதாரம் எண்ணத்தில் தோன்றுவது இயல்புதானே? எனவேதான் ”மூழ்த்தநாள் அந்நீரை மீனாய் அமைத்த பெருமானை” எனப் போற்றுகிறார். பிரளயம் ஏற்பட்டபோது மீனாக அவதாரம் செய்து அப்பிரளயக் கடல் நீரை அடக்கிய பெருமை பொருந்திய பெருமாளை இவ்வாறு திருமங்கையாழ்வார் திருநறையூரில் இரு பாசுரங்களில் போற்றுகிறார்.
அடுத்து திருமங்கையாழ்வார் பாடிய “வானோர் அளவும்” எனும் பதிகம் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். திருக்கன்ணபுரம் கண்வ முனிவருக்குக் காட்சி தந்த திருத்தலமாகும்.
அத்தலத்தில் எழுந்தருளியுள்ள, கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் காட்சி தரும், உத்பலாவதக விமானத்தை உடைய சௌரிராஜப் பெருமாளை ஆழ்வார் பத்து அவதாரங்களிலும் கண்டு இன்பத்தில் திளைக்கிறார்.
“வானோர் அளவும் முதுமுந்நீர்
வளர்ந்த காலம் வலியுருவில்
மீனாய் வந்து வியந்துய்யக்
கொண்ட தண்தா மரைக்கண்ணன்
ஆனா உருவில் ஆனாயன்
அவனை—அம்மா விளைவயலுள்
கானார் புறவில் கண்ணபுரத்து
அடியேன் கண்டு கொண்டேனே”
[ மங்கை—8-8-1 ]
திருக்கண்ணபுரப்பெருமாள்தான், தேவர்கள் உலகம் உள்ள அளவிற்குப் பிரளய வெள்ளம் பரந்து சென்ற காலத்திலே வலிமை கொண்ட வடிவுடைய மீனாய் அவதாரம் செய்தார். எல்லாரும் வியக்கும்படியாக அனைவரையும் பிழைக்கச் செய்த தாமரை மலர்போன்ற திருக்கண்களை உடையவர் அவர் என்று ஆழ்வார் அனுபவித்து அருளிச் செய்கிறார்.
திருக்கண்ணங்குடி தமிழ் நாட்டின் பஞ்ச கிருஷ்ண ஷேத்திரங்களுள் ஒன்றாகும். இங்கு எழுந்தருளி உள்ள சியாமள மேனிப் பெருமாள் பிருகு, சைத்யர், கௌதம முனிவர்க்குக் காட்சி தந்து அருள் பாலித்தவர் ஆவார். இப்பெருமாளை திருமங்கையாழ்வார்,
வாதைவந் தடர, வானமும் நிலனும்
மலைகளும் அலைகடல் குளிப்ப
மீதுகொண் டுகளும் மீனுரு வாகி
விரிபுனல் வரியகட் டொளித்தோன்
போதலர் புன்னை மல்லிகை மௌவல்
புதுவிரை மதுமலர் அணைந்து
சீதஒன் தென்றல் திசைதொறும் கமழும்
திருக்கண் ணங்குடி யுள்நின்றானே
[மங்கை—9-1-3]
என்று போற்றி அருளிச் செய்கிறார்.
துன்பம் உண்டாகிப் பெருக, வானம் பூமி, மலைகள் எல்லாம் கடலில் அழுந்திவிடப் பிரள்யம் தோன்றுகிறது. அப்பொழுது இவற்றையெல்லாம் தன்மேல் ஏறிட்டுக் கோண்டு, மிக மகிழ்ச்சியுடன் உலாவும் மச்ச உருவெடுத்தார் பெருமாள். மேலும் அப்பெருவெள்ள நீரைத் தனது செதிள்களில் அடக்கிய பெருமான் இதோ எழுந்தருளி உள்ளார் என்று அருளுகிறார் ஆழ்வார்.
பெருமாளின் மச்சாவதாரப் பெருமையை மீண்டும் திருமங்கையாழ்வார் பாடுகிறார்.
நிலையிட மெங்கு மின்றி நெடுவெள்ளம் உம்பர்
வளநாடு மூட இமையோர்
“தலையிட மற்றை மக்கொர் சரணில்லை” என்ன
அரணாவன் என்னும் அருளால்
அலைகடல் நீர்கு ழம்ப அகடாட ஓடி
அகல்வா னுரிஞ்ச முதுகில்
மலைகளை மீது கொண்டு வருமீனை மாலை
மறவா திறைஞ்சென் மனனே
தன் நெஞ்சத்திடம் :ஏ, மனமே, பெருவெள்ளம் தேவலோகத்தை மூடியபோது, தேவர்கள் அனைவரும் உன் திருவடி தவிர, வேறொரு புகலிடம் எமக்கில்லை” என்று பெருமாளை வணங்கித் துதித்தார்கள். உடனே எம்பெருமான் “ நான் உங்களுக்குப் பாதுகாப்பாகின்றேன்” என்ற கருணையினால், தன் கீழ் வயிற்றிலே அலை எறியும்படியாகவும் தன் திரு முதுகிலே மலைகளை ஏறிட்டுக் கொள்ளும்படியாகவும் மீனாக அவதரித்துக் காப்பாற்றி அருள் செய்தார். அப்பெருமானை மறவாமல் வணங்குவாயாக” என்று ஆழ்வார் அருளிச் செய்கிறார்.
திருமழிசையாழ்வார் அருளிச்செய்த “நான்முகன் திருவந்தாதி”யிலும் 22-ஆம் பாசுரத்தில் மச்சாவதாரத்தைப் போற்றிப் பாடுகிறார்.
அழகியான் தானே அரியுருவன் தானே
பழகியான் தாளே பணிமின்—-குழவியாய்த்
தானேழ் உலகுக்கும் தன்மைக்கும் தன்மையனே
மீனாய் உயிரளிக்கும் வித்து.
பிரளய காலத்தில் மீனாய் அவதரித்து எல்லா உயிர்களையும் காத்த எம்பெருமானே ஏழ் உலகுக்கும் முதற்காரணன்; அவரே நரசிங்க உருக்கொண்டு அருள்செய்தார் என்று திருமழிசையாழ்வார் போற்றுகிறார்.
இவ்வாறு ஆழ்வார் பெருமக்கள் முதல் அவதாரமான, முத்தான அவதாரமான மச்சாவதாரத்தை அனுபவித்துப் போற்றி அருளிச் செய்து நம்மையும் நல்வழிப் படுத்துகின்றனர் என்று நாம் மகிழலாம்.