- ந. அரவிந்த்
ஒரு நாட்டின் சிற்றரசனுக்கு ஒரு விபரீத ஆசை உண்டானது. அவன், தன் நாடு மேலும் செழிப்பாக வேண்டுமென்ற பேராசையில், நாட்டிலுள்ள அறுபது வயதை கடந்த முதியோர்கள் அனைவரையும் காட்டிற்குள் அனுப்ப வேண்டுமென உத்தரவு போட்டான். காட்டிற்குள் அனுப்பப்படும் முதியோர்கள் மிருகங்களுக்கோ, வெயில் அல்லது குளிரினாலோ சில நாட்களில் இறந்து போவார்கள், அதனால் நிறைய உணவு மிச்சமாகும் என்பது அவன் கணக்கு. அப்படி யாராவது அரசனின் கட்டளையை மீறினால் சிறையில் தள்ளப்படுவார்களென்பதும் அரசனின் ஆணை. நினைத்ததை நிறைவேற்றினான் அரசன்.
ஒரு சில மாதங்கள் சென்ற பின்னர், அரசனுக்கு அந்த நாட்டில் சிறந்த அறிவாளி யார் என கண்டுபிடிப்பதற்காக ஒரு போட்டியை அறிவித்தான். அதற்காக, ஐம்பதடி உயரம் உள்ள ஒரு பனை மரத்தின் நடுவிலுள்ள பகுதியில் ஒரு அடியை மட்டும் வெட்டி எடுத்து அரண்மனையில் ஒரு மேசையின் மீது வைத்திருந்தான். அந்த மரத்துண்டை பார்ப்பதற்கு எது அடி, எது நுனி என்று கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதன்று. போட்டியும் அதுதான். மரத்துண்டில், எது அடி, எது நுனி என்று கண்டுபிடிக்க வேண்டும். விடை சரியானால் அது எப்படி என்று காரணத்தையும் கூற வேண்டும்.
நாட்டின் மக்கள் அனைவரும் வந்து பார்த்தனர். அவர்களில் நிறைய பேர்களால் விடை கூற முடியவில்லை. அதே நாட்டிலுள்ள ஒருவன் மிகுந்த நம்பிக்கையுடன் வந்தான். அவன், அந்த மரத்துண்டை எடுத்து அருகிலுள்ள தண்ணீர் தொட்டியில் போட்டான். மரத் துண்டின் அடிப்பகுதியானது, நுனிப்பகுதியை விட சற்று அமிழ்ந்து சென்றது. விடையை கண்டுபிடித்து அரசனிடம் கூறினான். அரசன் மிக மகிழ்ச்சியடைந்து அந்த அறிவாளிக்கு பரிசு பொருட்களை வழங்கினான். பரிசை கொடுத்த பின்னர், அந்த அரசன் அறிவாளியிடம் உனக்கு எப்படி இந்த யோசனை வந்ததென கேட்டான். இதை எதிர்பார்க்காத அந்த மனிதன் பயந்து அரசனின் காலில் விழுந்தான். மன்னா! என்னை மன்னியுங்கள். நான் என் அப்பா மீது அளவு கடந்த அன்பு வைத்துள்ளேன், நீங்கள் வயதானவர்களை காட்டில் விட உத்தரவிட்டபோது, என் தகப்பனை மட்டும் நான் குதிருக்குள் ஒழித்து வைத்து பாதுகாத்து வந்தேன். தங்களின் புதிருக்கு விடை சொன்னது நான் அல்ல, குதிருக்குள் இருக்கும் என்னுடைய அப்பாதான் என்றான்.
அப்பொழுதுதான் அரசனுக்கு ஞானோதயம் வந்தது. அனுபவ அறிவு என்றால் என்னவென்று புரிந்தது. தான் செய்த தவறுக்காக வெட்கி தலை குனிந்தான். உடனே தான் போட்ட கட்டளையை திரும்ப பெற்றான். வீரர்களை காட்டுக்குள் அனுப்பி உயிரோடிருக்கும் அனைத்து முதியோர்களையும் நாட்டிற்குள் அழைத்து வந்து அவர்களிடம் மன்னிப்பு கேட்டு, அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைத்தான். இந்த கதைக்கு சொந்தக்காரர் யாரென்று தெரியவில்லை. இருந்தாலும் அவருக்கே இந்த கதையும் உரையும் சமர்ப்பணம்.
சமீபத்தில், கேட்ட ஒரு செய்தி நெஞ்சை உலுக்கியது. இத்தாலி நாட்டில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட முதியோர்களை, வைத்தியம் பார்க்காமலே விட்டு விடுகின்றனராம். அவர்களுக்கு இருக்கும் மருத்துவ வசதி அவ்வளவுதானாம். இதனால் அங்கே முதியோர்கள் கொத்து கொத்தாக மரணிக்கின்றனர். என்ன கொடுமை இது. ஆறு கோடி மக்கள் தொகை உள்ள வளர்ந்த நாட்டிற்கே இந்த நிலைமையென்றால் வளரும் நாடான நமக்கு?
மனிதன் ஐம்பது வயதை தாண்டிய பின்னர்தான் பக்குவமடைகிறான். அந்த பக்குவத்தால் அனுபவசாலி ஆகின்றான். முதியோர்களின் அனுபவமே இளைஞர்களுக்கு பாடம். பள்ளிப் பாடத்தை விட காலம்தான் வாழ்க்கையெனும் பாடத்தை மனிதனுக்கு கற்றுக்கொடுக்கிறது. அனுபவமில்லாமல் வெற்றியை இழந்தவர்கள் பலர். இலங்கை கிரிக்கெட் அணியிலிருந்து 2011 உலக கோப்பைக்கு பின்னர் அனுபவ வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல்லா ஜெயவர்த்தனே இருவரும் ஒரே நேரத்தில் ஓய்வு பெற்றனர். அதற்கு பின்னர் அந்த அணி இன்று வரை தடுமாறுகிறது.
நாளை நம் இந்திய நாட்டிலும் கொரோன வைரஸ் வேகமாக பரவினால் என்ன நடக்குமென சிந்தித்து பார்ப்போம். மருத்துவ வசதிகள் இல்லையென முதியோர்களை கை கழுவுவோமா? அப்படி ஒரு சூழ்நிலை வந்தால் அதை தாங்கும் சக்தி நமக்கு உண்டா? முதியோர்கள் நம்முடைய மதிப்பிட முடியாத சொத்து.
நம் இந்திய அரசும், தமிழக அரசும் நம்மை காக்க போராடுகிறது. அதற்கு ஒத்துழைப்பு கொடுப்போம். தொற்று நோயான கொள்ளை நோயை உலகத்தை விட்டே விரட்டுவோம். ஊரடங்கு உத்தரவை மதித்து வீட்டிற்குள்ளே அடங்குவோம். வெளியே சென்று ஆரவாரம் செய்தால் அது ஊரடங்கு கிடையாது. இது கோடை விடுமுறை அல்ல. கிருமியை அழிப்பதற்காக கொடுக்கப்பட்ட விடுமுறை. ஊரடங்கு என்பதை சிறையென எண்ணாதிருங்கள், வளர்பிறையென உணருங்கள். ஊரடங்கு முடியும்போது தமிழ் வருடப் பிறப்பு தொடங்குகிறது. அதை மகிழ்ச்சியோடு கொண்டாட வேண்டுமெனில், அதுவரை வீட்டிற்குள்ளேயே நாட்களை செலவிடுவோம்.
மூன்று வாரங்களுக்கு, கோவில் சென்று இறைவனை வழிபடுவதை தவிர்ப்போம். எங்கும் நிறைந்தவன் இறைவன். கோவிலில் இருக்கிறானென நம்பப்படும் இறைவனை நமக்குள் கொண்டு வருவோம். “உள்ளம் பெருங்கோவில், ஊன் உடம்பு ஆலயம்” என்பது திருமந்திரம் மட்டுமல்ல, தமிழர்களின் தாரக மந்திரம். இறைவன் தந்த ஆறாம் அறிவை, இந்த தருணத்தில் நாம் சரியாக பயன்படுத்த தவறினால், ஏழாம் அறிவு படத்தில் வருவதைப்போல, வைரஸ் பரவுவதை யாராலும் தடுக்க முடியாது.