ஈழத்து நாடக கலைஞர்:ஏ.ரகுநாதன்

author
2 minutes, 47 seconds Read
This entry is part 9 of 14 in the series 26 ஏப்ரல் 2020

முல்லைஅமுதன்

ஈழத்தின் நாடக,திரைப்பட வரலாற்றில் மறந்திவிடமுடியாத மாபெரும் கலைஞன் .ரகுநாதன் என்பதில் மாற்றுக்கருத்தேதுமில்லை.

வாழ்நாளில் சாதனைகளை நிகழ்த்திக்காட்டியவர்.05/05/1935இல் மலேசியாவில் பிறந்தாலும்,தன் சிறுபராயம் தொட்டே யாழ்ப்பாணம் நவாலியில் தன் தாயுடன் வாழ்ந்துவந்தார்.தனது கல்வியை மானிப்பாய் இந்துக் கல்லூரியில் பயின்றார்.நாடகக் கலைக்குப் பேர்போன  மானிப்பாய்,நவாலியில் தன் ஆர்வத்தை வெளிப்படுத்த மானிப்பாய் இந்துக் கல்லுரி பெரிதும் உதவியது.

நானும் மானிப்பாய் இந்துக் கல்லூரியில் க.பொ.த உயர்தரம் பயின்ற காலத்தில் கல்லூரி இல்லங்களிடையே நடைபெறும் நாடகப்போட்டிகளில்  மத்தியஸ்தராக,பார்வையாளராக,சிறப்பு விருந்தினராக வந்து நம்மைப்போன்றவர்களை ஊக்குவித்ததும் இன்றும் மறக்கமுடியாதது.

சுந்தரர் இல்ல போட்டி நாடகமான ‘மூன்று துளிகள்’  கலைஞர்  (அமரர்)நற்குணசேகரன் (1933 – 2020) இயக்கினார்.நாடக ஒத்திகையின் போதும், அதன் பின்னரும் நாடகம் பற்றிய  பல அரிய விடயங்களைப் பகிரும் ஒரு நண்பராய் திரு.ஏ.ரகுநாதன் ஆனார்.கலை ஆர்வத்தில்  தன்  அரச பதவியே  இராஜினாமச்  செய்திருந்தார். கொழும்பிலும், யாழ்ப்பாணத்திலும்  நாடகங்களை அரங்கேறிய  அனுபவங்களைப் பலதடவைகள் என்னுடன் பகிர்ந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில்  லிபர்ட்டி  பிலிம்ஸாரின்  ‘உறங்காத உள்ளங்கள்’  திரைப்படத்தை  ஆரம்பித்து  அதற்கான  சில காட்சிகளும் படமாக்கப்பட்ட  சூழலில் அது தொடரமுடியாது போனது.

ஏற்கனவே கடமையின் எல்லை,நிர்மலா,நெஞ்சுக்கு நீதி,தெய்வம் தந்த வீடு, புதிய காற்று போன்ற ஈழத்துத் திரைப்படங்களில் நடித்து பலரது பாராட்டையும் பெற்றிருந்தாலும் நாடகமே தன் மூச்சு என அடிக்கடி சொல்வார்.

கலையரசு  சொர்ணலிங்கம் அவர்களின் பாராட்டுடனும்,பயிற்சியுடனும் ‘தேரோட்டி மகன் உட்பட பல நாடகங்களில் நடித்தார்..தேரோட்டி மகன், சாணக்கியன், வேதாளம் சொன்ன கதை, அவனைக் கொன்றவள் நீ, சலோமியின் சபதம், பார்வதி பரமசிவம், ஆராவமுதா அசடா  எனப்  பல நாடகங்கள் பலரின்  பாராட்டைப் பெற்றமையும்  இங்கு  குறிப்பிடத்தக்கது.

1966இல் வெளிவந்த கடமையின் எல்லை திரைப்படத்திற்குப் பிறகு 1968இல் நண்பர்களுடன் இணைந்து ‘நிர்மலா எனும் திரைப்படத்தைத் தயாரித்தார்.தமிழக திரைப்படங்களின் அனுபவம் மிக்க இவரின் நண்பரின் கைவண்ணமும் இணைய நல்லதொரு படமாக வெளிவந்தது.நல்ல விமர்சனங்களைப் பெற்றுத்தந்தாலும் நம்மவர்களின் தென்னிந்திய சினிமாமோகம் தயாரிப்பாளரின் கையைச் சுட்டுக்கொள்ளும் நிலைமை வந்தது.ஆனாலும் ரகுநாதனின் உற்சாகம் அதிகமாகவே ஏற்பட முனைப்புடன் செயல்பட்டார்.அதன் தொடர்ச்சியாகவே வி கே டி பொன்னுச்சாமியின் தயாரிப்பில் இலங்கையில் முதன் முதலில் சினிமாஸ்கோப் வடிவில் வெளிவந்த ‘தெய்வம் தந்த வீடு திரைப்படத்தை 1978இல் வெளியிட்டார்.ஆர்வமுள்ளவர்களை,அனுபவம் மிக்கவர்களை தேடிச்சென்று ஊக்கம் கொடுப்பதுடன்,தன்னுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பையும் ஏற்படுத்தியவர்.

பலதிரைப்படங்கள் வெளிவரவிருந்த சூழல்,பல ஆரம்ப பூஜைகளுடன் ஆரம்பிக்கப்பட்ட படங்கள் எனச் சிறப்பான வெளிச்சம் வரவிருந்த சூழலில் தான் 83 ஜூலைக்கலவரம் எல்லாவற்றையும் புரட்டிப்போட்டது.வாழமுடியாத சூழலிலே புலம்பெயர்ந்தார். தமிழகத்தில் இருந்த காலங்களிலும் தன கலை முயற்சியை விடவில்லை.

பின்,பாரிஸ் வந்துசேரவே,கலைகள்,கலைஞர்கள் சங்கமிக்கும் நாடாக பாரீஸ் இவருக்காகியமையினால்,நாடகம்,குறும்படங்கள்,திரைப்படங்கள் எனத் தொடர்ந்தார். அவற்றுள்  இன்னுமொரு பெண்முகத்தார் வீடுபேர்த்தி,நினைவு முகம்மௌனம்,தயவுடன் வழிவிடுங்கள்தீராநதி,மீளுதல்,தொடரும்,முள்ளும் மலராகும்,மாறுதடம்,பூப்பெய்தும் காலம்,தொடரும்அழியாத கவிதை,இனியவளே காத்திருப்பேன்(2012), WITNESS IN HEAVEN     சாட்சிகள் சுவர்க்கத்தில் (2018)குறிப்பிடத்தக்கன.

எனது வீட்டுக்கு வந்தபோது நிறையப் பேசிய பொழுதுகளில்  புலம்பெயர்ந்து வாழ்கின்ற நமது கலைஞர்களை ஒன்றிணைத்து நீண்டது திரைத் தொடரை ஆரம்பிக்க இருப்பதாகச் சொன்னார்.லண்டன் ஈழவர் திரைக்கலை மன்றம்/ஈழவர் சினி ஆர்ட்ஸ் கிரியேஷன்ஸ்  அமைப்பினரும்  இணைந்து  செயல்பட்டதால் அங்கும் ரகுநாதனைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது.2009இற்குப் பின்னர் ஏற்பட்ட அசாதாரண  சூழலினால் ஈழவர் திரைக்கலை மன்ற செயல்பாடுகள் பற்றிச் சரிவரத்தெரியாததினால் ரகுநாதனைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்படவில்லை.ஆனால் இடையே தொலைபேசி ஊடாகத் தொடர்புகொண்டு பேசுவதுண்டு எனினும் பிரான்ஸ் செல்லும் காலங்களிலும் சந்திக்கும் சூழலும் ஏற்படவில்லை.

எழுத்தாளர் விபரத்திரட்டு ஒன்றினை வெளியிடும் ஆர்வத்தில் தொடர்புகொண்டு சில தகவலைப் பெற்றுக்கொண்டேன்.

ஈழத்து நூல் கண்காட்சியினை ஆரம்பிக்கவென ஆயத்தங்களில் இறங்கியபோது முதலாவது வாழ்த்தைத் தெரிவித்திருந்தார்.அதனையொட்டி ஆரம்பிக்கப்பட்ட காற்றுவெளியில் அவரின் நேர்காணலை வெளியிடவேண்டும் என்கிற ஆதங்கத்தைச் சொல்லியிருந்தேன்.முடியாதுபோயிற்று.இலங்கையிலிருந்தபோது எப்படி என்னுடன் பழகினாரோ அதே போலவே பழகினார்.காற்றுவெளி பற்றிப் பேசிய போதே இலங்கையில் நிழல்(1968) சஞ்சிகை நடத்தியதாகச் சொன்னார்.இதனை அறிந்திருக்கவில்லை.புனிதலிங்கத்தின் ‘திரை’ சஞ்சிகையே ஓரளவு திரையுலக செய்திகளைத் தந்ததாக அறிவேன்.இன்னும் வந்திருக்கலாம்.

பாரீஸ் வந்தபின் ‘பாரிஸ் முரசு‘பத்திரிகைக்கு ஆசிரியாராக இருந்தததாகச் சொன்னார்.சில இதழ்களையும் பார்த்திருக்கிறேன் .பல அனுபவங்களைப் பெற்றவரான ரகுநாதனிடம் வழமையாக எல்லோரிடமும் கேட்பது போல    அவ்வனுபவங்களைக் கொண்டு நாவலாக எழுதலாமே எனக் கேட்டிருந்தேன்.பார்ப்போம் என்றார்.எனினும் ’ தமிழன் இதழில் கலை அனுபவங்களை ஒரு ஒப்பனை இல்லாத முகம் எனும் பெயரில் எழுதியாகச் சொன்னார்.அதே போல’எனக்காகப் பூக்கும்(1999)’ நாவலையும் தந்தார். திரைப்படத்திற்காக நினைத்திருந்ததை நாவலாக்கியதாவும் சொன்னார்.இன்னும் எழுதக்கூடிய அனுபவங்களைக் கொண்டிருந்தவரால் எழுதமுடியவில்லை என்றே நினைக்கிறேன். சிறுகதைகளும்,கவிதைகளும் எழுதியிருப்பாதாக அறியும் பட்சத்தில் அவரின் படைப்புக்களைத் தேடும் முயற்சியும் படைப்பாளர்களின் கைகளுக்கு வருகின்றது.

.ஐரோப்பிய  கலைஞர்களின் ஒருங்கிணைப்பில் எந்தையும் தாயும்‘,’தூண்டில்காரன்  போன்ற நாடகங்களிலும் நடித்திருந்தார்.

பறாளையூர் பிறேமகாந்தனின் ரோஜாப்பூ இதழுடனும் தொடர்பில் இருந்தார்.தனது பங்களிப்பு இல்லையெனினும் அது நாடகமெனினும்,திரைப்படமெனினும் அதன் வெளியீட்டிற்கு உதவியாக இருந்திருக்கிறார் என அறியமுடிகிறது.வாடைக்காற்று திரைப்படத்திற்கும் அவ்வாறே உதவியவர் என அறியமுடிகிறது.

நல்ல வாசிப்பாளரும் கூட.ஆனாலும் நாவல்களை,சிறுகதைகளைப் படமாக்கும் ஆர்வம் இல்லாதவராக இருப்பினும்,திரைக்கேற்ப கதைகள் இருப்பின் படமாகலாம் என்றும் சொல்லியிருந்தார்.

மானிப்பாய் இந்துக்கல்லூரியில் நிர்மலாவின் புதிய பிரதியை மாணவர்களுக்காக  திரையிட்டார்.நாடகத்திற்கான நடிப்பு,காட்சியமைப்பு,அதன் கட்டமைப்பு வேறு..திரைப்படத்திற்கான நடிப்பு,வடிவமைப்பு வேறு.அதனைக் கற்றுணர்ந்தவனே நல்ல நடிகனாக பிரகாசிக்க முடியும் என்பார்.

எனது நாடக முயற்சிக்கெல்லாம் ஆலோசனை தந்தவர்களில் பா.சத்தியசீலன்,வி.ரி.ஏ.விஷ்வா இவர்களுடன் கலைஞர்.ஏ.ரகுநாதனும் ஒருவர்.எழுத்தாளர்.அப்பச்சி மகாலிங்கம் அவர்களையும் அறிமுகம் செய்து தந்தார்.

இன்று இவற்றையெல்லாம் நினைத்துப் பார்க்கையில் வெகுதூரம் வந்துவிட்டோம் எனினும் இவர்களிடமிருந்து பெற்ற அனுபவமே கடந்துவந்த பாதைகளின் சுவடுகளாய் அமைந்தன என்பேன்.

வாழ்நாள் சாதனையாளரான கலைஞர்.ஏ.ரகுநாதன் இன்று நம்மிடையே இல்லை என்பது நெஞ்சம் கனக்கின்ற நாளாய் ஆகின்றது.வயதின் எல்லைகளும்,நோய்களும் உடலை அலைக்கழிக்கும் போது கனவுகளுக்கான ஆயுளும் குறைந்தே போகுமோ?

எவ்வளவுதான் சாதித்திருந்தாலும்,எத்தனை உயரத்தின் உச்சிக்குப் போனாலும் ஒவ்வொரு கலைஞனுக்குள்ளும் நிறைவடையாத கனவுகளும் இருந்திருக்கும்.

எனினும்,

கலைஞர்.ஏ.ரகுநாதன் நமது ஈழத்துக் கலை உலகின் உச்சத்தைத் தொட்டிருக்கிறார் என்பதே உண்மை.

கலையுலகின் வரலாற்றை இவர் பதிவுசெய்திருந்தார்.இவரின் வரலாற்றைக் காலம் பதிவு செய்யும்.ஈழத்தின் நாடக,திரைப்பட கலைஞர்களை மறந்துவிட்டதுபோல ரகுநாதனின் பணியை கலைஞர்கள் தொடர்ந்து முன்னெடுக்கவேண்டும்.

முல்லைஅமுதன்

22/04/2020

Series Navigationஅழகாய் பூக்குதேநான் கொரோனா பேசுகிறேன்….
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *