ஜீவ அம்சம்

This entry is part 20 of 22 in the series 19 ஏப்ரல் 2020

ஸிந்துஜா 

குட்டியக்  கொண்டு போய் ஸ்கூல்ல விட்டுட்டு வரியா?” என்று அண்ணாமலை வீட்டுக்குள் வந்த குஞ்சம்மாவைப் பார்த்துக் கேட்டார். குஞ்சம்மா  சுகுணாவின் வீட்டில் சமையல் வேலை பார்க்கிறாள். அண்ணாமலை சுகுணாவின் தந்தை. பெங்களூரில் இருக்கும் மகளைப் பார்த்து விட்டுப் போகலாம் என்று மதுரையில் இருந்து அன்று காலையில்தான் வந்திருந்தார்.

“ஆமாப்பா. எட்டரைக்கு அங்க இருக்கணும்ல. நீங்க டிபன் சாப்பிட வாரீங்களா?” என்று குஞ்சம்மா கேட்டாள். முன்தினம் சுகுணா அவளிடம் அவர் ஊரிலிருந்து வரப்  போகிறார் என்று சொன்னவுடன் “பொங்கல் சட்டினி கொத்சு செஞ்சிடலாம்மா. அப்பாவுக்கு ரொம்பப் பிடிக்கும்” என்று சிரித்தாள்.

குஞ்சம்மா அந்த வீட்டில் ஆறு மாதமாக வேலை பார்க்கிறாள்.அவளும் அவளது குழந்தை கண்மணியும் அந்த வீட்டின் பின் கட்டில் இருக்கும் ஓர் அறையில் தங்கி விட ஆரம்பத்திலேயே சுகுணா ஏற்பாடு செய்து கொடுத்து விட்டாள். பெரிய வீடு. இரண்டு தடவை டந்தாலே கால் வலிக்கும் நீள அகலங்களுடன் அமைச்சலாக இருந்தது. சுகுணாவின் கணவர் பாசு சொந்தத் தொழில் நடத்தி வந்தார். வீட்டைப் போல கணவன் மனைவியின் மனதும் விசாலமானதாயிருந்தது.

அண்ணாமலை மாப்பிள்ளையையும் கூப்பிட்டுக் கொண்டு சாப்பிட வந்தார்.

பொங்கலை வாயில் போட்டதுமே “இதுக்குத்தான் நான் பெங்களூருக்கே வரமாட்டேன்னு சொல்லுறது !” என்றார் அண்ணாமலை.

பாசு “என்ன மாமா? என்ன ஆச்சு?” என்று கேட்டார்.

“பின்னே என்ன? வாயில போட்டா அமிருதமா இருக்கு. கொத்சு  என்னா வாசனை? சட்டினி அப்பிடியே கரையிது . ஊருக்குப் போயி பொங்கல் பண்ணினா அன்னிக்கு சுகுணா அம்மாவுக்கும் எனக்கும் தகராறுதான்” என்று சிரித்தார்.

குஞ்சம்மாவுக்கு வெட்கத்தில் முகம் சிவந்தது. பாசு வாய் விட்டுச் சிரித்தார்.

“உங்களை யாரு ஊருக்குப் போகச் சொல்லுறாங்க? அப்பிடியே அம்மாவையும் கூட்டிட்டு இங்கயே வந்துடுங்கன்னு சொல்லிச் சொல்லி எனக்குத்தான் அலுத்துப் போச்சு” என்று சுகுணாவும் சிரித்தபடி அங்கே  வந்தாள். 

“ஆளப் பாத்தியே. அவ மதுரைய விட்டுப் போகக் கூடாதுன்னு மீனாச்சி அம்மன் உத்திரவு போட்டிருக்கான்னுல்ல சொல்லிக்கிட்டு உக்காந்

திருக்கா” என்றார் அவர்.

சுகுணாவும் பாசுவும் சிரித்தார்கள்.

 “அடுத்த தடவை குஞ்சம்மா சமையலை நாலு நாள் சாப்பிட்டுப் பாருன்னு கூட்டியார்றேன். ஆனா அதுக்கப்புறம் அவ திரும்பி ஊருக்கு போவாளோங்கிறதுதான் சந்தேகம்” என்று அண்ணாமலை சிரித்தார். 

குஞ்சம்மாவுக்கு மகிழ்ச்சியால் உள்ளம் துள்ளியது. எவ்வளவு நல்ல மனிதர்கள். அவளை அவர்களில் யாரும் ஒரு வேலை செய்கிற ஆளாய் என்றும்  நினைத்ததில்லை. பேச்சு செயல் எல்லாவற்றிலும் ஒரு மரியாதை துலங்குகிற மாதிரிதான் நடந்து கொள்கிறார்கள். மரண அடி  விழுந்து எழுந்திருப்போமா என்று கிடந்த தருணத்தில் வந்து காப்பாற்றிய தெய்வங்கள். அப்போது கண்மணிக்கு மூன்று வயது. 

“குழந்தை எப்படி இருக்கு?” என்று அண்ணாமலை கேட்டார்.

குஞ்சம்மா பதில் அளிக்குமுன் சுகுணா “மத்தியானம் ப்ளேஸ்கூல்லேர்ந்து  அந்த ராட்சசி வந்ததும் இருக்கு உங்களுக்கு” என்றாள். “நேத்திக்கு சண்டேதான,  தாத்தா ஏன் நேத்திக்கே வரலேன்னு என்னையும் குஞ்சம்மாவையும் போட்டு தாளிச்சிருச்சு. இன்னிக்கி ஸ்கூலுக்கு போற கலாட்டால உங்களை அவ கவனிக்கல. மத்தியானம் இருக்கு” என்று சிரித்தாள். 

“போன தடவையே என்கிட்ட ரைம்ஸ்லாம் சொல்லிக் காட்டி  உனக்கு இதெல்லாம் உங்க ஸ்கூல்ல சொல்லிக் குடுத்தாங்களான்னு ஒரு பிடி பிடிச்சிருச்சு கழுதக் குட்டி” என்று செல்லமாகத் திட்டினார் அண்ணாமலை.

“இப்ப எழுதச்  சொல்லிக் கொடுக்கறாங்க. அந்தப் பெருமை தாங்கல” என்றாள் குஞ்சம்மா. “தெனமும்  ராத்திரி அம்மாவப் போட்டு படுத்தி எடுத்திருது.”   

 “அவன் வந்து குழந்தைய பாத்தானா?” என்று கேட்டார் அண்ணாமலை.

‘சட்’டென்று ஒரு மௌனம் அங்கே விழுந்தது. 

சுகுணா “குஞ்சு, அடுப்புல என்ன போட்டிருக்க? ஏதோ வாசம் வர்ற மாதிரி இருக்கே?” என்றாள். 

குஞ்சம்மா  சமையலறையை நோக்கி விரைந்தாள்.

அப்போது அண்ணாமலையின் கைபேசி ஒலித்தது. எடுத்து “ஹலோ !” என்றார். தொடர்ந்து “நா ஊர்ல இல்லியே? என்னிக்கி ஹியரிங்? நா வர நாலஞ்சு நாள் ஆகுமே? சரி, நா ராமநாதன் கிட்ட ஒரு வாய்தா வாங்கச் சொல்லிடறேன்” என்று போனைப் பாக்கெட்டில் போட்டுக் கொண்டார்.

சுகுணா அவரைப் பார்த்து “இப்ப எதுக்காக குஞ்சு கிட்ட அப்படிக் 

கேட்டீங்க?” என்று மெல்லியகுரலில் கேட்டாள்.

“ஏன் நா கேட்டதுல என்ன தப்பு?”

“தப்பு ரைட்டு பிரச்சினை இல்லப்பா. அவ மனசப் போட்டு அலக்கழிச்சிகிட்டு இருக்க வேணாமேன்னுதான்” என்றாள் சுகுணா.

“அதுக்காக அப்படியே விட்டுற முடியுமா?”

“சரி. போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட்டு எடுங்க. ராத்திரி டிரெய்ன்லயும் தூங்க முடியலேன்னீங்க. மத்ததெல்லாம் அப்புறமா பாத்துக்கலாம்” என்றாள் சுகுணா.

அவர்கள் எழுந்து சென்றார்கள்.

சமையல் அறையில் இருந்த குஞ்சம்மா எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டுதான் இருந்தாள்…

சுப்பிரமணி இந்த ஆறு மாசத்தில் குழந்தையைத் தேடி ஒரு முறை கூட வரவில்லை.இப்போது குழந்தைக்கு அவன் முகம் கூட ஞாபகம் இருக்குமோ என்னவோ? சுகுணாவின் பையன் -காலேஜில் படிக்கிறவன் – பாசுவை டாடி என்று கூப்பிடுவதால் கண்மணியும் அவரை டாடி என்று கூப்பிட்டுப் பழகி விட்டது. சுகுணாவை மம்மி என்கிறது ! இது நல்லதாகப் போய்விட்டது. இல்லாவிட்டால் ஸ்கூலில் மற்ற குழந்தைகள் டாடி என்று பேசிக் கொண்டும் கூப்பிட்டுக் கொண்டும் அலைவதைப்  பார்த்து ‘என்னோட டாடி எங்கேம்மா?’ என்று அவளைக் கேட்டால்…? 

உடம்பால் அவனை விட்டு விலகி வந்து ஆறு மாதம் ஆகிறதே ஒழிய மனதால் விலகிப் பல வருஷங்கள் ஆகிவிட்டன. அவள் படிக்காத முட்டாள் ஜென்மம் என்றும் தன் தலையில் கட்டி விட்டார்கள் என்றும் அடிக்கடி அவளைக் குதறி எடுப்பான். வேலைக்குப் போய் சம்பாதித்து வசதியைப் பெருக்குவதற்குத் துணையாக இல்லாத உதவாக்கரை என்றும் மூஞ்சியிலேயே முழிக்காதே என்றும் கடுமையாக அவளை நடத்துவான். குழந்தை பிறந்ததையும் அவள் இயற்கையின் அன்பளிப்பு என்றுதான் எடுத்துக் கொண்டாள். சுப்பிரமணி போன்ற பணப் பேய்க்கு மனைவி குழந்தை என்கின்ற உறவுகளுக்கு எல்லாம் ஒரு அர்த்தமும் இல்லை என்று பலமுறை அவன் நிரூபித்து விட்டான். 

குழந்தைக்குப்  பிறந்த நாள் என்று வந்த போது அக்கம் பக்கம் இருக்கும் குழந்தைகளுக்கு சாக்கலேட் கொடுத்தால் போதும் என்று ஒரு டப்பாவை வாங்கிக் கொண்டு வந்தான். அந்தக் குழந்தைகள் ஒவ்வொன்றின் பெற்றோரும் அதனதன் பிறந்த நாளன்று கேக் வெட்டி வீட்டை பலூன்களால் அலங்கரித்து, வருகின்ற ஒவ்வொரு குழந்தையின் கையிலும் ஒரு பரிசுப்  பொட்டலம் கொடுத்து விழா மாதிரி நடத்துவதைப் பார்த்திருந்ததால் கண்மணி அடம் பிடிக்க ஆரம்பித்து விட்டது.

“எங்க, மத்தவங்க குழந்தைக்கு பண்ணுற மாதிரிதானே நாமளும் பண்ணனும்? முந்தா நேத்தி கூட எதிர் வீட்டுல சந்தியா குழந்தைக்கு பர்த்டேன்னு பார்ட்டியெல்லாம் வச்சு…” 

அவள் பேச்சை முடிக்குமுன் சுப்பிரமணி அவள் மீது பாய்ந்தான். “ஆமா, சந்தியா பேங்குல ஆபிஸரா இருக்கா. ஆயிரக்கணக்குல  சம்பாதிக்கிறா. நீ அட்டெண்டர் வேலைக்கு கூட லாயக்கில்லயே. இவ்வளவு செஞ்சா போதும். பெரிசா பேச வந்திட்டா” என்றான்.

அவன் குழந்தைக்குச் செய்ய மறுப்பதைக் கண்டு அவளுக்கு ஆத்திரம் பீறிட்டுக் கொண்டு வந்தது. “அப்பிடி லாயக்கில்லேன்னா யாராச்சும் கெட்டிக்காரியா இருக்கிறவளைப்  பிடிச்சு கலியாணம் செஞ்சிருக்க வேண்டியதுதானே?” என்றாள் வெடுக்கென்று.

“ஏய், வாய மூடிக்கிட்டு உக்காரு. இல்லாட்டா மொகமெல்லாம் எகிறிப்பிடும்” என்று கோபத்துடன் அவளருகே கையை ஓங்கிக் கொண்டு வந்தான்.

அதைப் பார்த்துக் கண்மணி அழ ஆரம்பித்து விட்டாள். 

அவன் நடந்து கொண்ட விதம் குஞ்சம்மாவின் மனதில் ஆழ்ந்த பெருவலியை ஏற்படுத்திவிட்டது.

அன்று மாலை மூன்று மணியிருக்கும் போது சுப்பிரமணி தன்னுடைய  மேலதிகாரி என்று ஒரு பெண்மணியை  அழைத்து வந்தான். குமுதா பார்ப்பதற்கு அழகாக இருந்தாள். அவளது நடை உடைகளில் செல்வம் தனித்து நின்றது. ஆனால் அவள் இனிமையாகப் பழகினாள். குழந்தைக்கு பார்பி பொம்மையும் படங்கள் அச்சிட்ட சில புத்தகங்களும் பெரிய சாக்கலேட் டப்பாவும்  வாங்கிக் கொண்டு வந்திருந்தாள். 

“இது எல்லாம் யாருக்குத் தெரியுமா? கண்மணிக் குட்டிக்கு” என்று குழந்தையைத் தூக்கி வைத்துக் கொண்டு கொஞ்சினாள். “சரி, இப்ப வெளீல போலாமா?’ என்று குழந்தையிடம் கேட்டாள்.

குஞ்சம்மா ஒன்றும் புரியாமல் அவளை பார்த்தாள்

“நீங்களும் டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வாங்க. கடைக்குப் போயி குழந்தைக்கு புது டிரஸ் எடுப்போம். சாயங்காலம் பார்ட்டி இருக்கில்ல?” என்றாள் 

கண்மணி சிரித்துக் கொண்டே “”பாத்தி, பாத்தி” என்றது.

“ஆமா. பார்ட்டிதான். சீக்கிரம் கிளம்புங்க” என்றாள் குமுதா. 

குஞ்சம்மா திகைப்பும் குழப்பமுமாக சுப்பிரமணியைப் பார்த்தாள். அவன் ஆழ்ந்து ஏதோ ஒரு மாத நாவலைப்  படித்துக் கொண்டிருந்தான்.

 அன்று மற்ற வீட்டுக் குழந்தைகளின் வீட்டில் நடந்த பார்ட்டி மாதிரியே கண்மணியின் பார்ட்டியும் நடந்தது. குஞ்சம்மாவுக்கு குமுதா மீது நன்றியும் அன்பும் ஏற்பட்டது. வாங்கிய எல்லா இடத்திலும் குமுதாதான் பணம் கொடுத்தாள்  

சுப்பிரமணி அவளிடம் “நீ இங்கியே சாப்பிட்டு விட்டுப் போகலாம்” என்றான்.

அவன் தனது மேலதிகாரியை ஒருமையில் கூப்பிடுவதைக் காண குஞ்சம்மாவுக்கு ஆச்சரியமாக இருந்தது.

“நிச்சயமா. நீங்கதான் சொல்லியிருக்கீங்களே. ரொம்ப நல்லா சமைப்பாங்கன்னு” என்று சிரித்தாள். ஓ, ஆபிசில் அவளைப்  பற்றி இருவரும் பேசியிருக்கிறார்களா? 

“இன்னிக்கி சாப்பிட்டுப் பாத்துட்டு நீயே சொல்லு” என்றான் சுப்பிரமணி. அவன் அவளுடன் நெருங்கி உட்கார்ந்திருந்தது குஞ்சம்மாவுக்குப் பிடிக்கவில்லை. 

அவள் சமைத்திருந்ததை சாப்பிட்டு விட்டு குமுதா வெகுவாகப் பாராட்டினாள். “தினமும் இங்கியே வந்து சாப்பிடணும் போல பிரமாதமா பண்ணியிருக்கீங்க” என்றாள்.

“நீங்க புகழற அளவுக்கு ஒண்ணும் நான் செஞ்சிரல” என்றாள் குஞ்சம்மா.

“நான் முகஸ்துதியா சொல்றேன்னா நீங்க நினைக்கிறீங்க?” என்று கேட்டாள் குமுதா சற்று மனத்தாங்கலுடன்.

“சே சே. அப்பிடியெல்லாம் சொல்லல. இன்னிக்கு குழந்தையோட பார்ட்டிய இழுத்து போட்டுக்கிட்டு செஞ்சீங்க. நா ஒண்ணும் உங்களை மூணாம் மனுஷியா நினைக்கல” என்றாள் குஞ்சம்மா நன்றி மேலிட்டு. 

“உங்க கையில அப்பிடி ஒரு கைபாகம் இருக்கு. மறுபடியும் சொல்றேன். இந்த சமையலை சாப்பிடக் கொடுத்து வச்சிருக்கணும். சுப்பிரமணி ரொம்ப அதிர்ஷ்டம் செஞ்ச ஆளு.” 

“அதுக்கென்ன? தினமும் இங்கியே சாப்பிட்டா போச்சு” என்றான் சுப்பிரமணி.

குஞ்சம்மாவுக்குத் துணுக்கென்றது. என்ன உளறுகிறான்? 

மறுநாள் அவன் அவளிடம் குமுதாவுக்கும் சேர்த்து மதிய உணவு கட்டித் தரும்படி கூறினான். குமுதாவின்  கணவன் திடீரென்று இறந்து விட்டதாலும் குழந்தை இல்லாததாலும், பாவம் அவள் தனியே வாழ்கிறாள் என்று சுப்பிரமணி பச்சாதாபப்பட்டான். அடுத்த சில நாட்களில் குமுதா அடிக்கடி அவர்கள் வீட்டுக்கு வர ஆரம்பித்தாள். சுப்பிரமணி அவளைக் கூட்டிக் கொண்டு அலைகிறான் என்று பக்கத்தில் எழுந்த பேச்சு அவள் காதிலும் விழுந்தது. சில நாட்கள் அவன் இரவு வீட்டுக்கு வரவில்லை.

ஒரு நாள் திடீரென்று குமுதா அவர்கள் தன்னுடைய வீட்டில் வந்து தங்கி வாழலாம் என்றாள்  அவள் போன பின் கணவன் மனைவிக்கு இடையில் சச்சரவு எழுந்தது. சுப்பிரமணி குமுதாவுடன் வாழப் போவதாகக் கூறினான். குமுதாவின் மேல் தான் கொண்ட முதல் அபிப்பிராயம் எவ்வளவு தவறாகப் போய் விட்டது என்று குஞ்சம்மா வருந்தினாள். தான் ஒரு ஏமாளி, முட்டாள்தான் என்று மருகினாள். அதற்குப் பின் சில தினங்களில் குஞ்சம்மா குழந்தையை எடுத்துக் கொண்டு அந்த வீட்டிலிருந்து வெளியே வந்து விட்டாள்…      

மாலை மணி ஐந்திருக்கும். கண்மணி பக்கத்து வீட்டுக் குழந்தை

களுடன் விளையாடப் போய்விட்டது. மாலை டிபன் காபிக் கடை முடிந்த போது அண்ணாமலை குஞ்சம்மாவைக் கூப்பிட்டார். அவருடன் சுகுணாவும் இருந்தாள்.

“உக்காரு. உன் கூட கொஞ்சம் பேசணும்” என்றார் அண்ணாமலை.

அவள் தரையில் உட்கார்ந்து கொண்டாள். சுப்பிரமணியைப் பற்றி பேசத்தான் இந்தக் கூட்டம் என்று அவள் நினைத்தாள்.

“சுகுணா சொல்லிச்சு. நீ இங்க வந்ததுக்கு அப்புறமா ஒரு தடவை கூட உன்னையோ குழந்தையையோ பாக்க உன் புருஷன் வந்ததில்லேன்னு. ஒரு வழியா நீ  ஒழிஞ்சு போனது நல்லதாயிடிச்சின்னு நினைச்சிட்டு இருக்கானோ என்னவோ! ஆனா நாம அப்பிடி விடக் கூடாதில்ல? அதான் ரெண்டு வார்த்தை உன்கிட்ட சொல்லிறலாம்னு கூப்பிட்டேன். அவன் கை நெறைய சம்பாதிச்சிகிட்டு நல்ல வேலல இருக்கான் . போறாததுக்கு இன்னொருத்தியை வேற சேத்து வச்சுக்கிட்டு இருக்கானாம். அவளும் இவனுக்கு மேல சம்பாதிக்கறவளா இருக்கா போல. ரெண்டு பேரும் அப்பிடி சௌகரியமா அப்பிடி சந்தோஷமா இருக்காங்கன்னு சொல்றாங்க. இருந்திட்டு போகட்டும். அதைத் தடுக்க நாம  யாரு? கடவுள் இல்லே யாரு யாரு எப்பிடி இருக்கணும்னு எழுதி வைக்கிறாரு. என்ன நாஞ் சொல்றது ?” என்று கேட்டார்.

“அப்பா நீங்க சொன்னா சரியாத்தானே இருக்கும்?” என்றாள் குஞ்சம்மா, எந்த வழியில் அவர் போகிறார் என்று புரிந்து கொள்ள முடியாத குழப்பத்துடன்.

“நா என்னோட வக்கீல் புத்தியெல்லாம் மூட்டை கட்டி வச்சிட்டுதான் உன்கிட்ட பேசறேன். வக்கீலா நடந்துக்கணும்னா அவன நடுத் தெருவுக்கு கொண்டாந்துர ரொம்ப நாழி ஆகாது. அவனைக் கூப்பிட்டு ‘இத பார்றா, சீத கணக்கா ஒருத்திய கடவுள் கொணாந்து குடுத்தான். ஒனக்கு அதை வச்சு பாதுகாக்க மதிப்புத் தெரியாதவனா ஆயிட்டே. அதை பித்தளையா நசுக்கி, ஒடச்சு ஒண்ணுக்கும் ஆகாதுன்னு உலகத்தை நம்ப வச்சுடணும்னு நெனச்சு அது எனக்கு வேணாம்னு தூக்கிப் போட்டுட்ட. ஆனா இந்த தங்கத்த பித்தளைன்னு சொல்லி நீ கடாசி தெருவுல எறிஞ்சிட்டு ஓடிப் போறதுக்கு நாங்க ஒத்துக்கறதா இல்ல. சின்ன வயசு. கையில ஒரு பச்சைக் குழந்தை வேற. ராணி மாதிரி புருஷன் வீட்டுல இருக்க வேண்டியவ. உன் வீட்டிலேந்து அவளைத் துரத்தி அடிச்சாலும் அவளுக்கு ராணியோட வாழ்க்கையை நீ குடுத்துதான் ஆகணும்’னு சொல்லப் போறேன்” என்றார். 

குஞ்சம்மா ஒன்றும் புரியாமல் சுகுணாவைப் பார்த்தாள்.

“ஒனக்கு அவன் பணம் கொடுக்கணும்னு அப்பா சொல்றாங்க குஞ்சு” என்றாள் சுகுணா குறுநகையுடன்.

“ஜீவனாம்சமாவா?” என்றாள் குஞ்சம்மா. 

அண்ணாமலை அவளை வியப்புடன் பார்த்தார்.

“எதுக்கு இப்ப அதெல்லாம்?” என்றாள் குஞ்சம்மா சிறு வேதனையும் நடுக்கமும் தெரியும் குரலில்.

“இல்ல குஞ்சு. அப்பா என்ன சொல்றாங்கன்னா, ஒனக்கு அவன் சட்டப் பிரகாரம் குடுக்க வேண்டியதக் கேப்போம். வளர்ற குழந்தை இருக்கு. அதுக்கும் சரி உனக்கும் சரி அவன் பாதுகாப்பு குடுப்பான்னுதானே ரெண்டு ஜீவனும் அவன் கிட்ட வந்தீங்க? இப்ப எதுவுமே இல்லேன்னு எப்பிடி அது ஆயிடும்கிறாரு. ஒன்னையும் குழந்தையையும் நாங்க ஆயுசு பூரா வச்சு காப்பாத்துவோம். அதப்பத்தி ஒனக்கு எந்த சந்தேகமும் வேண்டாம். ஆனா அவன் விட்டேத்தியா கண் முன்னால நடந்துக்கறத

நாம எதுக்கு சகிச்சுக்கணும்? உன்னோட பாத்யதையத் தான கேக்கப் போறோம்?” என்றாள் சுகுணா பரிவுடன்.

“அந்த ஆளுக்கு அவரோட உயிரே பணந்தான்னு உங்ககிட்டே சொல்லியிருக்கேன்லமா?” என்றாள் குஞ்சம்மா. தொடர்ந்து “இன்னி வரைக்கும் அந்தாள் எட்டிப் பார்க்காம இருக்கிறது எனக்கு சந்தோஷ

மாத்தான் இருக்கு. அப்பா” என்று சொன்னாள் .

“என்னது?” 

“எனக்கு பணம் வேணாம். குழந்தைதான் வேணும்” என்றாள் குஞ்சம்மா.

Series Navigationநாடு கேட்கிறதுமொழிவது சுகம் ஏப்ரம் 19…2020
author

ஸிந்துஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *