எனக்குக் கேட்கல… உங்களுக்கு கேக்குதா

This entry is part 7 of 13 in the series 3 மே 2020

 

கொரானா காலத்தில் மதுவகைகளும் இரண்டு,  மூன்று மடங்கு அதிகவிலையில் சுலபமாகக் கிடைக்கின்றன, அதிக விலை கொடுக்க முடியாதவர்கள் ஷேவ் லோசன், கள்ளச்சாரயம் என்று குடித்துச் சாகிறார்கள்.சில குடிகார நண்பர்கள் அதிக விலை கொடுத்து வாங்க முடியாத கஷ்ட காலத்தில் தூக்க மாத்திரை விலை குறைவு என்று ஒன்றைப்போட்டு நித்திரை தேவியை சுலபமாக அணைத்துத் தூங்கப் பழகிக்கொண்டிருக்கிறார்கள்.

லோகேஸ்வரி இறந்த போது அவளின் அப்பாவுக்கு பலநாட்கள் கவலையை மறக்க யாராவது சிறு சிறு அனுதாபத்தொகையைக் கொடுத்து மதுபானம் உபயோகப்படுத்தச் செய்து   லோகேஸ்வரியின் சாவை மறக்கடிக்கச்செய்தார்கள். 

 நல்லவேளை லோகேஸ்வரி கொரானாவுக்கு முன்னால் இறந்து விட்டாள். எவ்வளவோ சங்கடங்கள் மிச்சம் என்றார் சங்கமேஸ்வரி. அவளுடன் பஞ்சாலையில் வேலை செய்தவள்

லோகேஸ்வரிக்கு நிகழ்ந்த அந்த பஞ்சாலை தொழிற்சாலை விபத்திற்குப் பின் அவளை பீகாருக்குத் திருப்பி அனுப்புவதா. இல்லை உடல் நலம் சரியாகும்வரை பார்ப்பதா என்று அவளுடன் இருந்த மூன்று பீகாரி இளம் பெண்களுக்குப் பிரச்சினையாக இருந்தது. இடது கையில் மூன்று விரல்களை அவள் இழந்திருந்தாள் .

         பீகாரின் ப்ரூனி பகுதியில் ஒரு கிராமத்தைச் சார்ந்தவள் லோகேஸ்வரி. ரப்தி சாகர் எக்ஸ்பிரசில் ஊரிலிருந்து புறப்பட்டு 3350 கிமி கடந்து 54 தொடர் வண்டி நிலையங்களைக் கடந்து  நான்கு இளம் பீகாரி பெண்களுடனும் வயதானப் பெற்றோரிடமும்  திருப்பூர் வந்து சேர 12 மணி நேரம் தாமதம்.  பீகாரில் கிளம்பி உஇ, ம.பி, மகாராஷ்டிரா, தெலுங்கானா, ஆந்திரா, சென்னையைக் கடந்து வந்து சேர்ந்திருந்தாள் ..அரை நாள் ஓய்வு எடுத்துக் கொண்டு ஒரு புரோக்கர் மூலம் அடுத்த நாளே ஒரு பஞ்சாலையில் வேலையில் சேர்ந்து கொண்டாள்.

  ஓயவில்லாத பயணம் .உடம்பு அலுப்பு. தடுமாற்றத்தில் ஸ்பின்னிங் இயந்திரம் ஒன்றில் கை மாட்டிக் கொள்ள மூன்று விரல்கள் துண்டிப்பாகின. , சரியான சிகிச்சை இல்லாததால் ஒரு மாதம் கழித்து இறந்து விட்டாள்

மறுபடியும் இரண்டாவது பத்தியை மறுபடியும் சொல்லவேண்டியிருக்கிறது.

லோகேஸ்வரிக்கு நிகழ்ந்த அந்த பஞ்சாலை தொழிற்சாலை விபத்திற்குப் பின் அவளை பீகாருக்குத் திருப்பி அனுப்புவதா. இல்லை உடல் நலம் சரியாகும்வரை பார்ப்பதா என்று அவளுடன் இருந்த மூன்று பீகாரி இளம் பெண்களுக்குப் பிரச்சினையாக இருந்தது. இடது கையில் மூன்று விரல்களை அவள் இழந்திருந்தாள் .

சரியான சிகிச்சை இல்லாததால் ஒரு மாதம் கழித்து இறந்து விட்டாள். எதேச்சையாக ஊரிலிருந்து வந்த அவளின் பெற்றோர்  இறுதி காரியத்தில் உடன்  இருந்தார்.

               கொரானாவுக்கு முன் ஒரு நாள் என் வீட்டுத் தெரு முனையில் இருந்து    வந்த  அழுகை குரல்  சாவுக்கானது  என்று தெரிந்து கொள்ளவே  எனக்கு ரொம்ப நேரம் பிடித்தது.  அந்த வீட்டில் பதின்பருவம் இளம்பெண் ஒருத்தி  மரணம் அடைந்து இருந்தாள்.  அவள்தான் லோகேஸ்வரி.ஒரு பஞ்சாலையில் வேலை செய்து வந்தாள்  மரணம் அடைந்த போதுதான்  அவள் எனக்கு அறிமுகமானாள்  என்பது  வருத்தம் கொள்ளச் செய்தது.

  அவள் சாவின்  பொருட்டு  ஏதாவது இழப்பீடு கிடைக்குமா  என்று அவளின் பெற்றோர்  இருதரப்பினரிடம்  அணுகினர்

1.  அவள் வேலை செய்துவந்த பஞ்சாலை

 2. அரசு

எதிர்வினைகள் :

1.  நிர்வாகம் அடியோடு  அப்படியொரு  ஆளைத் தங்களுக்கு தெரியாது  என்றார்கள்.  வேலைக்கான  எந்த அடையாள அட்டையும்  மூன்று ஆண்டுகள் வேலை செய்து வந்த கூட இருந்த பிற  பெண்களுக்குக் கூட  வழங்கப்படவில்லை. 

2. தாலுக்கா அலுவலகம் சென்றபோது  கிராம நிர்வாக அதிகாரியிடம் இருந்து ஆரம்பியுங்கள்  என்றார்கள்.  கிராம அதிகாரி  வருவாய்த்துறை அதிகாரி தாசில்தார் மாவட்ட ஆட்சியர் என்று வரிசைக்கிரமமாக  வரவேண்டும்  என்றார்கள் .

 அலைந்து சலித்த அப்பெண்ணின் தந்தை பலரிடமும் ஒரு கதை சொல்ல ஆரம்பித்தார்.   நீண்ட பயணத்திற்குப் பிறகு  பல யாத்ரிகர்கள்  ஒரு கிராமத்தை அடைந்தனர். அவர்களிடம் இருந்த உணவைப் பகிர்ந்து கொள்ள அவர்களுக்கு விருப்பமில்லை .அடுப்பு பற்றவைத்து  பாத்திரத்தில்  நீர் ஊற்றி  ஒரு கல்லைப் போட்டு நெருப்பை எரிய விட்டனர் . கிராமத்தினர்  என்ன உணவு என்று கேட்க  கல் சூப்  செய்வதாக சொன்னார்கள்.  ஒரு கிராமத்துக்காரர் கொஞ்சம் காரட்டுகள் தந்தார்,  இன்னொருவர் கொத்தமல்லி உப்பு தந்தார்.   சிலர் வேறு  சில பொருட்கள் தர தயார் ஆனது சூப்.  கல்லை வெளியே எடுத்துப்போட்டு  விட்டு சூப் குடிக்கத் தயாரானார்கள்   ” இவனுகெல்லா   அந்த மாதிரிதா…… அந்த யாத்ரீகர்கள் மாதிரிதா  ”

இந்தக்கதைக்குப் பின்னால் லோகேஸ்வைர்யின் பணி சூழல் பற்றி கொஞ்சம் ஆராய்ந்தேன்

கொஞ்சம் ” இல்லை “ கள்

 தொழிற்சாலைகளில்  பணி ஆணை இல்லை. வேலைக்கான கொள்கைகள் இல்லை .அடையாள அட்டை இல்லை  உடல்நலம்  உள் தொழிற்சாலை வசதிகள் இல்லை .(  தண்ணீர் கழிப்பறை உணவு விடுதி தங்குமிடம் என்பவை போதுமானதாக இல்லை )  நிவாரணத்தொகை சார்ந்த  குறுக்கீடுகள் இல்லை.  தொழிற்சங்கங்கள் முயற்சிகளுக்கு ஆரம்பத்திலேயே முட்டுக்கட்டைகள். குறைந்தபட்சம் நோட்டீஸ் போர்டுகள் இல்லை . பிஎப், இஎஸ்அய்  பிடித்தம்  பற்றியதில்   வெளிப்படைத் தன்மை  இல்லை. நிர்வாகத்துடனான  உரையாடல் இல்லை .உள்  குழுக்களும் இல்லை .  புகார் பெட்டிகள் இல்லை.  உத்தியோக உயர்வு  நிரந்தரமாக இல்லை  குறைகளை நிவர்த்திப்பதற்கான நடவடிக்கைகள் இல்லை

 வேலையில் சேருவோர்  17 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும்  என்பதில் அக்கறை இல்லை. 19 வயது என்பது  தொழிற்சங்கத்தில் சேரும் உரிமை பற்றி அக்கறை இல்லை  குழந்தைத் தொழிலாளர்கள் என்ற முத்திரை படிவதில் அக்கறை இல்லை. பருவத்தில் அக்கறையில்லை

   அரசு நிர்ணயித்த குறைந்த கூலியைத் தருவதில் அக்கறையிருப்பதில்லை.  தொழிலாளரை  ஊக்குவிக்க  பரிசுகள் ஊக்கத்தொகை  பாராட்டுகளில் அக்கறையில்லை . வங்கிகளில்  சம்பளப் பணம் முதலீடு செய்வதில் பலருக்கு அக்கறை இல்லை.எந்த வகையில் வருட போனஸ் நிர்ணயிக்கப்படுகிறது என்பதில் அக்கறையில்லை.பதின்பருவப்பெண்களின் விடுதியைச் சரியாகப் பராமரிப்பதில்  அக்கறையில்லை. எச்சரிக்கைப் பலகை தீயணைப்போ, விதிகள் பற்றிய அறிவிப்புகளோ இல்லை. உடல் நலம் இல்லாமல் இருக்கும் போது விடுப்பு அங்கீகரிப்பு, சரியான மருத்துவ வசதி குறித்த அக்கறையில்லை. 

  சில சில வேண்டும்கள்

 தொழிலாளர் தரப்பில் குறித்த நேரத்திற்கு வேலைக்கு வருதல். தொழிலுக்கு நேர்மையாக தொழிலாளர்கள் இருத்தல்,  தேவையில்லாமல் விடுமுறை எடுத்து உற்பத்தியைக் குறைப்பது நல்லது அல்ல. தொழிற்சங்கங்கள் நடுநிலைமையுடன் நடந்து நிர்வாகத்திற்கு ஒத்துழைப்புத் தரவேண்டும். தொழிலாளர் சட்டங்களில் அவர்களுக்கு சரியான வகையில்  அறிவுறுத்தவேண்டும். தூசுகள் இல்லாத வேலை உலகம் வேண்டும் திருநங்கைகளுக்கான வேலை வாய்ப்பு வசதிகள் முறையாக தரப்படவேண்டும் .இறந்து போன தொழிலாளர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு மாற்றாக  வேலை வாய்ப்பு தர வேண்டும். அரசு துறை மட்டுமல்லாது எல்லா துறைகளிலும் வேலை வாய்ப்பு தர வேண்டும்.

 நிறைய வேண்டும்கள்  இருக்கின்றன .ஆனால் வழிகாட்டத் தலைகள் இல்லை. ஒரு செம்மறி ஆட்டின் தலைமையில் அணிவகுத்து நிற்கும் சிங்கங்கள் நமக்குத் தேவையா . ஆனால் ஒரு சிங்கத்தின் தலைமையில் அணிவகுத்து நிற்கும் செம்மறியாடுகள் பற்றித்தான் பயப்பட வேண்டியிருக்கிறது .அலெக்ஸாண்டர் போர் போன்ற பெரும் தலைகளுக்கு கூட இந்த பயம் இருந்திருக்கிறது செத்துப்போன பெண்  சாதாரண ஆடு போன்றவள்

     லோகேஸ்வரியை இழந்த பெற்றோர் அவளை அடக்கம் செய்து விட்டு  ரப்தி சாகர் எக்ஸ்பிரசில் ஊருக்குப்புறப்பட்டனர்.  3350 கிமி கடந்து 54 தொடர் வண்டி நிலையங்களைக் கடந்து   ஊருக்குப் போய் சேர வேண்டும். மூன்று நாள் பயணம். 

பொது கம்பார்ட்மெண்டில்தான் கழிப்பறை பக்கம் நெரிசலில் உட்கார அவர்களுக்கு இடம் கிடைத்தது. அந்த நெரிசலில்  ஊருக்கு உயிருடன் போய் சேருவோமா என்ற சந்தேகம் புழுக்கத்தாலும் மூச்சு விட இயலாத நெருக்கத்தாலும்  லோகேஸ்வரியின் அம்மாவிற்கு சேலத்தைக்க்கடக்கிற போதே அப்படித் தோன்ற ஆரம்பித்து விட்டது..

          கொரானா காலத்தில் மாநில எல்லைகளைக்கடந்து  500 கிமி நடந்து வந்து தெலுங்கானப்பகுதியில் மரணமடைந்த 21 வயது நாமக்கல்  இளைஞர் பற்றியெல்லாம் லேகேஸ்வரியின் அம்மா கேள்விப்பட வாய்ப்பில்லாதபடி பீகாரின் ப்ரூனி பகுதி கிராமத்திற்கு சென்று சேர்ந்திருப்பார்.

அவர் ஏதோருவகையில் அதிர்ஷ்டசாலி.

Series Navigationவீட்டில் இருப்போம்கொரோனா சொல்லித் தந்த தமிழ்

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *