ஓவியன்

This entry is part 3 of 6 in the series 9 பெப்ருவரி 2020

        

தரையில் குப்புறப் படுத்துக் கொண்டு சிலேட்டுக் குச்சியால் எம்ஜியார், சிவாஜி, தாமரைப்பூ, சூரியகாந்தி, யானை என்று வரைந்துகொண்டே இருப்பேன். என் சட்டைப் பையில் எப்போதும் சிலேட்டுக் குச்சிகள் இருக்கும். பள்ளிக்கூடத்தில் திருடிய சில சாக்பீஸ் துண்டுகளும் இருக்கும். ஒரு நாள் அடுப்படித் திண்ணையில் அறிஞர் அண்ணா படம் வரைந்திருந்தேன். அந்தத் திண்ணையில் தான் அத்தாவுக்கு அம்மா சாப்பாடு வைப்பார்கள். அண்ணா படத்தின் மீது அம்மா பாயை விரித்தபோது அத்தா அந்தப் பாயை சற்று இழுத்துப் போட்டு அண்ணா படம் தெரிவதுபோல் உட்கார்ந்துகொண்டு அந்தப் படத்தைப் பார்த்துக் கொண்டே சாப்பிட்டார். என் தாத்தாவின் தம்பி எப்போதும் அடுப்புக் கரியோடு திரிவாராம். அவர் வரைந்த தியாகராஜ பாகவதர் படம்  இன்னும் அந்தக் குட்டிச் சுவரில் அழியாமல் இருக்கிறது எத்தனை மழை வந்தாலும் கரிக்கோடு அழியாது. வெள்ளையடித்தால்தான் உண்டு.  என் தாத்தாவின் அந்தக் கலை 2 தலைமுறை தாண்டி யாருக்கும் போய்விடாமல்  என்னிடம் வந்து ஒட்டிக் கொண்டது என்று அத்தா சொன்னார். ஐந்தாம் வகுப்பு ஆசிரியர் திரு லட்சுமி நாராயணன் வாளை ஓங்கியபடி குதிரையில் செல்லும் வீரசிவாஜி படத்தை கரும்பலகையில் வரைந்திருந்தார். அந்தப் படத்தை நூறு முறையாகிலும்  நான் வரைந்து பார்த்திருப்பேன். குதிரையின் முகம், சிவாஜியின் முகம் அந்தக் கடிவாள நீளம் எல்லாம் சரியான அளவில்  வரைவது அவ்வளவு சுலபமல்ல.  10 மணிக்கு ஒன்னுக்குப் போக இடைவெளி கிடைக்கும். மதியம் சாப்பாட்டுக்கு 2 மணிநேரம் இடைவெளி இருக்கும். எல்லாவற்றையும் தியாகம் செய்து அந்தப் படத்தை வரைய நான் பாடுபட்டிருக்கிறேன். அந்த ஆசிரியர் பார்த்துப் பார்த்து  சிரித்தாரே தவிர எப்படி வரைய வேண்டும் என்று சொல்லித் தரவே இல்லை . ஐந்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று உயர்நிலைப் பள்ளி போகும்போதுதான் அந்த இரகசியத்தைச் சொன்னார். அந்த உண்மையான  படத்தில் சதுரக் கட்டங்கள் வரைந்து அதே மாதிரி கரும்பலகையிலும் வரைந்து அந்தந்தக் கட்டத்தில் அந்தந்தப் பகுதி இருக்க வேண்டும் என்றார். ‘இத்தனை நாள் ஏன் சார் சொல்லவில்லை என்றேன் ‘அந்தக்  கட்டம் இல்லாமல் வரைந்து பார்த்தால்தான் ஓவியத்தின்  நுட்பம் தெரியும். அதனால்தான் உடனே சொல்லவில்லை’ என்றார்.. உயர்நிலை ஒன்றில் ஓவியப் போட்டி ஒன்று நடந்தது. அதில் நான் வரைந்த சேவலுக்கு முதல் பரிசு கிடைத்தது. ‘வாழ்க்கையின் வெற்றி ‘ என்ற புத்தகம் பரிசாக கிடைத்தது. அதை இப்பவும் நான் வைத்திருக்கிறேன். முதல் பக்கத்தில் எழுதப் பட்டிருந்த அந்த வாசகங்களுக்காகத்தான் அதை இன்னமும் பாதுகாத்து வைத்திருக்கிறேன்.

எட்டாம் வகுப்பு படித்தபோது தஞ்சாவூர் பிளேக் உயர்நிலை பள்ளியில் ஒரு பொருட்காட்சி நடந்தது. அதில் எங்கள் பள்ளியும் கலந்து கொண்டது. இரண்டு இணை கோடுகளுக்கு மேல் சில கோடுகள் வரைந்தால் அந்த இணை கோடுகள் நடுவில் ஒடுங்கியதுபோல் தெரியும் . வேறு மாதிரி கோடுகள் வரைந்தால் நடுவில் உப்பியதுபோல் தெரியும் . ஒரு வளைவான கோட்டில் சில கோடுகளைச் சேர்த்தால் அது   நேராக இருப்பதுபோல் தெரியும். அந்த கண்ணாமூச்சி ஆட்டம் என்னைக் கவர்ந்தது. அந்த மூளை என்னுடையதல்ல. அதை நான் உருமாற்றம் செய்தேன். அதை வித்தியாசமாகப் பெரிதாக வரைந்து கொண்டு சென்றேன். அதற்கு நான் இப்படி தலைப்பு கொடுத்தேன். ‘உன் கண்ணே உன்னை ஏமாற்றும். எச்சரிக்கை ‘.

அந்த வாசகங்களுக்காக  எனக்குக் கிடைத்த பரிசு அகிலனின் ‘பாவை விளக்கு’ அந்தப் புத்தகத்திற்கும் என் ஓவியத்திற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. என்னைத் தேடி வந்ததால் அந்தப் புத்தகத்தை நான் மானசீகமாக விரும்பினேன். என் வாழ்க்கையில் நான் படித்த முதல் நாவல் அதுதான். இப்படி எழுதிக்கொண்டே போனால் நீங்கள் தூங்கி விடுவீர்கள்  முக்கியமான செய்திகளை மட்டும் சொல்லிவிடுகிறேன்

திருச்சி புனித சூசையப்பர் கல்லூரியில் இயற்பியல் இளங்கலை படித்தேன். ஷேக்ஸ்பியரின் ‘மெர்ச்சண்ட் ஆப் வெனிஸ்’ என்ற நாடகத்தைத் தழுவி ‘மனக்கல்’  என்ற பெயரில்  தமிழ்த் துறைப் பேராசிரியர் திரு சாமிமுத்து தமிழில் அதை நாடகமாக்கி இருந்தார். அந்த நாடகத்தில் வரும் ஒரு சிறப்பான காட்சி. ‘ ஷைலக்கிடம் அண்டோனியோ வாங்கிய கடன் தவணை தாண்டிவிட்டது. ஒப்பந்தப்படி அன்டோனியோவின் நெஞ்சைப் பிளந்து இருதயத்தை ஷைலக் எடுத்துக் கொள்ளவேண்டும். கத்தியோடு வரும் ஷைலக்குக்கு பணம் கொடுக்க அந்தோனியோவின் நண்பன் பஸானியோ முன் வந்தும் அதை ஷைலக் வாங்க மறுத்துவிடுவான் . அதில் பஷானியோவாக நான் நடித்தேன். வழக்கு போர்ஷியா என்கிற பெண் நீதிபதிக்கு வருகிறது  அவர் சொல்வார். ‘ பத்திரப்படி நீ இதயத்தை எடுத்துக்கொள்ளலாம். இதயத்தை மட்டும்தான் எடுத்துக்கொள்ளவேண்டும். ஒரு சொட்டு ரத்தம் கூட சிந்தக்கூடாது.’ ஷைலக் அதிர்ச்சி அடைந்து உறைந்துவிடுவான். இந்த நாடகத்தை மாணவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும். பெரிய அளவில் ஒரு விளம்பரம் வரைய முடியுமா ? ஆசிரியர் கேட்டார். 5 ருபாய் தருவதாகச் சொன்னார். ;நான் தயாரித்தேன். ஷைலக்கை வரைந்தேன். அந்த முகத்திற்கு பதில் ஓர் ஓநாயின் முகத்தை வரைந்தேன். அண்டோனியோ முகம் ஓர் ஆட்டுக்குட்டி ஆனது. போர்ஷியாவின் முகம் புறாவானது. அந்தப் படத்தைப் பார்த்து நாடகம் பார்க்க கல்லூரியே திரண்டு விட்டது. பேராசிரியர் சாமிமுத்து எனக்கு 10 ரூபாய் தந்தார். அந்தப் பத்து ரூபாயை இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறேன்

தஞ்சாவூர் மன்னர் சரபோஜி கல்லூரியில் விளக்குநராக வேலையில் சேர்ந்தேன். அப்போது ஒரு பெரிய போராட்டம் வெடித்தது. விளக்குநர்களை உதவிப்பேராசிரியர்களாக ஆக்க வேண்டும் என்பதே முக்கிய முழக்கமாக இருந்தது. எண்ணற்ற பதாகைகளுடன் ஒரு மிகப்பெரிய ஊர்வலத்தை நடத்த முடிவு செய்தோம். அப்போது நான் கல்லூரிக்கு அருகே இருந்த வீட்டு வசதி வாரிய வீட்டில் குடியிருந்தேன்.  அன்று இரவு 200 அட்டைகளுடன் நாலைந்து ஆசிரியர்கள் வண்ணக்குப்பிகள் மற்றும் தூரிகைகளுடன் வீட்டுக்கு வந்துவிட்டார்கள் . அத்தனை பதாகைகளையும் அன்று இரவே எழுத வேண்டும். எழுத வேண்டிய வாசகங்களை போராட்டக் குழுவினர் தந்திருந்தார்கள். இரவு 10  மணிக்கு ஆரம்பித்தேன்  காலை 4 மணிக்கு எல்லா பாதாகைகளும் தயார்.  எழுத்துக்களின் கவர்ச்சி எல்லாரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. ஆசிரியர்களை அரசு கைது செய்தது. முக்கியமாக என்னைத்தான் தேடினார்கள்  அதில் முதலாவதாக சிறை சென்றவன் நான்தான்  ஒரு வாரம் சிறையில் இருந்தேன். போராட்டம் வெற்றி. விளக்குநர்கள் உதவிப் பேராசிரியர்களாக பதவி உயர்வு பெற்றார்கள் . போராட்ட வெற்றிக்கு என் எழுத்துக்கள் முக்கியக் காரணம் என்று எல்லாரும் புகழ்ந்தார்கள். எங்கள் கல்லூரியின் ஆசிரியர் சங்கத் தலைவர் ஒரு பாராட்டுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார்  அதில் சிறப்புப் பரிசாக எனக்கு  ஒரு வெள்ளிக் குத்துவிளக்கு தந்தார்கள். அந்த  விளக்கை இன்னும் நான் பத்திரமாக  வைத்திருக்கிறேன். 

தீடீரென்று என்னை திருச்சி ஈ.வெ.ரா. கல்லூரிக்கு மாற்றிவிட்டார்கள். குடும்பம் தஞ்சாவூரில். வேலை திருச்சியில். 6 ஆண்டுகள் பேருந்தில் போய் வந்துகொண்டிருந்தேன். அப்போது தமிழ்நாடு சட்டசபைக்கான தேர்தல் நெருங்கிக் கொண்டிருந்தது. எனக்குப் பிடித்த அரசியல் தலைவர் அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். அவரை மையப்படுத்தி ஒரு பெரிய பதாகையை வீட்டிலேயே வரைந்தேன். யாருக்கும் தெரியாது. பிறகு இரவோடு இரவாகக் கொண்டுபோய் தஞ்சாவூர் ராணிபாரடைஸ் தியேட்டருக்கு  எதிரே இருந்த ஒரு புளியமரத்தில் கட்டிவைத்தேன்.  மருத்துவக் கல்லூரியிலிருந்து நகருக்கு வருகிறவர்கள் அந்தப் படத்தைப் பார்க்காமல் போய்விடமுடியாது. இப்போதிருக்கும் மேம்பாலம் அப்போது இல்லை. அந்தக் கட்சியைத் சேர்ந்த பலருக்கும் அந்தப் பதாகை பிடித்திருந்தது. யாருக்குமே வரைந்தது நான்தான் என்று தெரியாது. தேர்தல் முடிந்தது. முடிவுகள் வந்தன. அந்தத் தலைவனின் கட்சி வெற்றி பெற்றது. தஞ்சாவூரிலும் அந்தக் கட்சி உறுப்பினர் வெற்றி பெற்றார். அவருக்கு ஒரு பாராட்டுக் கூட்டம் நடந்தது. நானும் சென்றேன்.  கூட்டம் முடிந்த பிறகு சட்ட மன்ற உறுப்பினரிடம் சென்றேன். அவரிடம் சொன்னேன். ‘நான் கட்சி அனுதாபி. இன்று நேற்றல்ல. பல ஆண்டுகள். இந்த தொகுதிக்கு நானும் உழைத்திருக்கிறேன். நான் அரசு ஊழியன். வெளிப்படையாகச் செய்ய முடியாது. ராணி பேரடைஸ் தியேட்டருக்கு எதிரில் கட்டிவைத்திருந்த பேனர் நான் வரைந்ததுதான்.’ என்றேன்.  சொன்ன மாத்திரத்தில் கட்டிப் பிடித்துக் கொண்டார்.

‘அந்த ஓவியர் யார் என்று பார்த்தவர்களிடமெல்லாம் கேட்டேன். எல்லாருமே தெரியாது என்றுதான் சொன்னார்கள். ரொம்ப நன்றி சார்’ .

‘எனக்கு ஒரு உதவி தேவை.’

‘என்ன வேண்டும் சொல்லுங்கள்.’

‘என் குடும்பம் இங்கே. எனக்கு வேலையோ திருச்சி ஈ.வெ.ரா கல்லூரியில். 6 ஆண்டுகளாக பஸ்ஸில் தினமும் போய்வருகிறேன்.  ரொம்பவும் கஷ்டப்பட்டுவிட்டுத்தான் கேட்கிறேன். எனக்கு தஞ்சாவூருக்கு மாற்றல் வேண்டும். ‘

‘உங்கள் கோரிக்கையோடு ஒரு கடிதம் தாருங்கள்’

‘தயாராகவே இருக்கிறது’

நீட்டினேன். வாங்கினார். படித்தார். நாளை சென்னையில் கட்சிக்கூட்டம். புதிய அமைச்சரவை பதவி ஏற்கிறது. ‘உங்கள் மாற்றல் உத்தரவோடு வருகிறேன்.’ என்றார். இப்படி எத்தனையோ அரசியல்வாதிகளைப் பார்த்திருக்கிறேன்.  சொல்வார்கள். சொன்னதையே மறந்துவிடுவார்கள். ஆனால் சொன்னதுபோலவே தங்காவூருக்கு மாற்றல் உத்தரவுக்கான அரசு  ஆணை எண்ணுடன் வந்தார். ‘யாரிடமும் சொல்லாதீர்கள். நாளை கல்லூரிக்கு கடிதம் வந்தபின் தெரிந்துகொள்ளட்டும்’ என்றார்.

தஞ்சாவூருக்கு மாற்றலான சில மாதங்களில் சிங்கப்பூரிவிருந்து என் நீண்ட நாள் நண்பன் யாசின் வந்தான். கேட்டான்

‘இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு இந்தக் காலேஜைக் கட்டிக் கொண்டு அழப்போகிறாய்.’

‘ இப்போது வயது 37 இன்னும் 20 ஆண்டுகள் அழுதே தீரவேண்டும்.’ என்றேன் அவன் பாஷையில்.

‘உனக்கு 3 மகள்கள்.  உன் குடும்பத் தகுதிக்கு ஒவ்வொருவருக்கும் 100 பவுன் போட்டாக வேண்டும். வருகிற மாப்பிள்ளைக்கு பேண்டு சட்டை கூட நீதான் வாங்கித் தரவேண்டும். பெரிய புரபஸர்தான். ஒத்துக்குறேன். வாழ்க்கைய நிதர்சனமா பாரு. ஓரளவு ஒழச்சிட்டே. 100 ரூபாய் நீ இங்கே மிச்சம் பிடித்தால் 20 கிலோ அரிசி வாங்கலாம். சிங்கப்பூர்ல 100 வெள்ளி மிச்சம் பிடித்தால் ஒரு பவுன் தங்கம் வாங்கலாம். ஒடனே சிங்கப்பூருக்கு வர்ற வேலயப் பாரு. ஒன்ன நீயே ஏமாத்திக்கிட்டு இருக்காதெ.’

உண்மைதான். வீம்புக்காக வாழ்ந்து என்ன பயன்? யோசித்தேன். அவன் வார்த்தைகள் பல நாட்கள் என் தூக்கத்தைத் தின்றன. என் மகள்கள் வரிசையாக பாயில் படுத்திருப்பதைப் பார்த்து அழுதேன். இவர்களுக்கு நான் சிறப்பான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க வேண்டும். எந்த விலையானாலும் அதை நான் கொடுத்தே ஆக வேண்டும். முடிவெடுத்தேன். யாசின் இருக்கிறான். ஓரளவு படிப்பு இருக்கிறது. ஏதாவது நடக்கும். சிங்கப்பூர் செல்ல முடிவு செய்தேன்.

சிங்கப்பூர் வந்துவிட்டேன்.  ஒரு நாள் செந்தோசா சென்றேன். ஒரு சீனர் ஒரு பெண்ணை உட்காரவைத்து அதன் பக்கவாட்டுத் தோற்றத்தை பேனாவில் வரைந்து கொடுத்து 5 வெள்ளி வாங்கிக் கொண்டார். அவர் வரையும்போது நான் அவர் வரைவதுபோல ஒரு படம் வரைந்து அவரிடம் காட்டினேன்.  பாராட்டினார்.

 ‘உங்களோடு நானும் வரையலாமா?’

‘இந்த நா்ட்டில் அப்படியெல்லாம் செய்யமுடியாது. நீங்கள் ஒரு சுற்றுப்பயணி. முதலில் இங்கே நிரந்தரமாகத் தங்க முயற்சி செய்யுங்கள்’

10 வெள்ளி தந்தார். மறுத்தேன். அவர் விடவில்லை. ‘இந்தப் படத்திற்கு ஒரு சாதாரண மனிதன் விலை கொடுக்க மாட்டான். நான் ஓர் ஓவியன். இந்த ஓவியத்துக்குள்ள விலையை நான் கொடுக்காவிட்டால் அது தரும்மல்ல.’ என்றார்.  சிங்கப்பூர் என் நெஞ்சில் ஆழமாக வேர்விட்டது இந்த நிகழ்ச்சியால்தான். வாழ்ந்தால் இங்குதான் வாழவேண்டும் என்று முடிவு செய்தேன். தனிநிலை ஆசிரியராக என் வேலையைத் தொடங்கினேன். கொண்டுவந்த தூரிகைகள், வர்ணக் குப்பிகள் அத்தனையையும் என் மேசை இழுவறையில் வைத்து மூடிவிட்டு அதை மறந்தே போய்விட்டேன். அப்போதெல்லாம் சில பள்ளிகள் காலை 7 மணிக்குத் தொடங்கும் சில பள்ளிகள் 1 மணி சுமாருக்குத் தொடங்கும். மாலை நேர மாணவர்களுக்கு காலையில் நான் துணைப்பாட வகுப்பு எடுப்பேன். காலை நேர மாணவர்களுக்கு மாலையில் வகுப்புகள எடுப்பேன். 6 மணிக்கு புறப்படுவேன். பலநாட்கள் மதியம் வீட்டுக்கு வரமுடிவதில்லை. இரவு 9 அல்லது 10 மணியாகிவிடும் வீடுவர. டம்பனீஷ், பாசிர் ரிஸ், உட்லண்ட்ஸ் என்று மாணவன் எங்கிருந்து என்னை அணுகினாலும் சரி. உடனே ஒப்புக்கொண்டு ஓடுவேன். இரவு படுக்கும்போது அடுத்த நாள் பிரச்சினைகள் வரிசையாக நிற்கும்.  எழுந்த உடன் அந்த நாள் வேலைகள் வரிசையாக நிற்கும். கடுமையாக உழைத்தேன். அதற்கான ஊதியமும் பெற்றேன். வாழ்க்கைக்கு ஓர் உத்திரவாதம் இருந்தது. என் பிள்ளைகளுக்கு படிப்பு மட்டும் கொடுத்தால் போதும். மற்றவை எல்லாம் தானாகவே அமைந்துவிடும் என்று யாசின் சொன்னது உண்மைதான் என்று உணர்ந்தேன். சிங்கப்பூரில் எனக்கு ஒரு மகனும் பிறந்தான். அவனுக்கு இப்போது வயது 24. வண்டி நிற்காமல் ஓடுகிறது. எதிர்பார்த்தது வீண் போகவில்லை. எல்லாரும் நன்றாகவே படித்தார்கள். தானாகவே வளர்ந்து பூத்து, காய்த்து தோட்டமாக மாறிவிட்டார்கள். ஆம் . என் 3 மகள்களுக்கும் திருமணம் முடிந்து விட்டது. எல்லாருக்கும் பிள்ளைகள். தனிமரமாக வந்த நான் தோப்பாகிவிட்டேன். ஆனாலும் என் வேலையை நான் தொடர்கிறேன. அந்த மேசை இழுவறையை இழுத்தேன். நாலைந்து தூரிகைகள் உருண்டோடிவந்து என்னைப் பார்த்தன. சே! எத்தனை ஆண்டுகளாகிவிட்டது. அந்தத் தூரிகைகளை கண்களில் ஒற்றிக்கொண்டு அழுதேன். தண்ணீரையே பார்த்த தூரிகைகள் என் கண்ணீரையும் பார்த்தது.  மீண்டும் என் விரல்களோடு இவர்கள் விளையாட மாட்டார்களா என்று ஏங்குவேன். அந்த வண்ணக்ககுப்பிகளை எடுத்தேன்.  எல்லாம் கல்லாகிவிட்டது. எல்லாவற்றையும்   தோம்பில் போட்டேன். என் இருதயமும் சேர்ந்து தோம்பில் விழுந்தது.  எடுத்து மீண்டும் பொருத்திக் கொண்டேன்.

ஒரு நாள் என் பேரன் ஒரு புலியை வரைந்துகொண்டு வந்து என்னிடம் காட்டினான். அட! என் வாரிசில் ஒருவன் என்னைப்போல் உருவாகிறான். உடம்பெல்லாம் பூத்தன. அந்த ஓவியத்தை வாங்கினேன். என் பழைய உணர்வுகள் எனக்குள்ளிருந்து காற்றில்லாத வெளியில் பத்திப்புகை போல அழகாக மிதந்து நகர்ந்து காற்றில் கலந்தது. அந்தப் படத்தை வாங்கினேன். என் மேசை இழுப்பறையை இழுத்தேன். அந்த தூரிகைகள் உருண்டோடிவந்தன. என் விரல்களுக்கிடையே நீங்கள் விளையாடும் நேரம் வந்துவிட்டது.  பெருமையுடன் என் தூரியையைப் பார்த்தேன். ‘என் பேரனிடம் கேட்டேன்.

 ‘இந்தப் படத்தை நான் இன்னும் நல்லா வரஞ்சு தரவா? ‘

 ‘அத்தா ஒங்களுக்கு வரயத் தெரியுமா?’  என் பேரன் என்னை அத்தா என்றுதான் கூப்பிடுவான். 8 ஆண்டுக்கு முன்னால் பிறந்தவனுக்கு என் 30 ஆண்டுகளுக்கு முந்திய கதை எப்படித் தெரியும்.

‘வரஞ்சு பாக்கிறேனே ‘

‘சரி. பாருங்க. ரொம்ப கஷ்டப்பட்டு வரஞ்சிருக்கேன். வீணாக்கிறாதீங்க’

அவனைப் பார்த்து சிரித்தேன். ஆனந்தக் கண்ணீரால் மீண்டும் அழுதுகொண்டே சிரித்தேன். பின் சொன்னேன். ‘வீணாக்கமாட்டேன்.’

அந்தப் படம் வரைந்த தாளின் பின் பகுதியை நீரால் நனைத்தேன். ஈரம் படத்தின் மீது லேசாக வெளியேறி படத்தை பதமாக்கியது. இனிமேல் வண்ணம் சேர்க்கலாம். புலியை மஞ்சளாக வரைந்திருந்தான். கொஞ்சம் சிவப்பு சேர்த்து அசல் புலி வண்ணத்தைக் கொண்டு வந்தேன். காயவிட்டேன். கடுகளவு நீலம் சேர்த்து  சரியான அடர்த்தியில் வண்ணத்தை எடுத்து வரிகள் போட்டேன். என் பேரன் பிளந்த வாயை மூடவில்லை. புலிவாயின் உட்பகுதியை இருட்டாக்கினேன். அந்த கோரைப் பற்களை வெள்ளை நிறத்தில் வெளியே கொண்டு வந்தேன். நாக்கை ஆரஞ்சுச் சிவப்பாக்கினேன். தாளிலிருந்த புலி உறுமிக்கொண்டு வெளியே வருவதுபோல் இருந்தது. அந்தக் கருப்பு விழிகளுக்கு மத்தியில் ஒரு ஒளிப்புள்ளி இருப்பதுபோல் செய்தேன். கால்களுக்குக் கீழே தரை ஆங்காங்காங்கே சில காய்ந்த புற்கள் கற்கள் எல்லாம் ஒவ்வொன்றாக உருப்பெற்றன. என் தோள்களைக் கட்டிக் கொண்டு என் பேரன் குதித்தான். என் மகன் வந்தார்.

‘என்னத்தா, நீங்க வரஞ்சிங்களா?’

‘ஆம்’

‘வரையத்தெரியும்னு எனக்குத் தெரியும். ஆனால் பல ஆண்டுகளாக வரையவே இல்ல. அதில் உங்களுக்கு ஆர்வம் இல்லேன்னு நெனச்சேன். இத்தனை நாளா நீங்க ஏன் வரையல?’

‘ஆயிரம் கிலோ எடைய தோள்ல தூக்கிக்கிட்டு விரல்ல பிரஸ்ஸக் குடுத்தா அது எப்புடித் தம்பீ வரையும்?’  என் மகன் அழுததை நீண்ட நாட்களுக்குப் பின் பார்த்தேன்.

‘எங்களையெல்லாம் ஆளாக்கத்தானே அத்தா இப்புடி கஷ்தப்பட்டீங்க. போதும் அத்தா. இனிமே நீங்க ஓவியன். உங்க தோள்ல இருக்கிற சுமைய நா தூக்கிக்கிறேன். வாங்க ஒங்களுக்கு என்னென்ன வேணும். எல்லாம் வாங்கிக்கங்க. எனக்கு வேல கன்ஃபார்ம் ஆயிடுச்சுத்தா. ஆர்ட் ஃப்ரண்ட் கடையில எல்லாத்தயும் வாங்குங்க. நீங்கள் பல தடவ சொல்லியிருக்கீங்க. நா அதப் பெருசா எடுத்துக்கல. எனக்குப் புரிஞ்சிருச்சு. ஒரு ஓவியன் ஓவியனாத்தான் வாழ வேண்டுமத்தா.’

அன்று இரவு எல்லா வண்ணங்களையும் தூரிகைகளையும் வைத்துக்கொண்டு 30 ஆண்டுகளுக்குப் பிறகு வரையத் தொடங்குகிறேன். சேற்றில் சிக்கிக் கொண்ட ஒரு குட்டியானையை ஒரு தாய் யானை தும்பிக்கையால் வெளியே இழுப்பதுபோல் ஒரு படம் வரைந்தேன். அடுத்த படத்தில் அந்த வயதான தாய் யானை படுத்துக் கிடக்கிறது  குட்டியானை தழைகளை அள்ளிவந்து தன் தாய்க்குக் கொடுக்கிறது. எனக்கு யானை ரொம்பப் பிடிக்கும். யானையின் பல தோற்றங்களை கூகுல் செய்து நானே புதிதாக ஒரு தோற்றத்தை உருவாக்கினேன். இரண்டு படங்களையும் முடித்த போது காலை மணி 5.

என் மகன் வந்து பார்த்தார். என்னைக் கட்டிப்பிடித்து மீண்டும் அழுதார். அந்தப் படங்களை எடுத்து வைத்துக் கொண்டார்.  தன் அறைக்குச் சென்று முன்னாள் பிரதமர் லீகுவான்யூ படம் ஒன்றைக் கொண்டு வந்தார். ‘நாளை பிரதமர் லீ சியான் லூங் கலந்துகொள்ளும் ஒரு கூட்டத்துக்கு எங்கள் ஆபீஸிலிருந்து எல்லாரும் போகிறோம். நீங்கள் இந்தப் படத்தை வரையவேண்டும். நீங்கள் வரையப்போகும் ஓவியத்தை பிரதமரிடம். ‘உங்கள் தந்தையைப் போற்றும் வகையில் என் தந்தை வரைந்தது’ என்று சொல்லிக் கொடுக்க வேண்டும்.

இதோ நான் வரையத் தொடங்குகிறேன். ஆசிரியர் லட்சுமிநாராயணன் சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. ஒரு மாமனிதரை வரைகிறோம். விகிதாச்சாரங்கள் மாறிவிடக்கூடாது. கண்ணுக்குத் தெரியாத கட்டங்களை பென்சிலால் வரைந்தேன். என் நெஞ்சுக்குள்ளிருந்து ஒரு குரல் பேசியது. ‘இந்தப் படம் எப்படி வருகிறது என்று பார். அதுதான் உன் எதிர்காலம்.’ அந்தக் குரல் மீண்டும் அதையே சொல்லிக் கொண்டிருந்தது. என் விரல்நுனிகளிலிருந்து அந்த மாபெரும் தலைவன் கொஞ்சம் கொஞ்சமாக உயிர்பெற்றுக் கொண்டிருந்தான் மீண்டும். அந்தப் புருவத்தின் இரண்டு நரை முடிகள் தாளை விட்டு வெளியே வந்து எட்டிப் பார்த்தன. படம் த்த்ரூபமாக வந்துவிட்டது. நெஞ்சுக்குழியிலிருந்து வந்த குரல் ஓங்காரமிட்டு இறுதியாகச் சொன்னது.  ‘எப்படி வந்திருக்கிறது பார்த்தாயா? உன் எதிர்காலம் உனக்காக பல ஆச்சரியங்களை வைத்துக் கொண்டு காத்திருக்கிறது. இனி ஒவ்வொன்றாக நீ காண்பாய்.’

யூசுப் ராவுத்தர் ரஜித்

Series Navigationவாய்க் கவசம்காலவெளிப் பிரபஞ்சத்தை வெகு விரைவாக விரித்து வருவது கருஞ்சக்தியா ?
author

யூசுப் ராவுத்தர் ரஜித்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *