தமிழர் புத்தாண்டு சித்திரை முதலா ? தைத் திங்கள் முதலா ?

This entry is part 16 of 22 in the series 19 ஏப்ரல் 2020

[படம் – தமிழ் இந்து. காம் – நன்றி ]சி. ஜெயபாரதன், கனடா+++++++++++++

தமிழர் புத்தாண்டுசித்திரை முதலா ?தைத் திங்கள் முதலா ?ஓயாத சொல்லடிப் போர் !இதற்கோர் தீர்வு ?ஒரு கல்லடியில் வீழ்ந்தனஇருமாங் கனிகள் ! தைத் திங்கள் தமிழாண்டுதப்புத் தாளம் ஆனது !எல்லாரும்ஏற்பதில்லை தமிழ் உலகில்.சித்திரை முதல் நாளை திருவள்ளுவர் பிறப்பாண்டாய் துவக்கிக் கொள்வோம்.சித்திரை மாதத் தமிழாண்டுபுத்துயிர் பெறும் !ஆண்டு தோறும் நேரும்குருச்சேத்திர யுத்தம் ஓய்ந்ததா ? ++++++++++
தமிழரின் தமிழாண்டு பிறப்பு சித்திரை முதலா, அல்லது  தைத் திங்கள் முதலா என்னும் ஆயிரங்காலக் குருச்சேத்திரப் போர்,  திராவிட அரசியல் ஆளும் கட்சிகளுக்குள் ஆண்டு தோறும் வந்து போகும்  தலைவலிக் காய்ச்சலாய் ஆகிவிட்டது.  தி.மு.க தைத் திங்கள்தான் தமிழாண்டு துவக்கம் என்று முரசொலி முழக்குகிறது.  இல்லை சித்திரை முதல் தேதிதான் தமிழாண்டு துவக்கம் என்று அ.தி.மு.க அலையோசை அடிக்கிறது.  அந்த இரண்டு கட்சிகளில் ஒன்று ஆட்சி மேடையில் அமர்ந்ததும் சித்திரை மாதத் தமிழாண்டு மாற்றப்படும் !  அல்லது  தைத் திங்கள் தமிழாண்டுக் கொடி ஏற்றப்படும் !  இவற்றுடன் திருவள்ளுவர் நாட்காட்டியும் சிலர் பயன்படுத்தி வருகிறார்.  மூன்று வெவ்வேறு நாட்காடிகள் தமிழரைக் குழப்பி வருகின்றன.  மூன்று ஒன்றாக ஒரு வழி காண்போம்.இந்த தீராப் பிரச்சனையை நீக்க ஏதாவது வழி இருக்கிறதா ? இரண்டு முறைகள் உள்ளன.  பலர் ஏற்றுக் கொள்ளும் வழி .
1.  திருவள்ளுவர் நாட்காட்டி ஆண்டை சித்திரை மாதம் முதல் தேதியில் துவக்கலாம்.  2. அறுபதாண்டு சுழற்சி நாட்காட்டிக்கு தமிழ்ப் பெயர்கள் வைக்கலாம்.  தமிழாண்டு சித்திரை முதல் தேதி என்பது தொடரும்.3.  அறுவடை நாள் பொங்கல் விழாவாய் தை மாதம்  நிகழும்.சித்திரை முதல் நாள் துவங்கும் 60 ஆண்டு மீள்சுழற்சித் தமிழாண்டுக்குப் பெயர்கள் இடுவதற்குதமிழர் வரலாற்று நினைவாக முக்கிய நிகழ்ச்சி / மேதைகள் பெயர்களைத் தேர்ந்தெடுத்துள்ளேன்.  தற்காலத் தமிழர், பிற்காலத் தமிழர் 60 ஆண்டு மீள்சுழற்சிக் காலத்தைக் கடக்கும் போது தமிழரது / தமிழ்நாட்டின் வரலாற்று நிகழ்ச்சிகள் அவருக்கு ஒருமுறை நினைவூட்டப் படுகின்றன. இப்பெயர்கள் அட்டவணை ஒர் ஆலோசனைதான்.  இவற்றில்  புதிதாய்ச் சேர்க்கலாம் , நீக்கலாம், இவற்றை  மாற்றலாம்; விருத்தி செய்யலாம். சீர்ப்படுத்தலாம், செப்பணிடலாம், நிராகரிக்கலாம். தேவையில்லை என்று குப்பையில் வீசி விடலாம். தமிழக நாட்காட்டிகள்,  60 ஆண்டு மீள்சுழற்சி நிரலில் [தமிழ்ப் பஞ்சாங்க முறையில்] அல்லது நீடித்த ஒருபோக்கு முறையில் திருவள்ளுவர் ஆண்டு போல் அல்லது ஆங்கிலக் கிறித்துவ ஆண்டு போல் தமிழர் விருப்பப்படி இருக்கலாம்.     தமிழ்ப்பஞ்சாங்க முறை நாட்காட்டியைச் சுமார் 60% – 70% தமிழர் பயன் படுத்துகிறார் [என் ஊகிப்பு].   திருவள்ளுவர் ஆண்டைச் சுமார் 10% -15% தமிழர் பின்பற்றலாம்.  [என் ஊகிப்பு].  

இந்த தமிழர் அறுபதாண்டு நாட்காட்டி,  தமிழருள் ஒருமைப்பாட்டை நிலைநாட்டும். 
 இந்த அட்டவணைப் பற்றி தமிழ் நண்பர் தமது கருத்துகளைக் கூறலாம்.யூகித்த திருவள்ளுவர் ஆண்டின் நீடிப்பு சித்திரை முதல் தேதி ஆரம்பம் என்று பெரும்பான்மைத் தமிழர் ஏற்றுக் கொண்டிருந்தால் திமுக / அதிமுக மாற்றி மாற்றி எறிந்து, பந்தாடாமல் ஒரே திருவள்ளுவர் ஆண்டு நீடித்து நிலையாய் இருந்திருக்கலாம்.   60 ஆண்டுகள், பெயர்கள் தேவையின்றி எளியதாக்கி இருக்கலாம். எல்லாம் பருவகால முரணான தைத் திங்கள் தமிழாண்டு இடைச்சொருகால் வந்த வேற்றுமைப் பிரச்சனை.

 கனிவுடன்,சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++++

தகவல் :

1.   https://134804.activeboard.com/t64371605/topic-64371605/

2.   https://groups.google.com/forum/#!topic/vallamai/Dm42Gr7Nh7U

3. https://en.wikipedia.org/wiki/Tropical_year

4. https://en.wikipedia.org/wiki/Indian_astronomy

5.  http://koodal1.blogspot.ca/2008/01/blog-post_26.html

6.  https://en.wikipedia.org/wiki/Puthandu

7.  https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

+++++++++++++++

வரலாறு

இந்தியாவின் மிகப்பழைய வானியல் நூலான வேதாங்க சோதிடத்தில் (பொ.மு 700இற்குப் பின்)[1] விஜய முதல் நந்தன வரையான அறுபது ஆண்டுகளின் பட்டியலைக் காண முடிகின்றது.

எனினும், வராகமிகிரரின் பிருகத் சங்கிதையில் (பொ.பி 505 – 587) பிரபவ முதல் அட்சய வரை என்று அப்பட்டியல் மாற்றமுற்றிருக்கிறது. பிருகத் சங்கிதையில் குறிக்கப்பட்ட ஒழுங்கிலேயே இன்றுள்ள அறுபதாண்டுப் பட்டியல் கடைப்பிடிக்கப்படுகின்றது.[2]

வடமொழி நூல்களில் அறுபது ஆண்டுகளும் அறுபது சம்வத்சரங்கள் என்று அழைக்கப் படுகின்றன. இராசிச்சக்கரமூடு சூரியன் இயங்கும் ஒரு காலவட்டம் ஆண்டு என்று கணிப்பது போல், வியாழன் கோள் இயங்கும் ஒரு காலவட்டம் சோதிட ரீதியில் அறுபது சம்வத்சரங்கள் (அறுபது ஆண்டுகள்) என்று அழைக்கப்படுகிறது. வடநாட்டு நூல்கள் தொடர்ந்து சம்வத்சரங்களை வியாழனின் இயக்கத்துடனே தொடர்புபடுத்த, தென்னகத்தில் அவை சூரிய ஆண்டுகளின் சுற்றுவட்டப் பெயர்களாக மாறியிருக்கின்றன.[3]ஆயினும், காலக்கணிப்பு ரீதியில் சம்வத்சரமானது ஒரு சூரிய ஆண்டிலும் சிறியது என்பதே உண்மை ஆகும்.[3] [4]

தமிழகமும் அறுபது ஆண்டுகளும்

தமிழ் நாட்டில் அறுபதாண்டுப் பட்டியல் எப்போது வழக்கில் வந்தது என்பதற்கான தெளிவான சான்றுகள் இல்லை.[5] எனினும் அவற்றின் ஒழுங்கு வராகமிகிரருக்குப் பின்பேயே அது தமிழகத்துக்கு அறிமுகமானதைச் சொல்கின்றது. தமிழகத்தைப் பொறுத்தவரை, பொ.பி 14ஆம் 15ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த கல்வெட்டுகளிலேயே அறுபதாண்டுப் பெயர் பட்டியலை முதன்முதலாகக் காணமுடிகின்றது.[6] [7] தமிழில் அறுபது சம்வத்சரங்களைப் பட்டியலிடும் மிகப்பழைய நூலான “அறுபது வருட வெண்பா” இடைக்காடரால் பாடப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. இவர் காலம் பொ.பி 15ஆம் நூற்றாண்டு.[8] விவேக சிந்தாமணியிலும் அறுபதாண்டுப் பெயர்கள் மறைகுறியாகக் குறிக்கப்படும் பாடலொன்று வருகின்றது.[9]

2008இல் புத்தாண்டுக் குழப்பம் உச்சமடைந்தபோது, அதில் பயன்படும் அறுபதாண்டுப் பட்டியல் தமிழ் அல்ல என்ற வாதம் கிளம்பியது. தமிழ்ப்புத்தாண்டு என்று கூறி அவை ஒவ்வொன்றுக்கும் வடமொழியில் பெயரிட்டுள்ளது ஏன் என்ற குற்றச்சாட்டு தைப்புத்தாண்டு ஆதரவாளர்களால் முன்வைக்கப்பட்டது.[10] எவ்வாறெனினும், அறுபது ஆண்டுப்பட்டியல் தமிழர் காலக்கணக்கைப் பொறுத்தவரை இடைச்செருகல் என்பதில் ஐயமில்லை. எனினும், சமயம்சார்ந்த தேவைகளில் தற்போதும் அறுபதாண்டுப் பட்டியல் பயன்படுவதால், தமிழ்ப்பற்றாளர்கள் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் பரிந்துரைத்த அறுபது தமிழ்ப்பெயர் பட்டியலை பயன்படுத்தி வருகின்றனர்.[11][12]

+++++++++++++++

தமிழர் அறுபதாண்டு அட்டவணை

எண்.பெயர்பெயர் (தமிழில்)பெயர் (ஆங்கிலத்தில்)கிரகோரி ஆண்டுஎண்.பெயர்பெயர் (தமிழில்)பெயர் (ஆங்கிலத்தில்)கிரகோரி ஆண்டு
01.பிரபவசங்க முதல்ஆண்டுPrabhava1987–198831.ஹேவிளம்பிதிவாகரர்ஆண்டுHevilambi2017–2018
02.விபவஔவையார்ஆண்டுVibhava1988–198932.விளம்பிஅருணகிரிஆண்டுVilambi2018–2019
03.சுக்லதிருவள்ளுவர்ஆண்டுSukla1989–199033.விகாரிதியாகராஜர்ஆண்டுVikari2019–2020
04.பிரமோதூதபுத்தர்ஆண்டுPramodoota1990–199134.சார்வரிஜி.யூ. போப்ஆண்டுSarvari2020–2021
05.பிரசோற்பத்திதொல்காப்பியர்ஆண்டுPrachorpaththi1991–199235.பிலவகட்டப் பொம்மன்ஆண்டுPlava2021–2022
06.ஆங்கீரசநக்கீரர்ஆண்டுAangirasa1992–199336.சுபகிருதுவீரமாமுனிஆண்டுSubakrith2022–2023
07.ஸ்ரீமுகஇளங்கோஆண்டுSrimukha1993–199437.சோபகிருதுகால்டுவெல்ஆண்டுSobakrith2023–2024
08.பவகண்ணகிஆண்டுBhava1994–199538.குரோதிதாயுமானர்ஆண்டுKrodhi2024–2025
09.யுவமணிமேகலைஆண்டுYuva1995–199639.விசுவாசுவநாயக்கர்ஆண்டுVisuvaasuva2025–2026
10.தாதுசாத்தனார்ஆண்டுDhaatu1996–199740.பரபாவகுமர குருபரர்ஆண்டுParabhaava2026–2027
11.ஈஸ்வரகம்பர்ஆண்டுEesvara1997–199841.பிலவங்கஆறுமுக நாவலர் ஆண்டுPlavanga2027–2028
12.வெகுதானியஒட்டக்கூத்தர்ஆண்டுBahudhanya1998–199942.கீலககுமரிஆண்டுKeelaka2028–2029
13.பிரமாதிஆழ்வார்கள்ஆண்டுPramathi1999–200043.சௌமியதிருத்தணிஆண்டுSaumya2029–2030
14.விக்கிரமசித்தர்கள்ஆண்டுVikrama2000–200144.சாதாரணகாந்தியார்ஆண்டுSadharana2030–2031
15.விஷுஆண்டாள்ஆண்டுVishu2001–200245.விரோதகிருதுகாமராசர்ஆண்டுVirodhikrithu2031–2032
16.சித்திரபானுஜெயங்கொண்டார்ஆண்டுChitrabaanu2002–200346.பரிதாபிஇராஜாஜிஆண்டுParidhaabi2032–2033
17.சுபானுபெருந்தேவனார்ஆண்டுSubhaanu2003–200447.பிரமாதீசபரிதிமால்ஆண்டுPramaadhisa2033–2034
18.தாரணதிருத்தக்கர்ஆண்டுDhaarana2004–200548.ஆனந்தசிதம்பரனார்ஆண்டுAanandha2034–2035
19.பார்த்திபவளையாபதிஆண்டுPaarthiba2005–200649.ராட்சசபாரதியார்ஆண்டுRakshasa2035–2036
20.வியசேக்கிழார்ஆண்டுViya2006–200750.நளபாரதிதாசன்ஆண்டுNala2036–2037
21.சர்வசித்துபூங்குன்றனார்ஆண்டுSarvajith2007–200851.பிங்களபெரியார்ஆண்டுPingala2037–2038
22.சர்வதாரிநாலடியார்ஆண்டுSarvadhari2008–200952.காளயுக்திஅண்ணாதுரைஆண்டுKalayukthi2038–2039
23.விரோதிமுத்தொள்ளாயிரம்ஆண்டுVirodhi2009–201053.சித்தார்த்திவரதராசர்ஆண்டுSiddharthi2039–2040
24.விக்ருதிஅப்பர்ஆண்டுVikruthi2010–201154.ரௌத்திரிமறைமலையார்ஆண்டுRaudhri2040–2041
25.கரசுந்தரர்ஆண்டுKara2011–201255.துன்மதிகல்யாண சுந்தரர் ஆண்டுDunmathi2041–2042
26.நந்தனசம்பந்தர்ஆண்டுNandhana2012–201356.துந்துபிவிசுவநாதம்ஆண்டுDhundubhi2042–2043
27.விஜயவாசகர்ஆண்டுVijaya2013–201457.ருத்ரோத்காரிகண்ணதாசன்ஆண்டுRudhrodhgaari2043–2044
28.ஜயவில்லிபத்தூரார்ஆண்டுJaya2014–201558.ரக்தாட்சிஅப்துல் கலாம் ஆண்டுRaktakshi2044–2045
29.மன்மதபுகழேந்திஆண்டுManmatha2015–201659.குரோதனஇளையராசர்ஆண்டுKrodhana2045–2046
30.துன்முகிபட்டினத்தார்ஆண்டுDhunmuki2016–201760.அட்சயரகுமான்ஆண்டுAkshaya2046–2047

தகவல் :

1.   https://134804.activeboard.com/t64371605/topic-64371605/

2.   https://groups.google.com/forum/#!topic/vallamai/Dm42Gr7Nh7U

3. https://en.wikipedia.org/wiki/Tropical_year

4. https://en.wikipedia.org/wiki/Indian_astronomy

5.  http://koodal1.blogspot.ca/2008/01/blog-post_26.html

6.  https://en.wikipedia.org/wiki/Puthandu

7.  https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

+++++++++++++++

நூலுதவி : 

 1. தமிழ் இலக்கிய வரலாறு –  டாக்டர் மு. வரதராசனார் , சாகித்திய  அக்காதெமி வெளியீடு [2003]
 2. தமிழ் இலக்கிய வரலாறு  -எம்மார். அடைக்கலசாமி எம்.ஏ. ராசி பதிப்பகம் [ 2003]
Series Navigationஅமைதியை நோக்கியே அத்தனை புயல்களும்அப்பால்…..
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

3 Comments

 1. Avatar
  சி. ஜெயபாரதன் says:

  N. Ganesan
  8:31 PM (3 hours ago)
  to மின்தமிழ், vallamai

  On Wed, Apr 22, 2020 at 10:23 AM Thenee MK wrote:

  சளுக்கர்கள் 6-ம் நூற்றாண்டு. அதற்கு முன் அவர்கள் இருந்திருக்கலாம். ஆனால், இலக்கியம், கல்வெட்டு இல்லை.

  சளுக்கர்கள் சாலிவாக முறை என்று எங்கே படித்தீர்கள்?

  சாளுக்கியர் இரண்டு பகுதியை ஆண்டு வந்துள்ளனர். ஒன்று வடக்கே. மற்றொன்று வடகருநாடக மற்றும் ஆந்திரத்தில் ஒரு பகுதியையும் ஆண்டு வந்துள்ளனர். இப்பிரிவினர் பாரசீகத்திலிருந்து வந்தோர் என அறியப் படுகின்றது. அதனால் கிரேக்கரிடைய இருந்த சூரிய ஆண்டு முறையை அறிந்துள்ளனர்.சாலிவாகன ஆண்டு, பொது ஆண்டு பின்னர் 78 – லிருந்து தொடங்கு வதால் அவர்களிடையே ஏற்பட்ட தொடர்பினால்தான் தமிழரிடையே சூரியமான ஆண்டு முறையும் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

  தமிழ்நாட்டில் சித்திரை வருஷப் பிறப்பு தமிழ் மன்னர் களால் அறிமுகம் ஆகியுள்ளது எனச் சங்க இலக்கியம் காட்டுகிறது.

  மலேசியாவிலும் ஹிந்துக்கள் சித்திரை 1-ஐ வருஷப் பிறப்பு எனக் கொண்டாடுகின்றனர்.

  https://www.malaysiahindusangam.org/2017/04/17/60-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/

  கல்வெட்டால் கிடைத்த தேவாரப் பதிகம் – சாமிநாத மழவராயர் என்னும் தமிழாசிரியர் 100+ ஆண்டு முன்னே கண்ட பதிகம் முதல் பாடல் பாடக் கேட்டேன். மறியார் கரத்து எந்தை …

  https://www.facebook.com/MalaysiaHinduSangam/videos/966687960453053/

 2. Avatar
  சி. ஜெயபாரதன் says:

  60 ஆண்டுக் காலவட்டம்
  தமிழ் நாகரிகத் தொன்மையையும் தமிழரின் கூர்த்த நுண்ணறிவையும் பறைசாற்றுவது சித்திரையில் மலரும் புத்தாண்டு!

  காலம் தோற்றமும் முடிவும் இல்லாதது என்னும் தெளிவைக் காட்டுவது 60 ஆண்டுக் காலவட்டம்
  மனிதர்களால் அளவிட முடியாதது காலம். அது முதலும் முடிவும் இல்லாதது. சைவ சித்தாந்தம் இறை, உயிர், தளை (கட்டு) ஆகிய மூன்றும் என்றென்றும் உள்ள பொருள்கள் என்று உறுதி கூறும்; இந்த மூன்றையும் முறையே பதி, பசு, பாசம் என்றும் கூறுவர்.

  “பதி பசு பாசம் எனப்பகர் மூன்றில் பதியினைப் போற் பசு பாசம் அனாதி”

  என்பது திருமூலரின் திருவாக்கு (திருமந்திரம்: முதல் தந்திரம்:4. உபதேசம் -3). இறைவனைப் போல, பசுவாகிய உயிர்களும், பாசமாகிய தளையும் என்றென்றும் உள்ள பொருள்கள், அதாவது அநாதியாக உள்ள பொருள்கள் என்று நிறுவுகிறார், திருமூலர்.

  தளை அல்லது பாசம் என்பது ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று உட்பிரிவுகளை உடையது; காலம் என்பது மாயையில் உள்ள 36 தத்துவங்களில் ஒன்றாகக் கூறப்படுவது; எனவே, காலம் என்றென்றும் உள்ளது அதாவது, தோற்றமும் முடிவும் இல்லாதது என்பது தெளிவாகிறது. ‘காலங்கள் மூன்றானான்’ (6:4:4) என்றும், ‘காற்றாகிக் கார்முகிலாய்க் காலம் மூன்றாய்’ நின்றவன் (6:94:4) என்றும் இறைவனைப் பாடுவார் திருநாவுக்கரசு பெருமான்.

  அளவிட முடியாத காலத்தை, கற்பம், மன்வந்தரம், யுகம், ஆண்டு, திங்கள், நாள், நாழிகை, வினாடி, தற்பரை என வகுத்த நம் முன்னோர், இந்த எல்லாக் கூறுகளுமே உலகம் சுழலுவது போல் உருண்டு, உருண்டு வரும் கூறுகளே என்பதை தெளிவாய் உணர்ந்திருந்ததோடு, அந்த உண்மையை நாமும் உணரும் வண்ணம் கால வாய்பாடை விட்டுச் சென்றனர்; அதாவது, 71 சதுர்யுகங்களைக் கொண்டது ஒரு மன்வந்தரம் என்றும், நான்கு யுகங்களைக் கொண்டது ஒரு சதுர்யுகம் என்றும், 365 நாள் 15 நாழிகை, 31 வினாடி, 15 தற்பரை கொண்டது ஓர் ஆண்டு என்றும் காலத்தின் அனைத்துக் கூறுகளும் அடங்கிய வாய்பாடைத் தந்து சென்றார்கள் (60 தற்பரை = ஒரு வினாடி; 60 வினாடி = ஒரு நாழிகை; 60 நாழிகை = ஒரு நாள்).

  இந்தக் காலக் கூறுகள் அனைத்தும் உருண்டு உருண்டு வருபவை. ‘நாள்’ என்பதை எடுத்துக்கொண்டால், இரவும் பகலும் மாறி மாறி வருவது; இரவு மட்டுமே நிலைத்து நின்றுவிட்டாலோ, அல்லது ‘பகல்’ மட்டுமே நிலைத்து நின்றுவிட்டாலோ, ‘நாள்’ என்னும் காலக்கூறு ஒன்று இருப்பதற்கு வழியில்லை. இதுபோலவே, வாரம், மாதம், ஆண்டு என அனைத்துக் காலக்கூறுகளுமே சுழல்முறையில் வருபவையே. இதைவிடுத்து, ‘காலம்’ என்பது ஒரு குறிப்பிட்ட நாளில் தோன்றி, பின்னொரு குறிப்பிட்ட நாளில் மறைந்து ஒழியும் என்று கூறுவதற்கு நம்மால் இயலாது; ஏனெனில், காலம், தோற்றமும் முடிவும் இல்லாதது!

  அளவிட முடியாத காலத்தை, நம் தேவைக்காக, சுழன்று சுழன்று வரும் பெரிய காலக் கூறுகளாகவும், சிறிய காலக்கூறுகளாகவும் வகுப்பதே நம்மால் முடிந்த ஒன்று என்னும் தெள்ளத் தெளிந்த நுண்ணறிவைக் கொண்டிருந்தார்கள், தமிழர்கள் உட்பட இந்திய துணைக் கண்டத்தில் வாழ்ந்த நம் முன்னோர்கள். எனவே, மற்ற நாட்டினர், தங்கள் நாகரிகத்திற்கு வழிவகுத்த ஒரு முன்னோடியின் காலத்தை அடிப்படையாகக் கொண்டு, தங்கள் ஆண்டுக் கணக்கைத் தொடங்கும் நிலையில், கூர்த்த நுண்ணறிவு கொண்ட நம் இந்தியத் துணைக் கண்டத்தினர், கடவுளைப் போல் என்றென்றும் உள்ள காலத்தையும் அளவிட முடியாது என்னும் உண்மையை உணர்ந்து, பெரிய அளவிலும் சிறிய அளவிலும் உள்ள கால வட்டத்தைப் பயன்படுத்தினார்கள்; அதன் காரணமாக, அறுபது ஆண்டுகள் கொண்ட காலச் சக்கரத்தைப் பயன்படுத்தும் பெருமையை நாம் கொண்டுள்ளோம்.

  தொன்மையான நாகரிகங்கள் என்று கூறப்படுபவை, எகிப்திய – சீன – இந்திய நாகரிகங்களாகும். இம்மூன்றுள், காலத்துக்கேற்ப சில மாற்றங்கள் ஏற்பட்டு இருந்தாலும், இன்னும் பழமையான மரபுக் கூறுகளைத் தொடர்ச்சியாகப் பேணிவருபவை என்னும் பெருமைக்கு உரியவை, கிழக்கத்திய நாகரிகங்களாகிய சீன-இந்திய நாகரிகங்களாம். கிழக்கத்திய நாகரிகங்கள் என்னும் ஒற்றுமை இருப்பதற்கேற்ப, இவ்விரு நாகரிகங்களுமே 60 ஆண்டு வட்டத்தைத் தம் காலக் கணிப்பில் கொண்டுள்ளன.

  சீன மக்களுக்கும் 60 ஆண்டுக் கால வட்டம் இருப்பதை நம்மில் பெரும்பாலோர் உணர்ந்திருக்க மாட்டோம். விலங்குகளின் பெயரில் பன்னிரண்டு ஆண்டுகள் சுழன்று வருவதை அனைவரும் அறிவோம்; பன்னிரண்டு விலங்குகளின் பெயரில் சுழன்று வருபவை, பூமி சார்ந்த கிளைகள் (earthly branches) என்று அழைக்கப்படுகின்றன; மரம் (wood), நெருப்பு (fire), மண்/பூமி (earth), உலோகம் (metal), நீர் (water) எனப்படும் ஐந்து அடிப்படை பொருள்களும் வானம் சார்ந்த தண்டுகள் (celestial/heavenly stems) எனப்படுகின்றன. பன்னிரண்டு விலங்குகள் ஒவ்வொன்றிலும், மரம், நெருப்பு, மண், உலோகம், நீர் ஆகிய ஐந்து வகைகள் உள்ளன. எடுத்துக்காட்டுக்கு, ‘புலி’ எனும் விலங்கு, மண் புலி, மரப் புலி, உலோகப் புலி, நெருப்புப் புலி, நீர்ப் புலி என ஐந்து வகையை உடையது. பன்னிரண்டு விலங்குகள் ஒவ்வொன்றும் மேலும் ஐந்து வகையாகப் பகுக்கப்படும்போது, சீனப் பண்பாட்டிலும் 60 ஆண்டுகள் கிடைக்கப்பெறுகின்றன.

  மரம், நெருப்பு, மண், உலோகம், நீர் ஆகிய இவ்வைந்தில் ஒவ்வொன்றிலும் நிலவு, பெண்மை போன்றவற்றோடு தொடர்புடைய ஒரு பகுதியும் (‘யின்’/yin), சூரியன், ஆண்மை போன்றவற்றோடு தொடர்புடைய மறு பகுதியும் ‘(யாங்’/yang), என இரண்டு பகுதிகள் உள்ளன. எனவே, வானம் சார்ந்த தண்டுகள் மொத்தத்தில் பத்து உள்ளன. பூமி சார்ந்த கிளைகளின் 12 கூறுகளும், வானம் சார்ந்த தண்டுகளாகிய 10 கூறுகளும், குறிப்பிட்டதொரு முறையில் இணைக்கப்பட்டு, ஒரு குறிப்பிட்ட ஆண்டின் பெயர் பெறப்படுகிறது. இந்த அடிப்படையில் பார்த்தால், சீனப் பண்பாட்டில், 120 விதமான பெயருடைய ஆண்டுகள் இருப்பதை ஊகிக்க முடிகிறது.

  சீனச் சகோதரர்களுக்கு 60 என்பதற்காக ஓர் அடிப்படை இருப்பது போல, இந்திய துணைக் கண்டத்தில் காணப்படும் 60 ஆண்டுக் கணக்குக்கும் அடிப்படை உண்டு. தேவர்களின் குருவாகப் போற்றப்படும் வியாழ பகவான் ராசிச் சக்கரத்தில் ஐந்து சுற்றுகளை முடிப்பது 60 ஆண்டுக் காலமாகும். நாம் சோதிடம் பார்க்கும்போது, நமக்கு எந்தத் திசை நடக்கிறது என்று சோதிடர்கள் சொல்லக் கேட்டிருப்போம். ஒரு மனிதனின் வாழ்வில் ஒன்பது திசைகளும் முழுமையாக இடம்பெற 120 ஆண்டுகளாகும். பஞ்சாங்கம் கணிப்பதற்கு முக்கிய அடிப்படை நூலாக விளங்கும் ‘சூரிய சித்தாந்தம்’, நட்சத்திரங்கள் தங்கள் சஞ்சாரப் பாதையில் ஒரு சுற்றை முடிப்பதற்கு எடுத்துக்கொள்ளும் காலம் 60 ஆண்டுகளாகும் என்று கூறுகிறது. இந்நூல், வராகமிஹிரர் என்பவரால் கி.பி.500களில் இயற்றப்பட்டது என்பது அறிஞர்களின் துணிபு. தமிழர்களின் வாழ்வில் 60ஆம் ஆண்டு பிறந்த நாள் மிகவும் சிறப்பாக, 60ஆம் கலியாணமாகக் கொண்டாடப்படுவதிலிருந்து தமிழர்கள் 60 என்னும் கால வட்டத்திற்குக் கொடுக்கும் தனிப்பட்ட சிறப்பு தெளிவாக விளக்கம் பெறுகிறது.

  காலத்தை உருண்டு உருண்டு வரும் பெரிய கால வட்டங்களாகவும் சிறிய கால வட்டங்களாகவும் வகுத்து, கால ஓட்டத்தைப் பதிவு செய்த திறன், இந்தியத் துணைக் கண்டத்தில் வாழ்ந்து சென்ற சமய ஞானிகளின் கூர்த்த நுண்ணறிவை – இறையருளால் அவர்களுக்குக் கிடைத்த மெய்யறிவுத் திறத்தைப் பறைசாற்றுகிறது.

  வரலாற்றுக்கு முந்தைய தமிழ் நாகரிகத்தின் தொன்மையை நிலைநிறுத்துவது 60 ஆண்டுக் காலவட்டமே!
  சுழன்று வரும் கால வட்டமாகக் காலத்தைக் கணித்துப் பயன்படுத்துவதில் மற்றுமொரு பெருஞ் சிறப்பு, குறிப்பாக தமிழர்க்கு உண்டு. ‘கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய மூத்தக் குடி’ என்னும் தொடர் தமிழ் நாகரிகத்தின் அளவிடற்கரிய தொன்மையைச் சுட்டுகின்ற மணிமொழியாகும். குறிப்பிட்ட ஒரு சான்றோர் காலத்திலிருந்து நமது காலத்தை அளவிடும்போது, நம் நாகரிகத்தின் தொன்மை கேள்விக் குறியாகிவிடும் வாய்ப்பு உண்டு! இன்று, கடைச் சங்க கால நூல்கள் மட்டும் நமக்குக் கிடைக்கின்றன என்றாலும், அந்நூல்களின் அகச்சான்றுகளையும் வேறு சில குறிப்புகளையும் கொண்டு, முதல் தமிழ்ச் சங்கம், இரண்டாம் தமிழ்ச் சங்கம், மூன்றாம் தமிழ்ச் சங்கம் (கடைச் சங்கம்) என மூன்று சங்கங்கள் வைத்துத் தமிழ் வளர்த்தவர்கள் தமிழர்கள் என்று நிறுவிப் பெருமைப்படுகிறோம். கடைச் சங்க காலத்திலிருந்து காலத்தை அளவிடத் தொடங்கினால், முதற்சங்கம், இடை சங்கம் ஆகியவை கற்பனைப் புனைவுகள் ஆகிவிடும்!

  வாழ்க்கையின் நல்ல கட்டத்தைக் குறிக்கும் ‘வசந்த காலத்தின்’ தொடக்கத்தில் புத்தாண்டு பிறப்பது, மிகவும் பொருத்தமானது
  ஓர் ஆண்டை ஆறு பருவங்களாகப் பகுத்துக் கூறும் தொல்காப்பியம். கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் ஆகியவையே அந்த ஆறு பருவங்கள். இவற்றுள், சித்திரையும் வைகாசியும் இளவேனில் காலம் எனப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிக வெப்பமும் அதிக குளிரும் இல்லாமல் மரஞ்செடிகொடிகள் பூத்துக் குலுங்க ஆரம்பிக்கும் காலம் இளவேனில் காலம். இது வசந்த காலம் என்றும் குறிக்கப்படும்.தமிழர் பண்பாட்டில் இனிய வாழ்க்கைக் கட்டத்தை வசந்த காலமாக குறிப்பிடுவது மரபு. எனவே, புதிய ஆண்டை வசந்த கால ஆரம்பத்தோடு ஆரம்பித்த நம் முன்னோரின் இயற்கையோடு ஒட்டிய வாழ்வியல் நோக்கு புலப்படுகிறது.

  தமிழ் நாடு, பாண்டிச்சேரி, ஸ்ரீலங்கா, மலேசியா, சிங்கப்பூர், ரியூனியன் தீவு, மொரீஷியஸ் போன்ற தமிழர் வாழும் இடங்களில் புத்தாண்டாகக் கொண்டாடப்படும் சித்திரை முதல் நாளாகிய ஏப்ரல் 13ஆம் அல்லது 14ஆம் நாளை அஸ்ஸாம், வங்காளம், கேரளா மணிப்பூர், ஒரிஸ்ஸா, பஞ்சாப், திரிபுரா ஆகிய நாடுகளும் புத்தாண்டாகக் கொண்டாடுகின்றன என்பது கவனித்தற்குரியது; இது தவிர, நேப்பாளம், வங்காள தேசம், பர்மா, கம்போடியா, லாவோஸ், தாய்லாந்து ஆகிய கிழக்கத்திய நாடுகளில் எல்லாம் ஏப்ரல் மாதத்தில், இந்தக் கால கட்டத்திலேயே புத்தாண்டு கொண்டாடப்படுகிறது.

  இக்காலகட்டம் பகலும் இரவும் சமமாக இருக்கும் இரண்டு நாள்களில், சூரியன் வடக்கு நோக்கிச் செல்லும்போது, இரவும் பகலும் சமமாக இருக்கக்கூடிய மார்ச் 21ஆம் நாளை ஒட்டி வருவதாகும். மார்ச் 21, பூமத்தியரேகைக்கு நேரே சூரியன் நிற்கும். இந்தியாவிற்கு மேலே சூரியன் நிற்கும் காலம் மார்ச் 21க்குச் சில நாள் பின்னரே நேரும். எனவே, இந்தியத் துணைக்கண்டத்துக்கு மேலே சூரியன் நிலவும்போது புது ஆண்டைக் கணக்கிடத் தொடங்கும் அடிப்படையையும் உணரமுடிகிறது; அதிலும் சூரியனின் வடக்குப் பயணத்தில் ஏற்படும் ‘இரவுபகல் சமமாக வரும் நாளான’ மார்ச் 21ஐ ஒட்டி புத்தாண்டு கொண்டாடப்படுவது நோக்கத்தக்கது. இந்து சமயச் சார்புடைய சமயங்கள், வடக்குத் திசையைத் தெய்விகத் திசையாகப் போற்றும்.

  கிழக்கத்திய நாடுகளில் பல, ஏப்ரல் நடுப்பகுதியில் புத்தாண்டு கொண்டாடுவதற்கு, அன்றே சீனா வரை தமது பண்பாட்டைக் கொண்டு சென்ற நம் இந்துப் பெரு மக்களும் ஒரு காரணமாக விளங்கியுள்ளார்கள் என்று கூறிப் பெருமைப்படலாம்

  மேட ராசியே ராசிச் சக்கரத்தின் முதல் ராசி என்பது பழந்தமிழ் இலக்கியங்களிலும் உணர்த்தப்படுகின்றது

  சோதிட அடிப்படையில் பார்த்தாலும், சித்திரையே ஆண்டின் முதல் நாள் என்னும் நியாயம் வெளிப்படுகிறது. பன்னிரண்டு ராசிகளில் சூரியனும் மற்ற கிரகங்களும் சுற்றி வருகின்றன எனும் அடிப்படையில் கணிக்கப்பட்டு வரையப்படுவது, சோதிடக் கணிப்புக்கு அடைப்படையாக விளங்கும் ராசிச் சக்கரம். இந்தக் கணிப்பில், சூரியன் மேட ராசியில் தொடங்கி, மற்ற ராசிகளை முழுமையாகச் சுற்றி முடிக்கும் கால கட்டமே ஓர் ஆண்டு என வரையறுக்கப்பட்டுள்ளது; அதாவது, பன்னிரண்டு ராசிகளில், மேட ராசியே முதலாவதாகக் கொள்ளப்படுகின்றது. இந்த உண்மையைச் சங்க கால புலவர்களும் உணர்ந்து இருந்தனர்.

  ‘பத்துப்பாட்டு’த் தொகுப்பில் ஒரு நூலான ‘நெடுநல்வாடை’யில், “திண்ணிலை மருப்பின் ஆடுதலையாக; விண்ணூர்பு திரிதரும் வீங்குசெலல் மண்டிலத்து” என வரும் அடிகள் (160-161), சூரியன், திண்ணிய கொம்புகளைக் கொண்ட ‘ஆடு’ ஆகிய மேடத்திற்கு உரிய ராசியை முதன்மையாகக் கொண்டு, வான மண்டலத்தில் பவனி வருவது குறிக்கப்பட்டுள்ளது. புறனானூறு 229ஆம் பாடலிலும் இத்தகைய குறிப்பு உளத;.“ஆடு இயல் அழல் குட்டத்து” (முதல் அடி) என்னும் அடி ‘மேடராசியைப் பொருந்திய கார்த்திகை நாளில் முதற்காலின் போது’ எனும் பொருளுடையது. இந்த அடி தொடர்பாக, ஔவை

  சு. துரைசாமி பிள்ளையவர்கள் கொடுத்துள்ள விளக்கம் வருமாறு: “அழல் சேர் குட்டம் என்பது கார்த்திகை நாள். ‘அக்கினியை அதிதேவதையாக உடைமையின், கார்த்திகைக்கு அழல் என்பது பெயராயிற்று’ என்ப. ஆட்டினை, வடநூலார் மேடராசியென்பர். ஆடு முதல் மீன் ஈறாகவுள்ள இராசி பன்னிரண்டுக்கும் அசுவினி முதல் இரேவதி ஈறாகவுள்ள நாள் இருபத்தேழினையும் வகுத்தளிக்கின், முதல் இரண்டே கால் நாள் ஆடாகிய மேடத்துக்குரிய ஆதலின், கார்த்திகையின் முதற் காலை ‘ஆடு இயல் அழற்குட்டம்’ என்றார்.”

  மேலே கண்ட இரு சான்றுகளும் தமிழர்கள் தமக்கென சோதிடக் கலைச் சொற்களை கொண்டு விளங்கிய பெருமை புலப்படுகிறது. தமிழ்க் கலைச் சொற்களைப் பயன்படுத்தி இருந்தாலும், அனைவருக்கும் பொதுவாய் இயங்கும் வானியல் நிலையைத் தெளிவாக உணர்ந்திருந்ததால், மேட ராசியையே சூரியனின் வட்டப் பாதை தொடங்கும் ராசியாகக் கொண்டு, தமிழரின் சிறப்பு நாள்களைக் கணித்தார்கள்; அவ்வகையில் சூரியன் முதல் ராசியில் புகும் நாள் தமிழரின் புதிய ஆண்டு தொடங்குவதாயிற்று.

  சமயத் தத்துவ அடிப்படை, சூரியனின் நிலை, பருவ காலங்களின் அடிப்படை, சோதிட அடிப்படை என எந்த அடிப்படையில் பார்த்தாலும், இந்திய துணைக் கண்டத்தைச் சார்ந்த மக்களின் நாகரிகத் தொன்மையையும், அளவிட முடியாத காலத்தின் தன்மையை நன்குணர்ந்திருந்த அவர்களின் கூர்த்த நுண்ணறிவையும் படம்பிடித்துக் காட்டி, இந்திய பாரம்பரியத்தின் பெருமையை நிலைநிறுத்துவது சித்திரையில் மலர்ந்து மணம் பரப்பும், புத்தாண்டு என்பது தெளிவாகிறது; இந்தப் பெருமை, தமிழர்களுக்கும் உரிய பெருமை என்பதால், சித்திரைப் பிறப்பை, ‘தமிழ்ப் புத்தாண்டே வருக!’ என்று நெஞ்சார இருகரம் கூப்பி, சிரம் தாழ்த்தி வர வேற்போம்; நம் பெருமையை உறுதிப்படுத்துவோம்!

  மு. கமலநாதன்

  On Wed, Apr 22, 2020 at 5:17 PM N. Ganesan wrote:

  On Wed, Apr 22, 2020 at 2:58 AM Thenee MK wrote:

  தென்னாட்டில் சந்திரமான ஆண்டு முறை பயன்பாட்டில் தொன்றுதொட்டு இருந்திருப்பதற்கு வாய்ப்பு உண்டு காரணம் இதுவே அக்காலத்தில் நாளையும் பருவத்தையும் கணிப்பதற்கு எளிமையான முறையாக இருந்துள்ளது.

  எப்படி? சூரியமான பஞ்சாங்கம் தான் இந்தியாவின் பல மாகாணங்கள் போலத் தமிழ்நாட்டில் இருந்தது என்பதற்கு
  நெடுநல்வாடை, பதிற்றுப்பத்தின் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் சான்றாக உள்ளன.

  சந்திரமான பஞ்சாங்கம் மிகப் பிற்காலத்தில் தென்னாடு வந்தது,

  சூரியமான ஆண்டு முறையை சாளுக்கியர்கள் அவர்தம் ஆட்சி காலத்தில் பயன்படுத்தியர்கான சான்று சாலிவாகன ஆண்டு முறையாகும்.

  சளுக்கர்கள் 6-ம் நூற்றாண்டு. அதற்கு முன் அவர்கள் இருந்திருக்கலாம். ஆனால், இலக்கியம், கல்வெட்டு இல்லை.
  சளுக்கர்கள் சாலிவாக முறை என்று எங்கே படித்தீர்கள்?

  தென்னகத்தில் எப்பொழுது முதல் சூரியமான ஆண்டு முறை பயன்பாட்டிற்கு வந்தது என ஆராய்ந்து கூறினால் போதும்.

  கூறியுள்ளேன். ஆடுகோட்பாட்டுச் சேரலாதன், நெடுநல்வாடை, …
  முந்நான்கு பகுப்பாக, 12 மாதத்தை வகுத்து மழை, பனி, கோடை என்ற வரிசையில் தொல்காப்பியர் பருவங்களைக் கூறினார்.
  இதுவும், சூரியமான முறைதான்.

  நா. கணேசன்

  On Wed, 22 Apr 2020, 11:59 S. Jayabarathan, wrote:
  2000 ஆண்டுகட்கு முன்னர் தமிழ்மொழியை உயர்தனிச் செம்மொழியாக்க தமிழ் இலக்கணம் வகுத்த அந்தண மேதை தொல்காப்பியர் நாட்கிழமை, மாதம், வருடம் தெரிய சூரிய நகர்ச்சி, பூமி சுழற்சி, நிலவு நிழற்சியைக் கணக்கெடுத்து நிச்சயம் நாள், கிழமை, மாதம், வருடம் குறிப்பிட்ட நாட்காட்டிச் சுவடி, வீட்டுச் சுவரில் தொங்காமல் இருப்பாரா ?

  அவரது காலத்தில் வான சாஸ்திரமும்,ஜோதிடமும் இந்தியாவில் பஞ்சாங்க வடிவில் பயன்பாட்டில் நிச்சயம் இருந்திருக்க வேண்டும்.

  அது யூகிக்கும் திருவள்ளுவர் ஆண்டோ, தை திங்கள் முதலன்றோ தமிழாண்டுப் பிறப்பாக கருத இடமில்லை. தமிழாண்டு பிறப்பு சித்திரை முதல் தேதியாக தொல்காப்பியர் காலத்தில் இருந்திருக்க வேண்டும் என்று யூகிக்க இடமிருக்கிறது.

  சி. ஜெயபாரதன்

 3. Avatar
  சி. ஜெயபாரதன் says:

  On Wed, 22 Apr 2020, 11:59 S. Jayabarathan, wrote:

  2000 ஆண்டுகட்கு முன்னர் தமிழ்மொழியை உயர்தனிச் செம்மொழியாக்க தமிழ் இலக்கணம் வகுத்த அந்தண மேதை தொல்காப்பியர் நாட்கிழமை, மாதம், வருடம் தெரிய சூரிய நகர்ச்சி, பூமி சுழற்சி, நிலவு நிழற்சியைக் கணக்கெடுத்து நிச்சயம் நாள், கிழமை, மாதம், வருடம் குறிப்பிட்ட நாட்காட்டிச் சுவடி, வீட்டுச் சுவரில் தொங்கம விடாமல் இருப்பாரா ?

  அவரது காலத்தில் வான சாஸ்திரமும்,ஜோதிடமும் இந்தியாவில் பஞ்சாங்க வடிவில் பயன்பாட்டில் நிச்சயம் இருந்திருக்க வேண்டும்.

  அது யூகிக்கும் திருவள்ளுவர் ஆண்டோ, தை திங்கள் முதலன்றோ தமிழாண்டுப் பிறப்பாக கருத இடமில்லை. தமிழாண்டு பிறப்பு சித்திரை முதல் தேதியாக தொல்காப்பியர் காலத்தில் இருந்திருக்க வேண்டும் என்று யூகிக்க இடமிருக்கிறது.

  சி. ஜெயபாரதன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *