என் ஓவியங்களுக்கு
வண்ணங்களாய்
வந்தவர்க்கு
வேரறியாக் காலத்தில்
நீர் தந்த கரங்களுக்கு
படரத்துடித்தபோது
கூரையாய் ஆனவர்க்கு
வாழ்க்கைப் பாதையில்
எழுபதைத் தாண்ட
செருப்பாய்த் தேய்ந்தவர்க்கு
கூவி விற்ற பொருளுக்கு
காசு தந்தவர்க்கு
வியர்வை காய
விசிறி விட்டவர்க்கு
வாழ்க்கைச் சிலேட்டில்
தப்பாய் எழுதியதை
யாருமே அறியாமல்
கண்ணீரால் அழித்தவர்க்கு
என் முட்களை
மன்னித்தவர்க்கு
சூரைக் காற்றில்
இரும்புக் கோட்டையாகி
என்னை இடியாமல்
காத்தவர்க் கெல்லாம்
என் கைமாறு என்ன?
முற்றிச் சாய்ந்த நாற்று
மண்ணுக்கும் மழைக்கும்
தரும் கைமாறுதான்
அமீதாம்மாள்