தக்க யாகப் பரணி [தொடர்ச்சி]

This entry is part 11 of 14 in the series 26 ஏப்ரல் 2020

            

                                                

             சிரம் தெரிந்தன அறிந்தறிந்து குலை

                        செய்து பைரவர்கள் செந்நிலம்

                  பரந்தெரிந்து பொடிசெய்ய மற்றவை

                        பரிக்க வந்தவர் சிரிப்பரே.                 [51]

[சிரம்=தலை; அறிந்து=வெட்டி;  குலை=கூட்டம்; பைரவர்கள்=வாம மதத்தினர்; பரிக்க=நீக்க]

      இப்பாடலில் வாம மதத்தினரின் வழிபாட்டு முறை சொல்லப்படுகிறது. அவர்கள் சக்தியை வழிபடுபவர்கள். தலைகளை வெட்டி வந்து அவற்றைப் பூக்களாகக் கருதி வனதுர்க்கைக்கு இடுவர். மறுநாள் அவற்றை அப்புறப்படுத்த வருவர். அப்போது அவை சிவந்த நெருப்பு எரியும் பாலையின் வெப்பத்தில் சாம்பலாகிப் போயிருப்பதைக் கண்டு சிரிப்பார்கள்.

=====================================================================================

புற்றினின்று எழுகின்ற புயங்க சூடிகை

                              நெருப்பு விட்டசிறுபொறிஎனப்

                        பற்றி நின்றன அநந்த மின்மினி

                              இனம் தனித்தனி பறப்பவே.           [52]

[புயங்கம்=பாம்பு; சூடிகை=தலை அணி; அநந்தம்=அநேகம்; மின்மினி=மின்மினிப் பூச்சிகள்]

      புற்றை விட்டுப் பாம்புகள் வெப்பம் தாங்காது வெளியே வருகின்றன. அப்பாம்புகளின் தலையில் உள்ள மாணிக்க மணிகளின் ஒளி எங்கும் சிதறிப் பரவி இருப்பதைப் போல மின்மினிப் பூச்சிகளின் கூட்டம் எங்கும் பறக்கின்றன.

=====================================================================================

                        பிணப் பறைக்குரல் உவந்து வந்துசில

                              பேய் துணங்கை இடிதொறும் இடும்

                        கணப் பறைக்குரல் படப்படச் சிறிது

                              செவிபடும் அமரர் கன்னமே.            [53]

[உவந்து=விரும்பி; துணங்கை=ஒருவகை கூத்து; கணப்ப்ரை=தோல் கருவி; கன்ன்ம் செவி] ஏ=அசை]

      சுடுகாட்டுக்குப் பிணங்கள் வரும் முன்னமே பறைகள் ஒலிக்கப்படுகின்றன. அவற்றின் ஓசை கேட்டுச் சில பேய்கள் துணங்கை என்னும் கூத்தாடுகின்றன. அந்தப் பறையின் ஓசையைக் கேட்கக் கேட்க தேவர்கள் செவிகள் சற்றுச் செவிடாகும்.

=====================================================================================                         

                   பள்ளி வேலைவிடு கான நாடிபடை

                        பாடி வீடுகொள் படங்கெனக்

                  கள்ளி வேலிகளின் மூதெழப் பல

                        சிலந்தி நூல்கொடு கவிக்குமே             [54]

[பள்ளி=இருப்பிடம்; வேலை=கடல்; விடு=விட்டு; கன=காடு; பாடிவீடு=பாசறை; படங்கு=கூடாரம்; கவிக்கும்=மூடும்]   

      தான் நிரந்தரமாக இருக்கும்  பாற்கடலை விட்டுத் தேவி இங்கு வந்து குடியிருக்கிறாள். அவர் அமைத்த பாசறைகள் எல்லாம் சிறு கூடாரங்கள் போல இருக்கின்றன. அவற்றிற்கு வேலி போல் அமைந்துள்ள கள்ளிச்செடிகளின் மேல் சிலந்திகள் தம் வாயிலிருந்து வெளிவரும் நூலால் வலை பின்னித்தங்கி  இருக்கின்றன.

=====================================================================================                     

      காதுமே இறைவி திகிரி பூதமும்

                        கழுதுமே சுகனம் முழுதுமே

                  போதுமே இரவி புரவி உடுவும் நடு

                        புகுதுமேல் நகுதும்! நகுதும்!                  [55]

[காதும்=கொல்லும்; கழுது=பேய்; ககனம்=வானவெளி; இரவி=சூரியன்; உடு=நட்சத்திரம்; நகுதும்=சிரிப்போம்]

      வானவெளி எங்குமே பூத கணங்களும் பேய்களுமே நிறைந்து காணப்படுகின்றன. சூரியனுடைய குதிரைகளோ நட்சத்திரங்களோ      இடையில் புகுந்தால் தேவியின் ஆணைச் சக்கரம் அவற்றைக் கொன்றுவிடும். மீறிப் புக மிகுந்தால் நாங்கள் சிரிப்போம். ஏனெனில் அவை இறக்கப்போகின்றனவே என்று சிரிப்போம்.

=====================================================================================                               

யோகமுதல் இறைவி கோயில் மிசை நிருதர்

                        யூதம் வரஅலகை ஓட்டுமே?

                  மேகம் உருமொடற வெற்பும் இறகொடற

                        மேலை எயிறுகொடு வெட்டுமே.                   [56]

[நிருதர்=அரக்கர்; யூதம்=படை; அலகை=பேய்; உரும்=இடி; எயிறு=பல்]

      யோகமுதல்வியாகிய இறைவர் துர்க்கை ஆவார். அவருடைய கோயில்கள் மீது செல்லும் அரக்கர் படையைப் பேய்கள் விரட்டி அடிக்கும். மேகங்கள் எல்லாம் மின்னல்களைக் கக்கி விழச் செய்யும்; மலைகளின் சிறகுகள் அறுபட பல்லால் கடித்துக் குதறும்.

===================================================================================                                 

              நீலவரை நிரைகள் போலும் அவுணர்தொகை

நிற்குமே இறைவி நிற்குமே 

கால இறுதி எரிபோல முகில்வயிறு

காய வரும்உருமு கக்குமே.                       [57]

[வரை=மலை; நிரை=கூட்டம்; எரி=நெருப்பு; முகில்=மேகம்; உரும்=இடி]

அரக்கர்கள் நீலவண்ண மலை போலும் உடல் கொண்டவர்கள். அவர்கள் எங்கள் இறைவி முன்னால் நிற்கக் கூடுமா? முடியாது. அநத அசுரர்களைத் தேவி இவ்விடத்திற்கு வரவே விடமாட்டார். உலகத்தின் இறுதிக் காலத்தில் ஏற்படும் ஊழி நெருப்புப் போல அவர்களைப் பொசுக்கி மேகங்களெல்லாம் வற்றிப் போகும்படிக் காயும்படி, எம் அன்னை இடி இடித்து முழக்குவார்.

=======================================================================

             ஈரல்சுருள முளிபேய்கள் எரிதலையொடு

                  ஏறு சருகுடன் எடுத்தெழும்

            சூரல் நிரைகள் எரி சூளை நிரைகள் என

                  வானின் இடை சுழிக்குமே.                 [58]

[ஈரல்=கல்லீரல்; முளி=காய்ந்த; சூரல்=பிரம்புக்குச்சி; சூளை=நெருப்படுப்பு;

சுழிக்கும்= சிதறி விழும்] 

      காட்டில் கடுமையான வெப்பம் கொதிக்கிறது. அங்கு இருக்கும் பேய்களுக்குப் பசியால் குடல் சுருண்டு போகிறது. அவற்றின் தலைகள் நெருப்புப்போன்ற சிவந்த மயிர்க்கற்றையுடன் இருக்கின்றன. பிரம்பு முதலானவை எரிந்து கொண்டிருக்கும் சூளையிலிருந்து புகையும் நெருப்பும் தெறித்து விழுவதைப் போல அப்பேய்களின் தலைகளை அங்கு வீசும் சூறாவளிக்காற்று வானமெங்கும் தெரித்து விழச்செய்யும். 

=====================================================================================                           

                         பூதம் அலகிலன பொங்கு கழுதிரதம்

எங்கும் எழநடுவு புதையவந்து

ஓதம் உகஇறுதி போத நடுநடுவு

முழுகும் எழுகிரியும் ஒக்குமே.           [59]

[அலகில=-அளவற்ற; கழுதிரதம்=பொய்த்தேர், அதாவது கானல் நீர்; ஓதம்=வெள்ளம்; உக இறுதி=ஊழிக்கால முடிவு; எழுகிரி=கயிலை, இமயம், மந்தரம், விந்தம், நிடதம், ஏமகூடம், கந்த மாதனம் ஆகிய ஏழு மலைகள்]

      பாலை நிலத்தில் கானல் நீர் வெள்ளம் அதிகமாக எங்கும் பரவி இருக்கிறது. அதில் கணக்கற்ற பேய்க் கூட்டங்கள் மூழ்கி எழுவது ஊழிக்கால முடிவில் ஏழு மலைகளும் மூழ்கி எழுவது போல இருக்கின்றதாம்.

=====================================================================================

                         யாமும் இமையவர் தாமும் வெருவர

                              ஈமஎரி இரவு எரிதொறும்

                        தாமும் எரிவனபோல் எரிவன

                               தாபம் இலசில தீபமே  [60]

[வெருவர-அஞ்ச; ஈமஎரி=சுடுகாட்டு நெருப்பு; தாபம்=வேட்கை]

      பாலை நிலத்து இடுகாட்டில் மண்ணுலகத்தில் வாழும் நாமும் விண்ணுலகத்தில் வாழும் தேவர்களும் அஞ்சி நடுங்குமாறு நெருப்பு இரவு முழுதும் எரிந்து கொண்டிருக்கும். வாம மதத்தவர் எண்ணெயும் திரியும் இல்லாமல் தம் தலைமுடி மையிரால் எரிக்கும் விளக்குகளும் வேட்கையால் எரிந்து கொண்டிருக்கும்.

Series Navigationநான் கொரோனா பேசுகிறேன்….சாளேஸ்வரம்
author

வளவ.துரையன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *